ப்பான் தலைநகர் டோக்கியோவில் இம்மாதம் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டை சார்ந்த 5 விளையாட்டு வீரர்கள் தேர்வாகியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் ஏழ்மையான குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதை அவர்களது நேர்காணல்களின் மூலம் அறிமுடிகிறது. தங்கள் குடும்பத்தினரின் உதவியுடனும், தங்கள் பயிற்சியாளர்களின் உதவியுடனும் மேலும் தனி மனிதர்களின் பண உதவிகளாலும், கடன்வாங்கியுமே அவர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நிலைமைக்கு வந்தடைந்திருக்கிறார்கள்.

தற்போது அந்த ஐந்து வீரர்களுக்கு நிதியுதவி செய்வதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தாலும், திறமை இருந்தும் அதனை மேலும் வளர்த்துக் கொள்ளவும், அதனை சர்வதேச அளவில் வெளிப்படுத்தவும் முடியாத நூற்றுக் கணக்கான விளையாட்டு வீரர்கள் அரசின் உதவி எதுவும் கிடைக்கப் பெறாமல்தான் இருக்கின்றனர்.

பூடானில் வரும் ஆகஸ்டு மாதம் நடக்கவிருக்கும் தெற்காசிய இளைஞர் ஊரக விளையாட்டுப் போட்டிகளுக்குத் தமிழகத்திலிருந்து தேர்வாகி இருக்கும் இளைஞர்கள் அருண், சரவணகுமார், விஜயகுமார் ஆகியோர் பண வசதியின்றி செல்ல முடியாமல் தவிப்பதை நியூஸ் 18 செய்தித் தொலைக்காட்சி பதிவு செய்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு சில நிதி உதவிகள் கிடைத்துள்ளன.

படிக்க :
♦ போதை : விளையாட்டு உலகின் இருண்ட பக்கம் ! ஆவணப்படம்
♦ ஹரியானாவின் குத்துச் சண்டை வீரர் குல்ஃபி விற்கும் அவலம் !

இவர்களை போன்ற உதவிகளும் கிடைக்காத எத்தனையோ விளையாட்டு வீரர்கள் பள்ளி, கல்லூரி பருவத்தின் விளையாட்டு வெற்றிகளோடு நிறுத்திக் கொண்டு வறுமையின் காரணமாக, விளையாட்டைக் கைவிட்டு வேலைக்கு சென்று வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். விளையாட்டு மீதான அவர்களின் ஆர்வமும் துடிப்பும் பள்ளி, கல்லூரி பருவங்களிலேயே புதைக்கப்பட்டுவிடுகிறது.

மேலும், மாவட்ட அளவில், மாநில அளவில் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்றாலும் பொருளாதார பின்னணி இல்லாததால் தொடந்து விளையாட்டு போட்டிகளில் அந்த வீரர்கள் கலந்து கொள்வதில்லை. இந்தியாவிற்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி 17 பதக்கங்களை வென்ற அரியானா குத்துச்சண்டை வீரர் தினேஷ்குமார், விளையாட்டு போட்டிகளுக்காக தாம் செலவு செய்த கடனை அடைப்பதற்கு குல்ஃபி விற்ற அவலமும் இந்தியத் திருநாட்டில் தான் நடந்துள்ளது. இதிலிருந்தே இந்தியா விளையாட்டுக்களையும், விளையாட்டு வீரர்களையும் எப்படி மதிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

136 கோடி மக்கள் தொகை கொண்ட இந்திய ஒன்றியத்தில் மிகவும் சொற்பமான நபர்களே, ஒலிம்பிக் போன்ற சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்கிறார்கள். அதுவும் கூட வீரர்களுடைய பயிற்சியாளர்களின் முன்முயற்சியினால்தான் சிலர் விளையாட்டுத் துறையில் சாதனைப் படைக்கிறார்கள்.

