கொரோனா பேரிடர் : பொது சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் !
மோடி அரசின் கார்ப்பரேட் – காவி பாசிச திட்டங்களை முறியடிப்போம் !
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கோர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன; ஆம்புலன்சுகள் தட்டுப்பாடு, போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை; ஆக்சிஜன் இல்லை, தடுப்பூசி தட்டுப்பாடு, சுடுகாட்டில் பிணங்களை எரிப்பதற்கு இடமில்லை என்று அனைத்தும் தட்டுப்பாடுகளாக உள்ளன.
அரசுகளோ மரணிப்பவர்களைக் கூட கணக்கில் எடுக்க தயாராக இல்லை. நாள் தோறும் இறப்பு எண்ணிக்கை என்று அரசு சொல்வதைவிட பல மடங்கு இறப்புகள் உள்ளன. மே 10-ம் தேதி வரை 3 இலட்சங்களைத் தொடும் இறப்பு எண்ணிக்கை உண்மையில் பல இலட்சங்களைத் தாண்டியிருக்கிறது.
படிக்க :
♦ கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்து செயற்கை தட்டுப்பாடு
♦ கொரோனா பேரிடர் : பொதுச் சுகாதாரக் கட்டமைப்புக்காகப் போராடுவோம் || மக்கள் அதிகாரம்
மக்கள் முற்றிலுமாக கைவிடப்பட்டுவிட்டனர். எங்கும் மரண ஓலங்கள், எங்கும் துன்ப துயரங்கள், வேலையில்லை, உணவு இல்லை, மக்கள் படும் துன்பங்களுக்கு அளவே இல்லை.
மக்கள் மரணிப்பதைத் தடுக்க துப்பற்ற அரசுகளின் கடைசி ஆயுதம் பொதுமுடக்கம். முற்றிலும் நிர்கதியில் இருக்கும் மக்களையே குற்றவாளிகளாக்கி, தண்டனை மக்களுக்கு வழங்கும் எளிய வழி தான் அரசுகள் கண்டுப்பிடித்துள்ள இந்த பொதுமுடக்கம்.
மோடி அரசே முதன்மைக் குற்றவாளி !
கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை கடந்த மார்ச்-ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் வரப்போகிறது என மருத்துவ அறிஞர்களும் சர்வதேச சுகாதார மையமும் தெரிவித்திருந்தும் ஒதுக்கித் தள்ளியது மோடி அரசு.
பார்ப்பன மூடநம்பிக்கையைப் பரப்பும் கும்பமேளா நிகழ்ச்சிக்குத் தடைவிதிக்காமல் அதனை ஊக்குவித்தது; உத்திரப் பிரதேசத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் நடத்தியது; கொரோனாவால் மக்கள் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருக்கும் போது, கிரிக்கெட் போட்டிக்கு தடைவிதிக்காமல், மக்களைத் திசைத் திருப்பியது; முக்கியமாக, மேற்கு வங்கத் தேர்தலில் மோடி-பாஜக வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை மோடி-அமித்ஷா கும்பலே முன்னின்று நடத்தியது – மொத்தத்தில் இந்த மோடி அமித்ஷா கும்பல்தான் கொரோனாவைப் பரப்பிய முதன்மைக் குற்றவாளிகள் (சூப்பர் ஸ்பிரட்டர்ஸ்).
இதுமட்டுமல்ல, ஆக்சிஜனுக்கு வழியின்றி மக்கள் செத்துக் கொண்டிருக்கும் போது புதிய பாராளுமன்றம் மற்றும் பிரதமர் இல்லத்தை – சென்ட்ரல் விஸ்டா – பல்லாயிரம் கோடிகளில் கட்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றது.
அடிப்படை கட்டமைப்பு இல்லை
சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பாக ஆம்புலன்ஸுகளில் நோயாளிகள் காத்துக் கிடக்கின்றனர். நோயாளிகளை மருத்துவமனைக்குள் அழைத்துச் செல்ல போதிய இடமில்லை. மருத்துவமனைகள் நிரம்பி வலிகின்றன. கோவை மருத்துவமனையில் தினந்தோறும் 50-க்கும் மேற்பட்டவர்கள் இறப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளில் இறப்பவர்கள் குறித்து எந்த விவரமும் இல்லை.
