எந்தக் குற்றமும் செய்யாத ஹனிபாபு 9 மாதங்களாக சிறையில் இருக்கிறார்;
விடுதலை கோரும் அவரது குடும்பம்

தேசிய புலனாய்வு முகமை எந்த குற்றமும் செய்யாத ஹனி பாபுவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என ஹனி பாபுவின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டவை என தடயவியல் பரிசோதனைகளில் தெரிய வந்த போதும், நீதிமன்றங்களும் விசாரணை நிறுவனங்களும் இன்னமும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை ஹனி பாபு குடும்பத்தினர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளனர்.

படிக்க :
♦ ஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் !

♦ பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !

“அப்பாவியான ஹனி பாபு மும்பையில் ஒரு நெரிசலான சிறையில் அவரைப் போன்ற விசாரணை கைதிகளுடன் அடைக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கழித்திருக்கிறார். கைதுக்கு முந்தைய ஐந்து நாள் நீண்ட விசாரணையின் போது, அவரை ஒரு சாட்சியாக இருக்கும் படி என்.ஐ.ஏ அதிகாரிகள் கட்டாயப் படுத்துவதாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிலருக்கு எதிராக சாட்சியங்களை வழங்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும் அவர் எங்களிடம் தெரிவித்திருந்தார்.

மற்றவர்களுக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்க மறுத்ததால் என்.ஐ.ஏ அதிகாரிகள் மகிழ்ச்சியடையவில்லை என கைதாவதற்கு முன் அவருடைய போனிலிருந்து வந்த இறுதி அழைப்பின் போது குறிப்பிட்டார்” எனவும் ஹனிபாபுவின் குடும்பத்தினர் தங்களுடைய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கோவிட் 19 பெருந்தொற்று காலத்தில் சிறைச்சாலை நிலைமைகள் குறித்து ஹனிபாபுவின் குடும்பம் கவலை தெரிவித்துள்ளது. “இது அடிப்படை மனித உரிமைகளை முற்றிலும் மீறுவதாகும். உண்மையில், பெருந்தொற்று என்ற காரணத்தைக் காட்டி, ஆரம்பத்தில் இருந்தே ஹானி பாபுவை நேரில் சென்று பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. புத்தகங்களைக் கொண்ட பார்சல்கள் கூட அவருக்கு தர மறுக்கப்படுகிறது.

மேலும் கடிதங்களை அனுப்புவது / பெறுவது மற்றும் தொலைபேசி அழைப்புகள் செய்வது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விருப்பத்தைப் பொறுத்தே நிர்வகிக்கப் படுவதாகத் தெரிகிறது” என தெரிவித்துள்ளனர்.

ஹனிபாபு குடும்பத்தினர் எழுதியுள்ள கடிதம் :

“மிக மோசமான தவறு, தவறைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதேயாகும், பீமா கொரேகான் வழக்கில் அப்படித்தான் தெரிகிறது.  கொரேகான்-எல்கர் பரிஷத் வழக்கில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது ஒரு படுகொலை சதித்திட்டத்துடன் தொடங்கியது. ஆனால், விரைவில் கையொப்பமிடப்படாத மற்றும் சரிபார்க்கப்படாத சில கடிதங்கள் தொலைதூரத்தில் இருந்து தனிப்பட்ட கணினிகளில் ஜோடிக்கப்பட்டன. ஆயினும் கூட, நீதியைக் குழப்புவதையும் தடுப்பதையும் அரசு தொடர்கிறது.

டெல்லி பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியரான ஹனி பாபு, பீமா கொரேகான் வழக்கில் கைதான 16 பேரில் 12-வது நபராக கைதானவர்.  ஹனி பாபு மொழியியல் அறிஞர் (EFLU, ஹைதராபாத் மற்றும் கொன்ஸ்டான்ஸ் பல்கலைக்கழகம், ஜெர்மனிய பி.எச்.டி.). அவர் ஒரு நேர்மையான கல்வியாளர் மற்றும் ஒரு சமூக ஆர்வலர், தன்னை ஒரு அம்பேத்கரிஸ்ட் என்று அடையாளப் படுத்திக் கொண்டு, சமூக நீதிக்கான சாதி எதிர்ப்புப் போராட்டங்களுக்காக தனது வாழ்க்கையையும் பணியையும் அர்ப்பணித்துள்ளார்.

மற்றவர்களின் கவலைகளைச் சந்திக்க எப்போதும் வழியிலிருந்து விலகிச் செல்லும், மிகவும் ஜனநாயகமான, அறிவொளியுடன் கூடிய, நட்புமிக்க அறிவுஜீவிகளில் ஒருவரான அவரை,  மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் பரவலாக நேசிக்கிறார்கள் என்பதில் ஆச்சரியமில்லை.

