‘‘தனிமனித சுதந்திரம் இவ்வாறு நசுக்கப்பட்டால், உச்ச நீதிமன்றம் அவர்கள் ஒவ்வொருக்காகவும் நிற்கும்’’
− இப்படியொரு தார்மீக ஆவேசத்தை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் உரிமையாளரும் அதன் தலைமை ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்காலப் பிணை வழங்கிய உத்தரவில் வெளிப்படுத்தினார்.
அர்னாப் கோஸ்வாமியைப் பற்றித் தெரியாத அரசியல் நோக்கர்கள் யாரும் இருக்க முடியாது. அர்னாபை அறிந்திராதவர்களுக்கு அவரைப் பற்றி ஒரே வரியில் கூற வேண்டுமானால், அர்னாப் ஊடகத் துறையில் இயங்கிவரும் ஆர்.எஸ்.எஸ். பேர்வழி, மோடி விசுவாசி. தமிழகத்திற்கு பாண்டே போல, அவர் ‘‘தேசிய’’ பாண்டே. பத்திரிகையாளர்களைச் சந்திப்பதையே எட்டிக்காயாகக் கருதிவரும் பிரதமர் மோடியைக்கூட நேர்காணல் செய்யும் அருளாசி கிடைக்கப் பெற்றவர். அவர் நடத்திவரும் ரிபப்ளிக் டி.வி.யை பாரதிய ஜனதா கட்சியின் அறிவிக்கப்படாத அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி என்றே சொல்லலாம்.

மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா − காங்கிரசு கூட்டணி அரசு அர்னாபைக் கடந்த நவம்பர் 4 அன்று கைது செய்தது. பிணை மனுக்களை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதுதான் பொதுவான நடைமுறை. ஆனால், அர்னாப் தரப்பு விசாரணை நீதிமன்றத்தை தவிர்த்துவிட்டுப் பிணை மனுவை மும்பய் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அம்மனுவைக் காலதாமதம் எதுவுமின்றி நவம்பர் 9 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மும்பய் உயர் நீதிமன்ற அமர்வு, ‘‘விசாரணை நீதிமன்றத்திலேயே பிணை மனு தாக்கல் செய்வதற்கு மனுதாரருக்கு மாற்று வழி இருக்கிறது. எனவே, அர்னாப் பிணை மனுவை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அம்மனு தாக்கல் செய்யப்பட்ட நான்கு நாட்களுக்குள் அதனை விசாரிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டது.
இதனையடுத்து அர்னாப் தாக்கல் செய்த பிணை மனுவை அலிபாக் விசாரணை நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் பட்டியலிட்ட நிலையில், மற்றொரு பிணை மனுவை உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்தார் அர்னாப். கீழமை நீதிமன்றத்தில் பிணை மனு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் பிணை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது மரபு கிடையாது. மேலும், விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் பிணை மறுக்கப்பட்ட நிலையில்தான் உச்ச நீதிமன்றம் பிணை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்.
ஆனால், உச்ச நீதிமன்றமோ இந்தப் பொது மரபை புறந்தள்ளவிட்டு, அர்னாப் தாக்கல் செய்த பிணை மனுவை அவசர வழக்குப் போல பாவித்து நவம்பர் 11 அன்றே விசாரணைக்கு எடுத்துக்கொண்டதோடு, அன்றே அவருக்கு இடைக்காலப் பிணையும் வழங்கி உத்தரவிட்டது. ‘‘நாங்கள் இந்த வழக்கில் இன்று தலையிடாவிட்டால், அழிவுப் பாதையின் மேல் நடந்திருப்போம்’’ என இந்த அவசரத்திற்கு விளக்கமும் அளித்தார் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட். மேலும், தனது உத்தரவில் ‘‘அர்னாப் கோஸ்வாமியை போலிசு விசாரணைக்கு அனுப்புவது அவசியமா?’’ என்றும் கேள்வி எழுப்பினார், அவர்.
