பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க அவதூறுகளையே அறிக்கையாக்கிய உண்மை கண்டறியும் குழு – அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் கண்டன மறுப்புரை !

கடந்த மார்ச் மாதம் சென்னை பல்கலைக் கழகத்தில் தொல்லியல் துறைத் தலைவராக இருக்கும் பேரா.சௌந்திரராஜன், தன்னிடம் மதிப்பெண் அறிந்துக்கொள்ள சென்ற மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் சகமாணவர்களைத் தாக்கியதகவும் மாணவர்கள் பல்கலைக் கழக நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தனர்.

மேலும் பேரா. சௌந்திரராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆறு நாட்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டமும் நடத்தினர். பேரா.சௌந்திரராஜனும் மாணவர்கள் தன்னைத் தாக்கியதாக நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்தார்.

படிக்க :
♦ பாலியல் குற்றம் : மைனர்குஞ்சு பாணியில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் !

♦ சென்னை பல்கலை : உரிமைக்காகப் போராடிய தொல்லியல் துறை மாணவர்களை கைது || புமாஇமு கண்டனம்

பேரா.சௌந்திரராஜன் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை துறைத் தலைவர்(பொறுப்பு) பதவியிலிருந்து நீக்கிவதற்காகவே பாலியல் குற்றச்சாட்டு நாடகம் நடப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டு வந்தது. இது குறித்து விசாரிப்பதற்காக பேரா.லட்சுமணன் தலைமையில் 5 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பேரா.சௌந்திரராஜனை சந்தித்தனர்.

உண்மை அறியும் குழு(உ.அ.கு) தனது அறிக்கையை கடந்த ஏப்ரல் 15, 2021 அன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் வெளியிட்டது. அவ்வறிக்கையில் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்துப் போராடிய மாணவர்கள் மீது ஆதாரங்களே இல்லாமல் பல பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தனர். அதேவேளையில் பேரா.சௌந்திரராஜனின் செயல்பாடுகளை நியாப்படுத்தியும் அவரை காப்பாற்றுவதையுமே நோக்கமாகக் கொண்டிருந்தது உ.அ.கு அறிக்கை.

அறிக்கையை வெளியிட்டுப் பேசிய பேரா.லட்சுமணன் மற்றும்  இருவர், பேரா.சௌந்திரராஜன் குற்றமற்றவர் என்ற சித்திரத்தை உருவாக்கவே முயற்சித்தனர். அறிக்கையில் உள்ள விசயங்களை ஒட்டி பத்திரிக்கையாளர்கள் பல கேள்விகளைக் கேட்டனர். மாணவர்கள் மீதான குற்றச்சாட்டிற்கான ஆதாரங்களையும் கேட்டனர்(அறிக்கையில் இல்லை). உ.அ.கு-வின் நடுநிலையற்ற அணுகுமுறையையும் பத்திரிக்கையாளர்கள் அம்பலப்படுத்தினர். ஆனால், மேடையிலிருந்த பேரா.லட்சுமணன் மற்றும்  இருவரும் எந்த கேள்விக்கும் நேரடியானப் பதிலை சொல்லவில்லை. (சில செய்தி ஊடகங்கள் தங்களின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்).

பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல்கலைக் கழகத்தின் அனுமதி இல்லாமல் பொதுவெளியில் பேசக் கூடாது என்று பல்கலைக் கழக நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளதால் தங்கள் மீது உ.அ.கு சுமத்தியுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுத்து பேச முடியாத நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆகையால், மாணவர்கள் சார்பாக சென்னை பல்கலைக் கழகத்தில் செயல்படும் மாணவர் அமைப்பாகிய அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தை சார்ந்த நாங்கள் உ.அ.கு-ன் அறிக்கை மீதான இந்த மறுப்புரையை வெளியிடுகிறோம்.

***

உ.அ.கு-வின் அறிக்கையையும் அதன் உள்நோக்கத்தையும் புரிந்துக்கொள்ள, இப்பிரச்சனையைத் தொடக்கத்திலிருந்து தெரிந்துக் கொள்வது உதவியாக இருக்குமென்பதால் அதனை சுருக்கமாகத் தருகிறோம்.

கொரோனா ஊரடங்கினால் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகள் மூடப்பட்டன. பல்கலைக் கழகத்தின் மெரினா விடுதியில் தங்கியிருந்த ஆய்வு மாணவர்களும் முதுநிலை மாணவர்களும் தங்களுடைய ஊருக்குச் சென்று விட்டனர். மாணவர்களிடம்  இருந்து ஊரடங்கு காலத்திற்கான(மார்ச்-நவம்பர் 2020) விடுதி கட்டணம், விடுதி ஊழியர்கள் மற்றும் மெஸ் ஊழியர்களுக்கான சம்பளம்(மெஸ் இயங்கவில்லை) சேர்த்து எட்டு மாதத்திற்கானக் கட்டணத்தைப் பல்கலைக் கழக நிர்வாகம் கட்டச் சொல்லியது.

