டந்த சில நாட்களாக பத்ம சேஷாத்திரி பள்ளியில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு கொடுத்த வந்த பாலியல் தொல்லைகள் வெளிவந்து, தமிழகம் முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு பள்ளிகளில் இதுவரை நடந்து கொண்டிருந்த பாலியல் துன்புறுத்தல்கள் வெளிச்சத்துக்கு வர தொடங்கி இருக்கிறது.

இதில் சிக்கி வரும் பள்ளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில், சுமார் 60 ஏக்கரில் அமைந்துள்ளது சுஷில் ஹரி பள்ளியில் சிவசங்கர் பாபா என்ற பொறுக்கி கடவுளின் பெயரால் நடத்தி வந்த பாலியல் வெறியாட்டங்கள் அம்பலமாகியுள்ளது. இப்பள்ளியில் படித்த / படித்துக் கொண்டிருக்கிற மாணவிகள் சமூக வலைத்தளங்களில் தங்கள் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

படிக்க :
பத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன? தீர்வு என்ன?
பதம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சொல்ல முடியுமா ? சங்கிகள் தர்க்கம் || நெல்லை மக்கள் அதிகாரம்

பெயரளவில் தான் இது ஒரு பள்ளி, மற்றப்படி ஒரு மடம் போலத்தான் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் நிர்வாகத் தலைவர்தான் சிவசங்கர் பாபா. ‘நான் தான் கடவுள்’ என்று பிதற்றிக் கொண்டு பள்ளியில் படித்து வரும் பல மாணவிகளை தன்னுடைய இச்சைக்காக பல ஆண்டுகளாக சீரழித்து வந்துள்ளான்.

ஆன்மிகம் என்ற பெயரில், “நான் தான் கடவுள் கிருஷ்ணர்” என்றும், தான் சீரழிக்க நினைக்கும் மாணவியை “கோபிகா” என்றும் அழைத்து, தன்னோடு உடலுறவு வைத்துக் கொண்டால் தான் வாழ்வில் முக்தி கிடைக்கும் என்று கூறி பல மாணவிகளை சீரழித்துள்ளான் இந்தப் பொறுக்கி. பிரைமரி பெண் குழந்தைகள் முதல் 12 வகுப்பு மாணவிகள், அங்கு வேலை செய்யும் ஆசிரியர்கள், அங்கு வரும் பக்தர்கள் வரை அனைவரையும் சீரழித்துள்ளான் இவன்.

பள்ளி வளாகத்திலேயே இவனுக்கென்று ஒரு சொகுசு பங்களா உள்ளது. ஆசைப்படும் பள்ளி மாணவிகளை அந்த பங்களாவுக்குள் அழைத்து வந்து விலையுயர்ந்த சாக்லேட்டுகள், மது பானங்களை காட்டி சம்மதிக்க வைப்பதையும், தப்பித்து செல்ல நினைக்கும் மாணவிகளைக் கட்டாயப்படுத்துவதையும் செய்துள்ளான்.

மற்ற இன்டர்நேஷனல் பள்ளிகளை விட இங்கு ஓரளவு கட்டணம் குறைவு என்பதால் நடுத்தர வர்க்கத்தினர் இப்பள்ளியில் தம் குழந்தைகளை சேர்க்கின்றனர். இதையே காரணமாக வைத்து அந்தத் குழந்தைகளின் பின்புலத்தை அறிந்து கொண்டு அவர்களை தன் இச்சைக்கு பலியாக்கியுள்ளான்.

தேர்வு எழுதச் செல்லும் மாணவிகளைக் கட்டியணைப்பது, முத்தமிடுவது, தவறாக தீண்டுவது ஆகியவற்றோடு மாணவிகளை தன்னோடு “கும்பல் பாலியல் உறவு” (Group Sex) வைத்துக்கொள்ளுமாறும் கட்டாயப்படுத்தியுள்ளான்.

இப்படி மாணவிகளை இவனது இச்சைக்கு பலியாக்கும் கேடுகெட்ட வேலையில், அந்த பள்ளியின் சில ஆசிரியர்களே ஈடுபட்டுள்ளனர். அங்கு பாபாவின் பக்தர்கள் என்று சொல்லப்படும் பலர்தான் ஆசிரியர் பணியில் உள்ளனர். ஆசிரியர் பணிக்கு வெளியில் இருந்து வருபவர்கள் பாபாவின் துன்புறுத்தலால் வேலையை விட்டுவிட்டுச் சென்று விடுகின்றனர்.

ஒருநாள் ஒரு பள்ளி மாணவியை சிவசங்கர் கட்டாயப்படுத்தி பங்களாவுக்குள் வைத்து பாலியல்வன்முறை செய்துள்ளான். அந்த மாணவி அழுது கொண்டே வெளியே வருவதை சக மாணவர் பார்த்துள்ளார். இந்த விவகாரம் பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வரவே பள்ளியை இரண்டு மாதம் இழுத்து மூடியுள்ளனர். அந்த மாணவன் விஷயத்தை வெளியே சொல்லி விடுவானோ என்று பயந்த பள்ளி நிர்வாகம் மாணவனை ஒரு வழி ஆக்கியுள்ளது. தேர்வு எழுதவிடாமல், மாணவன் மீது பொய்யான புகாரை சொல்லி பள்ளியை விட்டு வெளியேற்ற முயன்றுள்ளது.

