போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை தேச விரோதிகள் எனக் கூறி வந்த சங்பரிவார கும்பல், மாணவர்களின் போராட்டம் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படத்தைத் தடை செய்ய, தேச விரோத முத்திரையை தூக்கிக் கொண்டு கிளம்பியிருக்கிறது.
மாணவர்களின் போராட்டம் குறித்த “வர்த்தமனம்” என்ற மலையாளப் படத்தை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தோடு தொடர்புபடுத்தி, கேரளாவில் உள்ள மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் சான்றிதழ் தராமல் நிறுத்தி வைத்துள்ளது.
திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் உறுப்பினரும் பாஜகவின் பட்டியலின பிரிவின் தலைவருமான வி. சந்தீப் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், “தணிக்கைக்குழு உறுப்பினராக ‘வர்த்தமனம்’ படத்தை பார்த்தேன். இந்தப் படம் ஜே.என்.யூ.வில் தலித்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் தாக்கப்படுவது குறித்து பேசுகிறது. இந்த படத்தை எழுதி, தயாரித்தவர் ஆர்யதன் சவுகத் என்பதால் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். நிச்சயம் இது தேச விரோத படம்தான்” என தெரிவித்திருந்தார்.
படிக்க :
♦ வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : முட்டுக்கட்டையிட்ட கேரள கவர்னர் !
♦ 2020 : ஷாகின் பாக் முதல் டெல்லி சலோ வரை!! | படக் கட்டுரை
வெளிப்படையாக தயாரிப்பாளர் முஸ்லீம் என்பதால் இது தேச விரோத படம் என எழுதியதும் பலர் எதிர்ப்பு தெரிவித்ததால், வழக்கமான சங்கித்தனத்தோடு, சந்தீப் குமார் தனது ட்விட்டை நீக்கியிருக்கிறார்.
மத்திய தணிக்கை சான்றிதழ் வாரியம் படத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த இயக்குநர் சித்தார்த் சிவாவிடம் நோட்டீஸ் அளித்துள்ளதாகவும் ஆனால் எந்த காரணத்தையும் அதில் குறிப்பிடவில்லை எனவும் கூறும் தயாரிப்பாளர் சவுகத், சான்றிதழ் வாரியத்தின் இந்த முடிவு அதிர்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
தான் ஒரு முஸ்லீம் என்பதால், தனது மதத்தை தொடர்புபடுத்தி மத நல்லிணக்கத்தை குறித்த படத்தை தேச விரோதம் என முத்திரை குத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “திரைக்கதை எழுத்தாளரின் இனம் மற்றும் பரம்பரையின் அடிப்படையில் ஒரு படம் சான்றளிக்கப்படுகிறதா? டெல்லி கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களும் ஜனநாயக போராட்டங்களும் எவ்வாறு தேச விரோதமாக மாற முடியும்? ” என சவுகத் தனது முகநூல் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தப் படம் டெல்லியில் ஒரு கல்லூரியை நிகழ்வதாக எடுக்கப்பட்டிருப்பதாகவும் நிச்சயம் அது ஜே. என். யூ. என பெயரிடவில்லை எனவும் தயாரிப்பாளர் கூறுகிறார்.

“இந்த படம் ஜே.என்.யுவில் தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடையது என்றும் அதன் திரைக்கதை எழுத்தாளரும் தயாரிப்பாளருமான ஆரியதன் சவுகத் என்பதால் அவர் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் சந்தீப் பகிரங்கமாக அறிவிக்கிறார். நாங்கள் இன்னும் ஜனநாயக, மதச்சார்பற்ற, சோசலிச இந்தியாவில் வாழ்கிறோம்.” எனவும் சவுகத் தனது முகநூலில் எழுதியுள்ளார்.
1939-ம் ஆண்டில் காங்கிரஸின் மலபார் பிரிவின் தலைவராக பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர் முகமது அப்துரஹிமான் சாஹிப் குறித்து ஆய்வு செய்ய டெல்லி கல்லூரிக்குச் செல்லும் ஒரு முஸ்லீம் மாணவர் குறித்த படமே வர்த்தமனம். முஸ்லீம் மாணவராக பார்வதி நடித்துள்ளார்.
டெல்லி, உத்தரகண்ட் மற்றும் கேரளாவில் படமாக்கப்பட்ட இப்படத்தில் ரோஷன் மேத்யூ மற்றும் டெய்ன் டேவிஸ் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
“மத நல்லிணக்கத்தை பேசும் இந்தப்படத்தை தேச விரோதமாக சித்தரிப்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. இந்து மற்றும் முஸ்லீம் அடிப்படைவாதங்கள் குறித்தும் பேசுகிறது. மகாத்மா காந்தி, தாகூர், சுபாஸ் சந்திர போஸ் ஆகியோரின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட படம் இது. தணிக்கை சான்றிதழ் வாரிய உறுப்பினர்கள் நால்வரில் இருவர் படத்தை ஆதரித்தனர். ” என டெலிகிராப் நாளிதழிடம் சவுகத் தெரிவித்துள்ளார்.
“அப்துர்ரஹுமான் சாஹிப் ஒரு உண்மையான தேசியவாதி, அவர் பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பிய முஸ்லிம்களை தடுத்தவர். நாட்டுக்கு அடித்தளமிட்ட தலைவர்களின் மதச்சார்பற்ற-ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில் நின்ற ஒரு மனிதரை பற்றியது இந்தப் படம்” எனவும் அவர் விளக்கியுள்ளார்.
படிக்க :
♦ விவசாயிகளின் போருக்கு ஆதரவாய் நிற்போம் | மக்கள் அதிகாரம் தோழர் மருது உரை !
♦ விவசாயிகள் போராட்டத்தை திட்டமிட்டு கொச்சைப்படுத்தும் பி.ஜே.பி ட்ரோல்கள் !
மத்தியில் ஆளும் கட்சியின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும் தணிக்கை வாரியத்தின் நடவடிக்கையை நடிகர் முரளி கோபி உள்ளிட்ட பல திரைத் துறையினர் கண்டித்துள்ளனர்.
“தணிக்கை என்பது சர்வாதிகாரத்தின் ஊன்றுகோல். இது ஜனநாயகத்தில் ஒரு நடைமுறையாகிவிட்டால், ஜனநாயகம் தோல்வியுற்றது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்” என்கிறார் முரளி கோபி.
மேலும் “தேசபக்தி மற்றும் தேசியவாதம் என்பது ஒரு குறிப்பிட்ட குழுவின் சொற்களஞ்சியத்துடன் மட்டுப்படுத்தப்பட வேண்டிய சொற்கள் அல்ல. இதுதான் நிதர்சனம் என ஆகிவிட்டதால், இத்தகைய போக்குக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு கலைஞருக்கும் உண்டு” என திரை உலகினர் சங்க பரிவார கும்பலின் தணிக்கைக்கு எதிராக குரல் எழுப்ப அழைப்பு விடுத்துள்ளார்.
கலைமதி
நன்றி: டெலிகிராப் இந்தியா