ஒரு கடுமையான இரண்டாவது அலையின் மத்தியில், இந்தியா ஆகஸ்ட்-க்கு அப்பால் அதன் 45+ மக்கள் தொகைக்கு தடுப்பூசிப் போடுவதைத் தாமதப்படுத்தும் தடுப்பூசிப் பற்றாக்குறையை வெறித்துப் பார்க்கிறது. அரசாங்கம் தவறாக இருக்கவில்லை என்றும் மற்றும் அதன் திட்டமிடலில் மெத்தனமாக இருக்கவில்லை என்றும் நினைத்துக் கொண்டிருந்ததுதான் இப்போதைய நிலைமைக்குக் காரணம்.
மோசமான சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்கள் உள்ள ஒரு நாட்டில் ஜனவரி மற்றும் ஏப்ரல் நடுப்பகுதியில் 100 மில்லியனுக்கும் அதிகமான பெரியவர்களுக்கு தடுப்பூசிப் போடுவது சாதாரணமான சிறிய விசயம் அல்ல. ஆனால், இதுவரை இந்தியாவில் தடுப்பூசியின் வேகம் பெருந்தொற்றுநோயின் பேரழிவுகரமான இரண்டாவது அலையாக இருக்கக் கூடியதைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு விரைவாக இல்லை. இப்போது தடுப்பூசிகள் பற்றாக்குறையில் உள்ளன.
படிக்க :
♦ தடுப்பூசி – ஆக்சிஜன் தட்டுப்பாடு : பிணத்திலும் பணம் பார்க்கும் கார்ப்பரேட்கள் !
♦ போர்கால அடிப்படையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் பொதுத்துறை ஊழியர்கள் !
எண்ணிக்கைகள் கணக்கிடப்படவில்லை
தடுப்பூசிப் பற்றாக்குறைக் கணிக்கக் கூடியதாக இருந்தது. இந்தியாவில் உள்ள இரண்டு உற்பத்தியாளர்களான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் தடுப்பூசிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்தது. இவர்களிடமிருந்து நமது தேவைக்கான தடுப்பூசிகளை விரைவாகப் பெற முடியாது என்பது தெளிவாக தெரிகிறது: 45 வயதிற்கு மேற்பட்டவர்கள், அத்துடன் சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் தொழில் அவர்களை அதிக ஆபத்தில் ஆழ்த்துகிறது. இது சுமார் 400 மில்லியன் மக்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு தடுப்பூசிப் போடுவதற்கு 800 மில்லியன் டோஸ் தடுப்பூசி தேவைப்படும். மேலும் 10 சதவீதம் வீணாவதாகக் கணக்கில் கொண்டால் 80 மில்லியன் டோஸ் கூடுதலாகத் தேவைப்படும்.
சீரம் நிறுவனம், அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதர் பூனவாலா-வின் அறிக்கைகளின் அடிப்படையில், ஒரு மாதத்திற்கு சுமார் 60-65 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்கிறது. பாரத் பயோடெக் ஒரு மாதத்திற்கு சுமார் 5 மில்லியன் டோஸ்களை உற்பத்தி செய்யும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பெங்களூருவில் ஒரு புதிய உற்பத்தியை தொடங்கத் திட்டமிட்டுள்ளதையும் கணக்கிலெடுத்தால் அது கோடையில் இயங்கும் போது இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
400 மில்லியன் மக்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் 800 மில்லியன் டோஸ்கள் என்ற இலக்கை இந்தியாவில் தற்போதுள்ள உற்பத்தித் திறனைக் கொண்டுப் பூர்த்தி செய்ய முடியாது.
தற்போதைய உற்பத்தி மட்டங்களில் இது இரு உற்பத்தியாளர்களிம் இருந்தும் ஒரு மாதத்திற்கு 65-70 மில்லியன் டோஸ்களைப் பெற முடியும். இந்த விகிதத்தில், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை, ஒரு சிறந்த மதிப்பீட்டின்படி சுமார் 350 மில்லியன் டோஸ்கள் அரசாங்கத்திற்கு கிடைக்கும். ஜனவரி முதல் ஏப்ரல் 1 வரை ஏற்கனவே நிர்வகிக்கப்பட்ட 80 மில்லியன் டோஸ்களை ஒருவர் சேர்த்தால், ஜனவரி முதல் ஜூலை வரை சுமார் 430 மில்லியன் டோஸ்கள் கிடைக்கும்.
