ரலாற்றில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளாத சமூகம் மீண்டும் அதே வரலாற்றை திருப்பி செய்வதற்கு சபிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வார்கள்.

ஐரோப்பாவில், இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்த அதே நிலைமைதான் இன்று இந்தியாவிலும் இலங்கியையிலும் காணப்படுகிறது. ஆனால் நாம் ஐரோப்பியர் வரலாற்றில் இருந்து எந்த பாடத்தை கற்றுக் கொண்டோம்? எதுவும் இல்லை. அந்த அளவுக்குதான் நமது மக்கள் மத்தியில் இது குறித்த தேடுதலும் ஆர்வமும் இருக்கிறது என்பது இங்கு வருத்தத்திற்குறியது.

***

இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நடந்த இனக்கலவரங்கள் பற்றி கேள்விப் பட்டிருப்போம். தமிழ்நாட்டில், கோவையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டக் கலவரத்துக்கு பின்னர், ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் மீண்டும் அதுபோன்ற கலவரங்களுக்கு தூண்டி விடுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

ஒரு காலத்தில் ஐரோப்பாவில் இது போன்ற நிலைமைதான் இருந்தது என்பதை சொன்னால் நம்பூவீர்களா?

இதே போன்ற இனக் கலவரங்களின் மூலம்தான் ஜெர்மனியில் நாஜிகள் ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பதையும், அவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டனர் என்பதையும் அவர்கள் உள்ளூர் மக்கள் மத்தியில் தமது ஆதரவை பெருக்கிக் கொண்டனர் என்பதையும் நாம் மறந்து விடுகின்றோம்.

படிக்க :
♦ கிரீசில் நாஜி வெறியர்களை எதிர்த்து மக்கள் போராட்டம்

♦ இந்திய உழவர் போராட்டம் குறித்து ஒரு டச்சு ஊடகம் || கலையரசன்

இந்தியாவில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல் மக்களை இந்துக்கள் முஸ்லிம்கள் என்று இரண்டாகப் பிளவுபடுத்தி வைத்திருப்பது போன்றே, அன்று ஜெர்மனியிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் நாஜிகளும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்திருந்த பாசிச கும்பல்களும் மக்களை கிருஸ்துவர்கள், யூதர்கள் என்று பிளவுபடுத்தி வைத்திருந்தார்கள்.

இன்று சகிப்புதன்மை கொண்ட லிபரலிச நாடாக காட்சியளிக்கும் நெதர்லாந்து கூட அதற்கு விதிவிலக்கு அல்ல. நெதர்லாந்திலும் ஜெர்மன் நாஜிகளை பின்பற்றி வந்த என்.எஸ்.பி எனும் ஒரு இனவாத பாசிச கட்சி இயங்கி வந்தது. அன்றும் அவர்கள் யாராலும் கவனிக்கப்படாத ஒரு சிறிய கட்சியாகத்தான் இருந்தனர். யூதர்களுக்கு எதிரான இனவாத பிரச்சாரங்கள் மூலம் டச்சு மக்கள் மத்தியில் ஆதாரவை பெற்றுக்கொள்ள முயன்றனர்.

இருப்பினும் அந்த காலத்திலும் நெதர்லாந்து, சர்வதேச வணிகத்தினால் லாபம் அடைந்து வந்த நாடு என்பதாலும், அதற்கு யூதர்களின் பங்கு இன்றியமையாதது என்பதாலும், டச்சு மக்கள் மத்தியில் இந்த யூதர்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரம் பெரியதாக எடுபடவில்லை.

1940-ஆம் ஆண்டிற்கு பின்னர், அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. அந்த வருடம் ஜெர்மன் நாஜி இராணுவம் நெதர்லாந்தின் மீது படையெடுத்து ஆக்கிரமித்திருந்தது. நெதர்லாந்து அரசாங்கம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் ஜெர்மன் இராணுவ ஆட்சியாளர்களின் நிர்வாகம் ஏற்பட்டது. அவர்களின் கீழே ஒரு நிழல் அரசாங்கம் இயங்கி வந்தது.