மருத்துவமனைகள் நிரம்பி வலிவதைத் தடுப்பதற்காகவும் மக்களுக்கு உரிய சிகிச்சையும் தனிமைப் படுத்திக் கொள்வதற்கான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. தனியார் திருமண மண்டபங்கள், கல்லூரிகள், பள்ளிகளைக் கையகப்படுத்தி மருத்துவம் அளிக்க முடியும். ஆனால், அப்படி ஒரு முயற்சியில் இறங்க எந்த மாநில அரசும் தயாராக இல்லை.
இதனால், உரிய சிகிச்சை இல்லாமல் இருப்பது ஒருபுறம் இருந்தாலும் மருத்துவமனைகளில் மக்கள் குவிவதால் அனைவரும் கொரோனா நோயைத் தொற்றிக் கொண்டு சென்று வருகின்றனர். மெல்ல நகரங்களில் இருந்து கிராமங்களை நோக்கி கொரோனா பரவிக் கொண்டிருக்கிறது.
இப்போது இருக்கும் நிலை இப்படியே தொடர்ந்தால் அடுத்த இரண்டு மாதங்களில் தெருத் தெருவாக வீடு வீடாக மரண ஓலங்களைச் சந்திக்க நேரிடும் ஒரு பேரழிவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறோம்.
தடுப்பூசியில் கார்ப்பரேட் ஆதிக்கம்
கொரோனா நோய்த்தொற்று வருவதைத் தடுக்கும் வகையிலான தடுப்பூசி தயாரிக்கும் பணியில் இந்தியாவின் உள்ள நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்தால் அனைவருக்கும் மருந்து கிடைக்கும். ஆனால், மோடி அரசோ அதற்கு நேரெதிரான திசையில் செயல்படுகிறது.
கோவிஷீல்ட் (சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரிப்பு) கோவாக்சின் (பாரத் பயோடெக் தயாரிப்பு). இந்த தடுப்பூசிகளை அரசே வாங்கினால் ஒரு முறைக்கான (டோஸ்) விலை கோவிஷீல்ட் ரூ.400/- கோவாக்சின் ரூ.600/. இந்த தடுப்பூசியை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் மக்கள் அவர்களது சொந்த செலவில் போட்டுக் கொண்டால் இரட்டிப்பு விலை தர வேண்டும்.
45 வயது மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிப் போடுவதாகவும், அடற்கு அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசிப் போடுவதற்கான செலவை மாநில அரசுகள் ஏற்க வேண்டுமென திடீரெனக் கொள்கை முடிவுகளில் பாரிய மாற்றம் செய்துள்ளது.
இதன்படி, 45 வயதுக்குட்பட்டவர்களது (சுமார் 101 கோடி பேர்) தடுப்பூசிக்கான செலவை அந்தந்த மாநில அரசுகள்தான் ஏற்க வேண்டும். அதாவது 202 டோஸ் தடுப்பூசிக்கான செலவை மாநில அரசே ஏற்க வேண்டும். மாநில அரசே தடுப்பூசி முழுவதையும் கொள்முதல் செய்தால் முறையே ரூ.400/ மற்றும் ரூ.600/ விலைக்கு விற்கப்படும். தனிநபரே, தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொண்டால் முறையே ரூ.800/ மற்றும் ரூ.1200/ செலவு செய்தாக வேண்டும்.
ஒரு டோஸ் தடுப்பூசியை கோவிஷீல்டும், இன்னொரு டோஸ் ஊசியை கோவாக்சினும் போடக் கூடாது என்பது இன்னொரு நிர்ப்பந்தம்.