முதல் கட்டமாக மார்ச் 2020 முதல் ஜூன் 2020 வரைக்குமான கட்டண விவரங்கள் விடுதி தகவல் பலகையில் ஜனவரி 2021-ல் ஒட்டப்பட்டது. இது குறித்து பல்கலைக் கழகப் பதிவாளரிடம் பேசுவதற்காக மாணவர்கள் பலமுறை முயன்றும் அவரை சந்திக்க முடியாமல் போனதால் கட்டணக் குறைப்புத் தொடர்பாக பதிவாளரின் பி.ஏ-விடம் எட்டு முறை கடிதம் அளித்தனர். நிர்வாகத்திடமிருந்து எவ்வித பதிலும் வராததால் விடுதிக் கட்டணக் கொள்ளைக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் பல்கலைக் கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக நிர்வாகம் விடுதிக் கட்டணத்தை குறைப்பதாக ஒப்புக் கொள்கிறது.

இதற்கிடையில் இப்போரட்டத்தில் ஈடுபட்ட தொல்லியல் துறை மாணவர்களின் பெற்றோர்களைத் தொடர்பு கொண்டுப் பேசிய அத்துறைத் தலைவர்(பொறுப்பு) பேரா.சௌந்திரராஜன், மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்துக் கொள்கிறார்கள், போராட்டத்தை முடிக்க சொல்லுங்கள், இல்லையெனில் டிஸ்மிஸ் செய்து விடுவோம் என மாணவர்களின் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

இதன் பிறகு, அகழாய்வு பணிக்காக மாணவர்கள் வேலூரில் ஒருமாதம் முகாமிட்டிருந்தனர். தொல்லியல் துறை மாணவர்களின் மூன்றாம் பருவத் தேர்வுக்கான முடிவுகள் அப்போது (12-02-2021) வெளியானது. இத்தேர்வு முடிவுகளை தொலைபேசி வாயிலாக அலுவலகப் பணியாளரை தொடர்புக் கொண்டு தெரிந்துக் கொள்ளும் படி மாணவர்களிடம் கூறியுள்ளனர். அலுவலகப் பணியாளரோ மதிப்பெண்களைக் கூறாமல் Grade-டை மட்டும் தெரிவித்துள்ளார். இத்தேர்வில் விடுதி கட்டணக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மற்றும் ஆதரித்த மாணவர்கள் 7 பேர் பெயிலாகி இருந்தனர். (கூடுதலாக ஒருவர் பெயிலாகி இருந்தார்; அவர் எந்த ஆதரவையும் தெரிவிக்கவில்லை.)

மற்ற மாணவர்களும் தங்களுடைய மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கருதியதினால் விடைத் தாள்களை மறுதிருத்தம் (revaluation) செய்ய வேண்டுமென்று கோரி பெயிலான 7 மாணவர்கள் மற்றும் உடன் பயிலும் 17 பேரும் சேர்ந்து மொத்தம் 24 மாணவர்களுடைய  கையொப்பமிட்ட கடிதத்தை 14-03-2021 அன்று பல்கலைகழக துணைவேந்தர், பதிவாளர், தொல்லியல் துறைத் தலைவர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோருக்கு கடிதம் மூலமாகவும் e-mail வழியாகவும் அனுப்பினர்.

அகழாய்வு பணியில் இருந்து பாதியிலேயே கிளம்பி பல்கலைக் கழகம் வந்ததும் மாணவர்கள் மதிப்பெண்களை அறிந்துக் கொள்ளத் தொல்லியல் துறைக்குச் சென்று விசாரித்தனர். மாணவர்கள் தபாலில் அனுப்பியிருந்த விடைத் தாள்கள் துறையில் இல்லை. Scan செய்து email-ல் அனுப்பியிருந்த விடைத் தாள் நகலை பென்சில்களால் திருத்தியிருக்கிறார்கள். இது பற்றி துறைத் தலைவரிடம் மாணவர்கள் விசாரித்துள்ளனர்.

பெயிலான ஒரு மாணவரிடம் (போராட்டத்தில் முன்நின்றவர்) “நீ தபாலில் அனுப்பிய விடைத் தாளும் email-ல் அனுப்பிய விடைத்தாளும் வேறாக உள்ளது. நீ டீ பார் செய்யப்பட்டுள்ளாய். அதனால்தான் உனக்கு அரியர் போடப்பட்டுள்ளது” என்று பேரா.சௌந்திரராஜன் கூறியுள்ளார். இரண்டு தேர்வுத் தாளையும் காட்டுங்கள் என்று மாணவர் கேட்டதற்குத் துறைத் தலைவர் முடியாது என்று மறுத்து விடுகிறார். விடைத் தாளை திருத்திய ஆசிரியரின் கையொப்பம் விடைத் தாளில் இல்லை, விடைத் தாள் பென்சிலால் திருத்தப்பட்டுள்ளது.

பதில்களுக்கான மதிப்பெண்கள் திருத்தப் பட்டுள்ளது. இது பற்றி அம்மாணவர் கேட்டதற்கு “அதெல்லாம் நீ பேசக் கூடாது” என்று மாணவரை மிரட்டியுள்ளார் பொறுப்புத் துறை தலைவர் பேரா.சௌந்திரராஜன்.

