கட்டணக் கொள்ளையை எதிர்த்து போராடியதால் செமஸ்டரில் ஃபெயில் செய்த
தொல்லியல் துறை தலைவர் சௌந்தரராஜன் !

சென்னை பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையில் முதுகலை இரண்டாமாண்டு பயின்று வரும் மாணவர்களாகிய நாங்கள் தற்போது எங்கள் துறை சார்பில் கள அகழாய்வு பணிக்காக வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் முகாமிட்டுள்ளோம். இந்நிலையில் கடந்த 12/02/2021 அன்று எங்களுடைய நவம்பர் மாத மூன்றாம் பருவத் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. இத்தேர்வு முடிவுகள் இணையதளம் வாயிலாகவோ, மின்னஞ்சல் வாயிலாகவோ தெரிவிக்கப்படவில்லை.

மாறாக, தொலைபேசி வாயிலாக அலுவலக ஊழியரை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி தொலைபேசி வாயிலாக எங்கள் முடிவுகளை கேட்டறிந்தோம். மேலும் இம்முடிவுகள் மதிப்பெண் வாயிலாக அளிக்கப்படாமல் வெறும் குறியீடுகளாகவே (Grade) கூறப்பட்டது.

இதில் சுமார் 8 பேர் தேர்வை நன்கு எழுதியிருந்தும் ஃபெயில் (அரியர்) என்று கூறியதைக் கேட்டு அதிர்ச்சியுற்றோம். குறிப்பாக கடந்த மாதம் 27,28,29 ஆகிய நாட்களில் விடுதி கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராட்டத்தில் பங்கு பெற்ற, அதை ஆதரித்த மாணவர்களுக்கே ஃபெயில் என்ற முடிவு வந்திருந்தது.

படிக்க :
♦ கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து : சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் !
♦ சென்னை பல்கலை : கிருபாமோகனை மீண்டும் இணை ! மாணவர் போராட்டம் !

இம்முடிவுகள் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று துறைத்தலைவரை நாங்கள் தொடர்பு கொண்டு ஒவ்வொருவரின் Internal மற்றும் External மதிப்பெண்கள் என்ன என்று கேட்டபோது முறையாக பதில் எதுவும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே 14 மாணவர்கள் உடல்நலம் சரியில்லாத நிலையிலும், வேலூரில் அகழாய்வு பணி நடக்கும் இடத்திலிருந்து கிளம்பி வருகிறோம் என்று முறையாக பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் மற்றும் எங்களின் துறைக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டும், அகழாய்வுக்கான பொறுப்பாளரிடமும் தெரிவித்துவிட்டு கிளம்பினோம்.

நேற்று (15-02-2021) பல்கலைகழகத்திற்கு வந்தவுடன் நேரடியாக துறைத் தலைவரான சௌந்தரராஜன் அவர்களை அணுகி விளக்கம் கோரினோம். ஆனால், அவரோ எங்களை உதாசீனப்படுத்துவதிலேயே குறியாக இருந்தார். மேலும், எங்கள் மாணவர்களுல் சிவப்பிரகாசத்தை நோக்கி, “நீ ’டீ பார்’ . அதனால அரியர்தான் உனக்கு, உன்னுடைய mail copy வேறாகவும், தபாலில் அனுப்பப்பட்ட ஒரிஜினல் வேறயாவும் இருக்கு” என்று அப்பட்டமாக பொய்யுரைத்தார்.

அப்படியெனில் தேர்வுத்தாளை காட்டுங்கள் எனக் கோரியதற்கு முடியாது என மறுத்துவிட்டார். இதனையடுத்து பதிவாளரை சந்தித்து முறையிட்டபோது அவர் துறைத்தலைவரை வைத்துக்கொண்டு நாளை காலை 10 மணிக்கு உங்கள் அனைவரது தேர்வுத்தாளை திருத்திய சப்ஜெக்ட் ஆசிரியரை கொண்டு உங்கள் மத்தியிலேயே மீண்டும் திருத்துகிறோம் என உத்திரவாதமளித்த நிலையில் நாங்கள் திரும்ப விடுதிக்கு சென்றோம்.