இவை மட்டுமின்றி ஏகாதிபத்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தடுப்பூசில் செய்து வரும் ஆதிக்கத்திற்கு மோடி அரசு அடிபணிந்தது. இந்தியாவின் தேவையைக் கணக்கில் கொள்ளாமல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த அனுமதித்தது. இதன் விளைவாக, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் மக்கள் தொகையைவிட இரண்டு மூன்று மடங்குகள் அதிகமாக தடுப்பூசி சேமித்து வைக்கப்பட்டுள்ளன. நாமோ தடுப்பூசி இறக்குமதிக்காக ஏகாதிபத்திய நாடுகளை எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த பின்னணியில் தான் தடுப்பூசி தட்டுப்பாடே ஏற்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இல்லை. முதல் டோஸ் கோவாக்சின் போட்டவருக்கு அது கிடைக்கவில்லை. கோவிஷீல்ட் போட்டவருக்கு அது கிடைக்கவில்லை. மக்கள் கையறு நிலையில் நிற்கின்றனர். பாதி கிணற்றை தாண்டிவிட்டு அடுத்தப் பாதிக்கு நகர முடியாமல் நிற்கின்றனர். உயிர் பயம் துரத்துகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு தனியார் மருத்துவமனைகளுக்கு வலுக்கட்டாயமாகத் தள்ளுகிறது.
ஒரு பொருளின் விலையை தீர்மானிப்பதில் தேவைக்கும் (demand) அளிப்புக்கும் (supply) இடையிலானப் பற்றாக்குறையே தீர்மானிக்கிறது என்பது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அரிச்சுவடி. தடுப்பூசியின் தேவை அதிகரிக்கிறது. ஆனால், சந்தையில் தட்டுப்பாடு தீவிரமடைகிறது. அரசின் கைகளில் இருப்பு இல்லை. கார்ப்பரேட் மருத்துவமனைகளில் தடுப்பூசி இருப்பு குவிகிறது. இப்படியாக, இரட்டிப்பு விலை நம்மீது திணிக்கப்படுகிறது.
ஒரு கணக்குக்காக, 50 சதவீதம் பேர் அரசு மருத்துவமனையிலும், எஞ்சிய 50 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி போட்டுக் கொள்வதாகவும்; 50 சதவீதம் பேர் கோவிஷீல்ட், எஞ்சிய 50 சதவீதம் பேர் கோவாக்சின் போட்டுக் கொள்வதாகவும் வைத்துக் கொண்டால் கோவிஷீல்ட் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.35,350/ கோடிகளும், கோவாக்சின் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.75,750/ கோடிகளும் இலாபமாக கிடைக்கும்.
இந்த இலாப விகிதம் மேலும், மேலும் அதிகரிக்குமே அன்றி குறையப் போவதில்லை. ஏனென்றால், கொரோனா தடுப்பூசிகள் தயாரிப்பதற்கானக் காப்புரிமை (patent right) அரசு நிறுவனங்களுக்குக் கூட இல்லை. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளானது ஒட்டுமொத்த பொதுத்துறைகளையே மூடிவிடுவது என்பதாக இருப்பதால், அரசுக்குச் சொந்தமான டஜன் கணக்கான மருந்து/தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களும், ஆராய்ச்சி மையங்களும் செயலற்று நிற்கின்றன.
மே 1-ஆம் தேதி முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்ட தடுப்பூசித் திருவிழா ஊத்தி மூடிக் கொண்டது. இன்று வரை (08.05.2021) 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் இல்லாததால் தமிழகத்தில் திருவிழா’ தொடங்கப்படவே இல்லை. சில வாரங்களுக்கு முன்பு தடுப்பூசித் தயாரிப்பதற்காக மத்திய அரசு ரூ.4500 கோடியை ஒதுக்கியது. அதை வாங்கிக் கொண்டு சென்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் இதுவரை தேவையான உற்பத்தியை அளிக்கவில்லை.
