தோழர் திசை கர்ணன் படத்திறப்பு !

தோழரின் படத்திறப்பு நிகழ்வுக்கு மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் குருசாமி தலைமை தாங்கினார்.

முதல் நிகழ்வாக தோழர் திசை கர்ணனின்  உருவப் படத்தை திறந்து வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

“அமைப்பில் தோழர்கள் வந்து இணைவது பல வழிகளில் நடக்கிறது உதாரணத்திற்கு தொழிற்சங்கத்தில் பாதுகாப்பு என சிலர் சேர்வார்கள்; பின்பு அரசியலையும் ஏற்றுக் கொண்டு செயல்படுவார்கள்; ஆனால், மக்களின் நலனுக்காக சொந்த வாழ்க்கையை விட்டு விட்டு வருபவர்கள் சிலர்; அதில் தோழர் திசை கர்ணன் ஒருவர். அமைப்பு வேலை பார்ப்பதற்குதான் பார்த்து வந்த சொசைட்டி வேலை தடையாக இருந்ததால் அதை தூக்கிப் போட்டுவிட்டு வந்தவர்.

இந்தப் பகுதியில் அமைப்பு செல்வாக்கடைய முன்னின்று உழைத்தவர்களில் தோழர் திசை கர்ணனுக்கு முக்கியப் பங்குண்டு. பல்வேறு நாடகங்களாகவும் பாடல்களாகவும் மக்களுக்கான போராட்டங்களின் மூலமாகவும் அரசியலை மக்களிடம் கொண்டு சென்றார். தோழரின் இறப்பு மிகவும் கடினமானது. தோழர் விட்டுச்சென்ற இலட்சியத்தை எடுத்துச் செல்வோம்” என்று தோழர் குருசாமி தனது தலைமை உரையை முடித்தார்.

படிக்க :
♦ உசிலம்பட்டி தோழர் திசை கர்ணனுக்கு சிவப்பஞ்சலி || மக்கள் அதிகாரம்
♦ தோழர் அம்பிகாபதி இறுதி அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் || மக்கள் அதிகாரம்

தோழர் திசை கர்ணனின் 40 ஆண்டுகால புரட்சிகர இயக்கத்தில் செயல்பாடு; மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மறைந்த தோழர் சம்புகன், தோழர் அம்பிகாபதி ஆகியவர்களை நினைவு கூர்ந்தார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மூத்த தோழர் கதிரவன். பின்பு அவர் பேசும்போது, “தோழர் திசை கர்ணன் பலமுறை சிறை சென்றவர்; அதில் ஒரு வழக்கில் 15 வருடம் சிறையில் இருந்தவர். பலமுறை நான் சிறை சென்று அவரை பார்த்தபோது அமைப்பும் அதன் நிலைமைகள் பற்றியும் தொடர்ந்து விசாரிப்பார். 1982-ல் ஆரியபட்டி பகுதியில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பு தொடங்க முன் நின்றவர்களில் தோழர் ஒருவர்.

பல்வேறு மக்கள் பிரச்சனைகளில் தோழர் முன்னின்று உற்சாகமாக செயல்பட கூடியவர்; அதில் ஒன்று தோழரின் ஊர் பகுதியில் ஆதிக்கச் சாதிவெறியர்கள் சாதாரண மக்கள் மத்தியில், “முதல் நாடு எது? திடியனா ? வாலாந்தூரா ?” எனப் பேசி வெறுப்பை தூண்டிய போது, தோழர் திசை கர்ணன் ஆதிக்கசாதி வெறியர்களின் வாயை அடைக்கும் வகையில் களத்தில் இறங்கினார். உலகில் பல்வேறு நாடுகளை அடிமைப்படுத்தும் அமெரிக்காதான் முதல் நாடாக இருக்கிறது என்றும், அதனால் பயனில்லை என்றும் சாதியவாதிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரச்சாரம் போஸ்டர், பொதுக்கூட்டம் என மக்கள் மத்தியில் வீச்சாக கொண்டு சென்று அம்பலப்படுத்தினார்.

