உத்தரப்பிரதேச பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. எப்படி வெற்றிபெற்றது. அதன் அர்த்தம் என்ன?

த்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் மொத்தமுள்ள 75 பதவிகளில் 67 இடங்களை பா.ஜ.க.வும் சமாஜ்வாதி கட்சி ஆறு இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றி பா.ஜ.க.-வுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

உண்மையில் அப்படித்தானா என்பதைப் பார்க்கலாம். இது தொடர்பாக பிபிசி-யின் இந்தி சேவையின் செய்தியாளர் சமீரத்மஜ் மிஸ்ரா ஒரு விரிவான கட்டுரையை எழுதியுள்ளார். அதன் சுருக்கமான மொழிபெயர்ப்பைப் படித்தால், இந்த வெற்றியின் அர்த்தம், அதன் பின்னணியை புரிந்துகொள்ளலாம்.

படிக்க :
♦ உ.பி : “ஜெய் ஸ்ரீராம்” சொல்லக் கூறி முசுலீம் முதியவர் மீது காவிக் குண்டர்கள் தாக்குதல்!
♦ உ.பி : போலீசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக கவுன்சிலர் || நாளை தமிழகத்தில் ??

மொத்தமுள்ள 75 இடங்களில் 22 இடங்களில் போட்டியின்றி தலைவர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். அதில் 21 இடங்கள் பா.ஜ.க-வுக்கும் 1 இடம் சமாஜ்வாதி கட்சிக்கும் கிடைத்தது. மீதமுள்ள 53 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டதில் 46 இடங்களைப் பா.ஜ.க.-வும் ஐந்து இடங்களை சமாஜ்வாதி கட்சியும் ஒரு இடத்தை ஆர்.எல்.டி.-யும் ஒரு இடத்தை ஜன்சட்டா தளமும் வென்றிருக்கின்றன.

அடுத்த ஆண்டு அங்கு சட்டமன்றத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்த வெற்றிகளை வைத்துப் பார்க்கும்போது மீண்டும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்குமென்றே பலர் கூறிக் கொள்கின்றனர். ஆனால், அது அப்படியில்லை. நடந்து முடிந்த பஞ்சாயத்து தலைவர் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்கவில்லை. ஏற்கனவே தேர்வுசெய்யப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களே வாக்களித்தனர்.

இங்குதான் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான தேர்தல் நடந்தபோது மொத்தமுள்ள 3052 இடங்களில் பா.ஜ.க. 603 இடங்களையே பிடித்தது. மாறாக எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி 842 இடங்களில் வெற்றிபெற்றது.

பெரும்பான்மையான இடங்களை சுயேச்சைகளே கைப்பற்றினர். இந்த சுயேச்சைகள்தான் இப்போது பா.ஜ.க.-வால் விலைக்கு வாங்கப்பட்டு, பெரும்பாலான தலைவர் பதவிகளை பா.ஜ.க. கைப்பற்றியிருக்கிறது.

இந்தத் தேர்தலில் பா.ஜ.க.-வை எதிர்த்து காங்கிரசும் சமாஜ்வாதி கட்சியும் வேட்பாளர்களை நிறுத்தின. ஆனால், பெரும்பாலன இடங்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களையே நிறுத்தவில்லை.

“இந்தத் தேர்தலை செமி – பைனல் என்றெல்லாம் சிலர் சொல்கிறார்கள். மக்களே வாக்களிக்காதபோது அதை எப்படி செமி – ஃபைனல் என்று சொல்லலாம்? வேண்டுமானால் ஜில்லா பஞ்சாயத்துத் தேர்தலை செமி – ஃபைனல் என்று சொல்லலாம். அதில் பெரும்பலான இடங்களை சமாஜ்வாதி கட்சிதான் பிடித்தது. அரசின் ஆதரவுடன்தான் இம்மாதிரி தேர்தல்கள் வெல்லப்படுகின்றன” என்கிறார் உ.பியைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான சித்தார்த் கலகன்ஸ்.

தவிர, இந்தத் தேர்தல்களில் பா.ஜ.க. பெரும் முறைகேட்டில் ஈடுபட்டதாக எஸ்.பி-யும் காங்கிரசும் குற்றம்சாட்டுகின்றன. பா.ஜ.க-வுக்கு ஆதரவாக வாக்களிக்க ஒவ்வொரு சுயேச்சை உறுப்பினருக்கும் லட்சக் கணக்கில் பணம் தரப்பட்டது. ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் வெற்றிபெற்ற சுயேச்சைகள் உடனடியாகக் கடத்தப்பட்டு, தலைவர் தேர்தல் முடியும் வரை பா.ஜ.க-வின் பிடியில் வைக்கப்பட்டிருந்தனர்.

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம், கடந்த மூன்று முறையும் சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாகவே பஞ்சாயத்துத் தலைவர் தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. மூன்று முறையும் எந்தக் கட்சி அதிக இடங்களைப் பிடித்ததோ, அந்தக் கட்சி தோல்வியைச் சந்தித்திருக்கிறது.

“2010-ம் ஆண்டில் மாயாவதியின் பி.எஸ்.பி பெரும்பாலான தலைவர் பதவிகளைக் கைப்பற்றியது. ஆனால், 2012-ம் ஆண்டில் பெரும்தோல்வியடைந்தது அக்கட்சி. 2016-ஆம் ஆண்டில் சமாஜ்வாதி கட்சி பெரும்பாலான தலைவர்கள் பதவிகளைக் கைப்பற்றியது. ஆனால், 2017-ம் ஆண்டில் பெருந்தோல்வியைச் சந்தித்தது. இப்போது பா.ஜ.க. கைப்பற்றியிருக்கிறது.” என்கிறார் சித்தார்த்.


முரளிதரன் காசி விஸ்வநாதன்
முகநூலில் : K Muralidharan
disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க