நாள்:24.12.2020
அர்ச்சகர் பயிற்சி பெற்ற பார்ப்பனரல்லாத மாணவர்களின் ஏக்கம் தீரும் நாள் எந்நாளோ அன்றே பெரியாரின் ஏக்கமும் தீரும்! தீரும்!
தந்தை பெரியாரின் 47 ஆம் ஆண்டு நினைவு நாள் டிசம்பர் 24, 2020
பத்திரிகை செய்தி
தன் வாழ்நாளின் இறுதி தருணம் வரை பார்ப்பனல்லாதோரின் இழிவை நீக்க தனியொரு இயக்கமாக சுழன்றவர் தான் பெரியார். கருவறையில் நிலவும் தீண்டாமை இழிவை போக்க இயலாத நிலையில் நம்மை விட்டு பிரிந்தார்.
அர்ச்சகர் வாரிசுரிமை ஒழிப்பு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக சட்டம் ஆகியவை தமிழகத்தில் கொண்டு வரப்பட்டன. இருந்த போதிலும் ஆகமம், ஐதீகம், பாராம்பரியம் என அரசியலமைப்பு சட்டம் வளைக்கப்பட்டு பார்ப்பனர் அல்லோதோரின் பூசை செய்யும் சட்ட உரிமைகள் நெறிக்கப்பட்டன. அரசால் பயிற்சி அளிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதிகளை சேர்ந்த மாணவர்கள் பார்ப்பன அர்ச்சகர்களின் எடுபிடிகளாகவோ, பார்ப்பனர்களால் ஒதுக்கப்பட்ட கோயில்களின் அர்ச்சகராகவோ இருந்து வாழ்க்கையை நடத்தும் அவலமே பல்லாண்டுகளாக தொடர்கின்றது.

கடந்த 28-2-2007 அன்று அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப்படிவும் வெளியானதும் திருவண்ணாமலை கோயிலில் 600 பேர் விண்ணப்பித்தனர். மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. 40 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அதுபோல் மதுரை திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில் 1000க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 120 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். திருவரங்கம், சென்னை பார்த்தசாரதி கோயில்களில் 500க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியில் 207 பேர் மட்டும் ஒன்றரை ஆண்டு காலம் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்தனர்.
இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கீழ் உள்ள கோயில்களின் கருவறைகளை பக்தர்களை போல நாங்களும் பெரும் வலியுடன் வேடிக்கையே பார்க்க இயலும். ஆகம பயிற்சி பெற்றும் நாங்கள் நுழைந்து பூசை செய்வதை எது தடுக்கிறது? எங்களுடைய பிறப்பிலான சாதி. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி எங்களை அர்ச்சகர்களாக அரசால் நியமிக்க முடியும் என்கிறார்கள். ஆனால் தீர்ப்பு வந்து ஆண்டுகள் பல கடந்து விட்டன.
தமிழ்நாட்டில் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்துள்ளனர். அதில் இரண்டு மாணவர்கள் இறந்துவிட்டனர் மீதமுள்ள 205 மாணவர்களில் 2 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.
படிக்க :
♦ வாடிவாசல் திறந்தோம் – கருவறையும் திறப்போம் !
♦ கருவறை தீண்டாமை, ஜெயா அரசின் துரோக சதி !
மதுரை பாடசாலையில் படித்த மாரிச்சாமி என்கின்ற மாணவருக்கு தல்லாகுளம் ஐயப்பன் கோயிலில் பணி நியமனம் வழங்கப்பட்டது. அடுத்தது நாகமலை புதுக்கோட்டையில் உள்ள விநாயகர் கோயிலில் தியாகராஜன் என்கின்ற மாணவருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது.
சமுக நீதி கோலோச்சிய தமிழகத்தில் 203 மாணவர்களுக்கு இன்னமும் பணி நியமனம் வழங்கப்படவில்லை. வாழ்நாள் முழுவதும் அருங்காட்சியப் பொருளாய் நாங்கள் ஆகிவிடும் நிலையே உள்ளது.
இது அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் வாழ்வாதார, வேலை நியமன பிரச்சினை இல்லை. தமிழகத்தில் மிச்சமுள்ள கருவறை தீண்டாமையை ஒழிக்கும் கடமை. பெரியாரின் பெரு ஏக்கத்தினை போக்கும் நம் வரலாற்று கடமை.
வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு,
(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)
128, கோகுலம் இல்லம், அரச மரத் தெரு, திருவண்ணாமலை
தொடர்புக்கு : 90474 00485.