கோவிட்டுக்கு பின்னால் உள்ள உளவியல் சிக்கல்
எப்படி மீள்வது ?

ங்கு நம் சமூகத்தில் கொரோனாவை இரண்டு விதமாக அணுகுகிறார்கள். நோய் தொற்று வரும் வரை கொரோனா என்ற ஒன்றே இல்லை என்பது போலவும், கொரோனா வந்து இறப்பவர்களை ஏளனம் செய்தும், கொரோனா நோயை வைத்து கேலி பேசியும், இது இலுமினாட்டி சதி பொய் புரட்டு என்று கண்ட கதைகளையும் படித்து விட்டு அலட்சியத்துடனே பொழுதைக் கழிப்பார்கள். ஒரு நாள் இவர்களின் அலட்சியத்தின் விளைவால் தொற்றை அடைந்த பிறகு, உலகமே இருண்டது போலவும் மரணம் நெருங்கிவிட்டதைப் போலவும் அழுது அரற்றுவார்கள்.

படிக்க :
♦ கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

♦ கோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

நான் கூறுகிறேன். கொரோனா பெருந்தொற்றை அதன் சரியான தன்மையோடு அணுகத் தொடங்கிவிட்டால் நம் மனம் சஞ்சலமடைவதை தவிர்க்கலாம். கொரோனா தொற்று என்பது எளிதில் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது என்பதை மனதார ஏற்க வேண்டும். கோவிட் நோயின் அறிகுறிகள் தோன்றினால் உடனே பரிசோதனை செய்து நோயைக் கண்டறிதல் வேண்டும்.

கோவிட் நோய் ஏற்பட்ட அனைவரும் மரணமடைவதில்லை என்பதையும் மனதில் பதிய வைக்க வேண்டும். கண்டறியப்படும் ஒவ்வொரு 100 கொரோனா நோயாளியிலும் 1.2 பேர் மட்டுமே மரணமடைகிறார்கள். எனவே, நோய் தொற்றும் அனைவரும் மரணமடைந்து விடுவோம் என்று எண்ணுவது தவறான எண்ணமாகும். இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு 100 நோய் தொற்றாளரிலும் 80 பேருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லாமலோ அல்லது மிகச்சாதாரண அறிகுறிகளுடன் அடுத்த நிலைக்குச் செல்லாமலே எந்த சிகிச்சையும் இன்றி நோய் குணமாகின்றது.

எத்தனை உருமாற்றமடைந்த கொரோனா வந்தாலும் இந்த 80:20 விகிதம் இன்னும் பெரிதாக மாறவில்லை. எனவே தொற்று அடையும் ஐந்தில் இரண்டு பேருக்கு சாதாரணமாக கொரோனா விடைபெற்று சென்றுவிடும். இவர்களுக்கு இலவசமாக கொரோனாவுக்கு நோய் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை தந்து சென்று விடுகிறது.

எனவே, கொரோனா ஏற்பட்டவர்கள் சந்தோசமாக இருங்கள். உங்களுக்கு தொற்றுக்கான எதிர்ப்பு சக்தி கிடைக்க இருக்கிறது. பதட்டமடையாதீர்கள். பதட்டமடைவதால் இதயம் அதிகமாக துடிக்கும். மூச்சு விடுவது அதிகமாகும். மூச்சு இரைக்கும். இது ஏதோ மூச்சுத் திணறல் நிலை ஏற்பட்டதைப் போல மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும். அச்சமின்றி எச்சரிக்கை உணர்வுகள் அறிகுறிகளைக் கவனித்து வாருங்கள் அது போதுமானது.

கொரோனா நோயில் உளவியிலில் இன்னுமொருப் பிரச்சனை “தனிமை”. முதலில் தொற்றை அடைந்தவர்கள் முன்கூட்டியே புரிந்துக் கொள்ள வேண்டியது, தொற்றை அடைந்த உங்களுக்கு அதைப் பிறருக்கு கடத்தி விடக் கூடாது என்பதில் பொறுப்புணர்வு இருக்கிறது. அதனால்தான் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்கிறீர்கள். தனிமைப்படுத்தப்படும் போது, பெரும்பாலும் தங்களது அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளுக்கும் தேவைகளுக்கும் மனைவியை தாயை நம்பியருக்கும் ஆண்கள்தான் அதிகம் மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள்.