உச்ச நீதிமன்றம் அவசர அவசரமாகத் தலையிட வேண்டிய அளவிற்கு அர்னாப் கோஸ்வாமியின் கைது, அவ்வளவு முக்கியத்துவமிக்க வழக்கு கிடையாது. அர்னாப், தனது தொழில் நிமித்தமாக, அதாவது தனது பேச்சு மற்றும் எழுத்திற்காகக் கைது செய்யப்படவில்லை. மாறாக, அன்வாய் நாயக் என்பவரைத் தற்கொலைக்குத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில்தான் அர்னாப் கைது செய்யப்பட்டார்.

பண நெருக்கடி காரணமாக 2018−இல் தற்கொலை செய்து கொண்ட அன்வாய் நாயக், தனது தற்கொலைக் குறிப்பில் அர்னாப் பெயரையும் குறிப்பிட்டிருந்தார். அர்னாப் கோஸ்வாமி நடத்திவரும் ரிபப்ளிக் டி.வி. நிறுவனம், தனக்குக் கட்டணமாகச் செலுத்த வேண்டிய 83 இலட்சம் ரூபாயைத் தர மறுப்பதையும் அன்வாய் நாயக் தனது தற்கொலை குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்ட இவ்வழக்கை, அன்வாய் நாயக்கின் மனைவி மறுவிசாரணை செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தார். அதன் அடிப்படையில் அர்னாப் கோஸ்வாமியைக் கைது செய்ததாக மகாராஷ்டிரா போலிசு விளக்கமளித்தது. இதற்காக அர்னாபைக் கைது செய்திருக்க வேண்டியதில்லை என விமர்சித்துள்ள ஊடகங்கள்கூட, அர்னாப் கைது செய்யப்பட்டதைக் கருத்துச் சுதந்திரத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகக் குறிப்பிடவில்லை.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பா.ஜ.க., சிவசேனாவிற்கு இடையே சமீபகாலமாக நடந்துவரும் மோதலுக்கும் அர்னாபின் கைதுக்கும் தொடர்புண்டு. அதனால்தான் அர்னாப் கைது செய்யப்பட்டவுடனேயே மோடி அரசின் அமைச்சர்கள் இந்தக் கைது அவசர நிலை காலத்தை நினைவுபடுத்துவதாகக் கொதித்துப் போனார்கள். அர்னாப் கைது செய்யப்பட்டது சிவசேனா அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றபோதும், அதற்காக உச்ச நீதிமன்றம் இவ்வளவு பதட்டமடைந்திருக்க தேவையில்லை. தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பார்களே, அப்படி இவ்விவகாரத்தில் நடந்துகொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம், இதே அவசரத்தை, ஆவேசத்தை எத்துணையோ மனித உரிமைப் போராளிகளும் சமூகச் செயற்பாட்டாளர்களும் மோடி அரசால் பழிதீர்த்துக் கொள்ளும் நோக்கத்தோடு தேசியப் பாதுகாப்புச் சட்டம், உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டபோது காட்டியதில்லை.
அர்னாபுக்கு நீதி – மற்றவர்களுக்கு அநீதி
இழி புகழ்பெற்ற பீமாகோரேகான் வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியைக் கொலை செய்ய சதி செய்தார்கள், மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள், நகர்ப்புற நக்சல்கள் என்பன அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள். ‘‘இந்த 16 பேரில் ஒருவரைத் தவிர, மற்றவர் யாரும் இந்த வழக்கோடு தொடர்புடைய எல்கர் பரிஷத் மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் பிரதமர் மோடியைக் கொலை செய்ய சதி செய்தார்கள், இவர்களுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் தொடர்புண்டு என்ற குற்றச்சாட்டுக்களுக்கு, இவ்வழக்கை நடத்திவரும் தேசியப் புலனாய்வு முகமை இதுவரை எந்தவொரு வலுவான ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. மேலும், குற்றப்பத்திரிகையிலும்கூட கொலைச் சதி பற்றிய குறிப்புகள் இல்லை’’ எனச் சுட்டிக் காட்டுகிறார்கள் குற்றஞ்சுமத்தப்பட்டோரின் வழக்குரைஞர்கள்.

