பாசிச மோடி அரசின் ஆட்சியில், தொடர்ச்சியாக பத்திரிகை சுதந்திரம் நெறிக்கப்பட்டு, பத்திரிகையாளர்கள் மிரட்டப்பட்டும், கொல்லப்பட்டும் வரும் சூழல் நிலவுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதும், பணிநீக்கம் செய்யப்படுவதும் மிகவும் அதிகமாக நடந்திருக்கிறது.

இந்தியா முழுவதும் கடந்த ஏழாண்டுகளாக, தமது பாசிச நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களை சிறையில் தள்ளியும் மிரட்டியும் வந்திருக்கிறது பாஜக. சமீபத்தில் கூட 40 பத்திரிகையாளர்களின் அலைபேசிகளில், திருட்டுத்தனமாக ஒட்டுக் கேட்கும் ஒற்று மென்பொருளை நிறுவி அவர்களைக் கண்காணித்து வந்த சம்பவம் ஆதாரப் பூர்வமாக அம்பலமாகியிருக்கிறது.

இந்நிலையில், தங்களை அம்பலப்படுத்தும் பத்திரிகைகளைக் குறிவைத்து அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றின் மூலமாக ரெய்டுகளை நடத்தி, அவற்றை முடக்குவதற்கான வேலைகளையும் செய்து  வருகிறது பாசிசக் கும்பல்.

”நியூஸ் க்ளிக்” எனும் இணையதளம், மோடி ஆட்சியில் நடைபெறும் கார்ப்பரேட் முறைகேடுகளையும், இந்துத்துவ வெறியாட்டங்களையும் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறது. அந்த செய்தி நிறுவனத்தினை மிரட்டி பணியச் செய்யும் வகையில் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு அந்நிறுவனத்தில் அமலாக்கத்துறை தேடுதல் வேட்டையை நடத்தியது.

படிக்க :
♦ அரசின் கையாலாகா நிலையை மறைக்க தேசியவெறியை கிளப்பும் தினகரன் !
♦ கொங்கு நாடு : கொளுத்திப் போட்ட தினமலர் – ஊதிவிடும் மாலன்

அதன் பின்னர், அந்நிறுவனம் அந்நிய நாடுகளில் இருந்து முறைகேடான முறையில் நிதிபெற்று வந்ததாக பொய்யான குற்றச்சாட்டுகளை, அதிகாரப்பூர்வமற்ற வகையில் கசியவிட்டது. இதனை பல்வேறு ஜனநாயக ஊடகங்களும் கடுமையாகக் கண்டித்தன. இதற்கு எதிரான வழக்கு நீதிமன்றத்த்ல் நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று (19.07.2021), நியூஸ் கிளிக் நிறுவனம் குறித்து ஒரு செய்தியை தினகரன் நாளிதழ் வெளியிட்டிருந்தது.

இலங்கையைச் சேர்ந்த சிங்கம் உதவி : சீனாவுக்கு ஆதரவாக ரூ 38 கோடி வாங்கிய ஊடகம் அமலாக்கத் துறை திடுக்கிடும் தகவல்” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது தினகரன்.

செய்தியின் உள்ளடக்கத்தில், நியூஸ் கிளிக் ஊடகத்தின் நிதிப் பரிமாற்றங்களை கண்காணித்து வந்த அமலாக்கத் துறை, “கடந்த 2018 முதல் 2021 வரையிலான காலத்தில், சீனாவுக்கு ஆதரவாக செய்தி வெளியிட இந்நிறுவனத்துக்கு 38 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது உறுதியானதாக” தகவல் தெரிவித்திருப்பதாகக் கூறி செய்தி வெளியிட்டது.

மேலும், இலங்கையைச் சேர்ந்த க்யூப வம்சாவளி தொழிலதிபர் நெவில்லே ராய் சிங்கம் என்பவர் இந்த பணப் பரிமாற்றத்துக்குப் பின்புலமாக செயல்பட்டுள்ளார் என்றும் இதில் குறிப்பிட்ட தொகை எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவுதம் நவ்லகா உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், நவ்லகாவிடம் இதுகுறித்து விசரித்து வருவதாகவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள தினகரன், அதற்கான அடிப்படை ஆதாரத்தைப் பற்றியோ, அது குறித்து அச்செய்தி பிரசுரமாவதற்கு முன்பே (18.07-2021 அன்றே) அமலாக்கப் பிரிவின் அவதூறுக்கு மறுப்புத் தெரிவித்து நியூஸ் கிளிக் இணையதளத்தின் ஆசிரியர் பிரபிர் பர்கய்ஸ்தா வெளியிட்டுள்ள மறுப்பையோ வெளியிடவில்லை.