பேரா.சௌந்திரராஜன் திட்டமிட்டு ஃபெயில் செய்திருக்கிறார் என்பதை மாணவர்கள் உணரவே வேறு பேராசிரியரை வைத்து விடைத் தாள்களை மறுதிருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதன் விளைவாக முன்னாள் துறைத் தலைவரை கொண்டு விடைத் தாள்களை மறுதிருத்தம் செய்ய பல்கலைக் கழக நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. விடைத்தாள் மறுதிருத்தலில் மாணவர்கள் அனைவருமே அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைகின்றனர். (உ.தா. 20 எடுத்த மாணவன் மறுதிருத்தலுக்குப் பிறகு 48 மதிப்பெண் எடுக்கிறார்.)

இதன் பிறகு அகழாய்வு பணியை முழுவதும் முடித்து வந்த மாணவர்கள் தங்களுடைய Internal/external மதிப்பெண்களை துறைத் தலைவர் பேரா.சௌந்திரராஜனிடம் கேட்டுள்ளனர். அதனை பல்கலைக் கழக விதிமுறைப்படி துறை தகவல் பலகையில் போட வேண்டும் எனவும் கோரியுள்ளனர். அதற்கு போரா.சௌந்திரராஜன் மாணவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். உடனிருந்த மாணவியையும் தகாத வார்த்தைகளால் திட்டி அத்துமீறி மார்பகத்தில் கைவைத்து தள்ளியிருக்கிறார்.

பாதிக்கப்பட்ட மாணவி 17-03-2021 அன்று பொறுப்புத் துறைத் தலைவர் பேரா.சௌந்திரராஜன் மீது பாலியல் புகாரை பல்கலைக் கழகத்திடம் கொடுக்கிறார். இப்புகாரின் மீது பல்கலைக் கழக நிர்வாகம் எந்த  நடவடிக்கையையும் எடுக்காததால் மாணவர்கள் தொடர் உள்ளிருப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர். உடனே பல்கலைக் கழகம் sexual harassment committee-ஐ அமைத்து இப்புகாரை விசாரிக்கிறது.

இக்கமிட்டியோ பாலியல் புகாரை நடுநிலையோடு விசாரிப்பதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட மாணவியை harss செய்வது போல நடந்துக் கொள்கிறது. இவ்விசயங்கள் பத்திரிக்கைகளில் கசிய ஆரம்பிக்கின்றன. உடனே பல்கலைக் கழக நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை என்ற போர்வையில் போராடிய மாணவர்களை இடைநீக்கம் செய்கிறது.

இதற்கிடையில் SFI, மாதர் சங்கம் மற்றும் பல ஜனநாயக அமைப்புகளிடமிருந்து மாணவர்களுக்கான ஆதரவு பெருகவே பல்கலைக் கழக வளாகத்திற்குள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களை மார்ச் 22 அன்று காலை  காலை 9 மணியளவில் போலீஸ் கைது செய்கிறது. மாணவர்களுக்கு ஆதரவாக போராடிய SFI, மாதர் சங்கம் மற்றும் பல ஜனநாயக அமைப்பின் பிரதிநிகளையும் போலீஸ் கைது செய்கிறது.

மார்ச் 30 அன்று வளாகத்திற்குள் போராடக் கூடாது, பிரசுரம் அளிக்க கூடாது, நிர்வாக அனுமதி இல்லாமல் ஊடகங்களிடம் பேசக் கூடாது என்ற நிபந்தனைகளின் பெயரில் மாணவர்கள் மீதான இடைநீக்கத்தை பல்கலைக் கழக நிர்வாகம் ரத்து செய்கிறது.

ஆக இப்பிரச்சனை ஜனவரி மாதத்திலிருந்தே துவங்குகிறது. தங்களுடைய கோரிக்கைகளுக்காகப் போராடுகின்ற மாணவர்களை பழி வாங்குவதும் அவர்களிடம் நாகரீகமற்ற முறையில் நடந்துக் கொள்வதையே பேரா.சௌந்திரராஜன் தொடர்ச்சியாக செய்து வந்துள்ளார். இவையனைத்தும் உ.அ.கு-விடம் மாணவர்கள் தெரிவித்து உள்ளனர். ஆனால், உ.அ.கு-வோ இவையனைத்தையும் மறைத்து விட்டு தங்களுக்கு தேவையானவற்றை மட்டுமே எடுத்துக் கொண்டு அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.

***

இந்த அறிக்கையில் பல்வேறு சந்தேகங்களும் கேள்விகளும் எங்களுக்கு உள்ளது. இருப்பினும் சில பிரச்சனைகளை மட்டுமே விவாதத்திற்கு எடுத்துக் கொள்கிறோம்.

1. உ.அ.கு-வின் அறிக்கை, பெயிலான மாணவர்களுடைய விடைத் தாள்களின் கையெழுத்துப் பிரதியும், மெயில் காப்பியும் வேறாக உள்ளது எனத் துறைத் தலைவர் தெரிவித்ததாகக் கூறுகிறது. ஆனால், மாணவர் தரப்பிலிருந்தோ ஒரு மாணவரின் விடைத் தாள் மட்டுமே மாறியுள்ளதாக துறைத் தலைவர் கூறியதாக அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரு தரப்பும் இருவேறு கூற்றைத் தெரிவிக்கிறது.

