உலகிலேயே ஒரே நாள் அதிக எண்ணிக்கையாக 3,14,835 பேர்களுக்கு கொரோணா தொற்று ஏற்பட்டிருக்கிறது. ஆக்சிஜன் இல்லை. வெண்டிலேட்டர் இல்லை. தடுப்பு மருந்து இல்லை. குவியும் பிணங்களை எரிக்க தலைநகரில் இடமில்லை. மருத்துவர்களும் சுகாதார ஊழியர்களும் கையறு நிலையில் தவிக்கின்றனர். நோயாளிகளை மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படும் மேலும் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
“தற்போது படுக்கைகளும் இல்லை ஆக்ஸிஜனும் இல்லை மற்றது அனைத்தும் அடுத்தது தான்” என்று அசோகா பல்கலைக்கழகத்தின் நோய் தொற்றியல் நிபுணரும் திரிவேதி ஸ்கூல் ஆஃப் பயோசயின்சஸின் இயக்குநருமான ஷாஹித் ஜமீல் கூருகிறார். ஒட்டுமொத்த கட்டமைப்பும் நொறுங்கி வருகிறது என்கிறார்.
படிக்க :
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்
♦ கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு
தலைநகர் மருத்துவமனைகளில் போதிய ஆக்சிஜன் இல்லை. வெளிமாநிலங்களில் இருந்த வந்த ஆக்சிஜனும் நிறுத்தப் பட்டிருக்கிறது. தலைநகருக்கான ஆக்சிஜனை யார் தடுத்தாலும் தூக்கிலிடுவோம் என்கிறது டெல்லி உயர்நீதிமன்றம். தலைநகருக்கே இதுதான் கதி.
உச்சநீதிமன்றமும் இதனை அவசர நிலையாக கருதுவதாக கூறி ஆக்சிஜன், தடுப்பு மருந்துக்கான தேசிய திட்டம் ஒன்றை தயாரிக்க நடுவண் அரசாங்கத்தை வலியுறுத்தியிருக்கிறது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை கடுமையாக தாக்கி வரும் நிலையிலும் ஏப்ரல் மாதம் வரையில் இந்திய அரசு வெளிநாடுகளுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் ஏற்றுமதி செய்திருக்கிறது. அதுவும் கொரோனாவுக்கு முந்தைய ஆண்டில் (2019-20) 4,500 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்த நிலையில், 2020-21ல் இரண்டு மடங்காக 9,300 மெட்ரிக் டன் ஏற்றுமதி செய்திருக்கிறது. இதெல்லாம் மாண்புமிகு உயர் – உச்ச நீதியரசர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை போலும்.
சீனாவையும், பாகிஸ்தானையும் எதிரிகள் என்று நரம்புகள் முறுக்கேறி இந்துத்துவவாதிகள் தேசபக்தி பாடம் எடுத்த நிலையில் இன்று இவ்விறு நாடுகளும் இந்தியாவிற்கு பக்க பலமாக இருப்போம் என்றும் விரைவில் இந்தியாவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கின்றன. #standwithindia என்று டுவிட்டரில் ட்ரெண்டாக்கியிருக்கிறார்கள் பாகிஸ்தான் மக்கள். ஆனால், எஜமானனான அமெரிக்காவோ தனக்கு பின்தான் தானம் என்று இந்தியாவிற்கு பெப்பே காட்டியிருக்கிறது.
வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதுபோல தடுப்பு மருந்திற்கான விலையை தடுப்பு மருந்து நிறுவனங்கள் தாருமாறாக ஏற்றி இளவு வீட்டிலும் இலாபம் பார்க்கின்றன. ஒரு டோஸ் கோவாக்சின் தடுப்பு மருந்தின் விலையாக மாநில அரசுகளுக்கு ரூ.600, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 என பாரத் பையோடெக் நிறுவனம் விலை நிர்ணயம் செய்திருக்கிறது. அதுவே, சீரம் நிறுவனம், கோவிசீல்டு மருந்திற்கு மாநில அரசுகளுக்கு ரூ.600, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.1200 என விலை நிர்ணயித்திருக்கிறது.
அரசு நிறுவனங்கள் இந்த மருந்துகளை தயாரிப்பதிலிருந்து முட்டுக் கட்டைப் போட்டிருக்கும் மோடி அரசாங்கம், கோரோனாவிற்கான மருந்து தயாரித்துக் கொள்ளையடிக்க இந்த இரு நிறுவனங்களையும் ஏகபோகமாக்கியிருக்கிறது.
முதல் அலையினால் பாதிக்கப்பட்ட உலக நாடுகள் பல பாடம் கற்றுக் கொண்டு இரண்டாம் அலையின்போது தத்தமது மக்களைப் பாதுகாத்துக் கொண்டிருக்க, இந்து இராஜ்ஜியத்தின் கனவு அரசரோ கங்கா மாதாவின் அருளினால் கும்பமேளாவில் கொரோனா வராது என்று கூறுகிறார். இது கொரோனாவை விட கொடிதாக இருக்கிறது. மேலும் உ.பி-யில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்றும், எதிராகப் பேசுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் இந்து ராஜ்ஜியத்தின் இளவல் ஆதித்யநாத் எச்சரித்திருக்கிறார். இதுதான் இன்றைய இந்து ராஜ்ஜியத்தின் எதார்த்த நிலைமை.











தமிழாக்கம் : ஆறுமுகம்
நன்றி : Aljazeera