கீழ்வெண்மணி படுகொலையைக் கண்டித்து தங்கள் பகுதியில் ஊன்றி நின்று  போராடியவர். தோழரின் இழப்பு மக்களுக்கும் அமைப்புக்கும் பேரிழப்பு; தோழர் விட்டுச்சென்ற பணிகளை தொடர்வோம்” என பேசி முடித்தார்.

“36 வருடமாக தோழருக்கும் எனக்கும் இருந்த அரசியல் ரீதியான உறவு, நான் பார்த்த வகையில் கடினமான தருணத்திலும் நியாயம் நேர்மைக்கு உறுதியாக நிற்பவர். தான் வேலை பார்த்த சொசைட்டியில் ஏதாவது தவறு நடந்தால், அது அமைப்பிற்கு கெட்ட பெயர் என்பதால் அந்த வேலையை விட்டு வந்தவர். தோழர் ஊர் பஞ்சாயத்தில் போய் நின்றார் என்றால், சாதி ஆதிக்கவாதிகளுக்கு நடுக்கம் ஏற்படும். ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான அடக்குமுறைக்கு எதிராக கடினமாக நின்று போராடியவர். தோழரின் 15 வருட சிறைவாழ்க்கை மிகவும் கடினமானது. தோழரின் பெயர் இந்த ஊர் இருக்கும் வரைக்கும் நிலைக்கும்” என்று வழக்கறிஞர் நடராஜ் உரையாற்றினார்.

தோழரின் சொந்த கிராமம் அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த முத்துக்கருப்பன், ரவி, சிவகாமு ஆகியோர் தோழர் திசை கர்ணன் பற்றியான உளப் பதிவுகளை பதிவு செய்தனர்.

“தோழர் திசை கர்ணனுக்கும் எனக்கும் வயது வித்தியாசம் அதிகம் அவருடைய மகன் வயது எனக்கு தோழர் உடைய இறப்பு என் அப்பா இறந்தால் ஏற்படும் வருத்தத்தை விட அதிகமானது ஏனென்றால் தோழர் வெளிப்படையாக ஓர வஞ்சனை இல்லாமல் உறுதியாக பேசக்கூடியவர். தோழர் பஞ்சாயத்தில் பேசினால் சரியாக இருக்கும் என ஊர் மக்கள் பேசிக் கொள்வார்கள்; அதைப் பார்த்துதான் நான் இந்த அமைப்பின் மீது ஆர்வம் ஆனேன்; இணைந்து பணியாற்றினேன். “இன்று ஊர் பணம் 10 லட்சத்தை பெரும் முதலைகள் முழுங்கி விட்டார்கள், கேள்வி கேட்க தோழர் திசை கர்ணன் இல்லையே” என்று ஊர் மக்கள்  பேசுவதை பதிவு செய்தார் தோழர் முத்துக்கருப்பன்.

“தோழர் திசை கர்ணன் 15 வருடமாக சிறையில் இருந்தவர். அங்கு தோழர் தொடர்ச்சியாக அரசியல் பேசக்கூடியவர். அந்த செல்வாக்கை நாங்கள் சிறைக்கு செல்லும் போது மற்றவர்கள் தந்த மரியாதையில் இருந்து புரிந்து கொண்டோம். சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் தோழர் கொள்கையில் ஊன்றி நின்றார். தற்போது அமைப்பிலிருந்து சீர்குலைவுவாதிகள் வெளியேறியபோது நாங்களெல்லாம் குழம்பிப்போயிருந்த சூழ்நிலையில் அதற்கெதிராக முதலில் கருத்து சொன்னதும் தோழர் தான்.” இறுதியாக தோழர் திசை கர்ணன் எழுதி வைத்திருந்த வசனத்தை “உடல் நோகாமல் வராது புரட்சி” என சொல்லி முடித்துக்கொண்டார் தோழர் ரவி.

