சட்டீஸ்கர் மாநிலத்தில் தண்டகாரண்யா பிரதேசம் மலை வளமும், கனிம வளமும், வனவளமும் உள்ளிட்ட இயற்கை செல்வ வளங்கள் நிறைந்த பூமி. உயிர் வாழ மனித குலத்திற்கும் அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கை அளித்த அற்புதக் கொடைகள் இவை. இந்த இயற்கை வளங்கள் அனைத்தையும் கபளீகரம் செய்வதற்குக் கார்ப்பரேட் முதலாளித்துவ கும்பலுக்குத் தாரைவார்த்து விட்டனர் இந்திய ஆட்சியாளர்கள். தண்டகாரண்யா பகுதியில் பூமிக்கு அடியில் புதைந்துள்ள சுமார் 200 லட்சம் கோடி மதிப்புள்ள கனிம வளங்களை கொள்ளையடிக்கும் லாப வெறியோடு அதானி கும்பல் களமிறங்கியுள்ளது.
கார்ப்பரேட் குழும முதலாளித்துவ கும்பலின் ஏவலர்களாக மாறிவிட்ட மத்திய மாநில ஆட்சியாளர்களும், ஆளும் வர்க்கமும் இந்த மண்ணின் பூர்வக்குடி மக்களாகிய பழங்குடி மக்கள் மீது ஈவு இரக்கமற்ற ஒரு கொலைகார யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். பூர்வகுடி மக்களின் வாழ்க்கை ஆதாரங்களான நிலம்,நீர்,காடுகளிலிருந்து அவர்களை அந்நியப்படுத்த இரக்கமற்ற அரக்கத்தனம் நடந்து கொண்டிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த அக்கிரமம் தேசிய ஊடகங்களின் பார்வையில் படுவதில்லை.
படிக்க :
ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !
பத்தல்கடி இயக்கம் : ஆதிவாசிகளின் அதிகாரத்துக்கு எதிரான பிரகடனம் !
ஆதிவாசி உழைக்கும் மக்கள் மீது நடத்தப்படும் இந்த கொடிய தாக்குதல்கள் அனைத்தும் மாவோயிஸ்ட் புரட்சியாளர்களை ஒடுக்குவதற்காகவே நடத்தப்படுவதாக கூறுகிறார்கள். கார்ப்பரேட் – காவி பாசிசக் கும்பலும்- காங்கிரஸ் கும்பலும் எவ்விதக் கொள்கை வேறுபாடும் இல்லாமல் கார்ப்பரேட் கொள்ளையர்களின் நலன் காக்க ஓரணியில் செயல்படுகின்றனர்.
மாவோயிஸ்டுகளை ஒடுக்குவது என்கின்ற முகாந்திரத்தை வைத்துக்கொண்டு, பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடுபவர்களையும் கருப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கிறது அரசு. அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடத்தப்படும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளைக் கூட தீவிரவாத முத்திரை குத்தி அடக்கி விடுகின்றனர்.
மேலும், பழங்குடியின பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறி வழக்கை முடிப்பது என ஈவு இரக்கமற்ற கொடூரமான அத்துமீறல்களை சட்டீஸ்கர் மாநில போலீசு துறையும் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து அன்றாடம் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூட, காவாசிபாண்டி (KawasiPandi) என்கின்ற ஆதிவாசி பெண்ணை, போலீஸ் லாக்கப்பில் வைத்துக் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டு, அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடினார்கள்.

மாநில போலீசும், சி.ஆர்.பி.எப். போலீசும் இணைந்து நடத்தும் இத்தகைய அட்டூழியங்களை எதிர்த்து மக்களைத் திரட்டி போர்க்குரல் எழுப்பிப் போராட்டக்களத்தில் நின்றவர் மட்கம் ஹிட்மெ (Madkam Hidme). இந்த பெண் போராளியை மாவோயிஸ்ட் எனக் குற்றம்சாட்டி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீசு. சட்ட விரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம்( UAPA) பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் பொய் வழக்குப் புனையப்பட்டு கார கிரகத்தில் அடைக்கப்பட்டுள்ளார்.
பழங்குடி மக்களை மலைகளில் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியை எதிர்த்து இயக்கம் நடத்தியவர் மட்கம் ஹிட்மெ. தாண்டேவாடா- சுக்மா- பிஜாப்பூர் பிராந்தியங்களில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார். மலைகளைத் தகர்த்தெறிந்து நிலக்கரி சுரங்கங்கள் அமைத்து கொள்ளையிட முனைந்து நிற்கும் அதானி கும்பல் உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதிவாசி மக்களை அவர்களின் வாழ்வாதாரத்தில் இருந்து துடைத்து ஒழிப்பதற்கு அவசியமாக இருக்கிறது.
பெருமளவிலான அரசு மானியம், அதானி சுரங்க தொழில் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. தனது துவக்க முதலீடாக 3000 கோடி ரூபாயை சுரங்கத் தொழிலில் முதலீடு செய்துள்ளது அதானி குழுமம். ParsaEsat – KanteBasin சட்டிஸ்கர் அதானிக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. அதானி என்டர்பிரைசஸ் சுரங்கத் தொழில் நிறுவனம்தான், மிகப்பெரிய தனியார் சுரங்கத்தொழில் நிறுவனம். நிலக்கரி சுரங்கத் தொழிலில் இது மிகப்பெரிய திருப்புமுனை என்கிறார் கௌதம் அதானி.
இந்திய நாட்டை ஆளும் கார்ப்பரேட் – காவி பாசிச கும்பலின் அரசியல் முகவர்கள் ஆன பிஜேபியும் – மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் ஆட்சியும் அதானியின் நலன் காப்பதில் ஓரணியில் நிற்கின்றனர். அதானியின் கனிமவளக் கொள்ளை எந்த எதிர்ப்பும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் ஆதிவாசிகளின் வாழ்வாதாரத்தை நாசம் செய்து, அவர்கள் வாழ்விடத்தில் இருந்து அவர்களை விரட்ட வேண்டுமென்ற வெறியோடு மத்திய மாநில ஆட்சியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ஆதிவாசி செயல்பாட்டாளர் சர்வதேச மகளிர் தினத்தன்று கைது செய்யப்பட்டிருப்பது ஆதிவாசி மக்களை அச்சுறுத்தும் மற்றொரு நடவடிக்கையாகும். மாவோயிச பூச்சாண்டியை காட்டி இந்த அநீதி அரங்கேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நாட்டின் ஒட்டு மொத்த மின்சக்தி உற்பத்தியும் அதானி கும்பலிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. நிலம், நீர், காற்று, கனிமவளம் என அனைத்து இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சூறையாடுவது எதிர்காலத்தில் மிகப்பெரிய தீய விளைவுகளை ஏற்படுத்தும்.
படிக்க :
மோடியின் மிஷன் – 2016 : காட்டுவேட்டையின் புதிய அவதாரம் !
சட்டீஸ்கர் : சரணடைந்தவரெல்லாம் நக்சலைட்டு அல்ல
ஆதிவாசி செயல்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பொய் வழக்குகள் புனையப்பட்டு பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்வதற்கான குரலை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓங்கி ஒலிக்க வேண்டும். வரைமுறையின்றி இயற்கை வளங்களைச் சூறையாடும் கார்ப்பரேட் குழும முதலாளித்துவ கும்பலுக்கு எதிராக அலை அலையாய் போராட்டங்கள் கட்டமைக்கப்பட வேண்டும்.
இரணியன்
செய்தி ஆதாரம் : Hindustantimes