கொரோனா இரண்டாம் அலை குறித்த எச்சரிக்கையை உதாசீனப்படுத்திய மோடியை கண்டிக்கும் லான்செட் அறிவியல் இதழ் தலையங்கம் !

லகப் புகழ்பெற்ற அறிவியல் இதழான லான்செட் இதழ், தனது தலையங்கத்தில் மோடி அரசு, இரண்டாம் அலை குறித்த எச்சரிக்கையை உதாசீனப்படுத்தியதைக் கண்டித்து எழுதியிருக்கிறது. மோடி அரசு, “கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டதை விட டிவிட்டரில் வரும் விமர்சனங்களை நீக்குவதற்கான” வேலைகளில்தான் ஈடுபட்டுள்ளது எனவும் தனது தலையங்கத்தில் சாடியுள்ளது.

படிக்க :
♦ கார்டியன் தலையங்கம் : மோடியின் தவறுகள் – கட்டுப்படுத்த முடியாத ஒரு பெருந்தொற்று

♦ கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தன், இந்தியா கொரோனா எதிர்ப்புப் போரின் “இறுதி ஆட்டத்தில்” இருப்பதாகக் கூறியதைச் சுட்டிக்காட்டியுள்ள லான்செட் தலையங்கம், உயர்அதிகாரிகள், பெருந்தொற்றை வெற்றி கொண்டுவிட்டதாக அவசரகதியில் அறிவித்ததையும் சுட்டிக் காட்டியது.

“இரண்டாம் அலைக்கான அபாயம் மற்றும் கொரோனாவின் புதிய வகை திரிபு குறித்தத் தொடர்ச்சியான எச்சரிக்கையையும் தாண்டி, சில மாதங்கள் குறைவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வந்ததும், இந்தியா கோவிட்-19-ஐ வெற்றி கொண்டுவிட்டது என்ற எண்ணத்தை அரசாங்கம் கொண்டிருந்தது. இந்தியா மந்தை எதிர்ப்புச்சக்தி (Herd Immunity) அடைந்துவிட்டதாக தவறானத் தோற்றத்தை ஏற்படுத்தினர். ஆனால், ஐ.சி.எம்.ஆர் (ICMR) எடுத்தக் கணக்கெடுப்பின் படி இந்திய மக்கள் தொகையில் 21 சதவீதம் பேருக்கு மட்டும்தான் உடலில் சார்ஸ் கோவ்-2-க்கு எதிரான நோயெதிர்ப்பு அணுக்கள் உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கிறது” என்கிறது அந்தத் தலையங்கம்.

எச்சரிக்கைகளையும் மீறி, மதக்கூட்டங்களையும், அரசியல் கூட்டங்களையும் அனுமதிப்பதற்கான அரசாங்கத்தின் முடிவையும் விமர்சனமாகக் குறிப்பிட்டுள்ளது லான்செட் தலையங்கம். மேலும், தடுப்பூசிப் போதுமான அளவுக்கு இல்லாத நிலையில், 18 வயதுக்கு மேலானவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிப் போடுவதற்கு அனுமதி வழங்கி, பெரும் குழப்பத்தை உண்டாக்கியதைச் சுட்டிக்காட்டியிருக்கிறது.

தடுப்பூசிப் போடும் பணியைத் துரிதப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ள லான்செட், அதற்கு தடையாக உள்ள இரண்டு விசயங்களையும் சுட்டிக் காட்டியிருக்கிறது. முதலாவது, தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இரண்டாவது, கிராமப்புறங்களிலும் தடுப்பூசிப் போடுவதற்கான இயக்கம் எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. “அரசாங்கம், உள்ளூர் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களுடன் இணைந்துப் பணியாற்றி சரிசமமான வகையில் தடுப்பூசியை விநியோகிக்கும் அமைப்பை உருவாக்க வேண்டும்.” என்று கருத்து தெரிவித்துள்ளது லான்செட் இதழ்.

எவ்வளவுக்கு எவ்வளவு தடுப்பூசி அதிகமாகப் போடப்படுகிறதோ அந்த அளவுக்கு வைரஸ் பரவல் கட்டுக்குள் வரும் என்று கூறியிருக்கும் லான்செட் தலையங்கம்.

குறிப்பான கால இடைவெளியில் துல்லியமானத் தகவலை வெளியிடுவதோடு மாதமிருமுறை பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது.

மாநில அரசாங்கங்கள் பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கிவிட்ட நிலையில், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கூட்டம் கூடுவதைத் தடுத்தல், தாமாக முன்வந்து தனிமைப்படுத்திக் கொள்ளுதல், சோதனை மேற்கொள்ளுதல் போன்றவற்றின் அவசியம் குறித்து மக்களுக்கு மத்திய அரசு விவரிக்க வேண்டும். ஆனால், பெருந்தொற்று பிரச்சனை இருக்கும் காலகட்டத்தில், விமர்சனங்களையும் வெளிப்படையான விவாதங்களையும் தடுப்பதற்கும் மோடி எடுக்கும் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை.

சுகாதாரக் கணக்கீடு மற்றும் அளவீட்டு நிறுவனம் வெளியிட்ட மதிப்பீட்டை சுட்டிக் காட்டி இந்தியாவில் கோவிட் மரணங்கள் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி சமயத்தில் 10 இலட்சத்தைத் தொடும் வாய்ப்புள்ளதாக லான்செட் தலையங்கம் எச்சரிக்கிறது. “அப்படி ஒன்று நிகழ்ந்தால், மோடி அரசாங்கம்தான், தானே உருவாக்கிய தேசிய பேரழிவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பாகும்” என்று குறிப்பிட்டுள்ளது லான்செட் தலையங்கம்.

“தனது தவறுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு, பொறுப்புள்ள தலைமையை வழங்குவதோடு, வெளிப்படைத்தன்மையாக அறிவியலை தனது ஆன்மாவாகக் கொண்ட பொதுச் சுகாதாரத்தை நடைமுறைப்படுத்துவதுதான் அரசாங்கத்தின் தற்போதைய கோவிட் தடுப்பு நடவடிக்கையின் வெற்றி அமைந்திருக்கிறது.” என்று லான்செட் தலையங்கம் கூறுகிறது.

கோவிட்-19 தடுப்பு நடவடிக்கையில் மோடி அரசின் மெத்தனம், அறிவியல் பூர்வமற்ற அணுகுமுறைகள், எதிர்ப்புக் கருத்துக்களை முடக்குவது, வெளிப்படையற்றத் தன்மை அனைத்தையும் உலகின் தலைசிறந்த அறிவியல் பத்திரிகைகளில் ஒன்றான லான்செட் இதழே கடுமையாகக் கண்டித்திருக்கிறது.

படிக்க :
♦ ஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி

♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்

இதுபோன்று பல அமைப்புகளும், அறிவியலாளர்களும் கண்டித்தப் பின்னரும் மோடி அரசு, தனது தவறுகளை உணரவும் இல்லை. அதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவும் இல்லை. பொறுப்புகளை எல்லாம் மாநிலங்களின் கைகளுக்குத் தள்ளிவிட்டு, வெறும் வாயில் வடை சுடும் வேலையை மட்டும் செய்து வருகிறார் மோடி.


கர்ணன்
செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க