எல்கர் பரிஷத் மாநாட்டைத் தலைமையேற்று நடத்திய இரண்டு முன்னாள் நீதிபதிகளுள் ஒருவரான பி.பி.சாவந்த், ‘‘இம்மாநாடு மோடி அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒன்று. இம்மாநாட்டிற்கு அணிதிரட்டி நடத்திய நீதிபதிகளான எங்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, இம்மாநாட்டோடு தொடர்பற்றவர்களைக் கைது செய்திருப்பது மோடி அரசின் நோக்கம் வேறு என்பதைக் காட்டுகிறது’’ என இந்தக் கைது நடவடிக்கையை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
இக்குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த ஆகஸ்டு 2018−இல் கைது நடவடிக்கையைத் தொடங்கியது மோடி அரசு. அந்நடவடிக்கை இன்று வரை முற்றுப் பெறவில்லை. இவ்வழக்கில் 16−ஆவது குற்றவாளியாக 84 வயதான பாதிரியார் ஸ்டேன் சுவாமியை கடந்த அக்டோபரில் கைது செய்தது, தேசியப் புலனாய்வு முகமை. கடந்த ஏப்ரலில், கரோனா தொற்று தீவிரமாகப் பரவிவந்த நிலையைக்கூடப் பொருட்படுத்தாது, பேராசிரியரும் மனித உரிமைப் போராளியுமான ஆனந்த் தெல்தும்டே கைது செய்யப்பட்டார். அம்பேத்கரின் பேரனாக அறியப்படும் ஆனந்தை அம்பேத்கர் பிறந்த நாளன்று (ஏப்ரல் 14 அன்று) கைது செய்திருப்பதன் மூலம், தாழ்த்தப்பட்டோரின் உணர்வுகளை அவமதித்திருக்கிறது, மோடி அரசு.
புத்தக வெளியீட்டாளர் சுதிர் தவாலே, வழக்குரைஞர்கள் சுரேந்திர காட்லிங், சமூகச் செயற்பாட்டாளர்கள் ரோனா வில்சன் மற்றும் மகேஷ் ரௌத், கல்வியாளர் ஷோமா சென் ஆகியோர் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. வழக்குரைஞர்கள் அருண் ஃபெரேரியா, சுதா பரத்வாஜ், எழுத்தாளர் வெர்னான் கன்சல்வ்ஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. புரட்சிகர கவிஞர் வரவர ராவ், பத்திரிகையாளர் கௌதம் நவ்லகா ஆகியோர் கைது செய்யப்பட்டும் ஒரு வருடம் முடிந்துவிட்டது.
இவர்களுள் பலர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டிக்கிறது. அவர்களுக்கு எளிதில் பிணை கிடைத்துவிடக் கூடாது என்ற மோடி அரசின் தீய உள்நோக்கம் காரணமாகவே இக்கருப்புச் சட்டம் அவர்கள் மீது ஏவப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் சிவசேனை − காங்கிரசு கூட்டணி அரசு பதவிக்கு வந்த பிறகு, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்குப் பிணை வழங்குவதற்கு அக்கூட்டணி அரசு முன்வந்தவுடனேயே, இந்த வழக்கை மகாராஷ்டிரா போலிசிடமிருந்து தேசியப் புலனாய்வு முகமைக்குத் தன்னிச்சையாக மாற்றியது, மோடி அரசு. இவர்களைச் சுதந்திர மனிதர்களாக வெளியே விட்டுவிடக் கூடாது, விசாரணை என்ற போர்வையில் இவர்களைச் சிறையிலேயே அடைத்து வைத்திருக்க வேண்டும் என்பதைத் தவிர, வழக்கை மாற்றியதற்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது.
படிக்க :
♦ பீமா கொரேகான் வழக்கை முடிக்க மோடி அரசு செய்யும் மோசடிகள் – அம்பலப்படுத்துகிறது அம்னெஸ்டி !
♦ எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !
அர்னாப் கோஸ்வாமி பத்திரிகையாளர் என்ற போர்வையில் உலாவரும் இந்து மதவெறி பாசிஸ்டு. மோடி அரசை நத்திப் பிழைப்பவன். அதேசமயம் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு வருடம், இரண்டு வருடம் என இன்னமும் நீதிமன்றங்களால் பிணை வழங்கப்படாமல் சிறையில் வாடும் இவர்களோ தொழிலாளர்களின், தாழ்த்தப்பட்டோரின், பழங்குடியினரின் சமூக உரிமைகளுக்காகவும், உழைக்கும் மக்களின் வாழ்வாதார, ஜனநாயக உரிமைகளுக்காகவும் நீண்ட காலமாகப் போராடி வருபவர்கள். இவர்களுள் பலர் சர்வதேச அளவில் மதிக்கப்படும் அறிவுத் துறையினர்.
இவர்களுள் ஐம்பத்தொன்பது வயதான சுதா பரத்வாஜ் இருதய மற்றும் சர்க்கரை நோயாளி; எண்பது வயதைத் தாண்டிய வரவர ராவ் இருதய நோயாளி மட்டுமின்றி, சமீபத்தில் கரோனா நோய்த் தொற்றாலும் பாதிக்கப்பட்டவர். அவருக்குச் சிறுநீரகக் கோளாறு இருப்பதோடு, ஞாபக மறதி நோயாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கை கூறுகிறது. எண்பத்து நான்கு வயதான ஸ்டேன் சுவாமி பர்கின்ஸன் எனப்படும் நரம்புத் தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டவர்.
இவர்களின் கல்வித் தகுதி, சமூகத் தகுதி, சமூகத்திற்கு இவர்கள் ஆற்றியுள்ள பங்களிப்பு, இந்தக் கைதின் பின்னணி ஆகியவையெல்லாம் உச்ச நீதிமன்றமும் மும்பய் உயர் நீதிமன்றமும் அறியாதவையல்ல. ஆனாலும், இவர்களுள் ஒருவருக்குக்கூட மும்பய் உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ இதுநாள் வரையிலும் பிணை வழங்க முன்வரவில்லை.

மருத்துவக் காரணங்களுக்காகத் தனக்கு இடைக்காலப் பிணை வழங்குமாறு சுதா பரத்வாஜ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, ‘‘நீங்கள் இடைக்காலப் பிணை அல்லாமல், வழக்கமான பிணையே கேட்கலாம். அதற்குத் தகுதி வாய்ந்த காரணங்கள் உள்ளன’’ எனத் தேனொழுகக் கூறிவிட்டு, அவர் கேட்ட இடைக்காலப் பிணையைக்கூட வழங்காமல், ‘‘இந்த மனுவைத் திரும்பப் பெறுங்கள், இல்லையென்றால் தள்ளுபடி செய்துவிடுவோம்’’ எனக் கூறி, அவரைக் கைகழுவியது.
இதே மருத்துவக் காரணங்களை முன்வைத்து அவர் மும்பய் உயர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்த வழக்கில், சிறை மருத்துவர்களே அவரை நன்கு கவனித்துக் கொள்வதாகத் தேசியப் புலனாய்வு முகமை கூறிய காரணத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு அவருக்குப் பிணை வழங்க மறுத்தது அந்நீதிமன்றம்.
இருதய நோய், சிறுநீரகக் கோளாறு, ஞாபக மறதி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுத் தொடர் மருத்துவக் கண்காணிப்பின் கீழ் இருக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் வரவர ராவிற்கும் இதுவரை பிணை வழங்கப்படவில்லை. அவரை ஒரு பதினைந்து நாட்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதற்குக்கூட மும்பய் உயர் நீதிமன்றத்தில் பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.
தங்களுக்கு ஒரு போர்வை வேண்டுமென்றால்கூட, நீதிமன்றக் கதவுகளைத் தட்ட வேண்டியிருக்கிறது எனக் குற்றஞ்சுமத்துகிறார்கள், இப்போராளிகள். குறிப்பாக, பர்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஸ்டேன் சுவாமியால் ஒரு குவளை நீரைக்கூடக் கையால் எடுத்துப் பருக முடியாது. அதனால் தனக்கு உறிஞ்சு குழல் (ஸ்ட்ரா) வழங்க வேண்டும் எனக் கேட்டதற்கு, அவரது கோரிக்கையைப் பரிசீலிக்கக் கால அவகாசம் கேட்டிருக்கிறது விசாரணை நீதிமன்றம்.
