த்தரப் பிரதேசத்தில் பெற்றோர் ஒப்புதலுடன் நடக்கவிருந்த இந்து – முசுலீம் காதல் திருமணத்தை யோகி ஆதித்யநாத்தின் இந்து யுவ வாகினியும், உத்த்ரப் பிரதேச போலீசும் சேர்ந்து தடுத்து நிறுத்தியுள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் இந்து முசுலீம் காதல் திருமணங்களைத் தடுத்து நிறுத்த யோகி ஆதித்யநாத் அரசு லவ்-ஜிகாத் தடுப்புச் சட்டத்தைக் கொண்டுவந்தது. கட்டாய மதமாற்றத்தை தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாக வியாக்கியானம் அளிக்கப்பட்டாலும் அந்தச் சட்டத்தின் உண்மையான நோக்கம், அது நிறைவேற்றப்பட்ட நாள் முதல் அம்பலமாகிவருகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த டிசம்பர் 2, 2020 அன்று முசுலீம் மணமகனுக்கும், இந்து மணமகளுக்கும் இருவீட்டார் சம்மதத்தோடு நடைபெறவிருந்த திருமணத்திற்கு எதிராக, யோகி ஆதித்யநாத் வெறும் பொறுக்கிச் சாமியாராக இருந்த போது உருவாக்கிய இந்து யுவ வாகினி எனும் அமைப்பு கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசு அந்த திருமணத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

படிக்க :
♦ ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்
♦ குலாம் அகமதுவைக் கொன்ற யோகி ஆதித்யநாத்தின் ஹிந்து யுவ வாகினி

இந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை அப்பகுதி போலீசு அதிகாரியிடம் கேட்டதற்கு, புதிய சட்டப்படி மாவட்டக் கலெக்டரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

போலீசின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். குறிப்பாக இந்தப் புதிய சட்டம், கட்டாய மதமாற்றம் குறித்துப் பேசிவதாகவும், ஆனால் இங்கு மதமாற்றம் எதுவும் நடக்கவில்லை என்றும் கூறுகின்றனர் வழக்கறிஞர்கள்.

மணமகனோ, மணமகளோ எவ்வித மதமாற்றமும் உடனடியாகச் செய்ய விரும்பாத நிலையில், இந்து முறைப்படியே இத்திருமணம் நடக்கவிருந்திருக்கிறது. ஆகவே இங்கு மதமாற்றம் குறித்த பிரச்சினையே ஏதும் இல்லை.

மேலும், இந்தச் சட்டப்படி திருமணம் செய்யப் போகும் பெண் அல்லது ஆணின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வற்புறுத்தி மதமாற்றம் செய்யப்பட்டதாகப் புகாரளித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் இந்து யுவ வாகினியைப் போன்ற கேடுகெட்ட பொறுக்கிக் கும்பல் கொடுத்த புகாருக்கு செவி சாய்த்து திருமணத்தைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது.

வேற்று மதங்களைச் சேர்ந்த  ஆண் பெண் திருமணம் செய்வதைக் கண்காணிக்கும் சட்டம் என்பதே அடிப்படையில் மனித உரிமைகளுக்கு எதிரானது.  18 வயதைத் தாண்டிய இரு தனிநபர்களின் திருமணம் குறித்த விவகாரத்தில் தலையிட பெற்றோருக்கே உரிமையில்லாத நிலையில், அரசு அதில் தலையிடுவது என்பதே இழிவானது.

படிக்க :
♦ “லவ் ஜிகாத்” – திரைக்கதை, வசனம், டைரக்சன் ஆர்.எஸ்.எஸ்.
♦ “லவ் ஜிகாத்” ஆர்.எஸ்.எஸ்.- இன் அண்டப்புளுகும் அல்லக்கையான நீதிமன்றமும் !!

அத்தகைய ஒரு இழிவான சட்டத்தை இயற்றியதோடு மட்டுமல்லாமல், அந்த சட்டத்தையும் மோசடியாக பிரயோகித்து முசுலீம்களை மிரட்டுகிறது யோகி அரசு.

லவ்-ஜிகாத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட முதல் வழக்கே அயோக்கியத்தனமானது. ஏற்கெனவே தீர்த்துக் கொள்ளப்பட்ட இந்து – முசுலீம் திருமணப் பிரச்சினையை மீண்டும் தூசி தட்டி, அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளது உ.பி போலீசு. இது வலிந்து போடப்பட்ட வழக்கு என அப்பகுதி மக்களே தெரிவித்துள்ளனர்.

அதே போல சமீபத்தில், அலிகர் நீதிமன்றத்தில் தங்களது காதல் திருமணத்தைப் பதிவு செய்ய வந்த இந்து – முசுலீம் ஜோடியை போலீசு இழுத்துச் சென்று அந்த முசுலீம் மணமகனை தாக்கியுள்ளது போலீசு.

லவ் – ஜிகாத் தடுப்புச் சட்டம் என்பது முசுலீம் வெறுப்புக் கலவரங்களையும் தாக்குதல்களையும் இந்துத்துவக் கும்பல் மேற்கொள்வதை சட்டப்படியாக மாற்றுவதற்கான முதல் படி. பெற்றோரின் சம்மதத்தோடு கூட இனி இந்து – முசுலீம் திருமணங்கள் நடக்கக் கூடாது என்பதற்காகத் தான் இந்த அயோக்கியத்தனமான நடவடிக்கைகளில் பகிரங்கமாக இறங்கியிருக்கிறது யோகி அரசு.

இந்துத்துவத்தின் இரண்டாவது சோதனைச் சாலையான உத்திரப் பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படும் இந்த சட்டங்கள் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை ! அன்று இந்து – முசுலீம் திருமணம் மட்டுமல்ல – சாதாரண காதல் திருமணங்களே ஆர்.எஸ்.எஸ். கும்பலின் அனுமதி பெற்ற பின்னர்தான் அனுமதிக்கப்படும் நிலை தான் ஏற்படும். இதை அனுமதிக்கப் போகிறோமா ?


கர்ணன்
நன்றி : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க