சாம் மாநிலம் பிரம்மபுத்திரா நதியின் பள்ளத்தாக்கில், நவ்காங் என்னும் நகரத்தின் அருகில் அமைந்துள்ள அழகிய கிராமமே புலாகுரி. நவ்காங்கிற்கும் அசாம் மாநிலத்தின் தலைநகரான கவுஹாத்திக்கும் இடையில் நல்ல நீர்ப்போக்குவரத்து இருந்ததாலும் பல்வேறு பயிர்கள் செழிப்பாக அப்பகுதியில் விளைந்ததாலும் நவ்காங் நகரமானது காலனியாதிக்க காலத்தில் முக்கிய வர்த்தகத் தளமாகவும் வேளாண் உற்பத்திக்கு புகழ்பெற்ற இடமாகவும் இருந்தது. அரிசி, சோளம் மற்றும் பல்வேறு பருப்பு வகைகள் அப்பகுதியில் பயிரிடப்பட்டு வந்தன.

இந்தியா கும்பனியாட்சியின் பிடியில் இருந்தபோதே (பிரிட்டிஷின் நேரடி ஆட்சியின் கீழ் வராதபோதே) ஆங்கிலேயர்கள் திணித்த வரிச்சுமையாலும் கும்பனியாட்சியின் கொடூரத்தாலும் விவசாயிகள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வந்தனர்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : தெபாகா எழுச்சி || “வங்காள விவசாயிகள் பேரெழுச்சி” || அபானி லகரி || காமராஜ்
♦ வரலாறு : 1855 சந்தால் வீர எழுச்சி

ஆட்சியாளர்கள் பராமரிக்க வேண்டிய நீர்நிலை மராமத்துப் பணியை கைகழுவிய ஆங்கிலேயர்கள், விவசாயிகளிடமிருந்து வரியைப் பிடுங்குவதில் மட்டுமே மும்மரமாக இருந்தனர். 1852-1853-ஆம் ஆண்டில் அசாமின் நவ்காங் மாவட்டத்தில் மட்டும் சுமார் ரூ. 1,55,651 வரியாக வசூலிக்கப் பட்டிருக்கிறது என்பதிலிருந்து இதன் கொடூரத்தை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.

வரியைப் பிடுங்குவதில் தீவிரம் காட்டிய அரசோ, கொள்ளை நோய்கள், பஞ்சம், வெள்ளம் என இயற்கைப் பேரிடர்களால் மக்கள் சாகும் போதும் விளைபொருள்கள் அழியும் போதும் அதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்காமல் மக்களைச் சுரண்டுவதில் மட்டுமே குறியாக இருந்தது.

1857-ல் வெடித்த மாபெரும் இந்திய விடுதலைப் போராட்டத்தை அடக்கி ஒடுக்கிய பின் – விக்டோரியா மகாராணியின் கீழான – பிரிட்டிஷ் அரசானது, மிகப்பெரிய நிதி நெருக்கடியில் சிக்கியது. இதைச் சமாளிக்க அப்போதைய பிரிட்டிஷ் அரசின் கருவூலத்தின் நிதிச் செயலாளராக இருந்த ‘ஜேம்ஸ் வில்சன்’ என்பவர் சில பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அதன்படி இந்திய மக்கள் மீது, குறிப்பாக  விவசாயிகள் மீது மேலும் அதிக வரிச்சுமை திணிக்கப்பட்டது. இதனால், நாடெங்கும் விவசாயிகளிடையே பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிரான கொந்தளிப்பான சூழல் அப்போது நிலவியது.

அசாமிலும் விவசாயிகள் மீது நிலவரி மற்றும் வருமான வரியையும் அதிகரித்தது பிரிட்டிஷ் அரசு. காடுகளில் எடுக்கக் கூடிய மூங்கில், கரும்பு, மரங்களுக்கும் வரி விதிக்கப்பட்டது.

ஏற்கனவே, காலனியாட்சியில் விவசாயிகளின் துணைத்தொழில் என்று சொல்லப்படும்  நெசவுத் தொழிலும் அழிக்கப்பட்டதால், வரியைக் கட்ட முடியாமல் கடன்பட்டே தங்களது வாழ்க்கையை நடத்தி வந்தனர் அசாம் விவசாயிகள். ஒரு விவசாயி “கடனிலேயே பிறந்து, கடனிலேயே வாழ்ந்து கடனிலேயே மடிகிறான்” என்ற அளவுக்கு கடனில் மூழ்கியிருந்தனர். இதற்கு மாறாக, அவர்களின் விளைபொருள்களுக்கோ அடிமாட்டு விலைதான் சந்தையில் கிடைத்தது.