“ஊரில் வெண்மணி படுகொலையின் நாடகத்தை மிக அருமையாக நடத்தினார்கள்; அதுதான் என்னை அவர்கள்பால் ஈர்த்தது. குடும்பம், வேலை என குறுக்கி பார்த்து வாழும்  வாழ்க்கையை விட்டு விட்டு மக்களுக்காக நாட்டிற்காக போராடும் நல்ல மனிதர்களின் செயல்பாடுதான் நாளை வரலாறு ஆகிறது; தோழர் திசைக் கர்ணனின் செயல்பாடுகள் வரலாறுதான். தோழர் கடைசிவரை கொள்கைக்காக உறுதியாக நின்றவர் என்பதை பதிவு செய்து சென்றார் தோழர் சிவகாமு.

“காவிரி பிரச்சனையின் போது நாங்கள் 20 பேர் சிறை சென்று மூன்று நாட்கள் உள்ளே இருந்தோம். அப்போதும் சில தோழர்கள் எப்போது ஜாமீன் கிடைக்கும் என கேட்பார்கள்; எதற்காக இதை சொல்கிறேன் என்றால் தோழரின் 15 வருட சிறை வாழ்க்கை மிகவும் கொடியது. அதை உறுதியாக எதிர்கொண்டவர் தோழர்; அந்தப் பண்பை தோழரிடம் இருந்து மற்றவர்கள் வரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தோழர் திசைக் கர்ணனை போன்று பலரையும் நாம் உருவாக்க வேண்டிய பொறுப்பை நம்மிடம் தோழர் விட்டுச் சென்றுள்ளார்” என தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்தார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம்.

“தோழருடைய செயல்பாடுகள் அமைப்பிற்குள் நாங்கள் வரும்போது மிகுந்த உற்சாகத்தை தந்தது. பல மாணவர்களிடமும் எப்போதும் தோழர்களைப் பற்றி நாங்கள் சொல்லி அவர்களை உற்சாகமூட்டுவதுண்டு. தோழர் விட்டுச்சென்ற இலட்சியத்தை எடுத்துச் செல்வோம்” என்று தனது கருத்தை பதிவு செய்தார் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மதுரை தோழர் ரவி.

This slideshow requires JavaScript.

இறுதியாக, மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் உரையாற்றினார்.

“நானும் தோழர் திசை கர்ணனின் அருகாமை ஊர்க்காரர் தான். ஆரம்பத்தில் தோழர்களை ஹீரோவைப் போல் நாங்கள் பார்ப்போம். ஏனென்றால், பல்வேறு அரசியல் கட்சிகளும் தனது சந்தர்ப்பவாதத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை இழக்கச் செய்யும்போது; தோழர்களே சரியான முழக்கத்தை முன்வைத்து நம்பிக்கையை தந்தனர். அதில் ஓட்டுப் போடாதே! புரட்சி செய்! தேர்தல் பாதை திருடர் பாதை!  போன்ற முழக்கங்கள் எண்ணுள் விதையாக விழுந்தது.

ஆனாலும் நான் அமைப்பில் இணையவில்லை. ஏனென்றால் அன்று இருந்த ஊசலாட்டம் தான் இதற்கு காரணம். பிறகு எப்படியாவது பிழைக்கலாம் என்று சென்னை சென்றேன். அங்குதான் வேலை உத்திரவாதம் அற்றநிலை; வேலை பார்த்த இடத்தில் பிரச்சனை, அதற்காக அமைப்பை கட்டுவது என்ற தேவையை உணர்ந்த போதுதான் தோழர்கள் போட்ட விதை முளைக்க ஆரம்பித்தது. அந்த வகையில் நான் அமைப்பிற்கு வர முக்கியமான காரணமாக இருந்தவர்கள் தோழர் திசை கர்ணனை போன்றவர்கள்.