தபாலில் அனுப்பிய விடைத் தாள்களை மாணவர்கள் கேட்ட போது பொறுப்புத் துறைத் தலைவர் காட்டவில்லை. ஒரிஜினல் விடைத் தாளை பல்கலைக் கழகப் பதிவாளர் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள் கேட்ட போதும் காட்டவில்லை. தபாலில் அனுப்பிய விடைத் தாள் தொலைந்து விட்டதாக துறைத் தலைவர் கூறியிருக்கிறார்.

மேலும்,  email-ல் அனுப்பப்பட்ட விடைத் தாளைக் கொண்டு மறுதிருத்தல் செய்ததில் அதிகமான மதிப்பெண் வித்தியாசத்தில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள். உ.அ.குழுவோ பேரா.சௌந்திரராஜனுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை, இப்பாடங்களை கௌரவ ஆசிரியர்கள் தான் எடுத்தார்கள் என்கிறது உ.அ.கு.

எந்த அரசு உயர்கல்வி நிறுவனங்களிலாவது நிரந்திர பேராசிரியர்கள் அல்லது துறைத் தலைர் உள்ளிட்ட உயர் பதவியில் இருப்பவர்களின் வழிகாட்டுதலை மீறி ஒரு கௌரவ ஆசிரியர்கள் சுகந்திரமாகச் செயல்பட முடியுமா? அதிகாரப் படிநிலைகள் கெட்டித்தட்டி போயுள்ள நமது உயர்கல்வி நிறுவனங்கள் என்ன அவ்வளவு ஜனநாயகமாகவா செயல்படுகிறது? கல்லூரிகளில் முதலாமாண்டு படிக்கும் மாணவர்களை கேட்டாலே கூட இதற்கு பதில் சொல்லிவிடுவார்கள். உ.அ.குழுவோ எதார்த்தத்தை மீறி இதனை தலைகீழாகப் பார்க்கிறது.

பெயில் செய்யப்பட்ட மாணவர்களின் விடைத் தாள்கள் மட்டும் காணாமல் போனதன் மர்மம் என்ன? மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதின் காரணம் என்ன? இதற்கெல்லாம் யார் காரணம்? இவைப் பற்றியெல்லாம் உ.அ.கு-க்கு சந்தேகமே வரவில்லை.

மெஸ் போராட்டத்தில் தொடர்புடைய மாணவர்களை பொறுப்புத் துறைத் தலைவர் பேரா.சௌந்திரராஜன் திட்டமிட்டு பழிவாங்கியுள்ளார். இது பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு தெரியும். ஆனால், நிர்வாகம் துறைத் தலைவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்கள் மறுதிருத்தல் வேண்டி பல்கலைக் கழக துணைவேந்தர், பதிவாளர், தொல்லியல் துறைத் தலைவர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோருக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.

நிர்வாகம் மாணவர்களின் கோரிக்கையை  கண்டுக் கொள்ளவில்லை என்பதால் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் பிறகே பல்கலைக் கழக நிர்வாகம் மறுதிருத்தலுக்கு சம்மதித்தது. ஆனால் உ.அ.கு-வோ மாணவர்கள் கடிதம் கொடுக்கவில்லை மறுதிருத்தலுக்கான முறையான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று சட்ட நுணுக்கங்களுக்குள் செல்கிறது.

திட்டமிட்டு பழிவாங்கப்பட்டது ஆதாரத்துடன் தெரிந்தப் பின்பு மாணவர்கள் போராடாமல் மறுதிருத்தலுக்கான காசோலைப் படிவத்தையா நிரப்பிக் கொண்டிருக்க முடியும்? பேரா.சௌந்திரராஜனின் திட்டமிட்ட பழிவாங்குதலை ஆதாரத்துடன் அம்பலப் படுத்தியுள்ளனர். கடிதத்திற்குப் பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வந்த நிர்வாகத்தினை தங்களுடைய போராட்டத்தின் மூலம் மறுதிருத்தலுக்கான ஒப்புதலைப் பெற்று அப்பாடங்களில் தேர்ச்சியும் அடைந்துள்ளனர்.

இந்த உண்மையெல்லாம் மறைத்து விட்டு பல்கலைக் கழக நிர்வாகம் மாணவர்களுக்கு ஆதரவாகவும் பேரா.சௌந்திரராஜனுக்கு எதிராகவும் நடந்துக் கொண்டது போன்ற பிம்பத்தினை உ.அ.குழுக் கட்டியமைக்க முயற்சிக்கிறது.

படிக்க :
♦ கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து : சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் !
♦ சென்னை பல்கலை : மாணவியை பாலியல்ரீதியில் துன்புறுத்திய தொல்லியல் துறைத் தலைவர் மீது நடவடிக்கை எடு !