அமெரிக்கா, சீனா, ரசியா போன்ற நாடுகளில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதிலும் உயிரிழப்பை தடுத்து நிறுத்துவதிலும் தடுப்பூசிகள் முக்கியப் பங்காற்றுவதாக சொல்லப் படுகின்றது. இச்சூழலில் இந்தியா என்ற மிகப் பெரிய சந்தையில் தடுப்பூசி தட்டுப்பாடு என்பது உலக மருத்துவக் கார்ப்பரேட்டுகளுக்கு ஒரே கொண்டாட்டமாக உள்ளது.
ரசியாவின் ஸ்புட்னிக் 91 சதவீதம் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. அந்த நிறுவனம் டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடுகிறது. அமெரிக்காவின் மாடர்னா, பைசர் ஆகிய நிறுவனங்களும் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு வரிசையில் நிற்கின்றன. இரு நாட்களுக்கு முன்னர் ஸ்புட்னிக் லைட் – தற்போது இரு டோஸ்கள் குறிப்பிட்ட இடைவெளியில் போடவேண்டும். ஸ்புட்னி லைட் ஒரே டோஸ்மட்டும் போதும் – அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது.
தடுப்பூசிக்கானக் காப்புரிமையை கொடுக்க முடியாது என்று ஆபத்பாண்டவராகவும் கொடைவள்ளலாகவும் அறிமுகப்படுத்தப்பட்ட பில்கேட்ஸ் முகத்திலடித்தாற்போல கூறிவிட்டார். உலகமே அழிந்தாலும் கார்ப்பரேட்டுகள் தங்களின் லபத்தைக் கிஞ்சித்தும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.
மற்றொருபுறம் செங்கல்பட்டில் இருக்கும் ஒருங்கிணைந்த தடுப்பூசித் திட்டத்தின் அடிப்படையிலான தடுப்பூசிகள் தயாரிக்கும் எச்.பி.எல். (Hindustan Biotech Limited) அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசியைத் தயாரிக்க முடியும். ஆனால், இந்த பொதுத்துறை நிறுவனத்தில் மருந்து உற்பத்தி செய்வதற்கு எந்த முயற்சியையும் மோடி அரசு மேற்கொள்ளவில்லை.
படிக்க :
♦ ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றுவோம் || மக்கள் அதிகாரம்
♦ புறவாசல் வழியாக ஸ்டெர்லைட்டை திறக்காதே || மக்கள் அதிகாரம்
ஆக்சிஜன்
தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை 400 மெட்ரிக்டன் தான். அது கையிருப்பில் இருக்கிறது என்று கூறியது எடப்பாடி அரசு. ஆனால், சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வராக பதவி ஏற்ற மு.க.ஸ்டாலினோ 840 டன் ஆக்சிஜன் தேவை என்றும் அதை உடனே மத்திய அரசு நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கோருகிறார்.
மே 4-ம் தேதி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 13 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்துப் போனார்கள். அவர்கள் இறப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறைதான் காரணம் என்று போராடிய மருத்துவர்கள் மீது நவடிக்கை எடுப்போம் என்று அரசு மிரட்டுகிறது. மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை – அதனால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன என்று பல முறை தெரிவித்தும் காதில் போட்டுக் கொள்ளாத மாவட்ட கலெக்டரும் மருத்துவ இயக்குனரும் படுகொலைகளை மூடி மறைத்து விட்டனர்.
முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன்னரே அரசு அதிகாரிகளை அழைத்து பேசத்தெரிந்த ஸ்டாலின், இந்த செங்கல்பட்டு படுகொலைகளைப் பற்றி வாய்திறக்கவே இல்லை. இதுவரை வட நாட்டைப் பார்த்து “ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் சாகிறார்கள் தமிழ்நாட்டைப் பார் சீரும் சிறப்புமாக இருக்கிறது” என்று பெருமைப் பேசியவர்கள் எல்லாம் இச்சம்பவத்தை மூடி மறைத்தார்கள்.