மக்களுக்காக வாழ்பவர்கள் இறப்பதில்லை. மார்க்ஸ் இறந்த போது எங்கல்ஸ் ஆற்றிய இறுதி உரையில் மார்க்ஸ் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார் என பதிவு செய்தார். ஆம்  தோழர் உடைய சிந்தனையும் செயல்பாடும் எப்போதும் வாழும். இன்றைக்கு மகிழ்ச்சியாக வாழ்வது என்றால் குடும்பம் குட்டி பணம் சம்பாதிப்பது என தான் சிந்திக்கிறார்கள்.

ஆனால், மக்களுக்காக இறுதிவரை வாழ்வதுதான் உண்மையான சந்தோசம். சிலர் அமைப்பில் செயல்பட்டு 15 வருடங்கள் வாழ்க்கையை வீணாக்கி விட்டேன் என பேசுகிறார்கள். அவர்கள் மேற்சொன்ன குடும்பம் குட்டி வாழ்க்கைதான் மகிழ்ச்சியான உயர்வான வாழ்க்கை என பார்க்கிறார்கள். அதை தோழர் திசை கர்ணனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். 40 வருட அரசியல் வாழ்க்கை 15 வருடம் சிறையில் இருந்துள்ளார் இறுதிவரை கொள்கைக்காக உறுதியாக நின்றார்.

சிறையிலிருந்து இடையிடையில் வெளிவரும் போதும் அவர் எப்போதும் அமைப்பு நடவடிக்கைகளை சந்தோசமாக பார்த்தார். வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டேன், என்ற சிந்தனையை அவரிடம் நான் பார்க்கவே இல்லை. பத்து நாள் சிறையில் இருந்தாலே நமக்கு பல்வேறு உளவியல் பிரச்சனை ஏற்படுகிறது. ஆனால், தோழர்கள் விடுதலையாவது நிச்சயமே இல்லாத சூழலில் அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

அதைப்போலவே மக்களுடைய பல்வேறு பிரச்சனைகாகவும் உற்சாகமாக போராட்ட களத்தில் நின்றார். அதில் குறிப்பாக உர வியாபாரிகள் ரூ.90-க்கு விற்க வேண்டிய உரத்தை ரூ.140-க்கு விற்று மக்களை அநியாயமாக கொள்ளையடித்தனர். இந்த பிரச்சனையை கேள்விப்பட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் மக்களுடன் சென்று வியாபாரிகளிடம் நேரடியாக பேசினார்கள்.

உர வியாபாரிகள் உடனே பம்மி விட்டார்கள்; தோழர்கள் சாதாரணமாக பேசிய உடனே விலையை ரூ.90-க்கு குறைத்துக் கொண்டார்கள். அதன் பிறகு போலீஸ்காரர்கள் வந்து என்ன பிரச்சனை என்று வியாபாரிகளிடம் கேட்ட போதும் “ஒரு பிரச்சனையும் இல்ல” என வியாபாரிகள் கூறியது மிகவும் வியப்பாக இருந்தது.

ஏனென்றால் வியாபாரிகள் நினைத்திருந்தால் போலீசை வைத்து பிரச்சனை செய்திருக்க முடியும்; ஆனால் செய்யவில்லை; காரணம் அது மக்களின் செல்வாக்கு மிகுந்த போராட்டம். இன்று பல கட்சிகள் இருக்கின்றன லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் உறுப்பினர் இருப்பதாக சொல்கிறார்கள். அதனால் என்ன பயன் நாம் சிறிய சக்தியாக இருந்தாலும் மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்துள்ளோம். அது மகிழ்ச்சிகரமானது.

தோழர்கள் உடைய இந்த செயல்பாடு தான் சராசரி மனிதனாக வாழ்ந்த என்னையும் மாற்றியது. தோழர்களின் இந்தப் பண்பை வரித்துக் கொள்வது நம்மை நாமே மீண்டும் மீண்டும் உரசிப் பார்த்துக் கொள்ள ஒரு உரைகல்லை போன்றது. அதற்காக தான் இந்த கூட்டம்” என பேசி முடித்தார்.

இறுதியாக நன்றியுரையுடன் கூட்டம் முடிக்கப்பட்டது.

தகவல் :
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க