மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து, 41-வது நாளாக விவசாயிகள் போராடிவருகிறார்கள். கடும் குளிரிலும் மழையிலும் போராடிவரும் அவர்களை குறைந்தபட்ச மனிதநேயத்தோடுகூட மத்தியில் ஆளும் பாஜக அரசு அணுகவில்லை.
பாஜகவை சேர்ந்த பலர் போராடும் விவசாயிகள் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துகளை கூறிவருகின்றனர். இவற்றை கண்டிக்கும் வகையில் பஞ்சாப் விவசாயிகள் சிலர், பஞ்சாப் மாநில பாஜக தலைவரும் முன்னாள் அமைச்சருமான திக்ஷன் சூட், வீட்டின் முன் சாண குவியலைக் கொட்டி போராட்டம் நடத்தினர். இது புகைப்படமாக சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டது.
படிக்க:
♦ ” லவ் ஜிகாத் ” சட்டத்தை அமல்படுத்தும் பாஜக மாநில அரசுகள் !
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!
இந்த நிலையில், வீட்டுக்கு வெளியே சாணக் குவியலைக் கொட்டியது தொடர்பாக கொலை முயற்சி வழக்கு பதிந்ததோடு, அதை விசாரிக்க நான்கு நபர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புகார் கொடுத்துள்ள பாஜகவை சேர்ந்த சுரிந்தர் பால் பாட்டி என்பவர், ஜனவரி 1-ம் நாள், ஒரு டிராக்டர் சாணத்தை வீட்டு முன் கொண்டுவந்து கொட்டியதாகவும் அப்போது திக்ஷனை தாக்க போராட்டக்காரர்கள் முயன்றதாகவும் கூறியுள்ளார். மேலும் புகாருக்கு ‘வலு சேர்க்கும்’ வகையில் டிராக்டரை தன் மீதும் தனது நண்பர் மீதும் ஏற்ற முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.
பஞ்சாப் பாஜக தலைவர் திக்ஷன் வீட்டின் முன் பஞ்சாப் விவசாயிகள் சாணத்தைக் கொட்டவேண்டிய அவசியம் என்ன ? கடும் குளிரில் போராடிவரும் விவசாயிகளை டெல்லி எல்லையில் சுற்றுலா சென்றிருக்கிறார்கள் எனக் கொழுப்பெடுத்துப் பேசியிருக்கிறார் திக்ஷன். வேளாண் சட்டங்களை புரிந்துகொள்ளாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும் பேசியுள்ளார்.

இதற்கு எதிர்வினையாற்றும் விதமாகத்தான் விவசாயிகள் திக்ஷன் வீட்டு முன் சாணத்தை குவித்துள்ளனர். ஜனவரி 1-ம் நாள் நடந்த இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் – 307 (கொலை முயற்சி), 452 (வீட்டுக்குள் நுழைதல்), 506 (குற்ற மிரட்டல்), 323 ( ஐபிசியின் 148 (கலவரம்) மற்றும் 149 (சட்டவிரோத கூடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தை நேரில் கண்ட சாட்சிகளை பேட்டி கண்ட இந்தியன் எக்ஸ்பிரஸ், தக்ஷன் வீட்டுக்குள் டிராக்டர் நுழையவில்லை எனவும், தக்ஷன் வீட்டில் இருந்த நபர்கள், சாணத்தைக் கொட்டுவதைக் கண்டு ஆத்திரமடைந்து போராட்டக்காரர்களுடன் வாய்த்தகராறில் ஈடுபட்டதாகவும் போராட்டக்காரர்கள் யாரையும் தாக்கவில்லை எனவும் எழுதியுள்ளது.
கொலை முயற்சி வழக்கு போடப்பட்டதை கண்டித்துள்ள பாரதிய கிசான் யூனியனின் தலைவர் மந்தீப் சிங், பாஜகவின் உத்தரவின் பேரில் காவல்துறை செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். “எந்தவொரு தாக்குதலும் செய்யப்படாதபோது, யாருக்கும் காயம் ஏற்படாதபோது, கொலை, கலவரப் பிரிவுகளின் கீழ் விவசாயிகள் மீது எப்படி வழக்கு பதியலாம்? வழக்கு ரத்து செய்யப்படாவிட்டால், ஜனவரி 7-ம் தேதி ஜலந்தரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்” எனவும் அவர் கூறியுள்ளார்.
தமது உரிமைக்காகவும் நாட்டின் மதச்சார்பின்மையைக் காக்கவும் போராடியதற்காக ஜே.என்.யூ. பல்கலை மாணவர்கள் – அலிகர் பல்கலை மாணவர்கள் மீது தேசவிரோத வழக்குகள் பாய்ந்தன. அமைதி வழியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடத்தியவர்களை சதிகாரர்களாக சித்தரித்து கைது செய்தது போலீசு. இந்த வரிசையில் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளை மிரட்டிப் பார்க்க, சாணத்தைக் கொட்டியதற்கெல்லாம் கொலை முயற்சி வழக்கு போட்டிருக்கிறது பஞ்சாப் போலீசு. பஞ்சாபில் பாஜக ஆட்சியில் இல்லை எனினும் அம்மாநில போலீசில் அது செலுத்தும் ஆதிக்கம் தான் அரசு கட்டமைப்பு பாசிச மயமாகிவருவதற்கான அடையாளம்.
கலைமதி
நன்றி: The Wire