2. மதிப்பெண்களை (Internal&External) தகவல் பலகையில் வெளியிட வேண்டுமென துறைத் தலைவரிடம் மாணவர்கள் கேட்டுள்ளனர். அவர் அதை மறுத்ததோடு மாணவர்களை திட்டியுள்ளார். உ.அ.குழு அறிக்கையில் தங்களை தாக்கியதோடு உடன் வந்த மாணவியிடம் தகாத முறையில்(பாலியல் குற்றச்சாட்டு) பேரா.சௌந்திரராஜன் நடந்து கொண்டதாக மாணவர்கள் கூறியுள்ளனர். பேரா.சௌந்திரராஜனோ மாணவர்கள் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இருதரப்பினரும் தங்களுடைய வாதங்களுக்கு ஆதரவாக பல செய்திகளை உ.அ.குழுவிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், உ.அ.குழுவோ இருதரப்பின் வாதங்களை ஆராயாமல் தொல்லியியல் துறை மற்றும் பல்கலைக் கழக ஊழியர்கள் சொன்ன செய்திகளை மட்டும் எடுத்துக் கொண்டு பேரா.சௌந்திரராஜன் தாக்கப்பட்டார் என்று முடிவு செய்து விட்டது.

ஒரு அரசு நிர்வாகத்தில் குறிப்பாக பல்கலைக் கழகங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் மீது மாணவர்கள் புகார் அளித்தால் ஒன்று மாணவர்களை தண்டிப்பார்கள் அல்லது நிலைமை கைமீறிவிட்டால் மொத்த நிர்வாகமே ஓரணியில் நின்று அந்த போராசிரியரை காப்பாற்ற முயற்சி செய்வார்கள். மாணவர்கள் பேராசிரியரை பழிவங்குவதெல்லாம் எதார்த்தத்தை மீறிய கற்பனை.

மாணவி மீது பாலியல் ரீதியான தாக்குதல் நடைபெறவில்லை பேரா.சௌந்திரராஜனை பழிவாங்குவதற்காகவே புனையப்பட்ட பொய்க்குற்றச்சாட்டு என்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் உ.அ.குழு தெரிவித்தது. அதற்கான ஆதாரங்கள் என்ன என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு பதிலில்லை. அறிக்கையிலும் குறிப்பிடவில்லை. பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டக் குழுவின் மீது நம்பிக்கையில்லை என்று மாணவி ஏன் கூறுகிறார் என்று பத்திரிக்கையாளர்களிடம் எதிர்கேள்வி கேட்கிறது உ.அ.குழு. இதனால் மாணவர்களுக்கு உள்நோக்கம் இருப்பதாக உ.அ.குழு முடிவுக்கு வருகிறது.

பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டக் குழு பாதிக்கப்பட்ட மாணவியிடம் செய்த விசாரணையின் ஒலிப்பதிவை யாரோருவர் கேட்டாலும் மாணவியின் முடிவுக்குத்தான் வரமுடியும். மிகவும் பிற்போக்கான ஆணாதிக்க மனநிலையிலிருந்தே பாலியல் குற்றச்சாட்டு விசாரனைக்குழு மாணவியிடம் விசாரணை செய்துள்ளது. இக்குழுவைப் பொருத்தவரை மாணவி மீதான தாக்குதல் திட்டமிட்டு நடந்தது கிடையாது.

அச்சூழலில் எதிர்பாராமல் நடந்த ஒன்று. எனவே, இதனை குற்றமாக கருத முடியாது. உ.அ.கு-வும் இவ்வாறேக் கருதுகிறது. உ.அ.கு-வின் உறுப்பினர்கள் மாணவர்களின் தரப்பிலிருந்தோ அல்லது பாதிக்கப்பட்ட மாணவியின் நிலையிலிருந்தோ இப்பிரச்சனையை அணுகவில்லை. ஒரே சமூகத்தை சேர்ந்த சகப் பேராசிரியரை காப்பாற்ற வேண்டும் என்னும் மனநிலையிலேயே இப்பிரச்சனையை அணுகியுள்ளனர்.

உ.அ.கு-வின் உறுப்பினரான தோழர் மஞ்சுளா “உ.அ.குழுவின் அறிக்கையானது பாலியல் துன்புறுத்தல் நிகழ்வின் உண்மைகளை மறுக்கிறது மற்றும் குற்றவாளியைக் காப்பாற்றுவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது (on the final conclusion of this fact finding report which rebuffs the actual facts and is aimed at protecting the perpetrator)” என்று கூறி அறிக்கையை நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அதே குழுவில் அங்கம் வகிக்கும் நாசர் என்பவரும் இக்குழுவின் அறிக்கையில் மாற்றுக் கருத்து உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்களின் இன்டர்னல்/எக்ஸ்டர்னல் மதிப்பெண்களைப் பல்கலைக் கழக விதிப்படி துறையின் தகவல் பலகையில் போடாத செயலுக்கு இக்குழு ஒரு விளக்கம் தருகிறது. தகவல் பலகையில் மதிப்பெண்களைப் போடுவது அத்துறையில் நடைமுறையில் இல்லை. HOD சௌந்திரராஜன் ஏற்கனவே நடைமுறையில் இருந்த மரபைத்தான் தொடர்கிறார். புதிதாக அவர் எதையும் செய்யவில்லை என்கிறது.

மிக எளிமையான கேள்வி “ஒரு துறைத் தலைவர் பல்கலைக் கழக விதிப்படி நடக்க வேண்டுமா? அல்லது மரபு, வழக்கம் என்று செயல்பட வேண்டுமா?” உ.க.குழு மரபு, வழக்கம் அடிப்படையில் செயல்பட்டதை சரியென்று ஏற்றுக் கொள்கிறது. பல்கலைக் கழக சட்ட விதிகளைக் குழி தோண்டிப் புதைக்கிறது.