2018 பீமா கொரேகான் – எல்கர் பரிஷத் வழக்கு முழுமையும் அநீதியாக உள்ள நிலையில் ஹனி பாபுவை சந்தேக நபராக பார்ப்பது மிகுந்த கவலையை அளிக்கக் கூடியதாகும்.  பீமா கோரேகான் – எல்கர் பரிஷத் வழக்கில் 2020 ஜூலை 28 அன்று ஹனி பாபு அநீதியாக கைது செய்யப்பட்டார். ஐந்து நாட்கள் அர்த்தமற்ற விசாரணைக்காக என்.ஐ.ஏ மும்பைக்கு அவரை வரவழைத்தது.

கைதுக்கு முன்னதாக 2019 செப்டம்பரில் அவரது வீட்டில் நடந்த முதல் போலீசு சோதனை (இரண்டாவது ஆகஸ்ட் 2020)யில் எந்தவித சோதனை வாரண்ட்டும் உரிய நடைமுறை பின்பற்றுதலும் இல்லாமல் புத்தகங்கள், ஆவணங்கள் மற்றும் மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு பொருட்களின் சரியான கணக்கையோ அவற்றின் மதிப்பு குறித்த தகவலையோ அவருக்கு உடனடியாக வழங்கவில்லை.

அவற்றை தங்களுடைய நோக்கத்துக்குப் பயன்படுத்தும் விதமாகப் பறிமுதல் விவரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.  உண்மையில், இந்த மொத்த சோதனையும் பறிமுதல் செயல்முறையும் சட்டத்தின் ஆட்சியின் மூலம் பிரச்சினகளை தீர்க்கலாம் என எப்போதும் பேசி வந்த ஹனி பாபு போன்றவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.

இப்போது குற்றமற்றவரான ஹனி பாபு மும்பையில் ஒரு நெரிசலான சிறையில் அவரைப் போன்ற விசாரணை கைதிகளுடன் அடைக்கப்பட்டு ஒன்பது மாதங்கள் கழித்திருக்கிறார். கைதுக்கு முந்தைய ஐந்து நாள் நீண்ட விசாரணையின் போது, அவரை ஒரு சாட்சியாக இருக்கும் படி என்.ஐ.ஏ அதிகாரிகள் கட்டாயப் படுத்துவதாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்ட சிலருக்கு எதிராக சாட்சியங்களை வழங்க வேண்டும் என வற்புறுத்துவதாகவும் அவர் எங்களிடம் தெரிவித்திருந்தார்.

மற்றவர்களுக்கு எதிராக பொய் சாட்சியம் அளிக்க மறுத்ததால் என்.ஐ.ஏ அதிகாரிகள் மகிழ்ச்சியடையவில்லை என கைதாவதற்கு முன் அவருடையப் போனிலிருந்து வந்த இறுதி அழைப்பின்போது குறிப்பிட்டார்.  என்.ஐ.ஏ அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது, குற்றச்சாட்டு மட்டும் அவரை ஒரு ‘மாவோயிஸ்ட்’ என முத்திரை குத்துவதற்கும் காலவரையின்றி சிறையில் அடைப்பதற்கும் போதுமான ‘சான்றுளாக’ நினைக்கிறது. கைதான 16 பேர் மீதும் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வதை தாமதப்படுத்தத் திட்டமிடுவது தெரிகிறது.

புதிதாகக் கைது செய்யப்பட்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும், புதிய ஆதாரங்கள் ஆராயப்பட வேண்டும் என காரணமும் சொல்கிறார்கள்.  நாடு முழுவதிலிருந்தும் பீமா கொரேகான் வழக்கில் கைதான் 16 பேரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாதவர்களாகவும் அனைவரும் குற்றமற்றவர்களாக, மற்றவர் மீது குற்றம் சொல்லாதவர்களாக இருந்த போதும் இந்த முழு வழக்கு தவறானது அல்ல என நிரூபிக்க என்.ஐ.ஏ முனைந்துக் கொண்டுள்ளது.

எனவே, ஹனி பாபுவின் குடும்ப உறுப்பினர்களான நாங்கள், எங்கள் வேதனையையும் வலியையும் பகிர்ந்து கொள்ள இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம். மேலும்,  மராட்டிய சிறைகளில் கோவிட்-19 தொற்று அதிகரித்து வருவது குறித்து மும்பை உயர்நீதிமன்றம் கூட தானாக முன்வந்து வழக்காக விசாரித்த நிலையில், இந்த கொடூரமான காலங்கள் எங்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்குவதையும் நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.