முதல் நாள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்தவர்கள் என்று கூறிய ஊடகங்கள் அடுத்த நாள் முதல் இப்பிரச்சனையைப் பேசாமல் பார்த்துக் கொண்டன. ஏற்கனவே, வேலூரில் 8 பேர், தற்போது செங்கல்பட்டில் 13 பேர் என நடந்துள்ள இந்த கொரோனா படுகொலைகளுக்கு பொறுப்பேற்க யாரும் தயாராக இல்லை. செத்துப்போனவர்களுக்கு நிவாரணம் கூட இல்லை. ஏன் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெறுவதை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்பட்டது எடப்பாடி அரசு என்றால், பதவியெற்றப் பின்னர்தான் வாயே திறப்பேன் என்று ஸ்டாலின் அரசு இருக்கிறது.
ஆக்சிஜன் பற்றாக்குறையை ஈடுகட்ட மத்திய – மாநில அரசுகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்வதற்கு உண்மையாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதே உண்மை.
ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் போதே 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்குத் (எடப்பாடி தலைமையிலான மாநில அரசுக்கு) தெரிவிக்கமாலேயே வெளிமாநிலங்களுக்கு எடுத்து வினியோகம் செய்தது மோடி அரசு. மற்றொருபுறம் ஸ்டெர்லைட் பற்றாக்குறையைக் காரணம் காட்டி, ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு இருக்கிறது.
அரசு அதிகாரிகள், ஓட்டுக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து இந்த ஆலையைத் திறந்து தூத்துக்குடி மக்களுக்கு துரோகமிழைத்துள்ளனர். தமிழக அரசு இந்த ஆலையைக் கையகப்படுத்த வேண்டும் என்று சில முன்வைத்த கோரிக்கையைக் கூட அனைத்து கட்சிகளும் புறக்கணித்தன.
நாடு முழுவதும் உள்ள இரும்பு உருக்காலை, பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்கள், பெல் போன்ற கனரக ஆலைகள் எப்போதும் இடைவிடாமல் ஆக்சிஜன் உற்பத்தியை செய்து வருகின்றன. இந்த ஆலைகளது ஆக்சிஜன் உற்பத்தி இலக்கை போர்க்கால அடிப்படையில் உயர்த்தினால், ஓரிரு நாட்களிலேயே ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க முடியும்.
“ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா” என்கிற மத்திய பொதுத்துறை அமைப்பின் கீழாக இயங்கக் கூடிய சேலம் உருக்காலை, பொகாரோ, பிலாய், ரூர்கேலா, துர்காபூர் பர்ன்பூர் உள்ளிட்ட டஜன் உருக்காலைகள், இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பெட்ரோலிய சுத்திகரிப்பு மையங்கள் நாடு முழுவதும் இருக்கின்றன. இவை எல்லாம் ஆக்சிஜன் தயாரிப்பை எப்போதும் செய்து வருகின்றன. இந்த ஆலைகள் உற்பத்தி செய்யும் ஆக்சிஜன் 99.7 சதவீதம் தரமாகவும் இருக்கின்றன.
ஒருவேளை பொதுத்துறை நிறுவனங்களால் ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாவிட்டால், ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டுமே இயங்கக் கூடிய நிறுவனங்கள் இருக்கின்றன. பிரிட்டன் ஆக்சிஜன் கம்பெனி என்ற பெயருடன் 1935-ல் இந்தியாவில் துவங்கப்பட்ட பன்னாட்டு நிறுவனம், தற்போது லிண்டே இந்தியா லிமிடெட் என்கிறப் பெயரில் நாடு முழுவதும் ஆக்சிஜன் சப்ளை செய்கிறது.
டாட்டா , ஜிண்டால், வேதாந்தா ஸ்டீல் நிறுவனங்கள் மக்கள் ‘நலனுக்காக’ ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்புவதாக பீற்றிக் கொள்கிறார்களே, அவர்களுக்கே ஆக்சிஜன் சப்ளை செய்வது லிண்டே நிறுவனம்தான். சென்னை அம்பத்தூரில் ரூபாய் ஒரு கோடி செலவில் மணி ஒன்றுக்கு 600 மீட்டர் கியூப் அளவுள்ள (வாயுக்களது அளவை மீட்டர் கியூப் என்பர்) ஆக்சிஜன் உற்பத்திக் கூடங்கள் அமைத்திருக்கிறது.