நவ்காங்கில் ஒரு கிலோ அரிசியை வெறும் நான்கு முதல் ஐந்து பைசாவுக்கே விவசாயிகள் விற்றனர். அதிலும், அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் ஐந்தில் ஒரு பங்கு தொகையைத் தான் விவசாய விளைபொருள்களுக்குக் கொடுத்தனர். இவ்வாறாக ஒருபுறம் வட்டி லேவாதேவிக் கும்பலாலும் மறுபுறம் பிரிட்டிஷ் அரசாலும் ஒட்டச் சுரண்டப்பட்டனர். இந்த நிலையில் பிரிட்டிஷ் அரசு மேலும் வரிச் சுமையைத் திணித்தது எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதாய் அமைந்தது.

அசாம் மாநிலத்தின் முக்கிய விளைபொருட்களான வெற்றிலைக்கும் பாக்குக்கும் வரிபோட முற்பட்டது பிரிட்டிஷ் அரசு.

அசாமில் தேயிலைத் தோட்டங்கள் அமைப்பதற்காக “தரிசு நிலக் கொள்கை” (waste land policy) என்ற ஒன்றைக் கொண்டு வந்து விவசாயிகளின் பசுமையான விளைநிலங்களையும் அதன் பெயரில் அபகரித்தது பிரிட்டிஷ் அரசு. இதனால், அசாம் விவசாயிகள் நிலங்களிலிருந்து விரட்டப்பட்டனர்.

குறிப்பாக அசாமின் விவசாயிகள் மீது இத்தகைய கொடூரமான வரிகள் விதிக்கப்பட்டதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உள்ளது. இத்தேயிலைத் தோட்டங்களில் அப்போது மிகப்பெரிய அளவில் ஆள் பற்றாக்குறை நிலவியது. வெளியூரிலிருந்து வேலைக்கு வந்தவர்களோ அடிக்கடி நோய்வாய்ப்பட்டு இறந்து வந்தனர். உள்ளூரிலேயே குறைந்த கூலிக்கு அடிமைகளாக ஆட்கள் வேண்டும் என்ற தேவையும் பிரிட்டிஷ் அரசுக்கு இருந்தது. எனவே, வரிகளை உயர்த்துவதன் மூலம் விவசாயிகள் நசிந்து கூலிகளாக வருவார்கள் என்றும் கணக்குப் போட்டது பிரிட்டிஷ் அரசு.

அனைத்து வழிகளிலும் ஒட்டச் சுரண்டப்பட்ட விவசாயிகள் வேறு வழியின்றி, தங்கள் வாழ்க்கைத் தேவைக்கான இறுதி வழியாக அபினிப் பயிரிடுவதை மேற்கொண்டனர். ஆனால், 1861-ல் பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்த  அபினிக் கொள்கையின் படி, விவசாயிகள் தாமாக அபினியை உற்பத்தி செய்யக் கூடாது என்றும் அரசுதான் அபினியை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் என்றும் கூறியது. இப்படி அபினி உற்பத்தி செய்ததன் மூலம் ஆங்கிலேயர்கள் அடித்த கொள்ளைக்கு அளவே கிடையாது என்பது தனிக்கதை.

இவை அனைத்தாலும் பிரிட்டிஷ் அரசுக்கெதிரான அசாமியர்கள் நெஞ்சில் கனன்ற தீ 1861-இல் நவ்காங்கிலும், 1868-1869-இல் காம்ரப்பிலும் (Kamrup), 1893-1894-இல் தர்ரங்கிலும் (Darrang) விவசாயிகளின் கிளர்ச்சிகளாக வெடித்தது.