ஹனி பாபு செய்த ஒரே ‘குற்றம்’ சாதி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் சமூக நீதிக்கான அம்பேத்கரிய உறுதியான அர்ப்பணிப்பு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஏனென்றால், டெல்லி பல்கலைக் கழகத்தில் ஓ.பி.சி இடஒதுக்கீடுகளை நடைமுறைப்படுத்தவும் பட்டியலின் / பழங்குடியினருக்கு எதிரானப் பாகுப்பாட்டை முடிவுக்கு கொண்டு வரவும் இடைவிடாமல் ஆரம்பக்கட்டத்தில் போராடிய சிலரில் அவர் ஒருவராக இருந்தார்.

90 சதவீத மாற்றுத் திறனாளியான ஜி.என்.சாய்பாபா-வின் சகமாணவராகவும் பின்னாளில் சகஊழியராகவும் இருந்த காரணத்தால் அவர் சிறை வைக்கப்பட்ட போது அவரின் விடுதலை கோரும் குழுவில் தீவிரமாக செயல்பட்டார்.

உண்மையில், இடஒதுக்கீடுகளை அமல்படுத்துவதற்கானப் போராடுபவரோ அல்லது ஒரு குடிமகனின் உரிமையைப் பாதுகாப்பு, நியாயமான விசாரணையை கோருவது குற்றவியல் மற்றும் மாவோயிச தொடர்புகளுக்கு சான்றாக இருப்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

என்.ஐ.ஏ இதுவரை கணிசமான ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளாததால், ஹனி பாபுவின் சிவில் மற்றும் சட்ட உரிமை மீறல்கள் தொடர்கின்றன. மிக முக்கியமாக, பறிமுதல் செய்யப்பட்ட மின்னணு சாதனங்களின் குளோன் நகல்களுக்கான ஹனி பாபுவின் கோரிக்கை காலவரையின்றி தாமதமாகி வருகிறது.

மாசசூசெட்ஸை தளமாகக் கொண்ட டிஜிட்டல் தடயவியல் நிறுவனமான ஆர்சனல் கன்சல்டிங், பீமா கொரேகான வழக்கில் கைதான ரோனா வில்சன் கணினியில் ஒரு ஹேக்கரால் தீங்கிழைக்கும் மென்பொருள் மூலம் கோப்புகள் சொருகப்பட்டதும் அது, அவருடைய நண்பரின் மடி கணினிக்கு பரவியதை கண்டறிந்தது. இதம் மூலம் என்.ஐ.ஏ-வின் ஒரே ஆதாரமான மாவோயிஸ்ட் கடிதங்கள் என அழைக்கப்படும் ஆதாரங்கள் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

இவை கண்டுபிடிக்கப்பட்டு ஓராண்டு ஆனபிறகும் கூட இந்த வழக்கில் ‘ஆதாரங்களாக’ சமர்பிக்கப்பட்டுள்ள அனைத்து தரவுகளையும் உடனடியாக தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றங்கள் தானாக முன்வந்து அறிந்துக் கொள்ளவில்லை என்பதில் நாங்கள் ஆச்சரியப்படுகிறோம். எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் உடனடியாக கிடைக்கக் கூடிய அத்தகைய செயல்முறை, தாமத தந்திரோபாயங்களால் மாற்றப்பட்டுள்ளது.

அவை நீதிக்கு இடையூறு விளைவிக்கும். மேலும், தொற்று பேரழிவு காரணமாக பல நாடுகள் தங்கள் அரசியல் கைதிகளை விடுவிக்கும் ஒரு நேரத்தில், பீமா கொரேகான் 16 பேரின் பிணை விண்ணப்பங்கள் வயது மற்றும் உடல்நலக் குறைவு இருந்த போதிலும் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப் படுகின்றன. எனவே, கோவிட் தொற்றும் மரணங்களும் சிறைச்சாலைகளில் அதிகரிப்பது குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கிறோம். இது அடிப்படை மனித உரிமைகளை முற்றிலும் மீறுவதாகும்.

தற்போது நடந்து வரும் தொற்று நோயால் பாதிக்கப்படாத ஒரு நபர் அல்லது வீடு அல்லது நிறுவனம் (நீதிமன்றம் உட்பட) இருக்க முடியாது. குறிப்பாக ஹனி பாபுவைப் போல விசாரணை கைதிகளின் குடும்பத்தினரின் வேதனை வார்த்தையால் விவரிக்க முடியாததாகும். தகவல் தொடர்பும் மறுக்கப்பட்டு விசாரணைக்கு முடிவில்லாமல் காத்திருப்பவர்களின் வேதனைப் பன்மடங்கானது.