பெரிய மருத்துவமனைகள் சுமார் 1-2 கோடி அளவுக்கு செலவிட்டால் தங்கள் மருத்துவமனைக்குத் தேவையான ஆக்சிஜனை தடை இன்றி உற்பத்தி செய்துவிட முடியும். முதல் லாக்டவுன் கட்டத்தில் மத்திய அரசு அறிவித்த ரூ.35,000 கோடிகள் இதற்கெல்லாம் செலவிடப்பட்டிருந்தால் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்கிற பேச்சுக்கே இடமில்லாமல் போய் இருக்கும்.
இந்த வாய்ப்பை எல்லாம் நீதிமன்றங்களும் பரிசீலிக்கவில்லை. மத்திய-மாநில அரசுகளும் பரிசீலிக்கவில்லை. அரசுகளது நோக்கம் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ஆக்சிஜன் பற்றாக்குறையைக் காட்டி கார்ப்பரேட்டுகளது கல்லாப் பெட்டியை நிரப்புவது எப்படி; ஸ்டெர்லைட் போன்ற கொலைகார கம்பெனிகளுக்கு புத்துயிர் கொடுப்பது எப்படி என்பதுதான்.
பல லட்சம் கோடி கடனில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு கொரோனாவை பயன்படுத்தி கடனையும் அடைத்து, மேலும் பல லட்சம் கோடி சம்பாதித்து விட்டது. இந்த கொரோனா காலக்கட்டத்தில் ஆக்சிஜன் வினியோகத்திலும் முன்னணி நிறுவனமாகி விட்டது. எப்படிப்பட்ட பேரிடரிலும் கார்ப்பரேட்டுகளை வாழ வைக்க வேண்டும் என்பதுதான் அரசின் கொள்கையாக இருக்கிறது.
ஊரடங்கு
கடந்த வருட ஊரடங்கில் லட்சக்கணக்கான வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே சென்றார்கள். செல்லும்போதே செத்துப்போனவர்கள் எத்தனை பேர்? ஜி.எ.ஸ்டி உள்ளிட்ட மக்கள் விரோத பொருளாதாரத் திட்டங்களால் குற்றுயிரும் குலை உயிருமாக இருந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. கடந்த அக்டோபருக்கு பின்னர்தான் கொஞ்சம் கொஞ்சமாக உயிர்த்தெழ ஆரம்பித்த நிறுவனங்கள் மீண்டும் மூடுவிழாவை நோக்கிச் செல்கின்றன.
கடந்த ஆண்டு அனுபவத்தின் படி மருத்துவர்கள் சொல்வதிலிருந்தே பார்த்தால் கொரோனாவை ஊரங்கால் ஒழிக்க முடியாது என்பதுதான். ஊரடங்கு என்பது பெருந்தொற்றை சமாளிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்வதுதான். அதை மத்திய மாநில அரசுகளால் ஒருபோதும் செய்ய முடியாது. கடந்த 30 ஆண்டுகளாக திட்டமிட்டு சீரழிக்கப்பட்ட பொது சுகாதரக் கட்டுமானத்தை மீட்டெடுக்காமல் இப்படிப்பட்ட பெருந்தொற்றை ஒரு போதும் எதிர்கொள்ள முடியாது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்ற ஆண்டு கொடுக்க வேண்டிய உதவித் தொகையில் ஒரு பகுதியாக ரூ.2000-ஐ கொடுப்பதாக அறிவித்துவிட்டு 14 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளார். இந்த 14 நாட்கள் ஒவ்வொரு குடும்பமும் எப்படி தங்களின் பசியாற்றும். சிறுகடைகள், சிறு – குறு நிறுவனங்கள் வைத்திருக்கும் முதலாளிகள் எப்படி தங்கள் கடனை கட்டுவார்கள்?
நான்கு மணி நேரம் கடையைத் திறந்து வைத்திருப்பதன் மூலம் உணவகங்கள், தேநீர்க் கடைகள், பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகள் வைத்திருப்போர் எப்படி வாழ்வார்கள்? அவர்களின் அன்றாட தண்டல் பணம் என்னாவது?