இன்று (16-02-2021) மீண்டும் பதிவாளரின் வார்த்தையை நம்பி துறைத்தலைவரை அணுகியபோது, ஒவ்வொருவரையும் தனித்தனியே அறைக்குள் அழைத்து திருத்திய ஆசிரியர் அல்லாமல் துறையில் உள்ள வேறொரு ஆசிரியரை வைத்து இதுதான் உங்கள் மார்க் பாத்துக்கோங்க என்று சிறிதும் மரியாதையின்றி அதிகாரத்தனமாக நடந்து கொண்டார்.

மேலும், ஃபெயில் செய்த தேர்வுத்தாளை மட்டும் ஒரிஜினல் பேப்பரில் திருத்தாமல் மெயில் காப்பியை Xerox செய்து திருத்தியிருக்கிறார்கள். அதுகூட பென்சில்களால் அழித்து அடித்து திருத்தியிருந்ததை கண்டு அதிர்ச்சியுற்று, “எங்கே எங்களுடைய ஒரிஜினல் பேப்பர்?, திருத்திய பேராசிரியரின் கையொப்பம் எங்கே?, ஏன் பென்சிலால் திருத்தியிருக்கிறது?, மார்க்குகள் அழித்து போடப்பட்டுள்ளது” என்று கேட்டதற்கு “அதெல்லாம் நீ பேசக்கூடாது… நீ ஓவரா பேசுர” என்று எங்களை மிரட்டினார் துறைத் தலைவர்.

மேலும், சரியாக எழுதியிருந்தும் வெறும் 2 மார்க் 1 மார்க் என்று அளிக்கப்பட்டது ஏன் என்றால் “ ‘கண்டென்ட்’ இல்லை, எனக்கு சரியா கண்ணு தெரியலை” என்று மாணவர்களிடம் கதையளக்கிறார். “கண்டென்ட் இல்லையென்றால் எதைவைத்து அளவிடுகிறீர்கள்? Answer key எங்கே?” என்றால் அதற்கும் பதிலில்லை.

இதையடுத்து தற்போது சுமார் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாங்கள் பல்கலைக்கழக சேப்பாக்க வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்களை அழைத்துப் பேசிய பதிவாளர், “அகழாய்வு பணியை முடித்து 25 நாட்கள் கழித்து வாங்க.. அப்போது பார்த்துக் கொள்ளலாம்; உடனடியாக எதுவும் செய்யமுடியாது” என நேற்று அளித்த உத்திரவாதத்தையே மாற்றி மிகவும் அலட்சியமாகப் பேசுகிறார்.

பல்வேறு பொருளாதார சமூக தடைகளிலிருந்து தாண்டிவந்து தற்போதுதான் கல்வி எனும் கனவை நோக்கி வருகிறோம். ஆனால் இதிலும் காரணமற்ற நிர்வாக நெருக்கடிகளும், துறைத்தலைவர் சௌந்தரராஜன் அவர்களின் நாகரீகமற்ற பழிவாங்கும் செயல்பாட்டாலும் எங்களில் சிலர் படிப்பையே விட்டுவிட்டு வெளியேறிவிடலாம் என்னும் மனநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டுள்ளோம்.

தற்சமயம் எங்களது தேர்வுத்தாள்கள் வேறொரு கல்லூரி பேராசிரியர்களால் திருத்தப்பட்டு மதிப்பெண் வழங்கும் வரை நாங்கள் தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுத்து இரவிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகிறோம்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியப்போக்கை கண்டித்தும், தொல்லியல் துறைத்தலைவர் சௌந்தரராஜன் அவர்களின் அதிகாரத் திமிரை கண்டித்தும் எங்களுக்காக அனைத்து கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்களும், பொதுமக்களும் சமூக ஜனநாயக சக்திகளும் ஆதரவு குரலெழுப்ப வேண்டுமென்று இந்த அறிக்கை வாயிலாக உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு,
பாதிக்கப்பட்ட தொல்லியல் துறை மாணவர்கள்,
சென்னை பல்கலைக்கழகம்,
தொடர்புக்கு : 9600162343

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க