சிவசங்கரின் இச்சைக்கு இணங்காத மாணவிகளுக்கு தொடர்ந்து டார்ச்சர் கொடுப்பதும், பெற்றோர்கள் இதைப்பற்றி கேள்விக் கேட்டால், கேள்வி கேட்ட பெற்றோர்களின் பிள்ளைகளை மிரட்டுவது. சிலருக்கு டி.சி. கொடுத்து பள்ளியை விட்டு வெளியே அனுப்புவது இவையே அங்கு நடைமுறை.

ஒரு பள்ளியில் பல ஆண்டுகளாக இவ்வளவு கொடூரமான பாலியல் வன்முறைகள் நடந்து வந்துள்ளது. ஆனால், இதைப் பற்றி யாரும் பேச முன்வராதது ஆச்சரியபடுத்துவதற்கு இல்லை. அந்தளவுக்கு பாபாவின் அரசியல், அதிகார பலம் அனைவரையும் வாயடைத்து போகச் செய்துள்ளது. பாசிச பா.ஜ.க. கும்பலுடன் நெருக்கமாக உள்ளதால், எந்த அச்சமுமின்றி துணிச்சலுடன் இதுபோன்ற பொறுக்கித்தனங்களை அரங்கேற்றி வந்திருக்கிறான் சிவசங்கர் பாபா.

தமிழக பள்ளிக்கூடங்களில் தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அம்பலமாகி வருவதைக் கண்டு தமிழ்நாடே அதிர்ந்துபோயுள்ளது. இந்த மோசமான நிலைமையைப் போக்குவதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யமொழி அவர்கள் தனது நேர்காணல் ஒன்றில், “பள்ளிகளில் பெண் ஆசிரியைகளை தலைமையாகக் கொண்டு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளோம்” என்று பேசியுள்ளார். இது போன்ற நடவடிக்கைகள் எக்காலத்திலும் தீர்வை அளித்தது இல்லை.

மாநில அளவில் உயர்அதிகாரிகளின் இச்சைக்காக, மாணவிகளை வற்புறுத்திய அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி பெண்தான். ஆகவே பெண்களை வைத்து விசாரணைக் குழு வைப்பது எல்லாம், வெண்ணையை வைத்து கொக்கைப் பிடிக்கும் கதை தான்.

இந்தக் குற்றக் கும்பலைப் பாதுகாப்பது முழுக்க முழுக்க அதிகாரவர்க்கம் தான். நிர்மலாதேவி விவகாரத்திலேயே இது அப்பட்டமாக அம்பலமானது. அத்தகைய அதிகாரவர்க்கக் கும்பலை எதிர்த்து பெண் ஆசிரியைகள் முடிவெடுத்து செயல்பட்டுவிட முடியுமா என்ன ?

பி.எஸ்.பி.பி. பள்ளி விவகாரம் வெடித்தபோது, டிவிட்டரில் பதிவிட்ட ஒருவர் “கிரிஜா மேடம் (எஸ்.வி.சேகர் உறவினர் – முன்னாள் தலைமைச் செயலர்) இருந்திருந்தா இப்படி நடந்திருக்காது” என்று பதிவிட்டது, சிவசங்கர் பாபாவுக்கு எதிரான புகார்களைப் பெறமறுத்து கேளம்பாக்கம் போலீசு நிலைய அதிகாரிகள் துணைநின்றது ஆகியவை எல்லாம் இதற்கான ஒருசில உதாரணங்கள்.

கல்வி நிலையங்களில் மாணவர்கள் இளைஞர்களின் சங்கங்கள், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களை உள்ளடக்கிய சங்கங்கள் நிறுவப்பட வேண்டும். அவை முழுச் சுதந்திரத்துடனும் ஜனநாயகத்துடனும் செயல்பட வேண்டும். இச்சங்கங்களின் மூலம் மாணவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.

படிக்க :
♦ நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் ஒரு பாலியல் பொறுக்கி – ராஜேஷ் பாரதி
♦ உ.பி-யில் தொடரும் அவலம் : 19 வயது தலித் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை !

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும், கண்டுகொள்ளாமல் விடும், தனியார் பள்ளிகளை சீல் வைத்து, அரசு தன் பொறுப்பில் எடுத்து நடத்த வேண்டும். மாணவர்கள் தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் மாணவர் – பெற்றோர் – ஆசிரியர் சங்கங்களின் ஒப்புதலோடுதான் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதற்கான போராட்டங்களையும் முயற்சிகளையும் முன்னெடுக்கும்போதுதான் கல்வி நிலையங்களை பாலியல் பொறுக்கிகளின் கைகளில் இருந்து நாம் மீட்கமுடியும்.


மதி
செய்தி ஆதாரம் : நக்கீரன் (ஜீன் 5 – 8) 2021

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க