செப்டம்பர் 17, 1861 அன்று பல்வேறு பகுதிகளிலிருந்து 1,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புலாகுரிக்கு அருகில் உள்ள நாம்கர் என்னும் கோயிலின் அருகே கூடினர். நிலம், வீடு, தோட்டம், விளைபொருட்கள் ஆகியவற்றின் மீது விதிக்கப்பட்ட கொடிய வரிகளை எதிர்த்தும், தங்களது கடைசி போக்கிடமாக இருந்த அபினி சாகுபடியைத் தடை செய்ததை எதிர்த்தும் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விவசாயிகளின் அனைத்து வாழ்வாதார அடிப்படைகளையும் பறித்துவிட்டு, அவர்களை அபினி சாகுபடியை நோக்கித் தள்ளிய பிரிட்டிஷ் அரசு, விவசாயிகளின் போராட்டத்தை அபினி உண்பவர்களின் போராட்டம் என கொச்சைப் படுத்தியது.

இக்கொடிய வரிவிதிப்பு முறைகளை இரத்து செய்யுமாறு கோரி மனு அளிக்க, அங்கிருந்து நீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். ஆனால், நீதிமன்றமோ போராடுபவர்களை சிறையிலடைத்தும் தண்டம் விதித்தும் அவமதித்தது. இதனால், விவசாயிகள் மேலும் ஆத்திரமடைந்தனர். போர்க்குணம் கொண்ட விவசாயிகள் இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென எண்ணினர்.

அக்டோபர் மாதம் விவசாயிகள் ஒன்றுக்கூடி கூட்டம் நடத்தி, பிரிட்டிஷ் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது என முடிவெடுத்தனர். காலனியாட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் விவசாயிகளிடமிருந்துதான் தொடங்கியதே அன்று காந்தியிடமிருந்து அல்ல. தொலைதூர கிராமத்திலுள்ள விவசாயிகளும் பங்குபெற வேண்டும் என்பதற்காக இக்கூட்டம் ஐந்து நாட்களாக நடத்தப்பட்டது. இது ராய்ஜ் மெல் (மக்கள் மன்றம்) என்று அழைக்கப்பட்டது.

ராகா, ஜாகி, காய்கர் மெளசா, பிரபுஜியா, சப்பாரி, காம்பூர், ஜமுனாமுக் (Raha, Jagi, Kahighar mouza, Barpujia, Chapari, Kampur, Jamunamukh) ஆகிய பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் இதில் பங்கெடுத்தனர். அக்டோபர் 15-ம் தேதியன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று கூடினர். அவர்களில் பெரும்பாலோர் (கம்பு, தடிகள் உள்ளிட்ட) ஆயுதந்தாங்கியிருந்தனர்.

அக்டோபர் 17 அன்று, பல்வேறு கிராமங்களிலிருந்து நாலாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்றுகூடினர். இக்கூட்டத்தைக் கலைக்க பிரிட்டிஷ் அரசு ஒரு படைப்பிரிவை அனுப்பியது. ஆனால், ஆங்கிலேயர்களின் அப்படை விவசாயிகளால் விரட்டியடிக்கப்பட்டது.

பல உள்ளூர் மன்னர்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிரான காலனியாதிக்கத்துக்கு எதிரான இந்தக் கிளர்ச்சியில் பங்கெடுத்தனர். இப்படி மக்கள் ஒன்றிணைவதைக் கண்ட போலிசு கூட்டத்தைக் கலைக்க அதன் தலைவர்களில் சிலரை அதே நாளில் கைது செய்தது. மேலதிகாரிகளின் உத்தரவின்பேரில் அங்கு சென்ற சிங்கர் என்னும் ஆங்கிலேய அதிகாரியிடம் போராடும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

ஆனால், அந்த அதிகாரியோ ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு கலைந்து செல்லுமாறு கட்டளையிட்டான். விவசாயிகளோ மிரட்டலுக்கு அடிபணியாமல் எதிர்த்து நின்றனர். சிங்கர் விவசாயிகளிடமிருந்து கம்பு, தடிகளைப் பறிமுதல் செய்ய முயற்சித்தபோது ஏற்பட்ட மோதலில் அந்த அதிகாரி கொல்லப்பட்டு கலாங் என்ற ஆற்றில் தூக்கியெறியப்பட்டான். இதைக் கண்டு பீதியடைந்த பிரிட்டிஷ் போலிசு அங்கிருந்து தப்பியோடியது.

