மைய அரசாங்கத்தின் 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து, இலட்சக்கணக்கான உழவர்கள் 20 நாட்களுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் போராடி வருகின்றனர். போராடும் உழவர் பெருமக்களையும், அவர்களுக்கு உறுதுணையாய் களமாடும் மாணவர்களையும், ஜனநாயக சக்திகளையும் தேச விரோதிகளாக ஆளும் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து அவதூறு செய்கிறது.
ஆனால் தங்களுக்கு விரோதமான சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் எத்தனை மாதங்கள் ஆனாலும் திரும்பி செல்ல மாட்டோம் என்று உழவர்கள் சூளுரைக்கின்றனர். ஆணும் பெண்ணுமாக, கிராமங்களிலிருந்து வரும்போதே தங்களுக்கு வேண்டிய தட்டுமுட்டு பொருள்களுடன் போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்கின்றனர். ஒன்றாகவே சமையல் செய்கின்றனர். இதர வேலைகளையும் பகிர்ந்து கொள்கின்றனர். தலைநகர் டெல்லியின் கடுமையான குளிருக்கிடையில் தாங்கள் பயணித்து வந்த டிராக்டர்கள் மற்றும் லாரிகளுக்கு அடியில் தூங்குகின்றனர். போராட்டம் அவர்களை தன்னியல்பாய் ஒன்றுப்படுத்துகிறது.
படிக்க :
♦ விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் இந்து தமிழ் திசை !
♦ குஜராத் மாடல் : விவசாயிகளின் டெல்லி சலோவில் குஜராத் பங்கேற்காத பின்னணி ?
”இந்த சட்டங்கள் மூலம் நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுவோம். குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாய் விளைச்சலை விற்றால் எங்களுக்கு இலாபம் இருக்காது” என்கிறார் அதிகாலை குளிருக்கு இதமாக தேனீரை பருகிக்கொண்டிருக்கும் 70 வயதான உழவர் ரஞ்சித் சிங். போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு வேண்டிய உணவு, உறைவிடம், மருத்துவ வசதிகளுக்காக பல்வேறு தன்னார்வலர்கள் உதவுகின்றனர்.
”எங்களுக்கு உவப்பில்லாத இந்த சட்டங்களை நீங்கள் நிறைவேற்றும் போது, நாங்கள் உங்களது அரசு அலுவலகங்களை இயங்க விட மாட்டோம். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல தடையரண்களைத் தாண்டி டெல்லிக்கு கால்நடையாகவே வந்திருக்கிறேன்” என்கிறார் அரியானாவை சேர்ந்த 45 வயதான ஷர்மிலா சோடா.
“நான் ஒரு உழவர் குடும்பத்தை சார்ந்தவன். எனவே இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கிறேன்” என்கிறார் 23 வயதான பஞ்சாப் கல்லூரி மாணவர் ஹஸ்ஸன். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த உழவர்கள் தான் அதிக அளவில் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் உழவர்கள் அதிக வருமானம் ஈட்டும் முதன்மையான மாநிலம் பஞ்சாப் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாலை முதல் அந்திசாயும் வரை ஒலிபெருக்கிகளிலிருந்து முழக்கங்களும் பாடல்களும் ஒலிக்கின்றன. தொலைக்காட்சி கேமராக்கள் மற்றும் ஊடகங்கள் போராடும் விவசாயிகளைப் பின்தொடர்கின்றனர். “எங்களை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதற்கு ஒரு பக்க சார்பான ஊடகங்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது. இதன் மூலம் எங்களது சமூக இயக்கத்தை வீழ்த்த முயற்சிக்கிறது” என்று 23 வயதான முனைவர் மாணவரும், மாணவர் குழு ஒன்றின் உறுப்பினருமான ஹரிந்தர் ஹேப்பி கூறுகிறார்.
”எங்களது மாணவர்கள் பஞ்சாப்பின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று இந்த சட்டங்களையும், அதன் கேடுகளையும் உழவர்களுக்கு விளக்குகின்றனர்” என்று பஞ்சாப் மாணவர் சங்கத்தை சேர்ந்த 23 வயதான சுக்ரிபிர் கவுர் கூறுகிறார். எங்களது பெற்றோர்கள் வயல்வெளிகளில் உழைக்கின்றனர். அவர்கள் தாம் இந்த நாட்டின் முதுகெலும்பு. அரசாங்கமும், பெருநிறுவனங்களும் எங்களது நிலத்தை பறித்துக் கொண்டால் அவர்கள் என்ன செய்வார்கள்? என்று வினவுகிறார் அவர்.











தமிழாக்கம் : ஆறுமுகம்
நன்றி : Aljazeera