பாசிச மோடி அரசு, ஊடகங்களை முடக்குவதற்கு அமலாக்கத் துறை, வருமானவரித் துறை ஆகியவற்றைப் பயன்படுத்துவது குறித்து சாதாரண நபர்களுக்கே தெரிந்திருக்கும் இந்தச் சூழலில், அனைத்து அறிந்திருக்கும் தினகரன், இதுபோன்ற மொட்டைச் செய்திகளை அதற்கான விளக்கம் ஏதுமின்றி வெளியிட்டுள்ளது.

நியூஸ் கிளிக் செய்தி நிறுவனத்தில் நடத்தப்பட்ட அமலாக்கப் பிரிவு தேடுதல் வேட்டை குறித்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இப்படி பொருத்தமற்ற அரைகுறை தகவல்களை அமலாக்கத்துறை ஊடகங்களுக்கு கசியவிட்டு வருவதாகவும், அது குறித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தமது தளத்தில் தெரிவித்திருக்கிறார், நியூஸ்கிளிக் இணையதளத்தின் ஆசிரியர் பிரபிர் பர்கய்ஸ்தா.

கடந்த 18-07-2021 அன்றே நியூஸ் கிளிக் இணையதளத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அமலாக்கத்துறையிலிருந்து கிடைக்கப்பெற்ற செய்தியின் அடிப்படையில் ஒரு இழிவான பிரச்சாரம் நியூஸ் கிளிக் தளத்திற்கு எதிராக நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டே அந்த அறிக்கையை துவக்குகிறார்.

நியூஸ் க்ளிக் இணையதளத்தின் மீது செய்யப்பட்டுள்ள, அந்நிய நேரடி முதலீடுகள் மற்றும் அதன் குழுச் சேவைக்காக வழங்கப்பட்ட கட்டணம் ஆகியவை குறித்துதான் அமலாக்கத்துறை விசாரித்தது என்றும், இவை அனைத்தும் வெளிப்படையான வங்கிப் பரிவர்த்தனை மூலமும், முறையான அரசு பிரதிநிதிகள் வாயிலாகவுமே நடைபெற்றவை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேற்கூறிய இருவகையான பணப் பரிவர்த்தனையும் நம்பிக்கைக்குரிய அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளில் இருந்தும் இந்தியா மற்றும் அமெரிக்காவின் சட்ட வழிமுறிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டுள்ளன. இத்தகைய தாக்குதல்களால் நியூஸ் கிளிக் பணிந்துவிடாது என்றும் தொடர்ச்சியாக தனது பத்திரிகைப் பணியை துணிவுடன் செய்யும் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளார் நியூஸ் கிளிக் இணையதளத்தின் ஆசிரியர்.

மோடியின் ஊடக ஒடுக்குமுறைக்கு ஒத்து ஊதும் விதமாக ஒரு செய்தியைப் பற்றி முழுமையான விவரத்தை வெளியிடாமல், பாசிச கும்பலுக்குச் சேவை செய்யும் வகையிலேயே செய்தி வெளியிட்டுள்ளது தினகரன்.

நியூஸ் கிளிக்கிற்கு எதிரான பாசிச கும்பலின் இழி பிரச்சாரத்தில் பங்குகொண்ட தினகரன் அதோடு நிற்கவில்லை. பாசிச கும்பலின் அடுத்த ஆயுதத்தையும் வாசகர்களின் மீது பிரயோகித்திருக்கிறது.

பாஜக தலைமையிலான பாசிச கும்பல் மக்களை திசைதிருப்பவும், ஏமாற்றவும் கையில் வைத்திருக்கும் மற்றொரு ஆயுதம், போலி தேச பக்தி மற்றும் பாகிஸ்தான், சீன எதிர்ப்பு உணர்வுகளைத் தூண்டுவதுதான். பிரச்சினை முற்றி வரும் சுழலில் இது போன்ற தேசபக்த விவகாரங்களைக் கிளப்பிவிட்டு, குளிர்காய்வது பாஜகவின் வழக்கம்.

