சில் ராஜபக்சேவின் பாராளுமன்றப் பிரவேசம் குறித்து விவாதங்கள் செய்வது பயனற்றதொரு செயல். பசில் பாராளுமன்றத்துக்குப் பிரவேசிப்பதில் தவறென்ன இருக்கிறது? தவறு என்றால் அப்பிரவேசம் இந்தளவு தாமதித்தது மாத்திரம்தான்.

பசில் பாராளுமன்றம் வராதிருந்த கடந்த காலம் முழுவதும் அரசாங்கத்தின் முக்கியமான தீர்மானங்கள் அனைத்தும் அவரது ஆலோசனைக்கும், ஆசிர்வாதத்துக்கும் ஏற்பவே எடுக்கப்பட்டன. ஆகவே, பசில் பாராளுமன்றத்தில் இருப்பதுவும், இல்லாதிருப்பதுவும் ஒன்றுதான்.

படிக்க :
♦ லைக்கா குழுமம் : மோடிக்கு வரவேற்பு – ராஜபக்சேவுடன் தொழில் கூட்டணி !
♦ கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !

எப்போதும் பசிலின் அறிதலோடுதான் அனைத்தும் நடைபெறுகின்றன. பசில் பாராளுமன்ற அமைச்சர் பதவியை ஏற்று அமைச்சைப் பொறுப்பேற்பது அவரது அரசியல் தலையீடுகளுக்கு இலகுவாக இருக்கும். பசில் அமைச்சர்களுக்கு பேச்சால் மாத்திரமல்லாது உடலாலும் தாக்கக் கூடிய ஒருவர் என்பதால் பெரும்பாலானோர் பசிலின் பாராளுமன்றப் பிரவேசத்தை விரும்புவதில்லை.

பசில் ராஜபக்சே

ராஜபக்சேக்களை ஆட்சியில் அமர்த்திய பின்னர் அவர்களுள் நல்ல ராஜபக்சே, மோசமான ராஜபக்சே என்ற வேறுபாடு இல்லை. அவ்வாறான நிலைமையில் பசில் ராஜபக்சேவின் பாராளுமன்றப் பிரவேசம் குறித்தும், அமைச்சைப் பொறுப்பேற்றது குறித்தும் உரையாடுவது வெறுமனே எமது காலத்தைத்தான் விரயமாக்கும். ராஜபக்சேவின் குடும்பத்தோடு தொடர்புடைய அனைவருக்கும் அரசாங்கத்தின் உயர் பதவிகளை வழங்கிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தில் பசிலின் பாராளுமன்றப் பிரவேசம் ஒரு வியப்புக்குரிய விடயமல்ல.

ஒரு குழு ‘பசில் வேண்டும், பசில் இல்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது’ என கூச்சலிட்டுக் கொண்டிருக்கையில் அதைக் கேட்டு ஆவேசம் கொண்டு பதிலுக்குக் கூச்சலிடுவது முட்டாள்தனமேயன்றி வேறில்லை. பசிலை சிறப்பாக வரவேற்று அவருக்கு விருப்பமான விதத்தில் செயற்பட இடமளிப்பது போன்ற அரசியல் இலாபமளிக்கும் செயற்பாடு இந்த அரசாங்கத்துக்கு வேறில்லை. பசில் இல்லாததால் அல்லாது, பசிலின் செயற்பாடுகளாலும்தான் தற்காலத்தில் அரசாங்கம் செயலிழந்து போயிருக்கிறது.

பசிலின் நோக்கமெல்லாம் பாராளுமன்றத்துக்குள் பிரவேசித்து, வரப்போகும் இலாபங்கள் அனைத்தையும் சுருட்டிக் கொள்வதுதான். அதில், அவர் மிகவும் திறமை வாய்ந்தவர். இந்த விடயத்தில் இந்த ராஜபக்சேக்கள் அனைவருமே ஒன்றுபோலவே எப்போதும் செயற்படுகிறார்கள். அதை விளங்கிக் கொள்ளாமல் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரியும் வரைக்கும் காத்திருப்பது தவறு. இந்த சமூகத்தின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் ராஜபக்சேக்களின் நோக்கம். கைப்பற்றியதுமே அதை குடும்ப அதிகாரமாக நிலைநிறுத்தி விடுவதிலும் அவர்கள் திறமை வாய்ந்தவர்கள்.

நாமல் ராஜபக்சே

நாமல் ராஜபக்சே அருமையானதொரு உதாரணத்தைக் கூறியிருக்கிறார். அதாவது ஒரு முச்சக்கர வண்டியின் முன்னாலிருக்கும் சக்கரம் மஹிந்த ராஜபக்சே என்றும், பின்னாலிருக்கும் சக்கரங்கள் இரண்டும் பசிலும், கோத்தாபய என்றும் கூறியிருக்கிறார். இந்த மூன்று சக்கரங்களும் இல்லாமல் வண்டி முன்னோக்கி நகராது என்றும் கூறுகிறார். அந்த வண்டிக்குள் சுகமாக அமர்ந்து பயணித்துக் கொண்டிருப்பவர்கள் நாமலும், யோஷிதவும், ரோஹிதவும் என்பது இதில் அவர் சொல்லாமல் போன விடயம்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, அநாதரவாகிப் போயிருந்த ராஜபக்சேக்களை கை கொடுத்துத் தூக்கி விடுவதில் பசிலின் செயற்பாடுகள் மிக அதிகளவில் பங்காற்றின. அந்த ஒருமைப்பாட்டின் பலம் மிக உயர்ந்தது. அவ்வாறான நிலைமையில் பசிலை இவ்வளவு காலம் பாராளுமன்றத்துக்குக் கூட்டி வராதிருந்ததே பெரும் பிழை. பசில் வந்ததன் பின்னர் இந்த நாடு செழிப்புறும் என்று கூற முடியாவிட்டாலும், ராஜபக்சேக்களின் ஆதாயம் தேடும் செயற்பாடுகள் செழித்து ஓங்கி வளரும் என்பது நிச்சயம். அக்காலத்தில் பசிலை எதிர்த்த அமைச்சர்களும், பசில் அமைச்சைப் பொறுப்பேற்று பதவியேற்ற பின்னர் அவரது இரு பாதங்களையும் முத்தமிடத் தயாராகவே இருப்பார்கள்.

பசிலுக்கும் அமைச்சைப் பொறுப்பை கையளித்ததன் பிறகு அதிகாரங்கள் பலதும் அவர் வசமாகும். ஆகவே, பாராளுமன்றத்திலுள்ள ஏனைய அமைச்சர்கள் பெயரளவில் மாத்திரம் அமைச்சர்களாக இருக்கும் நிலைமை உருவாகும். அவ்வாறான நிலைமையில் அனைத்து அதிகாரங்களும் ராஜபக்சேக்களுக்கே உரித்தாகும்.

நாட்டில் அறுபத்தொன்பது இலட்சம் பேர் பெரும்பான்மை வாக்களித்து ராஜபக்சே அரசாங்கத்திடம் கையளித்த ஆட்சியில் ராஜபக்சேக்களின் நோக்கம் இந்தத் தருணத்தில் மிகச் சரியாக ஈடேறிக் கொண்டிருக்கிறது. இனி பசில் பொறுப்பைக் கையேற்றதன் பிறகு நாட்டில் மீண்டும் ராஜபக்சே யுகமே தலை விரித்தாடும்.

எம்.ரிஷான் ஷெரீப்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க