சீரம் நிறுவனம் அதன் உற்பத்தியை மே மாதத்திற்குள் 100 மில்லியன் டோஸ்களாக அதிகரிக்க முடியும் என்று நாங்கள் கருதினால் (இது சில காலமாக செய்ய முயற்சிக்கிறது), இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் மாதத்திற்குள் 500 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் வரை செல்லலாம். இது இன்னும் தேவைப்படும் 800 மில்லியனுக்கும் குறைவாக உள்ளது. 400 மில்லியன் மக்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்குள் 800 மில்லியன் டோஸ்கள் என்ற இலக்கை இந்தியாவில் தற்போதுள்ள உற்பத்தித் திறனைக் கொண்டு பூர்த்தி செய்ய முடியாது.
கடந்த ஆண்டு, மற்ற முக்கிய நாடுகள் தங்கள் உற்பத்தியாளர்களுக்கு உள்நாட்டுத் தேவைகளை (சீனா செய்தது போல்) உற்பத்தித் திறனை விரிவுபடுத்த உதவியிருந்தாலும் அல்லது தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நிதியளித்து, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல நாடுகள் செய்து கொண்டிருந்தது போல் முன்கூட்டியே வாங்கும் உறுதிமொழிகளை அளித்திருந்தாலும், இந்தியா தமது தேவைக்கான இலக்கை அடைந்திருக்கலாம். ஆனால், இந்தியா இவ்வாறெல்லாம் செய்யவில்லை.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) உள்நாட்டிலேயேக் கண்டுபிடித்தத் தடுப்பூசியை உற்பத்தி செய்ய அந்த அமைப்புடன் இணைந்துப் பணியாற்ற பாரத் பயோடெக் என்ற தனியார் நிறுவனத்தை அரசு ஊக்குவித்தது. ஆனால், இது நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதாக இருக்காது என்பது தெளிவாகிறது. சீரம் நிறுவனம் அஸ்ட்ரா ஜெனிகா மற்றும் கோவாக்ஸ் (உலக சுகாதார அமைப்பு மற்றும் பிற சர்வதேச அமைப்புகளால் அமைக்கப்பட்ட உலகளாவிய தடுப்பூசி விநியோக முறை) ஆகியவற்றுடன் விற்பனை ஒப்பந்தங்களை செய்து கொண்டது. மேலும் சீரம்-இன் உற்பத்தியில் குறைந்தபட்சம் பாதி இந்திய பயன்பாட்டிற்காக ஒதுக்கப்படும் என்று கருதப்பட்டது.
ஆனால், அரசாங்கமே அதற்கு எத்தனை தடுப்பூசிகள் தேவைப்படும் என்பதைக் குறித்து எந்த முயற்சியும் செய்யவில்லை. ஜனவரி முதல் வாரத்தில்தான் அரசாங்கம் 45 மில்லியன் டோஸ்களுக்கு கொள்முதல் ஆணையை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் மாதம் 100 மில்லியன் டோஸ்களுக்கு மற்றொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பொதுவில் கிடைக்காத, ஆனால் சீரம் இன்ஸ்டிடியூட்டின் அளவை விட கணிசமாக குறைவாக இருக்க வேண்டும் என்று பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ஆர்டர்கள் வழங்கப்பட்டன. தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ள 400 மில்லியன் மக்களுக்கு இந்த அளவு தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.
தேவையான தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் மூலோபாயமும் ஒருபோதும் முழுமையாக வெளியிடப்படவில்லை. பெருந்தொற்றின் இரண்டாவது அலை தொடங்குவதற்கு முன்பு, தேவையான தடுப்பூசிகளின் எண்ணிக்கை சிறியதாக இருந்தது. தேவை மிகவும் சிறியதாக இருக்கும் என்று கருதப்பட்டதால், தற்போதுள்ள திறனுடன் நிர்வகிக்க முடியும் என்று அரசாங்கம் கருதியிருக்கலாம். இப்போது, தேவை மிக அதிகமாகி, அரசாங்கம் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினாலும், தேவைப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவில்லை.