சிறுகடைகளில் வேலை செய்வோர் எலக்ட்ரீசியன்கள், பெயிண்டர்கள், கால்டாக்சி – ஆட்டோ ஓட்டுனர்கள் எப்படி தங்கள் வாழ்க்கையை ஓட்டுவார்கள்? இதைப் பற்றியெல்லாம் எந்த அக்கறையும் இல்லாமல் பிச்சைப் போடுவது போல ரூ.2,000-ஐ தூக்கிப் போட்டுவிட்டு ஊரடங்கிற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதெல்லாம் கொடூர அடக்குமுறை அல்லவா?
கடந்த கொரோனாவில் பாதிக்கப்பட்ட சிறு-குறு நிறுவனங்களுக்கான ஜி.எஸ்.டி ரத்து செய்யப்படவில்லை. ஏனைய மற்ற வரிகளும் – செலவீனங்களும் ரத்து செய்யப்படவில்லை. அந்த நிறுவனங்களில் வேலை செய்த கோடிக்கணக்கானோர் வேலை இழந்தனர். அவர்களுக்கான ஊதியத்தை அரசு வழங்கவில்லை.
பல ஆலைகள் – நிறுவனங்கள் கொரோனாவை சாக்காக வைத்துக் கொண்டு தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்தினார்கள், ஊதியம் அளிக்கவில்லை. இதை இந்த அரசு எதுவும் தட்டிக் கேட்கவில்லை. மொத்தத்தில் ஊரடங்கில் பாதிக்கப்பட்டதும், பாதிக்கப்படப் போவதும் சிறு முதலாளிகளும் உழைக்கும் மக்களும் தான்.
அரசு முற்றிலும் ஆள்வதற்கு தகுதி இழந்து எதிர்நிலை சக்தியாக மாறிப்போய் இருப்பதை, கொரோனாவும் அதன் தடுப்பு நடவடிக்கைகளுமே காட்டுகின்றன. தனியாரமயம்-தாராளமயம், உலகமயக் கொள்கைகள் நடமுறைப் படுத்தப்பட்ட பின்னால், திட்டமிட்டு அனைத்து அரசு நிறுவனங்களும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டும், பொது சுகாதாரக் கட்டமைப்பு சீரழிக்கப்பட்டதால் ஒரு பெருந்தொற்றை எதிர்கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது இந்தியா.

பிரச்சனை இவ்வாறு இருக்க, தமிழ்நாடு மாடல் என்றொரு கருத்தாக்கத்தை பரப்பிக் கொண்டு திரிகிறார்கள் திராவிட ‘வல்லுனர்கள்’. ஏனைய மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னேறியதுதான். ஆனால், அது மக்களின் தேவைக்குப் போதியதாக இருக்கிறதா என்பதை அர்கள் பார்க்கத் தவறுகிறார்கள். செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 செவிலியர்கள் செய்ய வேண்டிய வேலைகளை 1 செவிலியர் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது என்பதுதான் தமிழக மருத்துவக் கட்டமைப்பின் நிலைமை.
கடந்த ஆண்டு தொடர்ச்சியான மக்களதுப் போராட்டங்களுக்குப் பின்னர், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு சில முயற்சிகளில் அரசு தீவிரம் காட்டியது. சில பகுதிகளில் வீடு வீடாக சென்று சோதிப்பதை ஓரளவிற்கு மேற்க்கொண்டது. அதனை முழுவீச்சாகச் செய்யவில்லை. சென்னையைப் பொறுத்தவரை ஏறத்தாழ 10 லட்சம் டெஸ்டுகள் எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. சளி, இருமல், காய்ச்சல் என்ற அறிகுறி இருந்தாலே டெஸ்ட் எடுக்கப்பட்டது. பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தோரை 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப் படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இவ்வருடமோ நிலைமை அதனைவிட மோசமாக உள்ளது. வீடுகளில் வந்து சோதிப்பதும் இல்லை. டெஸ்ட் எடுக்க சென்றால் 3 நாட்களுக்கு மாத்திரை கொடுத்து நான்காவது நாள் காய்ச்சல் இருந்தால் வாருங்கள் டெஸ்ட் எடுக்கலாம் என்கிறார்கள். மையங்களில் கூட்டத்தின் காரணமாக டெஸ்ட் எடுக்க முடியாமல் போவது, வீட்டில் தனிமைப் படுத்தப் படுவோருக்கு எவ்வித மருந்துகளும் கொடுக்காமல் இருப்பது, கிருமி நாசினி தெளிக்காமல் இருப்பதுப் போன்றவைகளும் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருபவைதான்.

