ண்மையில் ஒரு போலீஸ் அதிகாரி பட்டப் பகலில் எல்லோரும் பார்த்திருக்க நடுத்தெருவில் வைத்து ஒருவர் மீது ஏறி மிதித்து தாக்குதல் நடத்தினார். அதற்காக, இலங்கை போலீசாரை மிகவும் வன்மையாகக் கண்டித்து பல எதிர்ப்புகள் கிளம்பிக் கொண்டிருக்கும் அதே வேளையில், அந்த சூடு ஆறும் முன்பே கொழும்பு, மருதானை போலீசாரால் மற்றுமொருவர் குரூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.

கடந்த 7-ஆம் தேதி நடைபெற்ற சுகாதார சேவையின் ஆர்ப்பாட்ட நிகழ்வை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த சுயாதீன ஊடகவியலாளரான மலிக அபேகோன் இவ்வாறு போலீசாரால் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தொழிற்சங்க சேவையாளர்களும், சட்டத்தரணியும்  (வழக்கறிஞர்) மலிகவை சந்திக்க மருதானை போலீசுக்கு சென்ற போதிலும் அவர்களுக்கு அவரை சந்திக்க அனுமதி வழங்கப்படவில்லை.

படிக்க :
♦ இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !

♦ இராணுவமயமாக்கலை இலக்காகக் கொண்ட இலங்கை நிதியறிக்கை ! || புஜமாலெ கட்சி

பின்னர் சட்டத்தரணியால் எழுத்து மூலமான விண்ணப்பம் விடுக்கப்பட்டு வெகு நேரத்திற்குப் பின்னரே அவரைச் சந்திக்க முடிந்திருக்கிறது. அவரைக் கொண்டு செல்லும் போது ஜீப்பினுள் வைத்தும், காவலரணில் வைத்தும், போலீஸ் நிலைய அதிபரின் அறைக்குள் வைத்தும் தொடர்ச்சியாக அவர் மீது பல தடவைகள் போலீசால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் (Frontline Socialist Party) செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்திருக்கிறார்.

போலீஸ் தடுத்து வைத்திருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள மலிக அபேகோனை கடந்த எட்டாம் தேதி மாளிகாகந்த நீதிமன்றத்தில் விசாரணைக்காக கொண்டு வந்த போலீஸ், அங்கு போலி தகவல்களை உள்ளடக்கிய மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்திருந்தது. அவ்வேளையிலும் உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்த மலிக நீதிமன்ற வளாகத்தில் விழுந்து விட்டார். அதன் பிறகே அவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு வழக்கு விசாரணை மீண்டும் 12-ஆம் தேதிக்கு ஒத்திப் போடப்பட்டது.

“ராஜபக்சே அரசாங்கமானது எப்போதும் கேமராவுக்கும், பேனாவிற்கும், இணையத்துக்கும்  பயப்படும் அரசாங்கம். காரணம், 2015-ஆம் ஆண்டுக்கு முன்னர் நடந்த அனைத்து விடயங்களும் இப்போதும் எமக்கு நினைவிருக்கிறது. அமைதியான ஆர்ப்பாட்டமொன்றைத் தடுத்து நிறுத்த நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொள்வது அக்காலத்தில் அதற்கு மிகவும் இலகுவானக் காரியமாக இருந்தது.

அவ்வாறே அமைதியான ஆர்ப்பாட்ட நிகழ்வுகளின்  போது, அது செய்து வந்த காரியமான குண்டர்களை அனுப்பி மிரட்டுவதை எம்மால் இன்னும் மறந்துவிட முடியாது. குறிப்பாக, சிவில் போலீஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி தம்மை எதிர்ப்பவர்களைப் புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பது ராஜபக்சே ஆட்சியில் மிகவும் பரவலாக நடைபெற்றது. அது வடக்கு – கிழக்கிலும் கூட நடைபெற்றது.