உத்தியோகபூர்வ அறிவிப்புகள்… இந்திய விதிவிலக்கான தன்மை, தவறே இல்லாத தன்மை, சுயசார்பு மற்றும் உலகளாவிய தலைமையின் உருவப்படத்தை உருவாக்க முதன்மையாக வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இருப்பினும், தடுப்பூசிகளுக்குப் பஞ்சமில்லை என்று அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது. “பற்றாக்குறைப் பற்றிய கேள்வி எங்கே எழுகிறது? நாங்கள் தொடர்ந்து கண்காணித்து விநியோகத்தை மேம்படுத்துகிறோம்” என்று மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் சமீபத்தில் ட்வீட் செய்தார். பல மாநிலங்களில் உள்ள தடுப்பூசி மையங்களின் புகைப்படங்கள் ஊடகங்களில் இருந்தன. அந்த புகைப்படங்களில் பொதுமக்களிடம் தங்களிடம் இருப்பு இல்லை என்ற தடுப்பூசி மையங்களின் நோட்டீஸ்கள் காட்டப்பட்டிருந்தன.
எந்தவொரு குறைபாடுகளையும் ஒப்புக்கொள்ள மறுப்பது தொற்றுநோய் பற்றிய அரசாங்கக் கொள்கையில் ஒரு நிலையான கருப்பொருளாக இருந்து வருகிறது. அமைச்சர்களிடமிருந்து அல்லது மூத்த அரசு ஊழியர்களிடமிருந்து வரும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் முதன்மையாக இந்தியாவானது விதிவிலக்கான, தவறே இல்லாத தன்மை, சுயசார்பு மற்றும் உலகளாவிய தலைமையின் உருவப்படத்தை உருவாக்க வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. (“இந்தியா மற்ற நாடுகளை விட சிறப்பாக செயல்பட்டுள்ளது,” “இந்தியா உலகின் மருந்தகம்,” “தடுப்பூசிகளுக்காக இந்தியாவுக்கு உலகம் நன்றி தெரிவிக்கிறது.”)
உண்மை சற்றே வேறுபட்டது. உலகளவில் கோவிட் நோயாளிகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, மற்ற நாடுகளை விட சிறப்பாக செயல்படவில்லை. இந்தியா உலகின் மருந்தகமாக இருக்கலாம், ஆனால் அது அடிப்படை மருந்துகளுக்கான மூலப் பொருட்களுக்கு சீனாவை தீவிரமாக நம்பியுள்ளது. தடுப்பூசி ஏற்றுமதிகளைப் பெற்ற நாடுகள் முதலில் நன்றியுள்ளவையாக இருந்தன, ஆனால் இப்போது அதிர்ப்த்தியாக உள்ளன. ஏனெனில் அரசாங்கம் ஏற்றுமதிகளை கட்டுப்படுத்தியுள்ளது. குறிப்பாக சீரம் நிறுவனம் கோவாக்ஸ் (COVAX)-க்கான அதன் ஒப்பந்த கடமைகளை நடைமுறைப் படுத்துவதிலிருந்தும், அத்துடன் தடுப்பூசி விநியோகங்களுக்காக சீரம் நிறுவனத்துடன் நேரடியாக ஒப்பந்தம் செய்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும் தடுக்கிறது.
இந்திய அரசாங்கம் இதில் எதிலும் செயலூக்கமானப் பங்கை வகிக்கவில்லை அல்லது கோவிட் தடுப்பூசிகளுக்கான சீரம் நிறுவனத்திற்கு நிதி அளிக்கவில்லை.
சீரம் இன்ஸ்டியூட்டின் கோவிஷீல்ட் தடுப்பூசியை ‘மேட் இன் இந்தியா’ தடுப்பூசி என்று விவரிப்பதுக் கூட தொழில்நுட்ப ரீதியாக சரியானது என்றாலும், முழு உண்மையையும் வெளிப்படுத்தவில்லை. இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய் தடுப்பூசிகள் பற்றிய ஆராய்ச்சிக்கு நிதியளிக்கும் ஒரு சர்வதேசக் குழுவான தொற்றுநோய் தயார் நிலைக்கானக் கூட்டணியான சி.இ.பி.ஐ-யின் ஆரம்ப நிதியுடன் உருவாக்கப்பட்ட ஒரு தடுப்பூசியாகும். அஸ்ட்ரா ஜெனிகா, ஆங்கிலோ-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனம், ஆக்ஸ்போர்டு குழுவுடன் உலகளவில் தடுப்பூசியை உற்பத்தி செய்து விநியோகிக்க ஒரு ஒப்பந்தத்தில் நுழைந்தது.