காரணம் தங்களை அன்றாடம் கவனித்துக் கொண்ட அந்த கவனிப்பு இல்லாமல் போய் விடுகிறதல்லவா ? அதுதான் அங்கு மன வலிமையில் முதல் அடியாக விழுகிறது. எனவே, இன்றிலிருந்து அவரவர் வேலையை அவரவர் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். இது கொரோனா தனிமைக் காலத்தில் மனவலிமையுடன் இருக்க உதவும்.

அடுத்து நோய் குறித்த எச்சரிக்கை உணர்வு மட்டும் இருந்தால் போதும். அச்சமின்றி தனிமைக் காலத்தில் தங்களுக்கு விருப்பமான முறையில் காலத்தைக் கழிக்கலாம் விருப்பமான நாவல் / புத்தகங்களைப் படிக்கலாம். விருப்பமான திரைப்படங்களை ஓடிடி தளங்களில் பார்க்கலாம். முகநூலில் அதற்கு ரிவியூ எழுதலாம். விருப்பமான இசை அமைப்பாளரின் பாடல்களை கேட்கலாம். சமய நூல்கள் படிக்க விரும்புபவர்கள் அவற்றை படிக்கலாம்.

முகநூல்/ வாட்சப் செயலிக்கு வருவது மன அமைதியை சீர்குலைப்பதாக தோன்றினால் அந்த செயலிகளை தனிமை காலங்களில் டெலிட் செய்துவிடலாம். தயவு செய்து கூகுள் மூலம் கோவிட் நோய் குறித்த தகவல்களை தேவைக்கு மீறி படித்து மன அமைதி குலையும் நிலைக்குச் செல்ல வேண்டாம்.

வீட்டில் தனிமைப்படுத்திக்  கொள்ளும் போதும் உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவருடன் / செவிலியருடன் தொலைப்பேசியில் தொடர்பில் இருப்பது சிறந்தது. தினமும் ஒரு முறை பேசலாம். வீட்டில் உள்ள பிறரிடம் தேவையான இடைவெளியை பேணி பேசிக் கொண்டிருக்கலாம். மருத்துவமனையில் தனிமை படுத்திக் கொண்டிருந்தால் வீடியோ கால் செய்து உறவுகளுடன் பேசலாம்.

இவையனைத்துக்கும் மேல் மன உளைச்சல் / மன அமைதி குலைந்தது போலத் தோன்றினால் உடனே சைக்கயாட்ரிஸ்ட் (மனநல மருத்துவர்) சைக்காலஜிஸ்ட் (மனநல ஆலோசகர்) உதவியை நாடவேண்டும். தேவைப்பட்டால் கட்டாயம் மன அமைதி மருந்துகள் தேவைப்படலாம்.  தன்னை வருத்திக் கொள்ள வேண்டும் / தன் உயிருக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றினால் உடனே மனநல மருத்துவரை அழைத்துப் பேசிட வேண்டும்.

உடனே மருந்துகள் வழங்கினால் இந்த நிலையில் இருந்து சரியாக முடியும். மிகவும் தேவைப்பட்டால் இவர்களுடன் ஒரு உறவினரை போதுமான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் இருக்கவும் அனுமதி அளிக்கலாம்.

படிக்க :
♦ விவேக் மரணமும் கோவிட் தடுப்பூசியும் || ஷாஜஹான்

♦ கோவிட் – 19 தடுப்பு மருந்துகளின் அரசியல், பொருளாதாரம் || ஜயதி கோஷ் || கணியன்

கொரோனா சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்தவர்களை உறவினர்கள் சிறப்பான அன்பைப் பொழிந்து வரவேற்க வேண்டும். அவர்கள் மீது அருவருப்பு செய்து ஒதுக்கக் கூடாது. தனிமைக் காலத்தை முழுமையாக முடித்தவர்களிடம் இருந்து நோய் பரவாது எனவே, ஒதுக்குதல் அவசியமற்றது.

கொரோனா நோயாளிகளை உடலால் தான் தனிமைப்படுத்தி வைக்கிறோமே அன்றி, மனதால் அரவணைப்பவர்களாக நாம் இருக்க வேண்டும். மீண்டும் கூறுகிறேன், கொரோனா என்றாலே “மரணம்” என்று அர்த்தம் இல்லை. தயவு செய்து அஞ்சாதீர்கள். எச்சரிக்கை உணர்வு போதுமானது. அலட்சியம் ஆபத்தானது அச்சம் தேவையற்றது. மன நலம் முக்கியமானது.

நன்றி !

முகநூலில் : Dr.A.B.ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க