தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தமிழகத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருப்பதைத் தனது தனிப்பட்ட சாதனையாகக் காட்டிக்கொள்ள முயலுகிறார், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ‘அவர் தனியொருவனாகச் சிந்தித்து இந்தச் சாதனையைப் படைப்பதற்கு‘ அனிதா தொடங்கி ஜோதிஸ்ரீ துர்கா வரையில் 16 மாணவ−மாணவிகள் தமது உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டியிருந்தது என்பதை நாம் மறந்துவிட முடியாது.
ஆங்கில வழி மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பெருக்கத்திற்குப் பிறகு அரசுப் பள்ளி மாணவர்கள், குறிப்பாகத் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது அரிதாகிப் போனது. தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டபோதும், நுழைவுத் தேர்வு ரத்து செய்த பிறகும் இந்த நிலை மாறவில்லை. மோடி அரசு−உச்சநீதி மன்றக் கூட்டணியால் திணிக்கப்பட்ட நீட் தேர்வு இந்த நிலையை மேலும் மோசமாக்கியிருப்பதோடு, ஏமாற்றமடைந்த மாணவர்களைத் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கும் தள்ளிவிட்டிருக்கிறது.
தாமதமாகக் கொண்டுவரப்பட்டாலும் இந்த இட ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது என்றபோதும், அரசுப் பள்ளிகளில் படித்துவரும் ஏழை மற்றும் கீழ் நடுத்தர வரக்க மாணவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது இந்த ஒதுக்கீடு சொற்பமானதுதான். அதேசமயத்தில், இந்தச் சொற்பமான ஒதுக்கீடும் எளிதாகக் கிடைத்துவிடவில்லை.
படிக்க :
♦ INI – CET : 11 கல்லூரிகளுக்கு நீட் விலக்கு – தமிழகத்துக்குக் கிடையாதா ?
♦ 7.5% உள் ஒதுக்கீடு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : ஏழை மாணவர்களுக்கு இது போதுமா ?
நீதிபதி கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் பரிந்துரைத்ததை அ.தி.மு.க. அரசு 7.5 சதவீதமாக வெட்டியது. இந்த வெட்டப்பட்ட ஒதுக்கீடிற்கும் ஆளுநர் ஒப்புதல் தராமல் இழுத்தடித்தார். அ.தி.மு.க. அரசோ ஆளுநருக்கு அரசியல் அழுத்தம் தர மறுத்து ஒதுங்கிக் கொண்டது. உயர்நீதி மன்றத்தில் வழக்கு, எதிர்க்கட்சிகளின் போராட்ட அறிவிப்பு, ஆளுநரின் அடாவடித்தனத்திற்கும் அ.தி.மு.க. அரசின் மெத்தனத்திற்கும் எதிராகத் தமிழக மக்கள் மத்தியில் எழுந்த வெறுப்பு−கோபம் ஆகியவற்றுக்குப் பிறகுதான் அ.தி.மு.க. அரசு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. இந்த இட ஒதுக்கீடை மறுப்பதோ இழுத்தடிப்பதோ பா.ஜ.க.வைப் பதம் பார்த்துவிடும் என உரைத்த பிறகுதான் ஆளுநர் தமிழக அரசின் இட ஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் தந்தார். இந்த அழுத்தங்கள் எல்லாம் இல்லாமல் போயிருந்தால், இந்த இட ஒதுக்கீடும் எழுவர் விடுதலையைப் போலவே ஆளுநர் மாளிகையிலேயே அமுக்கப்பட்டிருக்கும்.
தனியார் “மெட்ரிகுலேஷன்” மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் கார்ப்பரேட் பயிற்சி மையங்களிலும் இலட்சக்கணக்கான ரூபாயைச் செலவழித்துப் படிக்கும் நடுத்தர மற்றும் மேல்தட்டு மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி இடங்களை அப்படியே வாரிச் சுருட்டிக் கொள்வதை அனுமதிப்பது அநீதியானது என்ற நிலையிலிருந்து இந்த இட ஒதுக்கீடை ஆதரிக்கலாமேயொழிய, நீட் தேர்வை மறைமுகமாக முட்டுக் கொடுப்பதற்கும் அல்லது நீட் தேர்விற்கான எதிர்ப்பை மழுங்கடிப்பதற்குமான கருவியாக இந்த இட ஒதுக்கீடைப் பயன்படுத்தும் முயற்சிகளையும் நாம் அனுமதிக்க முடியாது. ஏனென்றால், நீட் தேர்வின் மூலம் திணிக்கப்பட்டிருக்கும் சமத்துவமின்மையை, பாரபட்சத்தை இந்த இட ஒதுக்கீடு இம்மியளவுகூட ரத்து செய்துவிடவில்லை.

இந்த ஒதுக்கீடின் அடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 227 மாணவர்களுக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 86 மாணவர்களுக்கும் அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 12 மாணவர்களுக்கும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 80 மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டிருந்தாலும், நீட் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்ணின் அடிப்படையில்தான் மாணவர் தேர்வு நடைபெறும். இந்த நீட் தேர்வு சி.பி.எஸ்.இ., பாடத் திட்டப்படி நடைபெறுவதால், மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வுக்காக அரசு பயிற்சி மையத்திலோ அல்லது தனியார் பயிற்சி மையத்திலோ சேர்ந்து இத்தேர்வுக்குத் தயாராவது தவிர்க்கவியலாத கட்டாயமாகிவிடுகிறது. குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுத வேண்டுமென்றால், அவர்கள் தனியார் பயிற்சி மையத்தில் மட்டும்தான் சேர முடியும்.