இதையொட்டி அஸ்ட்ரா ஜெனிகா இங்கிலாந்து மற்றும் அமெரிக்க அரசாங்கங்களிடம் இருந்து உறுதியான விநியோகங்களுக்கு ஈடாக தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கும் சோதிக்கவும் உதவுவதற்கு நிதியைப் பெற்றது. அஸ்ட்ரா ஜெனிகா ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகளை தயாரிக்க சி.ஓ.வி.ஏ.எக்ஸ் இருந்து நிதி பெற்றது. அஸ்ட்ரா ஜெனிகா இதையொட்டி ஏழை மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசியின் நூறு கோடி டோஸ்களை உற்பத்தி செய்து விநியோகிக்க சீரம் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியது. அவற்றில், 400 மில்லியன் டோஸ்கள் 2021-இல் வழங்கப்பட இருந்தன. சீரம் நிறுவனம் கேட்ஸ் ஃபவுண்டேஷன் மற்றும் ஒரு சர்வதேச தடுப்பூசி கூட்டணியான கவியிடமிருந்து 300 மில்லியன் டாலர்களைப் பெற்றது. இது அதன் கோவாக்ஸ் கடமைகளை பூர்த்தி செய்ய உற்பத்தி வசதிகளை அமைக்க உதவியது.
இந்திய அரசாங்கம் இதில் எதிலும் செயலூக்கமானப் பங்கை வகிக்கவில்லை அல்லது கோவிட் தடுப்பூசிகளுக்கான சீரம் நிறுவனத்திற்கு நிதி அளிக்கவில்லை. அதன் ஒரே உதவி ஒழுங்குமுறை தடைகளை அகற்றுதல் மற்றும் சீரம் நிறுவனம் நாட்டில் விற்பனை மற்றும் விநியோகத்திற்கு உரிமம் பெறுவதற்கு முன்பு, 2020-இல் தடுப்பூசியை உற்பத்தி செய்து சேமிக்க அனுமதித்தது.
தடுப்பூசி மைத்ரி தரையில் இறங்குகிறது
தடுப்பூசி மைத்ரி பிரச்சாரம், அதன் கீழ் உலகெங்கிலும் உள்ள 85 நாடுகளுக்கு 64 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது உத்தியோகபூர்வ அறிக்கைகளில் (செய்தி ஊடகங்களில் மீண்டும் மீண்டும் வந்தது). தடுப்பூசி தேசியவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் கோவிட்-19ஐ எதிர்த்துப் போராடுவதில் உலகளாவிய தலைமையை வழங்குவதற்கும் ஒரு அரசாங்க முன்முயற்சியாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வெளிநாடுகளில் இந்த ஏற்றுமதிகளில் பெரும்பாலானவை சி.ஓ.வி.ஏ.எக்ஸ் மற்றும் அஸ்ட்ரா ஜெனிகாவுக்கு அதன் ஒப்பந்தத்தின் உறுதிப்பாடுகளின் ஒரு பகுதியாக சீரம் இன்ஸ்டிடியூட் விற்பனை செய்கின்றது. எந்தவொரு இந்திய நிறுவனமும் செய்யும் ஒவ்வொரு ஏற்றுமதிக்கும் அது கடன் பெறவேண்டுமானால், அரசாங்கம் இதற்கு க்ரெடிட் எடுத்துக் கொள்வது அர்த்தமற்றது.
மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை உண்மையில் நன்கொடையாக வழங்கிய உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்: 10.5 மில்லியன் டோஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன…
அதே நேரத்தில், மற்ற நாடுகளுக்கு தடுப்பூசிகளை உண்மையில் நன்கொடையாக வழங்கிய உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்: அண்டை நாடுகளுக்கும், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கும் 10.5 மில்லியன் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நன்கொடைகள், குறிப்பாக தெற்காசியா மற்றும் மியான்மரில், சீனாவுடன் செல்வாக்கிற்காக போட்டியிட வேண்டிய தேவையால் உந்தப்பட்டன என்று வாதிடலாம். ஆனால், இந்த நாடுகளில் உள்ள மக்கள் அவசரமாக தேவைப்படும் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர் என்ற உண்மையிலிருந்து இது திசைதிருப்பவில்லை.
