உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமை பேசப்படும் இந்தியா உலகளாவிய ஜனநாயகக் குறியீட்டில் ஒவ்வொரு ஆண்டும் சரிவைச் சந்தித்து வருகிறது. 2020-ம் ஆண்டுக்கான ஜனநாயகக் குறியீட்டுப் பட்டியலில் 53-ம் இடத்தை இந்தியா பிடித்திருக்கிறது.
சர்வதேச ஆய்வு நிறுவனமான ”தி எக்கனாமிஸ்ட் இண்டெலிஜென்ஸ் யூனிட்” என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நாடுகளின் ஜனநாயகத் தன்மையை பரிசீலித்து தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் வெளியிடப்பட்ட 2020-ம் ஆண்டுக்கான ஜனநாயக குறியீட்டு தரப் பட்டியலில் முதலிடத்தை நார்வே பிடித்திருக்கிறது. அடுத்தடுத்த இடங்களை முறையே ஐஸ்லாந்து, ஸ்வீடன், நியூஸிலாந்து, கனடா ஆகிய நாடுகள் பிடித்திருக்கின்றன.
படிக்க :
♦ முதலாளித்துவம் உருவாக்கும் முரண் நிலை || உலகப் பட்டினிக் குறியீடு
♦ உலகப் பட்டினிக் குறியீடு : ஆப்பிரிக்க நாடுகளின் ‘தரத்தில்’ இந்தியா
இந்தியா இந்தப் பட்டியலில் கடந்த 2019-ம் ஆண்டு 51-வது இடத்தில் இருந்து 2020-ம் ஆண்டு 53-வது இடத்திற்கு சரிந்திருக்கிறது. 6.61 புள்ளிகளைப் பெற்று மிகவும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இந்தியாவை ”குறைபாடான ஜனநாயக” நாடுகளின் (Flawed Democracy) வகையினத்தில் சேர்த்துள்ளது இந்த அறிக்கை.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற ‘பெருமை’ கொண்ட இந்தியாவை இந்த இழிநிலைக்குத் தள்ளியதில் மோடியின் பங்கு மிகவும் முக்கியமானது. கடந்த 2014-ம் ஆண்டு இதே பட்டியலில் 27-வது இடத்தில் இருந்த இந்தியா இன்று இன்னும் 26 இடங்கள் பின்னடைவைச் சந்தித்து 53-வது இடத்தை வந்தடைந்துள்ளது. மோடி தலைமையிலான பாசிச கும்பலின் ஆட்சியில் ஜனநாயகத்தின் இலட்சணம் இதுதான்.
மோடி கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்தது முதல் இந்திய ஜனநாயகம் சரிந்துள்ளதை இந்த அறிக்கை தனிச் சிறப்பாகக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. மேலும் கடந்த 2019-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சி.ஏ.ஏ. சட்டத் திருத்தம் இந்தியக் குடியுரிமை விவகாரத்தில் மதவாதத்தை கொண்டுவந்துள்ளதாகக் குற்றம்சாட்டுகிறது இந்த அறிக்கை.
மாற்றுக் கருத்துக்கள் இந்தியா முழுவதும் முடக்கப்படுவதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் மாற்றுக் கருத்தைத் தெரிவிப்பவர்கள் முடக்கப்படுகிறார்கள்.
சமீபத்தில் கூட இந்தியாவின் தொழில்நுட்ப அமைச்சகம் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவிக்கும் சிலரது கணக்குகளை முடக்க டிவிட்டர் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது. அப்படி முடக்கப்பட்டதில் பிரபல பத்திரிகையான தி கேரவன் இதழும் அடங்கும்.
இந்தியா முழுவதும் அரசை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். அவர்கள் மீது வழக்குப் போடப்படுகிறது. வயர் இணையதளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், பத்திரிகையாளர் இஸ்மத் அரா ஆகியோர் மீது உத்தரப் பிரதேச அரசு பல்வேறு பிரிவிகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.
சி.ஏ.ஏ போராட்டத்தை முடக்க பாஜக காலிகள் நடத்திய டெல்லி கலவரத்தைப் பற்றிய உண்மைகளை எழுதியதற்காக 8 பத்திரிகையாளர்கள் இதுவரை குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.
இது தவிர பத்திரிகையாளர்களுக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல், பெண் பத்திரிகையாளர்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் என இந்திய ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்பட்டிருக்கிறது. கோவிட் -19 நோய்த் தொற்று விவகாரத்தில் அரசினை அம்பலப்படுத்திய 55 பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளதாக தி வயர் இணையதளம் தெரிவிக்கிறது.
ஜனநாயகத்தின் அடையாளமான பத்திரிகைத் துறை மீதான தாக்குதல்களே இவ்வளவு மோசமான அளவுக்கு இருக்கையில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதலைப் பற்றி தனியாகச் சொல்லத் தேவையில்லை.
படிக்க :
♦ உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?
♦ “ஸ்வாட்டிங்” : சமூக செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தும் அமெரிக்க இராணுவம்!
பீமா கொரேகான் வழக்கில் ஜோடிக்கப்பட்டு சேர்க்கப்பட்ட இந்தியாவின் முக்கியமான சமூகச் செயற்பாட்டாளர்களை, அவர்களின் வயதையும் பொருட்படுத்தாமல் அவர்களைச் சிறையில் அடைத்தது. கொரோனா பெருந்தொற்று இந்தியாவில் அதிகரித்து வந்த சூழலிலும் அவர்களுக்குப் பிணை மறுத்தது. 75 வயது முதியவரும் பழங்குடியின செயற்பாட்டாளரான ஸ்டான் ஸ்வாமிக்கு ஒரு சிப்பர் (Sipper) வழங்குவதற்குக் கூட மாதக் கணக்கில் காத்திருக்கச் செய்தது.
ஒட்டுமொத்தமாக ஒரு மோசமான பாசிசக் கும்பலின் கையில் இந்த நாடு சிக்கியிருக்கிறது என்பதையே கடந்த ஆறாண்டுகளில் இந்திய ஜனநாயகம் 26 இடங்கள் பின்னடைவைச் சந்தித்திருப்பது காட்டுகிறது. 2024-ம் ஆண்டுக்குள் மேலும் ஒரு 50 இடங்களுக்கு இந்திய ஜனநாயகம் பின்னோக்கி கொண்டு செல்லபடும் என்பதையே தற்போதைய சட்ட திருத்தங்களும் அதனை எதிர்ப்போரின் மீதான மோடி அரசின் அணுகுமுறைகளும் தெளிவாகக் காட்டுகின்றன!
கர்ணன்
செய்தி ஆதாரம் : The Leaflet