இப்போராளிகளுக்குப் பிணை வழங்க மறுப்பது மட்டுமல்ல, அவர்களுக்குத் தேவைப்படும் உரிய மருத்துவ சிகிச்சையை, உரிய காலத்தில் வழங்க மறுத்து இழுத்தடிப்பதெல்லாம் அவர்களின் தனிமனித உரிமையை மறுப்பது மட்டுமல்ல, அவர்களின் உயிர்வாழும் உரிமையையும் மறுப்பதாகும். மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர் என்ற குற்றச்சாட்டின் கீழ் தண்டிக்கப்பட்டு மகாராஷ்டிரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் சாய்பாபாவை அரசும் நீதிமன்றமும் கைகோர்த்துக்கொண்டு சிறுகச்சிறுகச் சாகடிப்பது நம் கண்முன்தான் அரங்கேறி வருகிறது. அப்படிப்பட்டதொரு அபாயம் இப்போராளிகள் மீது விசாரணை நிலையிலேயே திணிக்கப்படுகிறது.

பத்திரிகையாளர் அர்னாபிற்குப் பிணை வழங்க சட்டம், மரபுகளை மீறிய உச்ச நீதிமன்றம், கேரளாவைச் சேர்ந்த ஆழிமுகம் என்ற இணையதளப் பத்திரிக்கையைச் சேர்ந்த செய்தியாளர் சித்திக் கப்பனின் பிணை மனு வழக்கில் சட்டவாதக் கண்ணாடியை மாட்டிக் கொண்டது. உ.பி. மாநிலம், ஹாத்ரஸில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற சித்திக் கப்பனை முஸ்லிம் தீவிரவாதியைப் போல முத்திரை குத்தி வருகிறது ஆதித்யநாத் அரசு. அதன் காரணமாகவே, அவருக்கும் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கும் தொடர்பிருக்கிறது என்றும், உ.பி. மாநிலத்தில் சாதி, மத மோதல்களைத் தூண்டிவிடும் நோக்கில் அவர் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதி பெற்றிருக்கிறார் என்றும் குற்றஞ்சுமத்தி, அவரைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்திருக்கிறது.
அர்னாபின் பிணை மனு மீதான வழக்கில் மகாராஷ்டிரா அரசின் பதிலைக்கூட எதிர்பார்க்காமல், அவருக்குத் தன்னிச்சையாகவும் தடாலடியாகவும் பிணை வழங்கிய உச்ச நீதிமன்றம், சித்திக் கப்பன் பிணை கோரித் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, உ.பி. மாநில அரசும் உ.பி. மாநில போலிசும் பதில் மனு தாக்கல் செய்யக் கூறி, அவ்வழக்கை ஒத்தி வைத்துவிட்டது.
மோடியின் பழிதீர்க்கும் ஆயுதம் − உபா சட்டம்
இவையனைத்தும் ஊடக வெளிச்சம் பட்ட வழக்குகள். இவையன்றி, நீதியும் கிடைக்காமல், பிணையும் கிடைக்காமல், தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்ட நிலையில் சிறையில் இருப்போரின் எண்ணிக்கை பல ஆயிரத்தையும் தாண்டும். எடுத்துக்காட்டாக, 2014 தொடங்கி 2016 முடியவுள்ள மூன்று ஆண்டுகளில் மட்டும் 2,700 வழக்குகள் உபா சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளன. 2016 முதல் 2018 முடியவுள்ள இரண்டு ஆண்டுகளில் மட்டும் உபா சட்டத்தின் கீழ் 3,005 வழக்குகள் பதியப்பட்டு, 3,974 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. 2018−க்குப் பின் உபா சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் 93 சதவீத வழக்குகள் இன்னமும் நீதிமன்ற விசாரணையில், நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடுகிறது, தேசியக் குற்ற ஆவணத் துறை.