எடுத்துக்காட்டாக, இது அமெரிக்காவிற்கு மாறாக உள்ளது. அங்கு அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியின் 20 மில்லியன் டோஸ்கள் வாங்கி வைத்திருக்கிறது. அது பயன்படுத்த வாய்ப்பில்லை. ஆனால், தேவைப்படும் நாடுகளுக்குக் கொடுக்கத் தயங்குகிறது. ஆனால், இந்தியாவின் தடுப்பூசி நன்கொடைகள் பாராட்டத்தக்கவை. சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக் ஆகியவற்றின் வர்த்தக விற்பனையுடன் அவர்களை கிளப் செய்து, அரசாங்கம் ஒரு முக்கிய உலகளாவிய தடுப்பூசி சப்ளையர் என்றத் தோற்றத்தை உருவாக்குகிறது.

இரண்டாவது அலையின் பாதிப்பு, உள்நாட்டு தடுப்பூசித் திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் உள்நாட்டில் பயன்படுத்தப்படுவதை விட அதிக தடுப்பூசி அளவுகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்பது தெரிய வந்தபோது பொதுமக்களிடம் ஏற்பட்ட அவநம்பிக்கை, ஏற்றுமதியை நிறுத்த அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தது. சீரம் நிறுவனம் வெளிநாடுகளுக்கான அதன் தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்த வேண்டியிருந்தது.
இந்த கோடைக்குள் கோவாக்ஸ்-க்கு 240 மில்லியன் டோஸ் தடுப்பூசி வழங்குவதற்கான அதன் வாக்குறுதிய நடைமுறைப்படுத்தவில்லை. அஸ்ட்ரா ஜெனிகாவுடனான ஒப்பந்தங்களையும் அது கைவிட்டது. இதன் மூலம் சீரம் நிறுவனம் அஸ்ட்ரா ஜெனிகா அதன் உலகளாவிய தடுப்பூசி வழங்கல் உறுதிப்பாடுகளில் சிலவற்றை நிறைவேற்ற உதவுவதாக இருந்ததை கைவிட்டுள்ளது. பொதுவாக, அரசாங்கம் எந்த தடையும் விதிக்கவில்லை என்று மறுத்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதியைத் தடுக்கிறது.
தடுப்பூசிப் பரிசுகளைப் பெற்று சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் வாங்க திட்டமிட்டிருந்த அண்டை நாடுகள், திடீரென்று தங்கள் தடுப்பூசி விநியோகம் வறண்டு இருப்பதைக் கண்டுள்ளன. உதாரணத்திற்கு நேபாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்திய அரசாங்கம் நேபாளத்திற்கு 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டை நன்கொடையாக வழங்கியது, நேபாள அரசாங்கம் சீரம் நிறுவனத்திடமிருந்து மேலும் 20 லட்சம் டோஸ்களை வாங்கியது. அது வாங்கிய அளவுகளில் (குறைந்தபட்சம் பகுதியளவு முன்கூட்டியே பணம் செலுத்தியதாகக் கூறப்படுகிறது) இந்தியா ஏற்றுமதியை நிறுத்துவதற்கு முன்பு சீரம் இன்ஸ்டிடியூட் 10 லட்சம் டோஸ்களை மட்டுமே வழங்கியது.
இது நேபாளம் தங்கள் முதல் டோஸைப் பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ்களை தாமதப்படுத்தவும், இளைய வயதினரை உள்ளடக்கும் வகையில் தடுப்பூசியை விரிவுபடுத்தும் அதன் திட்டங்களை நிறுத்தி வைக்கவும் வழிவகுத்தது. சீனா தனது தடுப்பூசித் திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்காக 5,00,000 டோஸ் சினோபார்ம் தடுப்பூசியை வாங்கிய நேபாளத்திற்குத் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதற்கானக் கதவைத் திறந்துள்ளது.
உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தில் இந்தியா ஒரு தலைவராக உருவெடுக்கும் என்று நம்பியிருந்தால், கொள்கையின் திடீர் மாற்றம் நாட்டின் நற்பெயரை உருவாக்க உதவியிருக்க வாய்ப்பில்லை…
ஏற்றுமதியை நிறுத்துவது, சி.ஓ.வி.ஏ.எக்ஸ் திட்டத்தின் கீழ் ஏழை நாடுகளுக்கு விநியோகத்தை நிறுத்தியுள்ளது. இதற்காக சீரம் நிறுவனம் முக்கிய சப்ளையராக உள்ளது. உலகளாவிய தடுப்பூசி விநியோகத்தில் இந்தியா ஒரு தலைவராக உருவெடுக்கும் என்று நம்பியிருந்தால், கொள்கையின் திடீர் மாற்றம், நம்பக் கூடிய தடுப்பூசிகளின் ஆதாரமாக நாட்டின் நற்பெயரை உருவாக்க உதவியிருக்க வாய்ப்பில்லை.