3. உ.அ.குழு கண்டுபிடிப்புகள் என்ற தலைப்பில் பொறுப்புத் துறைத் தலைவர் பதவியில் உள்ள பேரா.சௌந்திரராஜனை முழுத்துறைத் தலைவர் பதவிக்கு வரவிடாமல் தடுப்பதற்கு சதி நடப்பதாகவும் அவர் மீது சாதிய ரீதியான ஒடுக்குமுறை இருப்பதற்கான சாத்தியங்களை புறந்தள்ளிவிட முடியாது என்றும் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய Dr.லட்சுமணன், மாணவர்களின் போராட்டங்களுக்குப் பின்னால் பல்கலைக் கழக பேராசிரியர்கள் இருப்பதாகவும் பேரா.சௌந்திரராஜனை முழுமையான துறைத் தலைவர் பதவிக்கு வரவிடாமல் தடுப்பதற்காகவே அவர் மீதுப் பொய்யான குற்றச்சாட்டுகளை மாணவர்கள் தொடர்ந்து வைப்பதாகவும் அத்துறையில் பணியாற்றுகின்ற பேரா.சௌந்திரராஜன், Dr.கருணாகரன் மற்றும் பேரா.ராமசாமி(ஓய்வு) மூவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலே மாணவர்கள் இது போன்று நடந்து கொள்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் மீதான இந்த ஆதாரமற்றக் குற்றச்சாட்டை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். இது போன்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை எங்கள் மீது வைத்ததற்கு உ.அ.குழுவை வன்மையாக கண்டிக்கிறோம்.

இதில் இரண்டு விசயங்கள் சொல்லப்பட்டுள்ளது. ஒன்று மாணவர்களின் போராட்டங்களுக்கு பின்னால் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் என்பது மற்றொன்று  பேரா.சௌந்திரராஜன் உள்ளிட்ட மூவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாணவர்கள் திட்டமிட்டே பொய்யானக் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்கள் என்பது.

மாணவர்களின் போராட்டங்களுக்குப் பின்னால் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இருக்கிறார்கள் என்றால் அதற்கான ஆதாரங்களோடு பேராசிரியர்களின் பெயர்களைச் சுட்டிக்காட்ட வேண்டும். அறிக்கையில் இதைப் பற்றி ஒரு வரிக் கூட இல்லை. பத்திரிக்கையாளர் சந்திப்பில் இக்குற்றச்சாட்டை ஒட்டி பத்திரிக்கையாளர்கள் எழுப்பியக் கேள்விகளுக்கு உ.அ.குழுவின் உறுப்பினர்கள் நேரடியானப் பதில்களை சொல்லாமல் மழுப்பவே செய்தனர்.

பிறகு எதனடிப்படையில் மாணவர்கள் மீது உ.அ.குழு குற்றம் சுமத்துகிறது?

பல்கலைக் கழகங்கள் / உயர்கல்வி நிறுவனங்களில் துறைத் தலைவர், கல்லூரி மேலாளர், பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி, சிண்டிகேட் உறுப்பினர், துணைவேந்தர் போன்ற பதவிகளுக்காகப் பேராசிரியர்களுக்கு இடையே நடக்கும் திரைமறைவு குழாயடி சண்டைகள் யாவரும் அறிந்ததே.  இதில் சாதி, பெரும் பணம், அரசியல் கட்சிகளின் தலையீடுப் போன்றவை மிகவும் வெளிப்படையாகவே நடக்கிறது.

தனியார் கல்லுரிகளின் வளர்ச்சிக்கு இவை இன்னும் வலுப்பெற்று பல்கலைக் கழகங்களை கட்டுப்படுத்துகின்றப் பிரதான சக்தியாகவே மாறியுள்ளன. ஆளும்வர்க்கத்துடன் நெருக்கமாக இருப்பதன் மூலம் உயர்ப்பதவிகளை அடைவது, மாணவர்களை ஒடுக்குவது, அதிகாரத்தில் தொய்ப்பது, அதிக வருவாய் பார்ப்பது இதுவே உயர்கல்வித் துறையின் பொதுத்தன்மையாக மாறியிருக்கிறது(இது குறித்து வாரத்திற்கு இரண்டு செய்திகளாவது பத்திரிக்கைகளில் வந்து விடுகின்றன).

உ.அ.குழு பதறுவதைப் போலவே பேரா.சௌந்திரராஜனின் பொறுப்புத் துறைத் தலைவர் பதவியை பறிக்க சதி நடப்பதாக வைத்துக் கொண்டாலும் இது பேராசிரியர் தரப்புகளுக்கிடையே நடக்கும் பதவிக்கான போட்டியே தவிர மாணவர்களுக்கும் இதற்கும் எந்த விதத் தொடர்பும் கிடையாது. மாணவர்கள் போராட்டங்களுக்குப் பின்னால் எந்த பேராசிரியரும் இல்லை என்பதை நாங்கள் உறுதியாகக் கூறுகிறோம்.