அதைத்தவிர மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. டச்சு அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் சிவில் நிர்வாகத்தை முன்பு போலவே நடத்திக் கொண்டிருந்தனர். அரசு அலுவலகங்கள் தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கின. மக்கள் வழக்கம்போல வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தனர்.

டச்சு கிருஸ்துவ முதலாளிகள் மட்டுமல்ல யூதமுதலாளிகள் கூட தமது தொழிலகங்களை நடத்துவதற்கு எந்தவித தடையும் இருக்கவில்லை. சமூகம் இன்றிருப்பதை போன்றுதான் அன்றும் இருந்தது. யூதர்களில் பணக்காரர்களும் இருந்தார்கள், ஏழைகளும் இருந்தார்கள். யூதர்களும் கிருஸ்தவர்களும் ஒன்று கலந்து வாழ்ந்து வந்தார்கள். யூதர்கள் மதத்தால் வேறுப்பட்டிருந்தாலும், மொழியால் கலாச்சாரத்தால், அவர்களும் டச்சுக்காரர்களாகதான் வாழ்ந்து வந்தனர்.

ஜெர்மன் நாஜிகளுடன் கூட்டுச் சேர்ந்து இயங்கிய டச்சு ஒட்டுக்குழுவான என்.எஸ்.பி கட்சியினர், மக்கள் மத்தியில் ஏற்படும் சிறு சுணக்குகளை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, யூதர்களுக்கு எதிரான இனக் கலவரமாக மாற்றி விடுவதற்குக் கடுமையாக முயற்சி செய்தனர். ஆம்ஸ்டர்டாம் நகர தெருக்களில் கத்தி பொருட்களுடன் (ஆயுதங்களுடன்) ரோந்து சுற்றிய என்.எஸ்.பி காடையர்கள் (ரவுடிகள்), யூதர்களை கண்டால் அவர்களை சீண்டி வம்புக்கிழுத்து சண்டையிட முயன்றனர்.

என்.எஸ்.பி காடையர்களின் கும்பல் வன்முறையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக யூதர்களும் ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கினார்கள். இதனால் இந்த டச்சு – யூத ஆயுதபாணி குழுக்களுக்கு இடையில், அடிக்கடி மோதல்கள் இடம்பெற்றன.

ஒருதடவை ஆம்ஸ்டர்டாம் நகரில் இடம்பெற்ற மோதலில் கடுமையாகக் காயமடைந்த என்.எஸ்.பி முக்கிய பிரமுகர் ஒருவர் அடுத்தநாள் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜெர்மன் ஆட்சியாளர்களும் அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த டச்சு தினசரி பத்திரிக்கைகளும் யூதர்கள் மீதே பழிபோட்டனர்.

நெதர்லாந்தில் யூத பயங்கரவாதிகளின் அட்டகாரம் அளவுக்கு மிஞ்சி சென்றுவிட்டதென்றும், அவர்களது வன்முறைக்கு ஒரு நிராயுதபாணியான அப்பாவி டச்சு இளைஞன் பலியாகி விட்டானென்றும், செய்தி வெளியிட்டிருந்தனர்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஆம்ஸ்டர்டாம் நகரம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்திய ஜெர்மன் படையினர் நூற்றுக்கணக்கன யூத இளைஞர்களைக் கைது செய்தனர். 1941-ஆம் ஆண்டு பிப்ரவரி 22,23-ஆம் தேதிகளில் இடம்பெற்ற தேடுதல் வேட்டையில் 20 முதல் 35 வயது வரையிலான 427 யூத இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

அன்றைய தினம் நடைபாதையில் கல் பதிக்கும் வேலை செய்து வந்த ஒரு சாதாரண டச்சுத் தொழிலாளி, நூற்றுக்கணக்கான யூத இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதை கண்டு கொதித்தெழுந்துள்ளார். தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அந்த தொழிலாளி, இந்த சம்பவம் குறித்து தனது சகதோழர்களுடன் கலந்துரையாடினார்.

