மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவின் வரலாறு, போராட்டங்களும் ஒடுக்குமுறைகளும் நிறைந்தாதாகவே இருக்கிறது. இந்த 2020-ம் ஆண்டு உழைக்கும் மக்களுக்குக் கொடூரமானதாகவும் ஆளும்வர்க்கத்திற்கு பெரும் ஆதாயமளிப்பதாகவும் தொடங்கியது, அதே நிலைமையிலேயே முடியவும் போகிறது.

விவசாயிகள், தொழிலாளர்கள் என மக்களின் அனைத்துப் பிரிவினரும் இதுவரை போராடி வென்றெடுத்து வைத்திருந்த உரிமைகளை கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு பறித்தெடுத்திருக்கிறது மோடி அரசு. இதனைக் கண்டித்து அன்றாடம் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தாலும், அதனை எல்லாம் துச்சமாக மதித்துக் கடந்து செல்கிறது.

இந்தியாவில் இந்த ஆண்டின் ஒவ்வொரு மாதமும் நடந்த முக்கிய நிகழ்வுகளை அது தொடர்பான ஒரு புகைப்படத்தைப் போட்டு விவரித்துள்ளது அல்ஜசீரா இணையதளம்.

அது குறித்த ஒரு சிறு குறிப்பு :

ஜனவரி 18 : டெல்லி ஷாகின் பாக் பகுதியில் நடந்த போராட்டத்தில் பெண் போராட்டக்காரர்கள் ஒரு பேச்சாளரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருகின்றனர்.  (படம் : அல்தாஃப் காத்ரி)

கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து, இந்நாட்டின் பூர்வகுடி மக்களான முசுலீம்களை அந்நியர்களாகக் காட்டி தனது இந்து ராஷ்டிரக் கனவை நனவாக்கும் முயற்சியை  மேற்கொண்டது ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல். இதற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் இந்தியா முழுவதும் நடைபெற்றன.

பிப்ரவரி 24 : இந்துத்துவ வெறிகொண்ட முழக்கங்களைக் கூறிக் கொண்டே ஒரு கும்பல் 37 வயதான முசுலீம் வாலிபரை தாக்குகின்றன. கடந்த சில பத்தாண்டுகளில் டெல்லியில் நடந்த வன்முறைகளில் மிகவும் மோசமான வன்முறை இது. டெல்லி போலீசின் உதவியோடு இந்துத்துவ வெறியர்கள் நடத்திய இந்த வன்முறை வெறியாட்டம் நான்கு நாட்களுக்கும் மேலாக நீடித்தது. ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். (படம் : டானிஷ் சித்திக்)

இந்த சம்பவம் நடந்து முடிந்த பின்னர், இன்றுவரையில் இது தொடர்பாக பல்வேறு முற்போக்காளர்களை இந்த வழக்கில் சேர்த்து அவர்களை விசாரித்து வருகிறது டெல்லி போலீசு.

மார்ச் 28 : சென்னை மாநகரின் தெற்குப்பகுதியில், கொரோனா வைரஸ் தோற்றமுள்ள தலைக்கவசத்தை அணிந்திருக்கும் போலீசு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பாபு, மோட்டார் வாகனத்தில் பயணிக்கும் ஒரு குடும்பத்தினரிடம் அதிகாரத் தோரணையோடு பேசிக் கொண்டிருக்கிறார்.  (படம் : அருண் சங்கர்)

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே ஒழுங்கான வகையில் எவ்வித முறையான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளாமல் மக்களை அல்லல்படுத்தியது கையாலாகாத இந்த அரசுக் கட்டமைப்பு.

ஏப்ரல் 28 : தேசிய அளவிலான ஊரடங்கு புலம்பெயர் தொழிலாளர்கள், மராட்டிய மாநிலத்தில் இருந்து தமது சொந்த ஊருக்கு நடந்து செல்லும் வழியில் ஐதராபாத்தின் புறநகர்ப் பகுதி வழியே கடந்து செல்லும்போது எடுக்கப்பட்ட  படம்  (படம் : நோவா சீலம்)

மார்ச் 24 அன்று அறிவிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவைத் தொடர்ந்து இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு நடந்து செல்லவிடப்பட்டனர். அவர்களுக்கான முறையான போக்குவரத்து ஏற்பாடோ, அல்லது அவர்கள் இருக்கும் இடத்திலேயே அவர்களுக்கான உணவு உறைவிடம் கிடைப்பதற்கான ஏற்பாடோ எதுவும் செய்யாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களை நட்டாற்றில் விட்டது மோடி அரசு. இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் மிகப் பெருமளவில் இந்தியாவில் நடந்த  இடப்பெயர்வு இது.