பேரா.சௌந்திரராஜன், Dr.கருணாகரன் மற்றும் பேரா.ராமசாமி(ஓய்வு) ஆகியோர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டுகிறார்கள் என்று பேரா.லட்சுமணன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறியுள்ளார். ஆனால், இதற்கான ஆதாரங்களை எங்கேயும் குறிப்பிடவில்லை. மாணவர்கள் மீதான இந்த ஆதரமற்ற பொய் குற்றச்சாட்டை மறுப்பதோடு இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மெஸ் பிரச்சனையிலிருந்தே மாணவர்களிடம் பழிவாங்கும் நோக்கத்துடனும் அதிகாரத்துவத்துடனும் பேரா.சௌந்திரராஜன் நடந்து வந்துள்ளார். இதனால், மாணவர்கள் பேரா.சௌந்திரராஜன் மீது புகார் கொடுத்துள்ளனர். பேரா.ராமசாமி(ஓய்வு) மீது மாணவர்கள் எங்கேயும் புகார் அளிக்கவில்லை. உ.அ.குழுவினர் மாணவர்களைச் சந்தித்து பேசிய பொழுது தொல்லியல் துறைப் பேராசிரியர்கள் பாடம் நடத்துவதைக் குறித்து கேள்விகள் கேட்டுள்ளனர்.

அதற்கு சரியாக பாடம் நடத்துவதில்லை என்று தங்களது அதிருப்தியை மாணவர்கள் தெரிவித்துள்ளனர். பாடம் எடுத்தவர்களில் மூவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்பதால் உடனே சாதிய ஒடுக்குமுறை என்ற பிம்பத்தை உ.அ.குழு உருவாக்குகிறது.

ஆசிரியர் பாடம் நடத்துவது சரியில்லை என்று மாணவர்கள் கருதுவதே சாதிய ஒடுக்குமுறையா? ஆசிரியர் இடைநிலைச் சாதியாக இருந்து அதிருப்தி தெரிவிக்கும் மாணவர்கள் தலித் சமூகத்தினராக இருந்தால் இதை உ.அ.குழு என்னவென்று சொல்லும்? சொல்லித் தரும் பேராசிரியாருக்குப் பாடத்தில் ஆழ்ந்த அறிவு உள்ளதா, மாணவர்களிடம் ஜனநாயகமாகவும் நேர்மையாகவும் நடந்துக் கொள்கிறாரா? நன்றாக பாடம் நடத்துகிறார? போன்றவையெல்லாம் மற்றவர்களை விட மாணவர்களுக்கே நன்றாகத் தெரியும்.

மேலும், இக்குழுப் பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஒருவர் தலித் என்பதை அப்பட்டமாக மறைத்து விட்டது. காரணம் அது ஒன்று மட்டுமே சௌந்திரராஜனை காப்பாற்றும் கடைசி ஆயுதம். இதற்கு குழுவில் உள்ள தலித் இன்டெலெக்சுவல் கலெக்ட்டிவின் Mr.லக்ஷ்மணன் கூறுவது. அம்மாணவரின் சான்றிதழ் படி அவர் தலித் இல்லை.

இதன்படி ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்தவர் கிறுத்தவராக மதம் மாறினால் அவருக்கு இந்த சமூகத்தில் சாதிய ரீதியான ஒடுக்குமுறை இல்லை என்று சமூக எதார்த்தத்தை மறைக்கிறார். இது அயோக்கியத்தனம் இல்லையா? அதிகாரத்தில் இருக்கும் தலித் மற்றொரு தலித்தை ஒடுக்கும் போது அதிகாரத்தில் இருக்கும் தலித்தைக் காப்பாற்ற முனைகிறது. அவ்வளவுதான் இதன் யோக்கியதை.

இப்பிரச்சனையில், ஒன்று மாணவர்கள் பொறுப்புத் துறைத் தலைவரிடம் சாதி ரீதியாக நடந்துக் கொண்டதற்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டும் அல்லது வேறு ஏதாவது தருணங்களில் சாதிய ரீதியாக பேரா.சௌந்திரராஜனிடம் மாணவர்கள் நடந்து கொண்டார்களா என்பதைக் கண்டறிந்து அறிக்கையில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

தகுந்த ஆதாரங்களும் இல்லாமல் நேர்மையானப் பகுப்பாய்வும் செய்யாமல் பேரா.சௌந்திரராஜனை காப்பாற்றுவதற்காக மாணவர்கள் மீது தலித் விரோதி என்ற பொய்க்குற்றத்தை சுமத்தியதோடுப் பொதுவெளியிலும் அறிவித்து விட்டது உ.அ.குழு. இது நடுநிலைத் தவறிய அறிவு நேர்மையற்ற அணுகுமுறை என்று கருதுகிறோம்.

எங்கள் மீதான குற்றச்சாட்டிற்குத் தகுந்த ஆதாரங்களைக் காண்பித்தால் எங்களை சுயபரிசீலனை செய்துக் கொள்ளவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இல்லையேல் உ.அ.குழு மாணவர்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கோருகிறோம்.

