டை என்பதை நாம் நம் கலாச்சாரத்துடன் இணைத்துப் பார்ப்பது போல் ஆடையை ஒரு நபரின் நடத்தையுடன் பார்ப்பது தவறு. ஆடை மனித பரிணாம வளர்ச்சியின் ஓர் அங்கம். தேவை மற்றும் சூழ்நிலைகேற்ப மாறிவரும் தன்மையுடையது. சமீபத்தில் உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வர் திரட் சிங் ராவத் பெண்கள் அணியும் உடை குறித்துப் பேசி சர்ச்சையில் சிக்கினார்.

பெண்கள் ஜீன்ஸ் அணிவது அடுத்த தலைமுறைக்கு மிக மோசமான வழிகாட்டுதல் என்ற அவரின் ட்வீட் சமூக வலைதளங்களில் பேசுப்பொருளாக ஆன உடனே, “நான் ஜீன்ஸ் அணிவது பற்றி பேசவில்லை. நான் கிழிந்த ஜீன்ஸ் பயன்படுத்தும் பெண்களை தான் குற்றம் சாட்டுகிறேன்” என்றார்.

படிக்க :
♦ ஜீன்ஸ் பேண்ட்டும், பாலியல் வன்முறையும் !

♦ சட்டை ரூ.15.000, ஜீன்ஸ் 13.000, கைப்பை 1 இலட்சம்…..!

இதே போன்று ராஜஸ்தானில் பல இடங்களில் பெண்கள் ஜீன்ஸ் போடுவது கலாச்சார கேடு என்பது போன்று ஒரு பிம்பம் ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சமூக நிலையில் பிற்படுத்தப்பட்ட ஆண்கள் ஜீன்ஸ், ‘கூலிங் கிளாஸ்’ போட்டுக் கொண்டு இடைநிலை சாதியில் உள்ள பெண்களைக் கவர்ந்து நாடகக் காதல் செய்கின்றனர் என்று சாதிய தலைவர் ஒருவர் (இராமதாஸ்) பேசியிருக்கிறார். இது போன்று நிறைய தருணங்களில் ஆடையுடன் பெண்களின் நடத்தை ஒப்பிட்டுப் பேசப்படுகிறது. இது ஒரு வகையான ஆண் ஆதிக்க மனவோட்டத்தின் வெளிப்பாடு.

சமூகம் நாகரிக வளர்ச்சியை நோக்கி செல்லும்போதே சில நடத்தை விதிமுறைகளின் மூலம் பெண்கள் உற்பத்தியிலிருந்து விலக்கப்பட்டு, வரலாறு நெடுகிலும் ஆண்களால் ஒடுக்கப்பட்டு வந்துள்ளனர். பெண்கள் எப்படி உடை அணிய வேண்டும், எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்தந்தப் பொறுப்புகளை சுமக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளது.

இது எல்லா சமூகங்களுக்கும் பொருந்தும். இதற்கு அந்த சமூகத்தின் சுழலும் சந்தர்ப்பமும் பொருத்து பெண்களின் சக்தி மற்றும் கட்டுப்பாடு தனிப்பட்ட தேர்வாககிறது. சுய வெளிப்பாடு மற்றும் அடையாளத்தை நிலைநாட்டுவதன்  பின்னணியில் ஆடையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இப்படி பல சர்ச்சையிலிருந்தே ஜீன்ஸின் வரலாறு விரிகிறது.

ஜீன்ஸ் பற்றிய வரலாறு இன்றைய இளைஞர்களிடமிருந்து துவங்கவில்லை. இதனைக் கடந்து போராளிகள்,  பழமைவாதிகள், நவீனவாதிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என பலர் மத்தியிலும் பயணித்த நீண்ட பயணம் அது. உலகளாவிய ஜீன்ஸின் இந்த பயணம் மிகவும் நீண்டது.

இதில் நுகர்வோர், தொழிலாளர்கள், பணம் படைத்த முதலாளிகள் என அனைவரும் அடங்குவர். உற்பத்தி மேலை நாடுகளிலிருந்து வெளியேறி இந்தியாவில் குடிபெயர்ந்துள்ளதற்குக் காரணமாக ஒருபுறம் இந்தியாவின் மலிவான உழைப்புச் சந்தையும், தண்ணீர் வளமும் இருக்கையில், மறுபுறத்தில் ஜீன்ஸ் தேவையும், உற்பத்தியும் அதிகரித்துள்ளதற்கு மற்றொரு காரணம் சமகால நுகர்வோரின் தேவையே.

