மியான்மரில் முன்னாள் அதிபர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டு இராணுவ தளபதி மின் ஆங் ஹேலிங் தலைமையிலான ராணுவ ஆட்சி பிப்ரவரி 1 முதல், பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் ஜனநாயக ஆட்சியை நடைமுறைப்படுத்தக் கோரி நடந்து வரும் போராட்டத்தை மியான்மர் போலீஸ் மற்றும் இராணுவம் தொடர்ந்து ஒடுக்கி வருகின்றது.
மியான்மரின் பெருநகரங்களான யாங்கூன் மற்றும் மாண்டலேவில் போராட்டங்கள் பெருமளவில் நடக்கின்றன. இதுவரை 500-க்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு ஆணையம் இந்த தாக்குதலை கண்டித்திருந்தாலும் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஒருங்கிணைந்த நடவடிக்கை எதையும் இதுவரை பரிந்துரைக்கவில்லை. மேற்கத்திய வல்லரசுகளின் மூலதனத்திற்கு பாதிப்பு வந்தால் ஒருவேளை அதற்குப் பிறகு நடவடிக்கை தொடங்கப்படலாம்.
அதே நேரத்தில், தொடர்ந்து சர்வதேச அளவில் வரும் நெருக்கடிகளுக்குப் பிறகு, தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், இயல்பு நிலை திரும்பிய பிறகு மீண்டும் ஒரு நேர்மையான தேர்தல் நடத்தப்போவதாகவும் இராணுவம் கூறியுள்ளது.
படிக்க :
♦ மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி
♦ ரோஹிங்கியா : பச்சிளங் குழந்தைகளைப் பலி வாங்கும் மியான்மர் அரசு
இன்று மக்கள் போராட்டங்களை கடுமையாக ஒடுக்கி வரும் இராணுவ ஆட்சிக்கு எதிராக ஆங் சான் சூகியின் ஆட்சியை ஜனநாயக ஆட்சி போல மேற்கத்திய ஊடகங்கள் சித்தரிக்கின்றன. 50 ஆண்டுகள் இராணுவ ஆட்சிக்குப்பிறகு, ஜனநாயகம் மலர்ந்ததாகவும், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நாட்டை பின்னோக்கி இழுத்து செல்லும் என்றும் நீலிக்கண்ணீர் வடிக்கின்றன.
ஆனால் ஆங் சான் சூகியின் ஜனநாயகத்தில், இதே ராணுவம் , மியான்மரின் பவுத்த பேரினவாதிகள் ஆதரவுடன் சிறுபான்மை ரோஹிங்கிய முஸ்லிம்களை ஆயிரக்கணக்கில் வேட்டையாடியது. இதற்காக மின் ஆங் ஹேலிங் மீது பல்வேறு பொருளாதார தடைகள் போடப்பட்டுள்ளன. இந்நிலையில் சர்வதேச நீதிமன்றத்தில், ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது இராணுவத்தின் இனப்படுகொலையை அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஜனநாயகவாதி ஆங் சான் சூகி திருவாய் மறுதலித்திருந்ததை நாம் நினைப்படுத்த வேண்டியிருக்கிறது.
இன்று மியான்மர் மக்கள் மீண்டும் பழைய இராணுவ ஆட்சி வந்துவிடக் கூடாது என்று எண்ணி வீதியில் இறங்கி போராடிவருகின்றனர்.








தமிழாக்கம் : ஆறுமுகம்
நன்றி : அல்ஜசீரா