ந்திய நாட்டு ஆட்சியாளர்கள் உலகம் முழுவதும் திவாலாகிப் போன தாராளவாத கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதால் நமது நாட்டில்  ஏற்பட்டுள்ள தீய விளைவுகளை இந்த நூலில் தோழர் சங்கையா சிறப்பாக அம்பலப்படுத்தியுள்ளார்.

“உலக வங்கி ஓர் அறிமுகம்” என்ற முதல் கட்டுரையில் இருந்து 21 தலைப்புகளில் எண்ணற்ற புள்ளிவிவரங்களில் ஏராளமான தகவல்கள், வரலாற்று சான்றாதாரங்கள் ஆகியவற்றின் மூலம் உலக வங்கி தோன்றிய விதம்,  முதல் உலக வர்த்தக நிறுவனம் உருவான கதை, பெருவணிகம் முதல் சில்லறை வர்த்தகத்தில் கூட வால்மார்ட் நுழைந்த கதை, அன்னிய நேரடி முதலீடு நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு ஆக்கிரமித்துள்ளது என்பதைப் பற்றியும், நீர் வளம், நிலவளம், கனிம வளம், வனவளம், இந்திய நாட்டின் இயற்கை செல்வங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் கும்பல் கபளீகரம் செய்து வருகிறது என்பதைப் பற்றி சரியான  விவரங்களோடு சான்றாதாரங்களை முன்வைத்து ஒரு பாட்டாளி வர்க்க பார்வையோடு இந்த நூல் எழுதப்பட்டிருக்கிறது.

விவசாயம் – மருத்துவம் – உயர்கல்வி சகல துறைகளிலும் கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இந்த நூல் அலசுகிறது. கார்ப்பரேட் கம்பெனிகளின் அரசியல் அதிகாரம் எந்தஅளவுக்கு வளர்ந்துள்ளன என்பதை நூலில் உள்ள கட்டுரைகள் நமக்கு தெளிவுபட கூறுகிறது.

படிக்க :
♦ நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
♦ நூல் அறிமுகம் : காவி என்பது நிறம் அல்ல || மு. சங்கையா | காமராஜ்

கார்ப்பரேட் நிறுவனங்கள் எத்தகைய அநியாயத்தையும் துணிந்து செய்யக் கூடியவர்கள். கொள்ளை இலாபம் கிடைக்கும் என்றால் எவ்வளவு பேரையும் கொல்ல தயங்கமாட்டார்கள், என்பதை இந்நூலில் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தி உள்ளார் தோழர் சங்கையா.

“ஒளிராத இந்தியா “என்ற கட்டுரையில் அரசு பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு அன்னிய நிறுவனங்களிடம் தாரைவார்த்துக் கொடுத்த பாரதிய ஜனதா கட்சியின் “ஒளிர்கிறது இந்தியா” என்ற முழக்கம் எவ்வளவு பித்தலாட்டம் ஆனது என்பதை தோலுரித்துக் காட்டியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் மதவாத அரசியலில் இருந்து காங்கிரஸ் கட்சி வேறுபட்டு இருப்பதாக கணித்த இடது வலது கம்யூனிஸ்ட் கட்சிகள் அவர்களின் 61 பாராளுமன்ற உறுப்பினர்களும் முற்போக்கு கூட்டணி அரசை தாங்கிப்பிடிக்கும் தூண்களாக மாறினர். பொன்மான் வேடமிட்டு வந்திருக்கும் டாக்டர் மன்மோகன் சிங் ஒரு பொய்மான் என்பதை கூட உணராதவர்களாக இருந்தனர். பாசிச பாஜக கும்பலுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் பொருளாதாரக் கொள்கையில் எந்த வேறுபாடும் இல்லை, அதை இந்த கட்டுரையில் நூல் ஆசிரியர் ஆணித்தரமாக நிறுவியுள்ளார்.

கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் நமது நாட்டில் கடை பரப்பிய பன்னாட்டு தேசங்கடந்த கார்ப்பரேட் தொழில்நிறுவனங்கள், மத்திய ஆட்சியாளர்களின் கொள்கைகள் இவற்றின் விளைவாய் நாட்டு மக்களின் வருவாயில் உள்ள ஏற்றத்தாழ்வு மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியை போல அதிகரித்துள்ளது. உலகமயத்தின் வரவால் இந்திய தரகு முதலாளிகளின் அசுர வளர்ச்சியும், விரல்விட்டு எண்ணத்தக்க புதிய பணக்காரர்களின் பெருக்கமும், இந்தியாவில் ஏழ்மையை, ஊழலை, லஞ்சத்தை, வேலையில்லா திண்டாட்டத்தை பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது என்ற விவரங்களை எளிய முறையில் விறுவிறுப்பாக இந்நூலில் விளக்கியுள்ளார்.

தண்ணீர்! தண்ணீர்! என்ற கட்டுரையில் தண்ணீர் மனிதர்களுக்கும், அனைத்து உயிரினங்களுக்கும்,  தாவரங்களுக்கும் இயற்கை கொடுத்த கொடை. அது பயன் மதிப்பு உள்ளது, தண்ணீர் பரிவர்த்தனை பண்டம் அல்ல. காற்றைப்போல், சூரிய ஒளியைப் போல் புவிக் கோளத்தின் வாழ்கின்ற அனைவருக்கும் பொதுவானது. உலக முதலாளித்துவம் தண்ணீரை சரக்காக, விற்பனைப் பண்டமாக மாற்றி சந்தையிலே முன் நிறுத்தி வெற்றி பெற்றுள்ளது. உலக வர்த்தக அமைப்பு,  வர்த்தகம் மற்றும் சேவை சம்பந்தமான பொது ஒப்பந்த விதிகளில் (General Agreement on Trade and services) தண்ணீரையும் ஒரு பண்டமாக தனது திட்டத்தில் சேர்த்துக்கொண்டது. தேவையான சான்றாதாரங்கள் அனைத்தையும் இந்தக் கட்டுரையில் முன்வைத்து கார்ப்பரேட் கும்பலின் மனிதகுல விரோத தண்ணீர்க் கொள்ளையை அம்பலப்படுத்தியுள்ளார்.

ஆற்று வளங்களையும், நீர் ஆதாரங்களையும் கார்ப்பரேட் கும்பல் எவ்வாறு கபளீகரம் செய்து உள்ளது என்ற விவரங்களை ஆறுகள் விற்பனைக்கு…… என்ற கட்டுரையில் பல்வேறு தரவுகளோடு நிறுவியுள்ளார்.

வன வேட்டை……. என்ற கட்டுரையில் இயற்கையின் அற்புதக் கொடைகள் ஆன காடு, மலை,  நதி, தாதுமணல், ஆற்று மணல் என இந்தியாவின் இயற்கைச் செல்வங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் குழும நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்ட, ஆட்சியாளர்கள் நாட்டின் வளங்களையும் ஒன்றைக்கூட விட்டுவைக்கவில்லை.

பழங்குடியினர் அடிப்படையில் வனவாசிகள், காடுகளே அவர்களது வாழ்வாதாரம்; தேன்,  பழங்கள், இலை, மூலிகைகள் அவற்றை சேகரிப்பது வேட்டையாடுவது, விவசாயம் என்று எளிய வாழ்க்கை வாழ்பவர்கள்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் | ஏ.ஜி.நூரனி
♦ ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை !

20 லட்சம் கோடி மதிப்புள்ள கனிம வளங்களை கபளீகரம்செய்வதற்காக கார்ப்பரேட் கொள்ளையர்கள் மலைவாழ் மக்களை அவர்களது வாழ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்துவதற்காக, அவர்களது வாழ்வாதாரத்தை நாசம் செய்வதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசும், கூலிப்படையும் இடைவிடாத தாக்குதலை  எளிய மக்கள் மீது நடத்திக்கொண்டிருக்கிறார்கள். மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் மலைவாழ் மக்களின் வாழ்க்கை ஆதாரத்தை பாதுகாக்க களத்தில் நின்று போராடி வருகிறார்கள்.

