போலீசு காட்டுமிராண்டித்தனத்தை புகைப்படம் எடுப்பதையும் அதை சமூக வலைத்தளங்கள், ஊடகங்களில் பதிவிடுவதையும் தடை செய்யும் வகையில்   பிரான்ஸ் அரசு அறிமுகப்படுத்தியுள்ள பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்துப் புதிய போராட்டங்கள் பிரான்சில் தொடங்கியுள்ளன. பிரான்ஸ் முழுவதும் பல்வேறு இடங்களில் பத்தாயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

போராட்டக்காரர்கள், கோவிட்-19-லிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ள மாஸ்க் அணிந்து கொண்டு, பிரச்சினைக்குரிய பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக பாரீசில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். (படம் : கிரிஸ்டோபர் எனா / AP Photo ]

கண்காணிப்பதற்கு நடைபாதை கண்காணிப்புக் கேமரா மற்றும் ட்ரோன் ஆகியவற்றைக் கண்காணிப்புக் கருவிகளாகப் பயன்படுத்துவதையும் தடை செய்யவும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர்.

கடந்த சனிக்கிழமை (16-01-2021) அன்று பல்லாயிரம் பேர் பாரீஸ் நகரிலும், பிரான்சில் உள்ள பல்வேறு நகரங்களிலும் நடத்திய இந்தப் பேரணியில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை குறித்த விவரம் செயற்பாட்டாளர்களுக்கும், அதிகாரவர்க்கத்தினருக்கும் இடையே வேறுபட்டது. பிரான்ஸ் முழுவதும் சுமார் 2,00,000 பேர் பேரணியில் கலந்து கொண்டதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், போலீசோ வெறும் 34,000 பேர்தான் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டது.

“எங்கேயும் போலீசு, நீதி எங்குமில்லை” மற்றும் “அவசரநிலை, போலீசு அரசு” என்பது போன்ற முழக்கங்களைக் கொண்ட பேனர்களைக் கையில் ஏந்திக் கொண்டு பனிப் பொழிவுக்கு மத்தியிலும் பாரீஸ் நகரில் பேரணிக்கு வந்திருந்தனர்.

பேரணியில் பங்கெடுத்த லில்லெ நகரின் வடப்பகுதியைச் சேர்ந்த ஃப்ரான்கோய்ஸ் என்பவர், “இது ஒருவிதமான சர்வாதிகாரம், இந்தச் சட்டத்தைக் கொண்டு அவர்கள் எவ்வளவுதூரம் செல்வார்கள் என்று ஒருவர் கேட்கிறார். மனிதனின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான நாட்டிலேயே இதுதான் நிலைமை என்றால், நான் பிரெஞ்சுக்காரன் என்று கூறிக்கொள்ள வெட்கப்படுகிறேன்” என்றார்.

படிக்க :
♦ விடுதலை நாளில் லெபனான் மக்கள் போர்க்கோலம் ! | படக்கட்டுரை

♦ பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’

நாடு முழுவதும் இந்தப் பேரணியில் கலந்து கொண்ட போராட்டக்காரர்களில் 75 பேரை போலீசு கைது செய்துள்ளது. அதில் பாரீசில் மட்டும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் ஜெரார்ட் டார்மனின் தெரிவித்துள்ளார். போலீசு மற்றும் துணை இராணுவப்படையைச் சேர்ந்தவர்கள் 12 பேர் மோதல்களில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பிரிட்டனி நகரில் சுமார் 2400 பேர் பங்கேற்ற சட்டவிரோதமான புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போதான போலீசு நடவடிக்கைகள் போன்ற போலீசின் “பொறுத்தமற்ற” எதிர்வினைச் சம்பவங்கள் போராட்டக்காரர்களின் கோபத்தைத் தூண்டியிருக்கிறது.

மேலும் கடந்த நவம்பர் 21, 2020 அன்று நிராயுதபாணியான கருப்பின இசையமைப்பாளரை அவரது பாரிஸ் ஸ்டூடியோவிலேயே வைத்து வெள்ளை போலீசுக்காரர் தாக்கிய வீடியோ வெளியானதும், பிரான்சின் பாதுகாப்புச் சட்டத்தின் மீதான கோபம் அதிகரித்ததற்கான காரணமாகும்.  இந்தச் சட்டம் பலராலும் கண்டிக்கப்பட்டு, பலரும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் வலதுசாரியாக சரிவதை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

மேலும் கடந்த ஆண்டு நவம்பரில் டி லா ரிபப்ளிக் (De La Republique) எனும் இடத்தில் இருந்த அகதிகள் முகாமை போலீசு வன்முறையாகக் கலைத்தது உள்ளிட்ட பல்வேறு கேமராவில் பதிவான சம்பவங்கள் மக்களின் கோபத்தை அதிகரித்துள்ளன.

பாரீஸில் கடந்த நவம்பர் 21, 2020 அன்று இசை தயாரிப்பாளர் மிக்கேல் செக்லர் அவரது ஸ்டூடியோவின் வாயிலில் போலீசால் தாக்கப்படுகிறார். [ படம் : மிக்கேல் செக்லர் / GS Group / AFP]
முன்வைக்கப்பட்டுள்ள பாதுகாப்புச் சட்டத்திற்கு எதிரான பேரணியின் போது போராட்டக்காரர்களுக்கு அருகே நடந்து செல்லும் போலீசு அதிகாரிகள் [படம் : லெவிஸ் ஜோலி / AP Photo]
பங்கேற்றவர்கள் குறித்த கணக்கீடு அதிகாரவர்க்கத்தினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பெருமளவில் வேறுபட்டது. [படம் : லெவிஸ் ஜோலி / AP Photo]
பிரச்சினைக்குரிய பாதுகாப்பு மசோதா, போலீசின் காட்டுமிராண்டித்தன நிகழ்வுகளை மக்கள் ஆவணப்படுத்துவதை தடை செய்யும் என விமர்சகர்கள் கூறுகின்றனர். [படம் : லெவிஸ் ஜோலி / AP Photo]
பாரீஸ் நகரில் போராட்டக்காரர்கள் பேரணி செல்வதை போலீசு அதிகாரிகள் பார்வையிடுகின்றனர். போராட்டக்காரர்கள், அதிகமான கண்காணிப்புக் கருவிகள் பயன்படுத்தப்படுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தனர். [படம் : கிறிஸ்டோப் எனா / AP Photo]
“புத்தாண்டை வரவேற்க நடனமாடியதற்காக சிறையில் இருக்கிறேன்” என்று எழுதப்பட்ட பதாகையை பிடித்திருக்கிறார் ஒரு போராட்டக்காரர். [படம் : கான்சலோ ஃபுயண்டெஸ் / Reuters]
நாடு முழுவதும் 75 பேரை கைது செய்த்து போலீசு. பாரீசில் மட்டும் 24 பேர் கைது செய்யப்பட்டனர். [படம் : கான்சலோ ஃபுயண்டெஸ் / Reuters]
அம்னெஸ்ட்டி இண்டர்நேசனல் மற்றும் பல்வேறு சங்கங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழுவால் “சுதந்திரத்துக்கான பேரணிகள் ” அறைகூவல் விடுக்கப்பட்டன. [படம் : கிறிஸ்டோப் எனா / AP Photo]

தமிழாக்கம் : கர்ணன்
நன்றி : Aljazeera

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க