அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யும் நாட்றாம்பாளையம்– அத்திரத்தூர்–ஆரோக்கியபுரம் ஊர் பொதுமக்களின் போர்கோலம்
அஞ்செட்டி வட்டம், நாட்றாம்பாளையம் பஞ்சாயத்தில் உள்ள கிராமம் அத்திரமரத்தூர், ஆரோக்கியபுரம் கிராமங்கள். இங்கு சுமார் 300 குடும்பங்கள் தாழ்த்தபட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராம மக்கள் முதியவர்கள் வீட்டிலிருக்க இளைஞர்கள் பெங்களூருக்கு வேலைதேடி சென்று பிழைத்து வருகின்றனர்.
இக்கிராமங்களுக்கு இன்று வரை சுடுகாடு இல்லை. ஓடையிலும் ஏரியிலும்தான் பிணங்களை புதைத்து வருகின்றனர். மேலும் இக்கிராம மக்களுக்கு இன்றுவரை பட்டா வழங்கவில்லை. காலனி வீடு கட்டிக்கொடுக்கவும் இல்லை. மலை கிராமங்கள் என்பதால் உடல்நிலை சரியில்லாமல் போனால் மருத்துவ வசதியும் இல்லை.
இது சம்மந்தமாக வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் என பல முறை முறையிட்டும் மனு கொடுத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக, இரண்டாண்டுகளுக்கு முன்னர் மயான வசதி செய்து தரக்கோரி இது போல் போராடியபோது நான் மயான வசதி செய்து தருகிறேன் என்று வட்டாட்சியர் கைப்பட மக்களுக்கு கடிதம் எழுதி வாக்குறுதி அளித்துச்சென்றார்.
படிக்க :
♦ தேர்தல் ஆணையமா அம்மா ஆணையமா ?
♦ தேர்தல் : எத்தனை முறை ஏமாறுவீர்கள் ?
அக்கடிதம் மக்களிடம் உள்ளது. ஆனால், இன்றுவரை இதை நிறைவேற்றவில்லை. இது போன்ற அடிப்படை வசதியில்லாமல் தவித்துவரும் நிலையில் மேலும் அம்மக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையில் நாட்றாம்பாளையம் பஞ்சாயத்திற்குட்பட்ட அத்திமரத்தூர் ஆரோக்கியபும் ஆகிய இரு கிராமங்களையும் கேரெட்டி பஞ்சாயத்தில் வருவாய் அதிகாரிகள் இணைத்துள்ளனர். இதன் மூலம் ரேஷன் கடைக்கும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கும் சென்று வர 7 கிலோமீட்டர் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே சாலை வசதி செய்து தரக்கோரியும், குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரியும் போராட்டங்களை செய்துவரும் மக்கள், பஞ்சாயத்தை பிரிக்கும் செய்தி கிடைத்ததும் கடந்த 18-03-2021 அன்று இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மக்கள் ஊரிலேயே போராட்டத்தை தொடர்ந்தனர். இதை அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால் ஊர்கூடி முடிவு செய்து அஞ்செட்டி ஒகேனக்கல் சாலையில் ஊர் நுழைவாயிலில் தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்தனர். அதில் எந்த ஓட்டுக்கட்சியும் ஊருக்குள் ஓட்டுக்கேட்டு வரக்கூடாது என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.
வீடுகளில் ஆங்காங்கே கருப்பு கொடியும் கட்டியிருந்தனர். இது மறுநாள் தினத்தந்தி மற்றும் தெலுங்கு செய்தித் தாளில் செய்தி வெளிவந்ததும், அதிகாரிகள் போலீசுடன் வந்தனர். சாலைக்கு வாருங்கள் என்று மக்களை அதிகாரிகள் அழைத்தனர். ஊருக்கு வாருங்கள் என்று மக்கள் அதிகாரிகளை அழைத்தனர். உங்கள் கோரிக்கையை தேர்தலுக்கு பிறகு நிறைவேற்றுகிறோம். இப்போது பேனரை அகற்றுங்கள் என்று கேட்டனர், அதிகாரிகள்.
ஏன் இதற்கு முன்னர் பல முறை மனு கொடுத்தும், வட்டாட்சியர் கைப்பட எழுதி வாக்குறுதி கொடுத்தும் ஏன் கண்டுகொள்ளவில்லை என்று அதிகாரிகளை கேட்ட மக்கள், பேனரை அகற்ற முடியாது என்றனர். இதன்பின்னர் அதிகாரிகளும் போலீசும் பேனரை கிழித்து எடுத்துச்சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பேனரை திரும்ப ஒப்படைக்க கோரியும் கோரிக்கையை நிறைவேற்ற கோரியும் 24-03-2021 அன்று ஒகேனக்கல் – அஞ்செட்டி சாலையை மறித்து போராட்டத்தில் இறங்கினர்.
இப்போராட்டத்திற்கு பின்னர் அதிகாரிகள் பேனரை ஒப்படைத்துச் சென்றனர். தேர்தலுக்கு பிறகு கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறினர். எனினும் அதிகாரிகள் பொய் வாக்குறுதிளை கண்டு பல முறை ஏமாந்த மக்கள் இம்முறை தொடர்ந்து தேர்தலை புறக்கணிக்க ஊர் கூடி முடிவு செய்து மீண்டும் ஊர் நுழைவாயிலில் பேனர் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் புறக்கணிப்பு போராட்டமும் தொடர்கிறது.
தமிழகம் வெற்றிநடைபோடுகிறது என்று எடப்பாடி விளம்பரம் செய்துவரும் நிலையில் இன்று வரை சுடுகாடு கேட்டு போராடும் நிலையில்தான் தமிழகம் உள்ளது என்பதை முகத்தில் அறையும் விதமாக உணர்த்துகிறது இப்போராட்டம்.

தகவல்
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்.