ந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி ஆட்சியில் அமர்ந்தது முதல் தொடுக்கிக் கொண்டிருந்த சிறு சிறு ஜனநாயக உரிமைகளும் ஒட்டுமொத்தமாகப் பறிக்கப்பட்டு குழிதோண்டிப் புதைக்கப்படுவதைப் பார்த்து வருகிறோம்.

தமது தங்குதடையற்ற சுரண்டலுக்கு ஏதுவான வகையில் இந்திய நிலைமையை மாற்றியமைக்கும் வகையில்  ஆர்.எஸ்.எஸ். சங்க பரிவாரக் கும்பலின் கையில் ஆட்சி அதிகாரம் கிடைக்கச் செய்யும் வகையில் குஜராத் படுகொலை இழிபுகழ்  மோடியை ஊதிப் பெருக்கின பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள்.

கார்ப்பரேட் கும்பலுக்கும், இந்துத்துவக் கும்பலுக்கும் இடையிலான உறவை அம்பலப்படுத்திவரும் முற்போக்காளர்களையும், இந்துத்துவக் கும்பலின் சாதிய மற்றும் மத ரீதியிலான சதிச் செயல்களை மக்களிடம் அம்பலப்படுத்திவரும் சமூகச் செயற்பாட்டாளர்களையும் கொலை செய்வது, சிறையிலடைப்பது என தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது சங்க பரிவரக் கும்பல்.

படிக்க :
♦ கொரோனா நெருக்கடியிலும் அதிகரிக்கும் பெருமுதலாளிகளின் சொத்து மதிப்பு !
♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !

முதல்சுற்றில், நரேந்திர தபோல்கர், கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கவுரிலங்கேஷ் ஆகியோரின் படுகொலைகளை அரங்கேற்றிய இக்கும்பல், அடுத்த சுற்றில், பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக களமிறங்கிப் போராடிய முற்போக்காளர்களை, பீமா கொரேகான் வழக்கில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்று கூறி கைது செய்து சிறையிலடைத்து வருகிறது.

பேராசிரியர் ஆனந்த் தெல்தும்ப்டே, கவிஞர் வரவர ராவ், பழங்குடி மக்கள் உரிமைக்கான செயற்பாட்டாளர் ஸ்டான்ஸ்வாமி, சுதா பரத்வாஜ், பத்திரிகையாளர் கவுதம் நவ்லகா உள்ளிட்ட பலரையும் கைது செய்து சிறையிலடைத்து சித்திரவதை செய்து வருகிறது மோடி அரசு.

80 வயது முதியவரான ஸ்டான்சுவாமிக்கு நீரை உறிஞ்சிக் குடிக்கும் வகையில் ஸ்ட்ரா மற்றும் சிப்பர் (Sippper) வழங்குவதற்கு ஒரு மாதம் இழுத்தடிக்கப்பட்டதையும் நம் கண்முன்னேதான் காண்கிறோம். அந்த வரிசையில் அடுத்ததாக இதே போல சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார் பத்திரிகையாளர் கவுதம் நவ்லகா.

எழுபது வயதை நெருங்கிய கவுதம் நவ்லகாவும் பீமா கொரேகான் சதி வழக்கில் சேர்க்கப்பட்டு, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ-யுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி இந்த ஆண்டில் கைது செய்யப்பட்டார்.

வயோதிகம் காரணமாக ஏற்படும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளோடு இருக்கும்  நவ்லகாவிற்கு பிணை வழங்க மறுத்தது நீதிமன்றம். சிறையில் இருக்கும் கவுதமின் கண் கண்ணாடியை சிறையில் கடண்டஹ் நவம்பர் 27 அன்று திருடப்பட்டிருக்கிறது.

கவுதம் நவ்லகா

பணமோ, கடிகாரம் உள்ளிட்ட பொருள்களோ ஏதேனும் ஆதாயம் கிடைக்கும் என்ற காரணத்திற்காகத் திருடப்படலாம். ஆனால் கண் கண்ணாடியை யாரேனும் அப்படி ஒரு ஆதாயத்திற்காகத் திருட முடியுமா? சிறை நிர்வாகம் கவுதம் நவ்லகாவைப் பழிவாங்கும் நோக்கத்துடனே இத்தகைய திருட்டு சம்பவங்களை நிகழ்த்தியிருக்குமோ என்ற சந்தேகத்தை அடுத்தடுத்த நாட்களில் நடந்த சம்பவங்களே ஏற்படுத்தியிருக்கின்றன.

தனக்கு உடனடியாகக் கண்ணாடி தேவை என்பதை தனது குடும்பத்திற்குத் தெரியப்படுத்தக் கூட அடுத்த மூன்று நாட்களுக்கு அவருக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

கண்ணாடி இல்லாமல் அருகில் உள்ள பொருட்களைக் கூட சரிவரப் பார்க்க முடியாத நிலையில் கவுதம் நவ்லகாவிற்கு, மன அழுத்தமும் அதிகரித்து அதன் காரணமாக இரத்த அழுத்தமும் அதிகரித்துள்ளது.

மூன்று நாட்களுக்குப் பிறகு தகவல் தெரிந்து தனது கணவருக்கு இரண்டு கண் கண்ணாடிகளை தலோஜா சிறைச்சாலைக்கு அனுப்பிவைத்துள்ளார் அவரது துணைவியார் சபா ஹுசைன். இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவலும் அளித்துள்ளார். ஆனால் அனுப்பப்பட்ட கண்ணாடியை திருப்பியனுப்பியிருக்கிறது சிறை நிர்வாகம்.

அஞ்சலில் அனுப்பப்பட்ட கண்ணாடியை சிறை நிர்வாக ஏற்க மறுத்து திருப்பியனுப்பியதற்கான ஆதாரம்

இதற்கு முன்னர் கவிஞர் வரவர ராவுக்கு உடல்நிலை மோசமான நிலையிலும் உரிய சிகிச்சை அளிக்க மறுத்ததும் நினைவில் இருக்கலாம்.

முதல் ஐந்தாண்டு ஆட்சியில், சனாதன் சன்ஸ்தா, இந்து ஜன் ஜக்ருதி மன்ச் போன்ற உதிரிக் கும்பலின் மூலம் நேரடியாகக் கொலை செய்த சங்க பரிவாரம், இன்று அரசு இயந்திரத்தின் மூலமே நேரடியாக சித்திரவதை செய்து கொல்கிறது. இதன் மூலம் பிற சமூகச் செயற்பாட்டாளர்களை அச்சமூட்டப் பார்க்கிறது.

மோடி அரசு – என்.ஐ.ஏ- நீதிமன்றம் ஆகியவற்றின் இத்தகைய கள்ளக் கூட்டு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதை இலக்காக வைத்துப் போராட்டங்களை முன்னெடுக்கத் தவறினால், பாசிசக் கொடுங்கோன்மையின் கொடுங்கரங்களுக்குள் நம்மை தாமாக முன்வந்து ஒப்படைக்கிறோம் என்று பொருள். மோடி அரசின் பாசிசத் திமிரை அடக்கப் போகிறோமா ? அடங்கிப் போகப் போகிறோமா ?

சரண்
நன்றி :
The Wire