ஜீன்லின் வரலாறு

இதன் வரலாற்றை சற்றே புரட்டினோமெனில் அது, மத்திய காலகட்டங்களில் வடக்கு இத்தாலியில் உருவான ஐரோப்பிய பருத்தி ஆடை நிறுவனத்தில் இருந்து துவங்குகிறது. பதினைந்தாம் நூற்றாண்டிற்குப் பின் பருத்தி ஆடை லுகுரியா பகுதியில் மிகவும் பிரபலமானது. அதன் கனமான மற்றும் கரடுமுரடான ஆடைகளுக்கு இந்தப் பகுதி பெயர்போனது.

தரம் குறைவான பருத்தி இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆடைகள் டெனிம்கள் எனப்பட்டன. பின் கைத்தறி மற்றும் பருத்தியிலிருந்து நெய்யப்பட்ட குறுக்காக (Diagonal pattern) வடிவமைக்கப்பட்ட ஆடை ‘ஜீன்ஸ்’ என்று அழைக்கப்பட்டது. ஜெனோவா துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்பட்டதே இந்த ஆடைக்கு “ஜீன்ஸ்” என்ற பெயர் வர காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இது நவீன டெனிமிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருந்திருக்கலாம். ஆனால், அது முற்றிலும் பருத்தியிலிருந்து தயாரிக்கப்பட்ட குறுக்கு விட்ட (diagonal) வடிவத்திலான இழைகளால் பிணைக்கப்பட்டது. ஜீன்ஸ் என்ற சொல் ஜெனோவா துறைமுகத்தில் இருந்து வந்ததைப் போல, டெனிம் என்ற சொல் ‘செர்ஜ் டி நைம்ஸ்’ என்பதிலிருந்து வந்தது. இது பிரான்சின் நைம்ஸில் தயாரிக்கப்பட்ட மற்றொரு குறுக்காக வடிவமைக்கப்பட்ட ஆடை என்று பொருள்

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜீன்ஸ் அதிகளவில் பருத்தியில் இருந்து தயாரிக்கப்பட்டது. பின் தொழில்துறைப் புரட்சியின் போது, ​​லங்காஷயரின் ஆலைகள் ஜீன்ஸ் துணியின் மறுபிரவேசத்தையும் மற்றொரு வகையையும் அறிமுகப்படுத்தியது. அவற்றில் பெரும்பாலானவை இண்டிகோ நீலத்தில் சாயம் பூசப்பட்டன.

தொழில்துறைப் புரட்சி, இந்தியாவுடன் ஆழமானத் தொடர்பைக் கொண்டிருந்தது. சாயமிடுதல், பருத்தி ஆடைத் துறை ஆகியவற்றில் ஆழமான அறிவு, இந்திய கைவினைஞர்களிடம் இருந்து பெறப்பட்டது.

எல்லோராலும் விரும்பும் இந்த ஆடை, கடினமான வேலை செய்பவர்கள் உடுத்தும் ஆடையாக இருந்து வந்துள்ளது.  இது அனைவருக்குமான உடையாக அமெரிக்காவில் தான் உருவெடுத்தது. 1873-ம் ஆண்டு தொழிலதிபரான டேவிஸ் மற்றும் லெவிஸ் இணைந்து ஆடையில் சில மாறுதல்களை சேர்ந்து தொழிலாளர் வர்க்கம் பயன்படுத்தக் கூடிய முழுமையான ஆடையாக அறிமுகப் படுத்தினர். டேவிஸ் மற்றும் லெவிஸ் இணைந்து அதற்கானக் காப்புரிமைகளைப் பெற்றனர். பின் இருவரும் இணைந்து சான் ப்ரன்சிஸ்கோவில் உற்பத்தி மற்றும் விற்பனைக் கடைகளை துவங்கினர்.

அடுத்த பத்தாண்டுகளில் ஜீன்ஸை, ‘நாகரிக’ மற்றும் உயர்குடி மக்கள் பயன்படுத்தத் தொடங்கினர். பன்னிரெண்டாம் நுற்றாண்டுக்கு பின்னால் டெனிம் ஒரு எதிர்மறையான பயணத்தைத் தொடக்கியது. அமெரிக்க இளைஞர்களுக்குக் கவர்ச்சி, கிளர்ச்சியின் காற்று, புரட்சி ஆகியவற்றுக்கான குறிப்பை உடையில் அளித்தது. டெனிம் கலாச்சாரம் விரைவில் உலக அளவில் பெருவரவேற்பு பெற்றது. மேற்கத்தியக் கலாச்சாரத்தால் இந்தியாவிலும் இந்த அலை இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.

தொழிலாளர்கள் முதல் நவ நாகரீகம் வரை

தொழிலார்கள் பயன்படுத்தும் நீல நிற ஜீன்ஸ் காலப்போக்கில் நவ நாகரிக ஆடையாக மாறியது. ஆனாலும், அதன் தொடக்கம் என்னவோ அமெரிக்க தொழிலாளர்களிடம் இருந்துதான். தற்போது, ஜீன்ஸ் நாம் தினசரி பயன்பாட்டில் தவிர்க்க முடியாத ஆடையை மாறியுள்ளது. இதற்குச் சான்றாக, சமீபத்தில் கொரோனா காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் நடைப் பயணமாக சென்ற பலரும் ஜீன்ஸ் உடுத்தி இருந்தனர் என்கின்றது ஒரு ஆய்வு.