‘ஆத்மனீர்பார்’ல் இருந்து விலகிச் செல்கிறது
தடுப்பூசி பற்றாக்குறையின் யதார்த்தம் அரசாங்கத்தை அதன் ‘ஆத்மனீர்பார்’ அல்லது சுயசார்புக் கொள்கையில் இருந்து பின்வாங்க நிர்ப்பந்தித்துள்ளது.
முந்தைய தசாப்தங்களில் நடந்தது போல், ரஷ்யா இந்தியாவின் தடுப்பூசிப் பிரச்சாரத்திற்கு ஒரு உயிர்நாடியை வழங்கக் கூடும். கடந்த ஆகஸ்டு 2020-ல், ரஷ்ய அதிகாரிகள் அதன் ஸ்புட்னிக் V தடுப்பூசியை நாட்டில் விற்பது பற்றியும், உலகளாவிய ஏற்றுமதிக்கான தளமாக இந்திய நிறுவனங்களைப் பயன்படுத்துவது பற்றியும் இந்தியாவை அணுகினர்.
செப்டம்பர் 2020-ல், ஸ்புட்னிக் V-ல் முதலீடு செய்துள்ள ரஷ்யாவின் இறையாண்மை செல்வ நிதியம் நிறுவனமும் (RDIF) டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களும் இந்தியாவில் ஸ்புட்னிக் V-ஐ சந்தைப்படுத்த ஒப்பந்தம் போட்டன. ஸ்புட்னிக் V தடுப்பூசி அவசரப் பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் டாக்டர் ரெட்டி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரலுக்கு தேவையான இணைப்பு மருத்துவச் சோதனையை ஏற்பாடு செய்தவுடன், இந்தியாவில் 100 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் V தடுப்பூசியை விற்க ஒரு ஒப்பந்தத்தை அறிவித்தது.
இந்த சோதனைகளின் முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால், ஏப்ரல் 13 அன்று தடுப்பூசிக்கு அவசர கால ஒப்புதல் வழங்கப்பட்டது. தடுப்பூசி விநியோகத்தை 100 மில்லியன் டோஸ்கள் அதிகரித்தது. அரசாங்கம் தடுப்பூசியை வாங்கும் விலையில் உடன்படமுடியும்.
உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு இந்தியா இப்போது அந்த வரவேற்பு கம்பளத்தை விரித்துள்ளது. ஆனால், இது தடுப்பூசி விநியோகத்தில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தெளிவாக இல்லை…
ஸ்புட்னிக் V வருகையானது, ஆத்மானீர்பார் கொள்கையில் இருந்து விலகிச் செல்வதைக் குறிக்கிறது என்றால், அதே நாளில், வெளிநாட்டு தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை சந்தைப்படுத்த அனுமதிக்கப்படுவதற்கு முன்பு இந்தியாவில் இணைப்பு சோதனைகளை நடத்த வேண்டும் என்ற விதியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் ரத்து செய்தபோது, இரண்டாவது, இன்னும் திடீர் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சோதனைகளுக்கான தேவை நீக்கப்படவில்லை என்றாலும், இந்தியாவில் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்ட பிறகு இதைச் செய்ய முடியும் (இது உண்மையில் எவ்வாறு அடையப்பட வேண்டும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும்).