இந்த ஆண்டு நீட் தேர்வில் 664 மதிப்பெண்களை எடுத்து, இந்திய அளவில் அரசுப் பள்ளி மாணவர்களில் முதலிடம் பெற்றிருக்கும் தேனி மாவட்டம் ஜீவித்குமார் கடந்த ஆண்டு நீட் தேர்வில் எடுத்த மதிப்பெண் 193 தான். அம்மாணவன் இரண்டாம் முறையாக நீட் தேர்வு எழுதுவதற்கு நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பயற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி எடுப்பதற்குப் பலரும் உதவியிருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தெங்கலம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த பகவதி, கடந்த ஆண்டு நீட் தேர்வில் 111 மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததால், மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. இந்த ஆண்டு அவர் தனியார் பயிற்சி மையத்தில் சேருவதற்காக, விவசாயக் கூலித் தொழிலாளியான அவரது தாய் சமுத்திரக்கனி, தன்னிடமிருந்த மூன்று கறவை மாடுகளையும் விற்றதோடு, கந்துவட்டிக்கும் கடன் வாங்கியிருக்கிறார்.
இட ஒதுக்கீடின் கீழ் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்திருக்கும் பகவதியின் கதையிது. இது போன்று அற்பமான சொத்தையும் விற்ற, கடனும் பட்ட துயரக் கதைகள் இன்னும் எத்துணை எத்துணையோ!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 6,692 மாணவ−மாணவிகள் இந்த ஆண்டு நீட் தேர்விற்கு அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றதில் 1,615 பேர் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி அடைந்தவர்களுள் 405 பேருக்குத்தான் இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளிலோ பல் மருத்துவக் கல்லூரிகளிலோ இடம் கிடைக்கும்.
இடம் கிடைக்காதவர்களும், நீட் தேர்வில் தேர்ச்சி அடையாதவர்களும் எதிர்வரும் ஆண்டில் நீட் தேர்விற்குத் தயாராக வேண்டுமெனில் அவர்கள் அனைவரும் தனியார் பயிற்சி மையத்திற்குச் செல்ல வேண்டியிருக்கும். இந்நிலையில் அவர்களுள் எத்துனை பேருக்கு ஜீவித்குமாருக்குக் கிடைத்த உதவி போல கிடைக்கும்? எத்துணை பேரால் கையில் இருக்கும் அரைக்காசு சொத்தை விற்றோ, அல்லது கந்து வட்டிக்குக் கடன் வாங்கியோ தனியார் பயிற்சி மையத்தின் கட்டணங்களைக் கட்ட முடியும்?
படிக்க :
♦ ரஜினி ரசிகர்களே ! இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை !
♦ கமல்ஹாசன் – சூரப்பாவின் #நேர்மை, #திறமை, #அஞ்சாமை !!
இந்த 7.5 சதவீத ஒதுக்கீடு 405 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதை உத்தரவாதப்படுத்தியிருக்கிறது என்பது எந்தளவிற்கு உண்மையோ அந்தளவிற்கு மருத்துவராக வேண்டும் எனக் கனவு காணும் அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பங்களின் மீது பொருளாதாரச் சுமையை ஏற்றி வைக்கும் என்பதும் உண்மையாகும். குறிப்பாக, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்படும் மாணவர்களுக்கு அரசு உதவிகள் கிடைத்தாலும், அவர்களது குடும்பங்கள் பெரும் கடன் சுமையில் சிக்குவது தவிர்க்க முடியாதது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை இன்னும் வலுவாக எழுப்ப வேண்டும் என்பதைத் தான் 7.5 சதவீத இட ஒதுக்கீடிற்குப் பிறகான நிலைமைகள் ஏற்படுத்தியிருக்கின்றன.
நீட் தேர்வை ரத்து செய்யக் கோருவதோடு, கல்வி தனியார்மயமாகியிருக்கும் சூழலில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அரசுக் கல்லூரிகள் அனைத்திலும் உரிய இட ஒதுக்கீட்டை நிர்ணயித்துத் தொடர வேண்டும் என்றும் கோர வேண்டும்.
இந்த உடனடிக் கோரிக்கைகளுக்காக மாணவர்களையும் பெற்றோர்களையும் அணி திரட்டுவதை முதன்மைப்படுத்துவதற்குப் பதிலாக, அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த இட ஒதுக்கீடைப் பயன்படுத்திக் கொள்ளுவதற்கு ஏற்ற விதத்தில் அவர்களுக்கு உதவுவதை முன்னிலைப்படுத்துவதையும்; நீட் தேர்வைத் தடுத்து நிறுத்துவதில் படுதோல்வியடைந்து நிற்கும் அ.தி.மு.க., தனது தோல்வியை மறைத்துக் கொள்ள இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடைப் பயன்படுத்துவதையும் அனுமதிக்கக் கூடாது.

ரஹீம்
டிசம்பர் 2020 – மின்னிதழை தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்