“நாங்கள் வீரரர்களை வெளிமாநிலங்களுக்கு விளையாட அழைத்து செல்வோம். அதிகாரிகள் சொகுசு ஓட்டல்களின் தங்குவார்கள் நாங்களோ குளிருக்கு கம்பளிக் கூட இல்லாமல் பல நேரங்களில் வதைபடுவோம். சத்தான உணவுகளோ, தரமான உடைகளோ, காலணிகளோ எம் வீரர்களுக்கு கிடைப்பதில்லை. ஆப்பிரிக்காவை சார்ந்த மாரத்தான் வீரர் வெறும் கால்களில் ஓடி வெற்றிபெற்றதை பார்த்திருப்போம். அவர்கள் வறுமையில் இருக்கிறார்கள். ஆனால், இங்கோ விளையாட்டுத் துறைக்கு ஒதுக்கப்படும் குறைந்தபட்ச தொகையும் அதிகாரிகளின் சுற்றுலாவிற்கே செலவு செய்யப்படுகிறது.” என்று தடகள பயிற்சியாளர் குட்டி என்பவர் தனது வேதனையை தன்னுடன் பகிர்ந்து கொண்டதாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர், டி.எஸ். வெங்கட்ரமணா, தினமணியில் தான் எழுதிய நடுப்பக்கக் கட்டுரையில் நினைவு கூர்ந்துள்ளார்.

இந்திய விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு எவ்விதமான முன்முயற்சிகளும் அரசால் எடுக்கப்படுவதில்லை. இதற்கு என்ன காரணம் ?

இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர்களாக வருபவர்களும் அந்தத் துறையைப் பற்றி ஆர்வம் ஏதும் இல்லாதவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். அவர்களால் எப்படி விளையாட்டுத் துறையை வளர்ச்சி அடைய செய்ய முடியும்?  என்ற கேள்வியை அந்தக் கட்டுரையில் எழுப்புகிறார் டி.எஸ்.வெங்கடரமணா.

விளையாட்டு துறையில் இருக்கும் அரசியலும், வர்த்தக் நோக்கமுமே இந்திய விளையாட்டுத்துறையில் தனிச்சிறப்பான சாதனை படைக்கும் வீரர்கள் குறைவாக இருப்பதற்கான காரணமாக இருக்கிறது.

அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் தங்கள் நாட்டின் வீரர்கள் அதிக தங்க பதக்கங்களை சர்வதேச விளையாட்டு அரங்கில் வெல்ல வேண்டும் என்பதை குறைந்தபட்சம் தங்களது கவுரவப் பிரச்சினையாகவாவது பார்த்து, திறமை மிக்க விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சியளிக்கின்றன. அந்த வரிசையில் சீனாவும் தன் சொந்த நாட்டு வீரர்கள் அதிகமாக சர்வதேச விளையாட்டு அரங்கில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்களை குவிக்க பயிற்சிகளை வழங்குகிறது. ஆனால், இந்தியா சர்வதேச விளையாட்டு அரங்கில் பின் தங்கியே இருக்கிறது.

மனித இனத்தின் ஜனநாயகப்பூர்வமான வளர்ச்சியில் விளையாட்டு முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தைப் பருவத்தில் இருந்தே மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும், சக மனிதர்களோடு ஒத்திசைந்து செயல்படுவதற்குமான பயிற்சியை அளிக்கிறது விளையாட்டு.

ஜனநாயகத்தின் சுவை தெரியாத, ஜனநாயகத்தின் வாடையே ஆகாத பார்ப்பனிய சித்தாந்தத்தால் கட்டுண்டு கிடக்கும் இந்திய ஆளும் வர்க்கங்களும், அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளும் விளையாட்டுப் போட்டிகளை ஒதுக்கித் தள்ளுவதில் எவ்வித ஆச்சரியமும் படத் தேவையில்லை.

விளையாட்டுத் துறைக்கு போதுமான நிதி ஒதுக்குவது, பள்ளி கல்லூரிகளில் ஆர்வமாக விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவகளை அரசின் உதவியுடன் பயிற்சி அளிப்பது, விளையாட்டுத் துறையில் உள்ள வர்த்தக நலனை தூக்கியெறிந்துவிட்டு திறமையை பிரதானப்படுத்தும் பட்சத்தில் அதிகமான விளையாட்டு வீரர்களை இந்தியா உருவாக்க முடியும்.

ஆனால் பார்ப்பனியத்தின் பிடியிலும், அனைத்திலும் இலாபத்தை மட்டுமே காணத் துடிக்கும் கார்ப்பரேட்டுகளின் பிடியிலும் இந்திய விளையாட்டுத்துறை இருக்கும் வரையில் ஒலிம்பிக் வெற்றி என்பதெல்லாம் வெறும் கானல்நீரே !


சந்துரு
செய்தி ஆதாரம் : தினமணி (21.7.2021)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க