அரசாங்க தடுப்பூசி கொள்கையில் ஒரு முக்கிய நபரான வி.கே.பால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ஜப்பான் அல்லது உலக சுகாதார அமைப்பில் உள்ள கட்டுப்பாட்டாளர்கள் அவசர காலப் பயன்பாட்டிற்கான தடுப்பூசியை அகற்றியிருந்தால், அது இந்தியாவில் பயன்படுத்தப்படலாம் என்று செய்தி அறிக்கைகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஃபைசர், மாடர்னா மற்றும் ஜான்சன்&ஜான்சன் போன்ற தடுப்பூசி உற்பத்தியாளர்களை விரைவில் இந்தியாவுக்கு வர தயாராக இருக்கும்படி நாங்கள் நம்புகிறோம், அழைக்கிறோம் என்றார் அவர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஃபைசர் தனது தடுப்பூசியை இந்தியாவில் சந்தைப்படுத்த அங்கீகாரம் கோரி விண்ணப்பித்த போது அரசாங்கத்தின் கொள்கைக்கு மாறாக இது உள்ளது. அந்த நேரத்தில் மருந்துகள் கட்டுப்பாட்டாளர் ஜெனரல், ஃபைசர் ஒப்புதலுக்குமுன் இந்தியாவில் சோதனைகளை செய்ய வேண்டும் என்று கூறினார், உற்பத்தியாளர் செய்ய தயாராக இல்லை.
உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு இந்தியா இப்போது அந்த வரவேற்பு கம்பளத்தை விரித்துள்ளது. ஆனால், இது நாட்டில் தடுப்பூசி விநியோகத்தில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தெளிவாக இல்லை. உலகளாவிய தடுப்பூசி வழங்கல்கள் மிகவும் இறுக்கமாக உள்ளன. மேலும், காத்திருப்புப் பட்டியல் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் இங்கிலாந்தும் அஸ்ட்ரா ஜெனிகா தடுப்பூசியை வழங்குவது குறித்து சண்டையிட்டு வருகின்றன.
இந்தியாவிற்கு சமீபகாலத்தில் கிடைக்கும் ஒரே பொருட்கள் ஸ்புட்னிக் V மட்டுமே. அரசாங்கம் அதை வாங்கக் கூடிய விலையில் பெற முடியும் என்றால், தடுப்பூசி வாங்குவதற்கான நிதி ஒரு பிரச்சினை அல்ல என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், அது நிச்சயம் ஒரு பிரச்சினையாக இருக்கும். சீரம் நிறுவனம் மீது இந்திய அரசாங்கம் செல்வாக்கு செலுத்துவது போல ரஷ்ய அரசாங்கத்தின் மீது செல்வாக்கு செலுத்த இயலாது என ஒரு உற்பத்தியாளர் கூறினார்.
படிக்க :
♦ ‘ஃபோர்பஸ்’ : கொரோனா பெருந்தொற்றில் உயரும் முதலாளிகளின் சொத்து மதிப்பு
♦ ஸ்புட்னிக் V தடுப்பூசி : கொரோனா எதிர்ப்புப் போரில் முக்கிய கண்டுபிடிப்பு
முடிவுகள்
இரண்டாவது அலை ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அரசாங்கம் திட்டமிட்டு, நோய்த் தொற்றுகளின் அதிகரிப்பைக் குறைப்பதற்கான வழிகளை சிந்தித்திருந்தால், ஜனவரியில் தொடங்கித் தடுப்பூசிகளை வெளியேற்றுவதை அது கட்டுப்படுத்தியிருக்கும். வெளிநாடுகளில் இருந்து அல்லது பொதுத்துறை உட்பட தனியார்களையும் உற்பத்தியைத் தொடங்க ஊக்குவிப்பதன் மூலம் விநியோகங்களை அதிகரிக்கக் கொள்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்.
பின்குறிப்பு
இந்த அறிக்கையில் பாரத் பயோடெக் ஒரு மாதத்திற்கு 5 மில்லியன் டோஸ்கள் உற்பத்தி செய்த எண்ணிக்கை அப்போதைக்கு கிடைத்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் ஒரு குறைந்த மதிப்பீட்டாக இருந்தது. பாரத் பயோடெக் டாக்டர் கிருஷ்ணா எல்லா, கோடை இறுதிக்குள் மாதாந்திர திறனை 10 மில்லியனில் இருந்து 60 மில்லியன் டோஸ்கள் (ஆண்டுக்கு 700 மில்லியன் டோஸ்கள்) வரை உயர்த்துவது குறித்து பொதுவில் பேசியுள்ளார். இருப்பினும் இது தடுப்பூசி வழங்கல் மற்றும் தேவைக்கு இடையிலான இடைவெளியை இன்னும் நிரப்பவில்லை. (குறிப்பு: ஒரு மில்லியன் – பத்து லட்சம். ஒரு பில்லியன் – நூறு கோடி.)
கட்டுரையாளர் : தாமஸ் ஆபிரகாம்
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : The India Forum