ஹானி பாபு தனது அரிதான கடிதம் ஒன்றில், சிறைக்குள் தபால் முத்திரைகள், காகிதம் மற்றும் பேனா ஆகியவையும் கூட விலை உயர்ந்தவை என்பதால் அவர் விரும்பும் போதெல்லாம் கடிதங்களை எழுத முடியாது என தெரிவித்திருந்தார். சிறைச்சாலையிலிருந்து அவர் எழுதிய கடிதங்கள், அவரின் வாழ்க்கையை அவருக்குத் திருப்பித் தரும் விதமாக, நம்முடைய நீதித்துறை முறைமையில் உள்ள உளப்பூர்வமான நம்பிக்கையைப் பதிவு செய்கின்றன.

விசாரணையைத் தொடங்குவதில் ஏற்படும் தாமதம் அவரது தனிப்பட்ட, கல்வி மற்றும் அறிவுசார் வாழ்க்கையை ஹனி பாபு-விடமிருந்து மேலும் விலக்கிவிடும்.  சமீபத்திய உச்சநீதிமன்ற அவதானிப்பு திட்டவட்டமாகக் கூறுவது போல், விரைவான விசாரணை என்பது UAPA-இன் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்குக் கூட ஒரு அடிப்படை உரிமை. செயல்முறையே இனி தண்டனையாக இருக்கக் கூடாது!

எனவே, நாங்கள் ஹனி பாபு-வின் குடும்ப உறுப்பினர்கள், முறையிடுகிறோம் :

  1. குளோன் பிரதிகள் உட்பட அனைத்து ஆதாரங்களும் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கிடைக்கும் படி செய்யப்பட வேண்டும். இதனால், குற்றம்சாட்டப்பட்ட தரப்பினர் தங்களுடைய சுயாதீன விசாரணையை முடித்து விரைவாக வழக்கு விசாரணையை தொடங்க முடியும்.
  2. நடைமுறையில் உள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளின் படி விசாரணை தொடங்கும் வரை குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் உடனடியாகப் பிணை வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் இந்த நீதி அமைப்பு தீய நோக்கங்களை மறைமுகமாக வளர்ப்பதற்கு தன்னளவில் திறந்திருக்கிறது என்றே கொள்ளலாம்.

இப்படிக்கு ஜென்னி (மனைவி), ஃபர்சானா (மகள்), ஃபாத்திமா ( தாய்), ஹரீஸ் & அன்சாரி (சகோதரர்கள்)

இதுபோல, கேரளத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், செயல்பாட்டாளர்கள், எம்.பி, எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பெருந்தொற்று காலத்தில் விசாரணை கைதிகளாக உள்ள ஹனி பாபு போன்றோரை சிறையில் விடுவிக்க வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளனர்.

ஹனி பாபு-வின் சமூக நீதிக்கான சாதி எதிர்ப்புப் போராட்டங்களே சனாதன அரசுக்கு எதிராக நிறுத்தியுள்ளதாகவும் கொடூரப் பெருந்தொற்றுக் காலத்தில் விசாரணை கைதிகளை சிறையில் இருப்பது அப்பட்டமான மனித உரிமை மீறல் எனவும் கடிதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

படிக்க :
♦ எல்கார் பரிஷத் வழக்கு : மாவோயிஸ்ட் பட்டம் கட்டி செயல்பாட்டாளர்களை முடக்கும் பா.ஜ.க!

♦ எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !

“ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நேர்ந்து கொண்ட ஹனி பாபு போன்ற அறிவுஜீவிகளை வேட்டையாடுவதன் மூலம், சங்க பரிவாரங்கள் இந்துத்துவக் கருத்தியலுக்கு எதிரானக் குரல்களை அழுத்தப் பார்க்கிறது. அரச வேட்டையின் பலியாக சிறைகளில் தவிக்கும் ஹனி பாபு மற்றும் பல குற்றமற்றவர்களுக்காக நாம் குரல் எழுப்பத் தொடங்க வேண்டிய நேரம் இது.

இந்த நாட்டின் ஜனநாயக விழுமியங்களும் மனித உரிமைகளும் நாம் பேசுவது போல் இறுக்கமடைந்துள்ளன. நமது மௌனத்தின் ஒவ்வொரு கணமும் அதற்கு மேலும் வலுசேர்க்கிறது. நம்முடைய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு, நீதிக்கான குரல்களை நாம் ஒன்றாக உயர்த்த வேண்டும்” என தங்களுடைய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.


கலைமதி
செய்தி ஆதாரம் :
♦ ‘An Innocen Hany Babu Has spent Nine Months in Jail’: An Appeal From His Family
♦ ‘Victim of State Hunt’: Kerala MPs, MLAs, Eminent Persons Urge Hany babu’s Release

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க