அவர்கள் இருவரும் கலந்து பேசி, இதற்கு எதிராக நாங்கள் ஒரு நடவடிக்கை  எடுக்க வேண்டுமென்றும் வேலை நிறுத்தப் போராட்டமே சிறந்தது என்றும் தீர்மானித்தனர். தமது முடிவு குறித்து தலைமறைவாக இயங்கி வந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கும் அறிவித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி தலைமை பீடமூம் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அனுமதி கொடுத்தனர். பிப்ரவரி 25-ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அறைக்கூவல் விடுக்கும் துண்டு பிரசூரங்கள் மக்கள் மத்தியில் வினியோகிக்கப்பட்டன.

ஆம்ஸ்டர்டாம் நகரில் நூற்றுக்கணக்கான அப்பாவி யூத இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுவது நேரில் கண்ட, சாதாரண டச்சு மக்கள் கூட இந்த கொடுமைக்கு முடிவு கட்டப்பட வேண்டுமென்று கம்யூனிஸ்டு கட்சியினரின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

பிப்ரவரி 25-ஆம் தேதி ஆம்ஸ்டர்டாம் நகரில் எங்குமே டிராம்கள் ஓடவில்லை. பஸ் ஓடவில்லை. தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. அரசாங்க ஊழியர்கள் கூட அலுவலகங்களுக்கு செல்லவில்லை. இந்த வேலை நிறுத்தப் போராட்டமானது ஆம்ஸ்டர்டாம் நகரை அன்டியிருந்த கார்லம், வில்ரேல், சான்டம் போன்ற பிற நகரங்களுக்கும் பரவியது.

பிப்ரவரி 25,26 ஆகிய இரண்டு நாட்களும் நாடு தழுவிய மக்கள் எழுச்சியாக இந்த வேலை நிறுத்தப் போராட்டம், நாஜி ஆக்கிரமிப்பு நிர்வாகத்திற்கு எதிராக நடைபெற்றது. ஐரோப்பிய நாடுகளில் நாஜிகள் அதிகாரத்திற்கு வந்த பின்னர், நடந்த முதலும் கடைசியுமான பொது வேலை நிறுத்தம் இதுதான்.

உண்மையில், இப்படியொரு மக்கள் எழுச்சியை நாஜி இராணுவ ஆட்சியாளர்களே எதிர் பார்த்திருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை அவர்களுக்கு என்ன செய்வதென்றும் தெரியவில்லை. நெதர்லாந்தை நாஜி படைகள் எதிர்த்த அடுத்த நாளே நெதர்லாந்து கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டு விட்டதாலும், அந்த கட்சியின் தலைவர்களும் உறுப்பினர்களும் தலைமறைவாக இருந்ததாலும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒழுக்குபடுத்துபவர்கள் யாரென்றுக் கண்டுபிடிக்க முடியவில்லை.

படிக்க :
♦ ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்
♦ Stateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்

கம்யூனிஸ்ட் கட்சி என்பது பெருமளவு மக்கள் ஆதரவு பெற்றிறாத ஒரு சிறிய கட்சி என்பதாலும் அவர்கள் அந்தக் கட்சியைக் குறைவாக மதிப்பிட்டு இருக்கலாம். ஆனால், தொழிலாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு ஒரு பலமான ஆதரவுதளம் இருந்ததையே அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு என்று தெரியாமல் தவித்த ஜெர்மன் பாதுகாப்பு படையினர், கண்டபடி சுட்டத்தில் ஒன்பது பேர் பலியானார்கள். வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தியவர்கள் கையில் அகப்பட்டால், அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றார்கள். அத்துடன் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை கைது செய்தனர். அது மட்டுமல்ல, தொழிலாளர்களை நடத்திய முதலாளிகள் மீதும் அழுத்தம் பிரகியோகிக்கப்பட்டது.

வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்யுமாறும் மேலதிகமாக ஒருமாத சம்பளப் பணம் தண்டமாக அரவிடப்பட வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது. வேலை நிறுத்தம் நடைபெற்ற நகரங்களுக்கு பொருப்பான நகர சபை நிர்வாகம் ஒரு பெரும் தொகை தண்டமாக கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அந்த வகையில் ஆம்ஸ்டர்டாம் நகர சபை மட்டுமே பதினைந்து மில்லியன் கில்டர்ஸ் தண்டப் பணமாக கட்டியுள்ளது. கில்டன் என்பது யுரோவ் வருவதற்கு முன்பிருந்த நெதர்லாந்து நாட்டின் நாணயமாகும். சம்பந்தப்பட்ட நகர சபைகளின் மேயர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, அந்த இடத்தில் நாஜி இராணுவ ஆட்சியாளர்களுக்கு அடிவருடும் கைக்கூலிகள் நியமிக்கப்பட்டனர்.

ஜெர்மன் நாஜிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த ஐரோப்பிய நாடொன்றில் இராணுவ ஆட்சியாளர்களையே நடுக்க வைக்கும் அளவிற்கு, ஒரு மக்கள் எழுச்சியாக மாறிய இந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு காரணம் ஒரு சாதாரண தொழிலாளி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதுவும், இந்த தொழிலாளி ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சி உறுப்பினர் என்பது வரலாற்றில் பதியப்பட வேண்டும்.

மனிதக்குல வரலாறு முழுவது சாதாரண உழைக்கும் மக்களே வரலாற்றை மாறி எழுதியுள்ளனர். ஆனால், அவர்களின் பெயர்கள் எந்த ஒரு சரித்திர புத்தகத்திலும் குறிப்பிடப்படுவதில்லை. வில்லம் கிரான் என்ற ஒரு பெயரையுடைய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரு தொழிலாளிதான் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியவர் என்பதை அன்றைய நாஜி ஆட்சியாளர்கள் ஏதோ ஒருவகையில் கண்டுபிடித்து விட்டார்கள்.

நெதர்லாந்து முழுவதும் வில்லம் கிரானை வலைவீசி தேடிக் கொண்டிருந்த நாஜிப் படையினர் நவம்பர் மாதம் 16-ஆம் தேதியளவில் கைது செய்துள்ளனர். சரியாக, ஒரு வருடத்திற்கு பின்னர் அதாவது, 1942-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி 33-வயதுடைய வில்லம் கிரான் ஒரு இராணுவ முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார். சாவதற்கு முன்னர், அவர் தங்கள் மகளுக்கு எழுதிய கடிதத்திலும் தனது கொள்கைப்பற்றை வெளிபடுத்தியுள்ளார்.

“நான் எனது கொள்கைக்காக மரணிக்கிறேன். அது அர்த்தமற்றதாகி விடாது என்று நம்புகிறேன்” என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். வில்லம் கிரானின் மரணத்திற்கு பின்னர், அவரது மனைவியும் மகளும் மிகவும் கொடுமையான வறுமைக்குள் வாழ்ந்தனர். இன்று, ஒவ்வொரு வருடமும் நடக்கும் பிப்ரவரி வேலை நிறுத்த நினைவுக் கூறளுக்கு சம்பிரதாயப் பூர்வமாக கலந்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் யாரும் வில்லம் கிரானின் பெயரை உச்சரிப்பதே இல்லை.

அவரது பெயர் நெதர்லாந்து நாட்டில் எந்த ஒரு பாடப் புத்தகத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால், அவர் ஒரு சாதாரண தொழிலாளி, அது மட்டுமல்ல அவர் ஒரு கம்யூனிஸ்ட்.

முகநூலில் : கலையரசன்
(தோழர் கலையரசனின் யூடியூப் காணொலியின் எழுத்துருவாக்கம் )

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க