மோடி அரசு 2019−ஆம் ஆண்டு உபா சட்டத்தில் கொண்டுவந்த திருத்தங்களின்படி, அமைப்புகளை மட்டுமின்றித் தனிநபர்களைக்கூடத் தீவிரவாதியாக முத்திரை குத்தி உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க முடியும். சில விதிவிலக்குகள் இருந்தாலும், இந்தச் சட்டத்தில் கைது செய்யப்படுவோருக்குப் பிணை கிடைப்பதும் எளிதான ஒன்றல்ல. குறிப்பாக, சில தீவிரவாதக் குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்குப் பிணை வழங்கக் கூடாதவாறு இச்சட்டத்தில் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் குற்றமற்றவர்களாக இருந்தாலும், பிணை வழங்காமலேயே நீண்ட நாட்களுக்கு அவர்களைச் சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும். விசாரணையையே தண்டனையாக்கும் சதித்தனம் இச்சட்டத்தில் உள்ளார்ந்து உள்ளது. இந்த அடிப்படையில்தான் பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் முற்போக்கு அறிவுத்துறையினரை மட்டுமல்ல, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராகப் போராடிய மாணவர்கள், இளைஞர்களையும் இந்து மதவெறி அரசுகள் இச்சட்டத்தைப் பயன்படுத்தித் தண்டித்து வருகின்றன.
படிக்க :
♦ அயோத்தி தீர்ப்பு : அரசியலமைப்புக்கு விழுந்த அடி !
♦ இந்திய நீதிமன்றம் அந்நிய முதலீட்டாளர்களின் கைக்கூலிப்படையா ?
இந்த அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தவர்களை, குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து சட்டபூர்வமாக அமைதிவழியில் போராடியவர்களை, ஜம்மு காஷ்மீரின் சிறப்புரிமையை ரத்து செய்ததைக் கண்டித்தவர்களை மட்டுமல்ல, ஒரு பாலியல் வன்கொடுமை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளரைக்கூட விட்டுவைக்காமல், இந்து மதவெறி ஆட்சியாளர்கள் உபா சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள் எனில், இந்த அடக்குமுறைக்கு நீதிமன்றங்களும் ஒத்தூதி வருகின்றன எனில், இந்திய மக்கள் அவசரநிலைக் காலத்தை விஞ்சக்கூடிய அபாய நிலையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் கருத முடியும்.
இந்திய நீதிமன்றங்கள் ஆர்.எஸ்.எஸ்.−பா.ஜ.க.வின் அரசியல் திட்டங்களை நிறைவேற்றிக் கொடுக்கும் கைக்கூலியாகச் செயல்பட்டு வருவதைப் பல்வேறு வழக்குகளில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளே அம்பலப்படுத்தியுள்ளன. பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் உலாவரும் இந்து மதவெறி பாசிஸ்டு அர்னாபுக்கு உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தடாலடி பிணை அக்கைக்கூலித்தனத்தின் இன்னுமொரு உதாரணம்.
அர்னாபிற்குப் பிணை வழங்கிய நீதிபதி சந்திரசூட், ‘‘இது போன்ற அடக்குமுறைகளை எதிர்கொள்ளக்கூடிய வகையில் இந்திய ஜனநாயகம் அசாதாரண வலுவோடு இருப்பதாக’’க் குறிப்பிட்டார். ஆனால், மோடி அரசோ இது வெற்று வாய்ஜாலம் என்பதை அத்தீர்ப்பின் மை காய்வதற்குள்ளாகவே அம்பலப்படுத்திவிட்டது. அர்னாபிற்கு அவசர கதியில் பிணை வழங்கியதை நையாண்டி செய்த குணால் கம்ரா என்ற மேடை நகைச்சுவையாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும் எனப் பரிந்துரை செய்திருக்கிறது, மைய அரசு.
மோடி அரசின் கொள்கைகளை விமர்சிப்பவர்கள் மீதும், அவரது அரசின் சட்டங்களை எதிர்ப்பவர்கள் மீதும் உபா, தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட கொடிய சட்டங்கள் பாய்கின்றன. இதற்கு ஒத்தூதும் நீதிமன்றங்களை விமர்சிப்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டம் ஏவிவிடப்படுகிறது. எனில், இந்தியாவை ஜனநாயக நாடு எனக் கூறிக் கொள்வதற்கு ஏதேனும் பொருள் இருக்க முடியுமா?
குப்பன்

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2020 இதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்