மலிக அபேகோன்

எமக்கு இந்த நிகழ்வை வைத்துப் பார்க்கும்போது, ஊடகவியலாளர் ஒருவர் கையில் கேமராவை வைத்திருப்பதுவும் கூட அவரை மிகவும் பயங்கரமான நிலைமைக்கு இட்டுச் செல்லும் நிலைமை மீண்டும் உருவாகியிருப்பதை, இது தெளிவுபடுத்துகிறது. இங்கு போலீசை மாத்திரம் குற்றம் சொல்ல முடியாது. இது, போலீசைப் போலவே இந்த ஆட்சியின் செயற்பாடுகளிலும் உள்ள வன்முறைகளையே எடுத்துக் காட்டுகிறது.

ஆட்சி முறையானது ஜனநாயக எதிர்ப்புடன் செயற்படுமானால் இவ்வாறு மோசமான விடயங்கள் நடைபெறுவதை தடுக்க முடியாது. ஆட்சியாளர்கள் ‘சட்டம் என்றால் தாம்தான்’ என்று கூறியவாறு மார்தட்டிக் கொண்டு செயற்படுகையில் இந்த மோசமான நிலைமை மேலும் மேலும் அதல பாதாளத்துக்குச் சென்றுவிடும்.

இது எமக்குத் தெளிவாகத் தென்படும் இடம் போலீஸ் நிலையம். ஆகவே இந்த போலீஸ் வன்முறை ஆனது, புரையோடிப் போயிருக்கும் புண்ணின் மேலே தென்படும் நாற்றமடிக்கும் சீழ் மாத்திரம்தான்” என்று ஒரு ஊடக செயற்பாட்டாளர் இந்த சம்பவம் தொடர்பாக குறிப்பிட்டிருக்கிறார்.

எவ்வாறாயினும், இலங்கை போலீஸ் எனும் போது உடனே நினைவுக்கு வருவது சித்திரவதைதான். இலங்கை போலீஸ் என்றால் சித்திரவதை என்று குறிப்பிட்டால் அது கூட பிழையில்லை. இதை கடந்த பல வருடங்களாகத் தொடர்ச்சியாகக் கண்டு வருகிறோம். குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை சித்திரவதைக்கு உட்படுத்தாமல் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க எத்தனையோ வழிமுறைகள் உள்ள போதிலும் அவற்றைப் பொருட்படுத்தாத நிலைமைதான் இப்போது வரைக்கும் இலங்கை போலீசிடம் காணப்படுகிறது.

அடுத்ததாக, எந்தவொரு பயங்கரமான குற்றச் செயலையும் பகிரங்கமாக செய்பவர் ஒருவர் அரசியலுடனும், அரசியல்வாதிகளுடனும் சம்பந்தப் பட்டிருப்பாரேயானால் அவர் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளும் நிலைமை இலங்கைக்குள் காணப்படுகிறது. அவ்வாறே குறிப்பாக, பாதுகாப்புப் பிரிவு, சிறைச்சாலை, போலீஸ் நிலையம் போன்ற இடங்களில் நிகழ்ந்த பெரும்பாலான குற்றச் செயல்கள் தொடர்பாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

படிக்க :
♦ இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் உண்மையான நோக்கமும் மோடியின் வஞ்சகமும் !

♦ இலங்கை : முஸ்லீம்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கண்டிக்கும் பு. ஜ. மா. லெ கட்சி !

இவ்வாறான நிலைமையில் ‘சட்டத்தைக் காப்பதற்காக இருக்கிறோம்’ என்று தம்மைத்தாமே கூறிக் கொள்ளும் போலீசாரால், இவ்வாறு ஆட்கள் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுதல் என்பது ‘குற்றம் செய்தவருக்கு தண்டனை வழங்கப்படாதிருக்கும் கலாச்சாரம்’ எனும் மோசமான நிலைமையின் நீட்சியாகும்.

போலீசை மாத்திரம் சுட்டிக் காட்டி அவர்கள் மீது குற்றம் சாட்டி நிறுத்திக் கொள்வது அல்லாமல், நாட்டை ஆள்பவர்களால் மேற்கொள்ளப்படும் ‘ஜனநாயக எதிர்ப்பு’ செயற்பாட்டுக்கு எதிராக ஒன்றிணைந்த மக்களால், ஒருமித்தத் தளத்தில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான செயற்பாடுகளால் மாத்திரமே இந்த மோசமான நிலைமையை மாற்ற முடியும்.

தமிழில் :  எம். ரிஷான் ஷெரீப்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க