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தில் இருந்து அன்னியப்படுத்தி,  ஆதிவாசி மக்களை அப்புறப்படுத்துவதற்காக பசுமை வேட்டை என்ற  கொடிய போர் நடத்தப்படுகிறது. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினர்  அவர்களது வாழ்வாதாரத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுஅகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஜிண்டால், மிட்டல், எஸ்ஸார் குழுமம், வேதாந்தா, டாட்டா போன்ற பெரும் குழும நிறுவனங்கள் வன வளங்களை கைப்பற்றுவதற்கான போட்டியில் இறங்கியுள்ளன. என்ற விவரங்களை இந்த கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளார்.

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கொள்கைகள் பொருளாதார மட்டத்தில்தான் ஆட்சி செலுத்துகிறது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. அவற்றின் சமூக விளைவுகள் மிகவும் அபாயகரமானவை. இந்தக் கொள்கைகளின் விளைவாய் வேலை இல்லாத் திண்டாட்டம் முன்னெப்போதையும்விட பன்மடங்கு அதிகரித்துள்ளது. மத வெறி, சாதி வெறி, இன வெறி போன்ற பாசிசத்திற்கான விதைகளின் விளைநிலமாக இந்தியா மாற்றப்பட்டுள்ளது.

கார்ப்பரேட் காவி பாசிசக் கும்பல் விரும்பும் எதிர் புரட்சியை  தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் விரைவுபடுத்தி வருகிறது. இன்றைய நெருக்கடியின் தோற்றுவாய் எது? தாராளமய கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருவதால் இந்திய சமூக பொருளாதார நிலை எவ்வாறு பாதித்துள்ளது? நெருக்கடியில் இருந்து மீள்வது எப்படி? போன்ற பல்வேறு வினாக்களுக்கு “பன்னாட்டு சந்தையில் பாரதமாதா “என்ற இந்த நூல் விடை அளிக்க முயற்சி செய்துள்ளது.

பல்வேறு தரவுகள், சான்றாதாரங்கள், புள்ளிவிவர அட்டவணைகள்  ஆகியவற்றை தொகுத்துத் தந்திருப்பது இந்த நூலின் சிறப்பு. சொல்ல வேண்டிய செய்திகளை எளிய முறையில் விறுவிறுப்பாக நூலில் சங்கையா விளக்கியுள்ளார். சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க நாடாளுமன்றத்திற்கு வெளியே சக்தி மிக்க மக்கள் தொடர் போராட்டங்களை கட்டமைக்க வேண்டிய காலத்தின் அவசியத்தை இந்த நூல் உணர்த்துகிறது.

கார்ப்பரேட் பாசிச கும்பலின் பொருளாதார அடிப்படையை புரிந்து கொள்ள நூல் பெரிதும் பயன்படும். ஆளும் வர்க்கம் தங்களின் பொருளாதார நெருக்கடியை பரந்துபட்ட உழைக்கும் மக்களின் மீது திணிக்கிறது. பெரும்பான்மையான மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரும் கேள்விக்குறியாகி நிற்கிறது.

நாட்டை நாசம் செய்யும் இந்த கொள்கைகளை தடுத்து நிறுத்த, சமூக மாற்றத்திற்காக போராடும் பாட்டாளி வர்க்கத்திற்கு வலிமையான கருத்து ஆயுதமாய் இந்த நூல் பயன்படும்.

நூலாசிரியர் குறிப்பு :

தோழர் மு.சங்கையா, பிஎஸ்என்எல் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். இவரது முதல் படைப்பான “லண்டன் ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” என்ற பயணக் கட்டுரை நூலுக்கு தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் 2013 சிறந்த பயண இலக்கியம்  என்றவிருதைப் பெற்றது.

நூல் : பன்னாட்டுச் சந்தையில் பாரத மாதா
ஆசிரியர் : எம். சங்கையா
பதிப்பகம் : வாசிப்போர் களம்
தொடர்புக்கு : 94861 00608
விலை : ரூ. 225
பிரதிகளுக்கு :  வாசிப்போர் களம், மதுரை.
அலைபேசி: 94861 02431

நூல் அறிமுகம் : எஸ் காமராஜ்,
மாநிலத் துணைச் செயலாளர் – அகில இந்திய பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்கம், ஆலோசகர் – தேசிய தொலைதொடர்பு ஒப்பந்த ஊழியர் சங்கம்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க