எப்படியோ ஜீன்ஸ் எல்லோருக்குமான ஆடையாக மாறியது. இப்படி உலகளாவிய சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது ஜீன்ஸ். கொரோனா பெரும்தொற்றுக்கு முன்னர் உலகிலேயே அதிகமான உற்பத்தி மற்றும் விற்பனை நடைபெறுவது இந்தியாவில்தான். இங்கு உற்பத்தி பெருகுவதற்கு, மலிவான விலையில் கிடைக்கும் பருத்தி, குறைவான தொழிலாளர் கூலி, நீர்வளம் என அனைத்தும் காரணமாகும்.

ஜீன்ஸ் இன்று பெருநகர சாலைகளை ஆக்கிரமிப்பதற்குப் பின்னால், தொழிலாளர் சுரண்டல், குறைவான ஊதியம் ஆகியவை இருப்பது பெரும்பாலானோரின் கண்களுக்குப் புலப்படுவது இல்லை. அதையெல்லாம் கடந்த ஜீன்ஸ் உற்பத்தியில் உண்டாகும் கழிவுகள் சுற்றுச் சுழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்க ஆகும் செலவை விட அதிலிருந்து வெளிபடும் கழிவுகள்தான் நம்மை மேலும் அச்சுறுத்துகின்றன.

இந்தியாவில் அதன் தாக்கம்

வேதிப் பொருட்கள் மற்றும் அதிக நீர் எடுக்கும் தன்மை கொண்ட பருத்தி சாகுபடி ஆகியவை டெனிம் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில்தான் பருத்தி சாகுபடி மிகப்பெரிய பகுதியில் நடக்கிறது. ஆனால், இங்கு உற்பத்தியாகும் பருத்தி வேறு எங்கும் இருப்பதை விட, கிலோ இழைக்கு அதிக தண்ணீரை எடுத்துக் கொள்ளும் தன்மையுடன் இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

டெனிம் உற்பத்தியின் போது, செயற்கை இண்டிகோ மற்றும் சல்பர் சாயங்கள் பயன்படுத்தப் படுகின்றன. இதனால் உண்டாகும் நச்சுக் கழிவுகள் நீர் நிலைகளில் வெளியேற்றப் படுகின்றன. டெனிம் உற்பத்தியும் மற்ற பருத்தி துணிகளை விட அதிக சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளாகிறது.

ஒரு ஜோடி ஜீன்ஸ் தயாரிக்க நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 11,000 லிட்டர் தண்ணீர் செலவு செய்யபடுகிறது. இது ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் தினசரி குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது. இது ஒரு பருத்தி சட்டை  தயாரிக்கப் பயன்படும் நீரை போன்று நான்கு மடங்கு அதிகம். மேலும், சுற்றுச்சூழல் விதிமுறைகளை அமல்படுத்தாத நிலையில், உற்பத்தி மையங்களுக்கு அருகில் வாழும் மக்கள் உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் மாசுபாடுகள் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

படிக்க :
♦ பிராண்டட் ஆடைகள் – பாதையோர ஆடைகள் : இலாப நட்டம் யாருக்கு ?

♦ ஜீன்ஸ் பயங்கரவாதம் – தினமணியின் திருக்கோவில் லூலாயி !

உற்பத்திச் சங்கிலியுடன் இணைந்த, ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலாளர்கள், குறைந்த ஊதியம், நீண்ட வேலை நேரம், சுரண்டல் மற்றும் கடுமையான நோய் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.  இப்படியான இன்னல்களுக்கு இடையே உற்பத்தி செய்யப்படும் ஜீன்ஸ்-ஐ ஆயத்த ஆடை நிறுவனங்களில் தையல் செய்யும் ஆடைத் தொழிலாளி பெரும்பாலும் ஒரு ஏழை இளம் பெண்ணாகவே இருக்கும்.

நாம் தேர்ந்தெடுக்கும் ஆடை அணிவதற்கான நமது சுதந்திரத்தை வலியுறுத்தும், இவ்வேளையில் நம்முடைய ஆடைகளைத் தயாரிப்பவர்களையும் நினைவில் கொள்வோம். ஆடை அவரவர் விருப்பம்.. அவரவர் சுதந்திரம் ! அது எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அதன் உற்பத்தியின் பின்னிருக்கும் மக்களின் வாழ்வும் இந்த உலகின் சுற்றுச் சூழலும் முக்கியம் !


சிந்துஜா
மூலக் கட்டுரை: நீதா தேஷ்பாண்டே
நன்றி : TheWire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க