த்தரப் பிரதேசத்தில் ஆதித்யநாத் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட சித்திக் கப்பான், காவல் விசாரணையின்போது தாக்கப்பட்டு, சித்ரவதைக்கு ஆளானதாக கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் (The Kerala Union of Working Journalists) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆதிக்கசாதியினரால் பாலியல் வன்கொலைக்கு ஆளான தலித் சிறுமி குறித்து செய்தி சேகரிக்க டெல்லியில் பணியாற்றிய கேரள பத்திரிகையாளர் கப்பான், ஹத்ராஸ் செல்லும் வழியில் கைதானார். ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தன. தலித் சிறுமி வன்கொலை விவகாரத்தை வைத்து தன்னுடைய அரசுக்கு எதிராக சிலர் சதி செய்வதாக ஆதித்யநாத் கூறிவந்த நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற கப்பானையும் அவருடன் சென்ற மூவரையும் கைது செய்தது ஆதித்யநாத் அரசாங்கம்.

படிக்க :
♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !
♦ பாஜக ஆளும் உ.பி, ம.பி -யில் இனி தொழிற்சங்க உரிமைகள் கிடையாது !

கப்பான் உள்ளிட்ட நால்வர் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் 124 ஏ (தேசத்துரோகம்), 153 ஏ (குழுக்களிடையே பகைமையை வளர்ப்பது) மற்றும் 295 ஏ (மத உணர்வுகளை மீறுதல்), உபாவின் 14 மற்றும் 17 பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் 65, 72 மற்றும் 76 பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அவர்கள் ஹத்ராஸ் சதி வழக்கிலும் சேர்க்கப்பட்டனர்.

உத்தரபிரதேச அரசு, கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாண பத்திரத்தில், கப்பான் மீது பல குற்றச்சாட்டுக்களை கூறியிருந்தது.  பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலக செயலாளர் எனவும் பத்திரிகையாளர் என்ற பெயரில் உ.பி. வந்ததாகவும் கூறியிருந்தது.  பாப்புலர் ஃபிரண்ட் அமைப்பினருடன் அதன் மாணவர் அமைப்பினரும் சேர்ந்து கொண்டு, சாதி ரீதியான பிளவுகளையும் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் திட்டத்தோடு உ.பி. வந்ததாக ஆதித்யநாத் அரசாங்கம் கூறியது.  பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா தடை செய்யப்பட்ட அமைப்பு அல்ல என்றநிலையில், இவர்கள் சதி செய்ய முயன்றதற்கான எந்த ஆதாரத்தையும் ஆதித்யநாத் அரசு சமர்பிக்கவில்லை.

பத்திரிகையாளர் சித்திக் கப்பான்

இந்த நிலையில், பத்திரிகையாளர் சங்கத்தின் டெல்லி பொறுப்பாளராக உள்ள ஒரு பத்திரிகையாளரை இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்த போலீசு ஏவல்படை, அவரை கடுமையாக தாக்கியுள்ளது.  பத்திரிகையாளர் சங்கத்தின் வழக்கறிஞர் நவம்பர் 21-ம் தேதி, மதுரா சிறையில் கப்பானை சந்தித்து பேசியபோது, தன்னை தொடையில் லத்தியால் மூன்று முறை தாக்கியதாகக் கப்பான் கூறியுள்ளார். மேலும் கண்ணாடியை கழற்ற வைத்து கன்னத்தில் மூன்று முறை அறைந்து, இழுத்துச் சென்றதாகவும் வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். அக்டோபர் 5-ம் தேதி, மாலை 6 மணி முதல் அக்டோபர் 6-ம் தேதி காலை 6 மணி வரை தூங்கவிடாமல் செய்து, மனரீதியாக துன்புறுத்தியதாகவும் சர்க்கரை நோயுள்ள தன்னை மருந்துகளை உட்கொள்ள விடாமல் தடுத்ததாகவும் கப்பான் கூறியுள்ளார்.

இந்தத் தகவல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கப்பானின் வழக்கறிஞர் மேத்யூஸ் தாக்கல் செய்துள்ளார். கைதான கப்பான் உள்ளிட்டவர்களை சிறையில் சந்திக்கக்கூட உ.பி. அரசு அனுமதிக்கவில்லை. இந்த அனுமதியைக்கூட உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தபிறகே கப்பானின் வழக்கறிஞர் பெற்றுள்ளார்.

படிக்க :
♦ ரொட்டிக்கு உப்பு சைட் டிஷ் : அம்பலமான யோகி அரசு !
♦ யோகி அரசின் வன்மம் : மருத்துவர் கஃபீல்கானுக்கு புதிய விசாரணை !

தற்போது உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உடனடியாக தலையிட்டு, சட்டத்துக்கு புறம்பாக கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையை படித்தாலே குற்றம்சாட்டப்பட்டவர் பொய் வழக்கில் கைதான நிரபராதி என்பது தெரியும் எனவும் பிரமாண பத்திரம் கூறுகிறது.

பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதற்காகவே தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் இருந்து, நீண்ட அலைக்கழிப்புகளுக்குப் பிறகே, ஆளும் அரசின் ஆணைக்கிணங்க நீதிமன்றம் ’நீதியை’த் தரும்.

ரொட்டியும் உப்பும்தான் மதிய உணவாக பள்ளிக்குழந்தைகளுக்குத் தரப்படுகிறது என்பதை ஆதாரத்தோடு சொன்ன பத்திரிகையாளர்களை கைது செய்து சிறையில் தள்ளியது இதே ஆதித்யநாத்தின் அரசு. இப்போது இந்து ராஜ்ஜியத்தில் ஒரு தலித் சிறுமிக்கு நேர்ந்த அவலத்தை வெளிப்படுத்தப்போன பத்திரிகையாளரை வழக்கு மேல் வழக்குப் போட்டு சித்திரவதை செய்துகொண்டிருக்கிறது.

கலைமதி
நன்றி: The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க