கொரோனா பரவல் தீவிரமாக இருந்தாலும், சி.ஏ.ஏ., தொழிலாளர் சட்டத்திருத்தங்கள், சுற்றுச்சூழல் சட்டங்கள், புதிய கல்விக் கொள்கை, மூன்று வேளாண் சட்டங்கள் போன்ற கார்ப்பரேட்-காவி பாசிச நடவடிக்கைகளை மோடி அரசு தொடர்ந்து மேற்கொள்ளவே செய்கிறது. இப்போது நடக்கும் கொரோனாப் படுகொலையின் பின்னணியில், மக்களின் போராடும் உரிமைகளை நசுக்கிவிட்டு, மேலும் இந்தத் திட்டங்களைத் தீவிரமாக மேற்கொள்ளவே செய்யும். அதற்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளையும் தமிழக தி.மு.க அரசு மேற்கொள்ளப் போவதில்லை என்பதை ஸ்டெர்லைட் விசயத்தில் நமக்கு உணர்த்தி விட்டனர்.
மோடி கொரோனாவிலிருந்துப் பாதுகாத்துக் கொள்வது மாநில அரசுகளின் பொறுப்பு என்கிறார். ஸ்டாலின் பொது மக்களின் பொறுப்பாக்கி ஊரடங்கை அறிவிக்கிறார். அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து கொரோனோ தொற்றை கட்டுப்படுத்து வழி இருக்கும்போது, தனியார் மருத்துவமனைகளுக்கு பேமெண்ட் பாக்கி இல்லாமல் செல்ல காப்பீட்டு திட்டத்தை அறிவிக்கிறார் ஸ்டாலின். ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் எதற்கு என்று போராடிய ஸ்டாலின், சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புக்கள் வந்த பின்னர்தான் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக்கை மூடுவதாக அறிவித்தார்.
படிக்க :
♦ கொரோனா கொல்லுதம்மா கொலைகார அரசாலே || மக்கள் அதிகாரம் பாடல்
♦ ஸ்டெர்லைட் ஆலையை திறக்க விடமாட்டோம் || மக்கள் அதிகாரம் பாடல்
ஸ்டாலின் ஆட்சி பொற்கால ஆட்சி என்று பிரச்சாரம் செய்தவர்கள் யாரும் செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் இறந்தவர்களுக்காகக் குரல் கொடுக்கவில்லை. ஸ்டாலின் மீது எவ்வித களங்கமும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகக் கேடயமாக இருந்து தி.மு.க அரசைப் பாதுகாத்து வருகின்றனர்.
மத்திய அரசு கார்ப்பரேட்-காவி அரசு என்றால், அதற்கு மறைமுகமாக சேவை செய்யும் கார்ப்பரேட் நலன் சாரந்த அரசுதான் தமிழக திமுக கூட்டணி அரசு.
தனியாரமயம்-தாராளமயம்-உலகமயத்தின் அடிப்படையிலான அனைத்துக் கொள்கைகளும் பின்வாங்கப்பட வேண்டும். கல்வி, சுகாதாரம், மருத்துவம் போன்ற அடிப்படை விசயங்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அப்படி ஒரு நிலைமையை நோக்கி முன்னேறுவதுதான் நிரந்தர தீர்வாக அமையும்.
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321.