சிங்கர் கொல்லப்பட்ட செய்தி நவ்காங் நகரெங்கும் பரவியது. சிங்கர் கொல்லப்பட்டதைச் சாக்கிட்டு, கிளர்ச்சியை நசுக்க மாவட்ட நீதிமன்றம், ஹாலந்தர் பரோவ் ஆங்கிலேய அதிகாரி தலைமையில் படையை அனுப்புகிறது. நகருக்குள் நுழைந்த படைகள் போராடும் விவசாயிகளை ஈவிரக்கமின்றிச் சுட்டதில் பலர் உயிர் துறக்கிறார்கள், சிலர் படுகாயமடைகிறார்கள். இதைக்கண்டு விவசாயிகள் அஞ்சவோ பின்வாங்கவோ இல்லை.

ஆங்கிலேயர்களின் துப்பாக்கிகளை எதிர்த்து தங்களின் வில், அம்பு, தடிகளுடன் வீரப்போர் புரிகிறார்கள் விவசாயிகள். எனினும், ஆங்கிலேய காலனியாதிக்க அரசை எதிர்த்து விவசாயிகள் நடத்திய இந்த மாபெரும் கிளர்ச்சி, இறுதியாக இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.

அக்டோபர் 23-ம் தேதி 100 சிப்பாய்களுடன் புலாகுரிக்கு வந்த அசாம் ஆணையர் ஜெனரல் ஹென்றி ஹாப்கின்சன் ரகா, புலாகுரி பிராந்தியத்தில் ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டான். புலாகுரி, நவ்காங் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுக்க உள்ள விவசாயிகளைத் தேடித் தேடிக் கைது செய்து, உணவு – தண்ணீர் வழங்காமல் அவர்களைக் கொடிய சிறையில் அடைத்தான். அவன் செய்த கொடுமைகளால் மக்கள் படும் துயரம் கண்டு கலக்கமடைந்த எழுச்சியின் தலைவர்கள் ஆங்கிலேய அரசின் முன் சரணடைந்தனர்.

லெப்டினன்ட் சிங்கரைக் கொன்றதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். லாலங் ராஜா என்ற மன்னனின் மகன்கள் உட்பட 41 பேர் சிங்கரைக் கொன்றதற்குக் காரணம் என நவ்காங் சிறையில் தூக்கிலிடப்பட்டனர். மற்ற தலைவர்கள் அந்தமான் தீவுகளுக்கு நாடுகடத்தப்பட்டனர்.

டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளை மோடியும் அவரது பரிவாரத்தைச் சேர்ந்தவர்களும் “பஞ்சாப், ஹரியான விவசாயிகள்  மட்டும்தான் போராடுகிறார்கள்” என்று எப்படிக் கொச்சைப் படுத்தியதோ அப்படித்தான் அன்று பிரிட்டிஷ் அரசும் செய்தது.  நவ்காங் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் சேர்ந்து நடத்திய இப்போராட்டத்தை, “சில பழங்குடி இனத்தவர்கள் மட்டும் நடத்தும் போராட்டம்” என்றும் “அபினி உட்கொள்பவர்களின் கலகம்” என்றும் கொச்சைப் படுத்தியது.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் 1946 – 1951
♦ நெவாலி : மராட்டியத்தில் மீண்டும் ஒரு விவசாயிகள் எழுச்சி !

ஆங்கிலேயர்களின் நவீன ஆயுதங்களையும் துருப்புகளையும் எதிர்த்து வில், அம்புடன் நடத்திய இக்கலகம் அப்போது தோற்கடிக்கப் பட்டிருக்கலாம். ஆனால், அசாமில் காலனியாட்சிக்கு எதிராக அடுத்தடுத்து எழுந்த விவசாயிகளின் கிளர்ச்சிக்கு இது உந்து சக்தியாகத் திகழ்ந்தது.

நாம் வரலாற்றுப் புத்தகங்களில் கேள்விப்பட்டிராத இக்கலகம் நடந்து 160 ஆண்டுகள் ஆகின்றன. இன்று சிங்கர், ஹாலந்தர் பரோவ் இடத்தில் மோடி-அமித்ஷா கும்பலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் இடத்தில் அமெரிக்க மேல்நிலை வல்லரசும் நிற்கின்றன. டெல்லியை முற்றுகையிட்டு நிற்கிறார்கள் புலாகுரி தியாகிகளின் வாரிசுகள். போர்  இன்னும் முடியவில்லை !

தீரன்
செய்தி ஆதாரங்கள் : அசாம் விவசாயிகள் போராட்டம், புலாகுரி உழவர் எழுச்சி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க