வந்துவிட்டது, தொழிலாளி வர்க்கத்தின் இணையக் குரல்!

அன்பார்ந்த தொழிலாளத் தோழர்களே,

மாபெரும் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் அவர்களது  151-வது பிறந்தநாளில் (22, ஏப்ரல் 2021) தொழிலாளி வர்க்கத்தின் இணையக் குரலாக “புதிய தொழிலாளி” என்கிற  இணையப் பக்கத்தை அறிமுகம் செய்து, துவக்கி வைப்பதில் உற்சாகம் அடைகிறோம்.

செப்.2014 முதல் 2019 வரை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தனிச் சுற்று இதழாக வெளிவந்த “புதிய தொழிலாளி” மாத இதழ் பல்வேறு காரணங்களால் நின்றுபோனது. பிப்-மார்ச் 2020-ல் கலைப்புவாதிகளால் அமைப்பு சீர்குலைக்கபட்ட காரணத்தினாலும், கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு இன்று வரை அமலில் இருக்கும் பலகட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளாலும் இதழை அச்சிட்டு, தொழிலாளர்களிடம் கொண்டு செல்வது சாத்தியம் இல்லாமல்போனது.

காவி – கார்ப்பரேட் பாசிசம் தொழிலாளி வர்க்கத்தையும், ஏனைய உழைக்கும் மக்களையும் கார்ப்பரேட் இலாபவெறிக்குப் பலியிட்டு வருகின்ற சூழலில் “புதிய தொழிலாளி” தனது போர்க்குரலை மீண்டும் ஒலிக்கத் துவங்கியுள்ளது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சீர்குலைவுவாதிகளிடமிருந்து பாதுகாக்க மாநில அளவில் ஒருங்கிணைப்புக் குழு கட்டப்பட்டிருப்பதை 16.4.2021 தேதியிட்ட பத்திரிகை செய்தி மூலமாக அறிவித்திருந்தோம். பு.ஜ.தொ.மு-வின் பொதுச் செயலாளராக இருந்த சுப.தங்கராசுவின் பாட்டாளி வர்க்க விரோதப் போக்குகளால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு செப்.2020-ல் நீக்கப்பட்டார். அவரை கண்காணிக்கத் தவறியதற்காக அன்றைய ஒட்டுமொத்த மாநிலக் குழுவும் நீக்கப்பட்டு, அடுத்து வருகின்ற 4 ஆண்டுகளுக்கு பு.ஜ.தொ.மு-வின் எந்த மட்டத்திலும் பொறுப்புக்கு வர தடை விதிக்கப்பட்டது.

இந்த பின்னணியில், புதிய மாநில நிர்வாகக் குழுவை தேர்வு செய்யும் மாநில மாநாட்டை நடத்தப் பொறுபளிக்கப்பட்ட 3 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழுவில் இருந்த 2 பேர், திட்டமிட்ட வகையில் மாநிலக் குழுவை தமது தரப்பினர் கைப்பற்றும் வகையில் பல்வேறு தகிடுதத்தங்களை செய்தனர். தேர்தல் குழுவின் பெரும்பான்மை என்கிற பெயரில் எந்த மரபு மீறலையும் செய்யத் துணிந்தனர்.

இனியும் இதை அனுமதிக்கக் கூடாது என்று களமிறங்கிய மாவட்டக் குழுக்கள், முன்னணியாளர்கள் ஆகியோரைக் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு உருவாக்கப்பட்டது. புரட்சிகர தொழிற்சங்கமான பு.ஜ.தொ.மு-வை சீர்குலைவுவாதிகளிடமிருந்து பாதுகாத்து, குறிப்பிட்ட காலத்துக்குள் புதிய மாநிலத் தலைமை ஒன்றை உருவாக்குவதே ஒருங்கிணைப்புக்குழுவின் முதன்மையான பணி. அதனை மேற்கொள்ளவும், தொழிலாளி வர்க்கத்தை வர்க்க உணர்வூட்டி அமைப்பாக்கவும் இந்த இணையக் குரல் முன்னணி பாத்திரமாற்றும் என நம்புகிறோம்.

புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
தமிழ்நாடு.
செல்பேசி : 80563 86294
இணைய தளம் : புதிய தொழிலாளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க