மெஸ் கட்டணக் கொள்ளைக்கு எதிராகவும் ஜனநாயகமற்ற முறையில் நடந்துக் கொண்ட பல்கலைகழக நிர்வாகத்தைக் கண்டித்தும் பழிவாங்கும் நோக்கத்தோடு மாணவர்களை பெயில் செய்ததோடு மாணவியிடம் நாகரீகமற்ற முறையில் நடந்துக் கொண்ட பொறுப்புத் துறைத் தலைவர் பேரா.சௌந்திரராஜனை கண்டித்தும் இரண்டரை மாத காலமாக வெவ்வேறு கட்டங்களில் சமரசமின்றி மாணவர்கள் நடத்தியப் போராட்டத்தினை ஆதாரமற்றப் பொய்க்குற்றச்சாட்டுகளின் மூலம் களங்கப் படுத்தியுள்ளது உ.அ.குழு.

தங்காத விடுதிக்கும், இயங்காத மெஸ்-க்கும் எதற்காகக் கட்டணம் செலுத்த வேண்டும்? பல்கலைக் கழகம் தன்னுடைய நிதி சுமையைச் சமாளிப்பதற்கு மாணவர்கள் மீதுத் திணிப்பதை எதிர்த்து மாணவர்கள் போராடக் கூடாதா? மாணவர்களை பழிவாங்குவதற்காகப் பெயில் செய்ததையும் அவர்களின் விடைத் தாள்களை தொலைத்ததையும் எதிர்த்து மாணவர்கள் கேள்வி கேட்கக் கூடாதா? தன்னுடன் படிக்கும் நண்பர்கள் பாதிக்கப்படும் போது சகமாணவர்களும் அவர்களுக்கு ஆதரவாகப் போராட மாட்டார்களா? பாலியல் குற்றச்சாட்டை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டக் குழு நடுநிலையாக நடந்துக் கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மாணவி கருத்து சொல்லக் கூடாதா? மாணவர்களின் இயல்பான எதிர்வினைகளை உள்நோக்கத்தோடு திரித்து அறிக்கையாக்கியுள்ளது உ.அ.குழு.

மாணவர் போராட்டங்களுக்கு ஆதாரமற்ற வகையில் களங்கம் கற்பிப்பது என்பது ஒரு ஆளும்வர்க்க உத்தியாகும். விடுதிக் கட்டணக் குறைப்புக்கானப் போராட்டத்திலிருந்தே இப்பிரச்சனைத் தொடங்குகிறது என மேலே விவரித்திருந்தோம். இந்தக் கோரிக்கை ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த மாணவர்களுக்கோ அல்லது குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கானதோ அல்ல அனைத்து மாணவர்களுக்கானதாகும்.

குறிப்பாக கொரோனா ஊரடங்கை ஒட்டி பலக் கல்லூரிகளில் விடுதிக் கட்டணக் குறைப்புக்கான கோரிக்கைகள் பரவலான பேசு பொருளாகவே இருந்தது. உரிமை என்று பேசினாலே தண்டிக்கப்படும் நமது பல்கலைக் கழக / கல்லூரிகளின் ஒடுக்குமுறைகளுக்கிடையே தங்களுடைய உரிமைக்காக வெகு சில மாணவர்களேப் போராட முன்வருகின்றனர்.

இச்சூழலில் மாணவர்களின் பொதுப் பிரச்சனைக்கானப் போராட்டத்தை தங்களுடைய குறுகியப் பார்வையினால் ஆதாரமே இல்லாமல் சாதிய சாயத்தை பூசுவதன் மூலம் மாணவர்களுடையப் போராட்டத்தைப் பின்னோக்கி இழுக்கின்ற வேலையை உ.அ.குழு செய்துள்ளதாகக் கருதுகிறோம். குறிப்பாக மாணவர்களிடம் சாதிய உள்நோக்கம் இருந்தாகத் தெரியவில்லை. மாறாக மொத்தப் பிரச்சனையையும் உ.அ.குழுவே சாதிய கண்ணோட்டத்துடன் அணுகி இருப்பதாகக் கருதுகிறோம்.

படிக்க :
♦ சென்னை பல்கலை : பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை முயற்சி – கைது || போலீசு அராஜகம்
♦ கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடிய மாணவர்களை ஃபெயிலாக்கும் சென்னை பல்கலை !

இந்த அணுகுமுறை மாணவர்களிடையே ஒற்றுமையை உருவாக்குவதற்குப் பதிலாக அவர்களைப் பிரிப்பதற்கே துணை புரியும். மேலும், இப்போக்குப் பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதற்கும் அதனை எதிர்த்துப் போராடும் மாணவர்களைத் தீவிரமாக ஒடுக்குவதற்கும் எவ்வித எதிர்ப்பும் இன்றி கல்வி நிறுவனங்களை பாசிச பிடியின் கீழ் கொண்டு செல்வதற்கும் வழியமைத்துக் கொடுக்கும் என்றே கருதுகிறோம்.

சரியான நேரத்தில் குற்றவாளி பேரா.சௌந்திரராஜனை பாதுகாக்கும் உ.அ.குழுவின்  நோக்கத்திற்கு உடன்படாமல் அதை அம்பலப்படுத்தி அறிக்கையை நிராகரித்த Ms.G.மஞ்சுளா அவர்களுக்கும், இவ்வறிக்கையில் மாற்றுக் கருத்து உள்ளதாக உடன்பட மறுத்த Mr.உசைன் நாசர் அவர்களுக்கும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்றோம்.

நன்றி!

இவண்,
அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்,
சென்னை பல்கலைக் கழகம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க