காலங்காலமாக அதை மக்களிடம் கொண்டு சென்று வியாபாரம் செய்வதிலும் தினகரனுக்கு நிகர் தினகரன் தான்.

அதே 18-07-2021 தேதிக்கான நாளிதழில், “ஆப்கானிஸ்தானில் இந்தியாவால் உருவாக்கப்பட்ட சொத்துக்களை தாக்கி அழியுங்கள்.” என்ற தலைப்புடன். “தலிபான் தீவிரவாதிகளுக்கு பாக். உத்தரவு. 10000 வீரர்களை உதவிக்கு அனுப்பியது. ” என்ற உபதலைப்புடன் ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறது.

படிக்க :
♦ ஓ.டி.டி., சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்களை முடக்கத் துடிக்கும் மோடி !
♦ டிஜிட்டல் ஊடகங்களின் மீதான மோடி அரசின் தாக்குதல்

இந்தியாவின் பல ஆயிரம் கோடி நிதியுதவி மூலமாக பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் ஆப்கனில் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், அந்த கட்டிடங்கள் எல்லாம் இந்தியாவின் பெருமை பேசுவதால், அவற்றை அழிக்க பாகிஸ்தான் 10000 வீரர்களை தாலிபான்களோடு அனுப்புவதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ‘அதிர்ச்சித்’ தகவலை இந்திய உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்ததாகத் தெரிவிக்கிறது இந்தச் செய்தி.

தாலிபான்களின் ஆட்சி ஆப்கானில் வந்தால் பாதிக்கப்படப் போகும் நாடுகளில் பிரதானமானது பாகிஸ்தான் தான். எனில் தாலிபான்களுடன் ஏன் தனது படை வீரர்களை பாகிஸ்தான் அனுப்பப் போகிறது? இந்தியக் கட்டிடங்களை உடைக்க 10000 வீரர்களை தாலிபன்களுடன் அனுப்பும் அளவிற்கு பாகிஸ்தானிடம் பண பலம் உள்ளதா ? என அடிப்படையான சில கேள்விகளிலேயே உடைந்துவிடத்தக்க ஒரு வாதத்தை பெரும் உளவுத்துறை தகவலாகக் கூறி, பாகிஸ்தான் எதிர்ப்பு மனநிலையையும் தேசிய வெறியையும் தூபம் போட்டு வளர்க்கிறது தினகரன்.

ஒருவேளை இப்படி ஒரு விவகாரம் நடைபெற்றிருந்தால் கூட, அதை அதிகாரப் பூர்வமாக சொல்லவேண்டியது இந்திய அரசு தானே ஒழிய, உளவுத்துறை அல்ல. இப்படி இழிவான வகையில் தேசிய வெறியை தேர்தல் சமயத்தில் பாஜக அறுவடை செய்யும் வகையில் வளர்த்துவிடுகிறது தினகரன்.

பாசிசக் கும்பலுக்குச் சேவை செய்யும் வகையிலான இது போன்ற செய்திகளை தினகரனில் அன்றாடம் காணலாம். தினமலர், தினமணி, துக்ளக் போன்ற பத்திரிகைகள் வெளிப்படையாகவே பாசிச கும்பலை ஆதரிக்கும் வகையில் செய்திகளை வெளியிடுவார்கள். இவர்கள் பாஜக-வை ஆதரித்துக் கொண்டே பாசிச சித்தாந்தத்தையும் பரப்புவார்கள்.

ஆனால் தினகரன் போன்ற பத்திரிகைகள், பாஜக-வை எதிர்த்து செய்து வெளியிட்டுக் கொண்டே பாசிச சித்தாந்தத்திற்கு மறைமுகமாக புரோக்கர் வேலை செய்கின்றன. இப்படி நைச்சியமாக பாசிசத்திற்கு சேவை செய்யும் தினகரன் குழுமத்தை தொடர்ந்து அம்பலப்படுத்துவதுதான் ஜனநாயகத்தை பாசிசத்தின் பிடியிலிருந்து காப்பதற்கான ஒரே வழி !

கர்ணன்
செய்தி ஆதாரம் : தினகரன் நாளிதழ் – 19-07-2021

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க