மே 26 : டெல்லியில் குடிசைவாசி ஒருவர் தீயை அணைக்க நீரை ஊற்றுகிறார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து டெல்லியில் தங்கிப் பணிபுரியும் பல்வேறு தொழிலாளர்களின் குடிசைகள் தீக்கிரையான சம்பவம் டெல்லியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகின. (படம் : மனிஷ் ஸ்வரப்)

ஜூன் 17 : லடாக்கை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் இந்திய துணை இராணுவப் படையினர் பாதிகாப்புக்காக நிற்கின்றனர்.  (படம் : ஃபரூக் கான்)

ஒரு கர்னல் உட்பட குறைந்தபட்சம் 20 இந்திய இராணுவத்தினரும், எண்ணிக்கை வெளியிடப்படாத சீன இராணுவத்தினரும் கிழக்கு லடாக்கில் இருக்கும் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் ஏற்பட்ட கைகலப்பு மோதலில் கொல்லப்பட்டனர். இது எல்லையில் பதட்ட நிலையை ஏற்படுத்தியது. இன்றுவரையில் லடாக் பகுதியில் முறையான வகையில், இந்தியாவும் சீனாவும் எல்லையைப் பிரித்துக் கொள்ளாமல் அரசியல் ஆதாயத்திற்காக விட்டு வைத்திருக்கின்றன. எல்லைகளை முறையாகப் பிரிக்காத காரணத்தால் தொடர்ந்து எல்லைப் பகுதியில் ஏற்படும் மோதலில் இராணுவ வீரர்கள் பலியாவதும் காயமடைவதும் தொடர்கிறது.

ஜூலை 6 : கோவிட் – 19 நோய்க்கு பலியான ஒருவரின் உடலை, இடுகாட்டில் புதைப்பதற்கு முன்பாக அவரது உறவினர் ஒருவர் கட்டுகிறார். ஜூலை 6-ம் தேதி இந்தியாவில் கோவிட் 19 தாக்குதலுக்கு ஆளானோர் எண்ணிக்கை 7,00,000 என அறிவிக்கப்பட்டது.  இச்சமயத்தில் உலக அளவில் தாக்குதல் அளவில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்தது. இன்று அது இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.  (படம் : சஜ்ஜத் ஹுசைன்)

ஆகஸ்ட் 5 : காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி, சோதனைச் சாவடி ஒன்றில் வாகனத்தை நிறுத்துகிறது இந்தியப் போலீசு. கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதியன்று காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை வழங்கும் இந்திய அரசியல்சாசனத்தின் பிரிவு 370-ஐ ரத்து செய்து உத்தரவிட்டது  மோடி அரசு. சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்ட இந்த சதித்தனத்தை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராடக் கூட அனுமதி மறுத்து அங்கு தொடர் ஊரடங்கை அமல்படுத்திவருகிறது மோடி அரசு. (படம் :  ஃபரூக் கான்)

செப்டம்பர் 30 : உத்தரப் பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் கும்பல் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்துப் போராடிய போராட்டக்கார்கள், போலீசு தம்மைக் கைது செய்யமுடியாத வண்ணம் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் இறுகப் பற்றிக் கொண்டனர்.

இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆதிக்கச்சாதி கிரிமினல் கும்பலைக் காக்க யோகி ஆதித்யநாத் அரசு அனைத்து வகையான ஆகக் கீழ்த்தரமான வழிமுறைகளையும் கையாண்டது. செய்தி சேகரிக்கச் சென்றவர்களை மிரட்டுவது, பொய் வழக்கு போட்டு சிறையிலடைப்பது என இன்றுவரை தமது வன்மத்தைக் காட்டி வருகிறது.  (படம் : அல்டாஃப் காத்ரி)

அக்டோபர் 15 : தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஐதராபாத் நகரின் தென்பகுதியில் பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கை ஒட்டி குடியிருப்பவர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். (படம் : வினோத் பாபு)

நவம்பர் 15 : தீபாவளிக்கு மறுநாள், பனிசூழ்ந்த நிலைமையில்  ராஜ்பாத் தெருவில் இந்தியா கேட் அருகே ஒருவர் நடந்து செல்கிறார். கொரோனா தொற்றுக்கும் மாசுபாட்டுக்கும் இடையிலான  பிணைப்பைக் காட்டி பட்டாசு வெடிப்பதற்கு டெல்லியில் தடை விதிக்கப்பட்டிருந்தது. (படம்: சஜ்ஜத் ஹுசைன்)

டிசம்பர் 14 : டெல்லி – அரியானா எல்லையில் டெல்லியின் புறநகர்ப்பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கையில் தங்களது போராட்டத் தலைவர்கள் பேசுவதை விவசாயிகள் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

மோடி அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி தொடர்ச்சியான விடாப்பிடியான உறுதியான போராட்டத்தை இந்திய விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். அரசின் எவ்வித ஏமாற்று வித்தைகளுக்கும் வாய்ஜாலங்களுக்கும் மயங்காமல் இன்றுவரையில் இந்தப் போராட்டத்தில் உறுதியாக இருக்கின்றனர்.  (படம் : மனீஷ் ஸ்வரூப்)


கர்ணன்
நன்றி : அல்ஜசீரா

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க