உ.பி. மாநிலம் ஹாத்ரஸில் நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண்ணை, அம்மாநில அரசும், போலீசும், சாதிவெறியர்களும் அவமதித்ததை நாடே காறி உமிழ்ந்து போராடிவரும் வேளையில், ம.பி. மாநில உயர்நீதி மன்றம் அப்போராட்ட உணர்வை எள்ளி நகையாடும் விதத்தில் ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.
பாலியல் வன்முறைக்குப் பலியாகி நீதி கேட்டு நிற்கும் பெண்ணிடம், தன்னை அக்கொடுமைக்கு ஆட்படுத்திய காமுகனைச் சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்படியான உத்தரவை வழங்கி, இயற்கை நீதியைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது, அந்நீதிமன்றம்.
படிக்க :
♦ போராட்டங்களின் நோக்கம் || உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த பார்வை !
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
சில வழக்குகளில் குற்றவாளிகளுக்குப் பிணை வழங்குவதற்கு நீதிமன்றங்கள் நிபந்தனைகளை விதிப்பது வழமையானதுதான். ஆனால், ம.பி. மாநிலத்தின் உஜ்ஜைனி மாவட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த விக்ரம் பார்க்கி என்பவரின் பிணை மனு மீதான வழக்கில் நீதிபதி ரோஹித் ஆர்யா, குற்றவாளிக்குப் பிணை வழங்குவதற்கு விதித்திருக்கும் நிபந்தனைகளோ மிகவும் அருவெறுக்கத்தக்க ஆணாதிக்கத் திமிரும், பாதிக்கப்பட்ட பெண்ணைக் கூனிக்குறுகச் செய்யும் வக்கிரமும் நிறைந்தவையாக உள்ளன.
அவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட விக்ரம், தனது பாலியல் இச்சைக்கும் வன்முறைக்கும் பலியான பெண்ணின் வீட்டிற்குத் தனது மனைவியுடன் சென்று, அப்பெண்ணிற்கு இனிப்புக்களை வழங்கி, அப்பெண்ணைத் தனது கையில் ராக்கி கயிற்றைக் கட்டிவிடக் கோரவேண்டும். மேலும், ராக்கி கட்டி விடும் தங்கைக்கு அண்ணன் பணம் தரும் வழக்கமான சடங்கைக் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு குற்றம்சாட்டப்பட்டவர் 11,000 ரூபாய் பணம் தந்து அவரது ஆசீர்வாதத்தைப் பெற வேண்டும்; பாதிக்கப்பட்ட பெண்ணின் மகனிடம் துணிகள் மற்றும் இனிப்புகள் வாங்க 5,000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் − இவைதான் அந்நீதிபதி விதித்திருக்கும் நிபந்தனைகள்.

ஆதிக்க சாதியினர் நடத்தும் கட்டப் பஞ்சாயத்துகளில் பாலியல் குற்றவாளிகளை விடுவிக்கக் கோவிலுக்கு அபராதம் செலுத்தக் கூறும் நாட்டாண்மைத்தனத்தை ஒத்தது ம.பி. உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு.
தன் மீது பாலியல் வன்முறையை ஏவிய குற்றவாளியை, பாதிக்கப்பட்ட எந்தப் பெண்ணாவது சகோதரனாக ஏற்றுக்கொள்ள முன்வருவாரா? தன் மீது பாலியல் வன்முறையை ஏவிய குற்றவாளியையே கணவனாக ஏற்கச் சொல்லும் கட்டப் பஞ்சாயத்துத் தீர்ப்பைக் காட்டிலும் அருவெறுக்கத்தக்க விதத்திலும், பொறுப்பற்ற விதத்திலும், தன்னிச்சைப்படி வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பிணை உத்தரவு, பாதிக்கப்பட்ட பெண்ணைப் பாதுகாத்து, அவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, அவரை அவமானகரமான விதத்தில் தண்டிக்கிறது.
பாலியல் வன்முறைக்குப் பலியான பெண்களும், அவரது குடும்பத்தாரும் அதனைப் புகாராகக் கொடுக்க முன்வருவதே அசாதாரணமானது. அப்படிப் புகாராகக் கொடுக்கப்படும் வழக்குகள் போலிசு நிலையத்தைத் தாண்டி நீதிமன்றப் படிக்கட்டைத் தொடுவதும் போராட்டம் நிறைந்தது. மேலும், பாலியல் ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாகும் பெண்களை ஒழுக்கங்கெட்டவர்கள் போலச் சித்தரித்து, அவர்களையே குற்றவாளியாக்குவது; ஆதிக்க சாதிவெறி மற்றும் மதவெறியை முகாந்திரமாகக் கொண்டு அக்குற்றத்தை நியாயப்படுத்துவதோடு, குற்றவாளிகளை நாயகர்களாக விளம்பரப்படுத்துவது என இப்படிப்பட்ட பலவாறான தடைகளைப் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் எதிர்கொண்டு வரும் நிலையில் வழங்கப்பட்டிருக்கும் இப்பிணை உத்தரவு, பாலியல் குற்றவாளிகளுக்கு மனத் துணிவை அளிக்கக்கூடியது. இப்படிப்பட்ட உத்தரவுகள் வழங்கப்படும் நாட்டில் பாலியல் குற்றங்கள் குறைவதற்கு ஏதாவது வாய்ப்புண்டா?
நிர்பயா வழக்கில் பாலியல் வன்முறையை ஏவிய குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதித்த இந்திய நீதித்துறையிலிருந்தா இப்படிப்பட்டதோர் உத்தரவு என யாரும், குறிப்பாகப் பெண்கள் வியப்படையத் தேவையில்லை. நிர்பயா வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு விதிவிலக்கு. மேலும், அச்சமயத்தில் அப்பாலியல் வன்முறைக்கு எதிராக நடுத்தெருவுக்கு வந்த நகர்ப்புறத்தைச் சேர்ந்த மேட்டுக்குடி மற்றும் உயர் நடுத்தர வர்க்கத்தின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுப்பதற்காக, வர்க்கச் சார்போடு வழங்கப்பட்ட தீர்ப்பு அது. பாதிக்கப்பட்ட பெண் எந்தச் சாதி, எந்த வர்க்கம், குற்றவாளிகள் எந்தச் சாதி எந்த வர்க்கம் என்பதற்கு ஏற்பத்தான் பாலியல் வழக்குகளில் தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன என்பதற்கு நம் கண் முன்னே பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன.
பாலியல் வன்முறை வழக்குகளில், இந்திய நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளின் மனச்சான்றை இந்தியக் கிரிமினல் சட்டங்களைவிட, தந்தை வழி சமூக அமைப்பின் ஆணாதிக்க மனோபாவம்தான் ஆட்டிவைக்கிறது என்பதற்கு ம.பி. உயர்நீதி மன்றத்தால் வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பிணை உத்தரவு மற்றுமோர் உதாரணம்.
முத்து
புதிய ஜனநாயகம்
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 மின்னிதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்