”ஃபர்பிடன் ஸ்டோரீஸ்” மற்றும் அம்னஸ்டி டெக்னாலஜி லேப் ஆகிய நிறுவனங்களால் பெறப்பட்ட தரவுதளத்திலிருந்து கிடைக்கப் பெற்ற 50,000 அலைபேசி எண்களுடன் இந்தப் பெருங்கதை தொடங்குகிறது. இது தொடர்பான பெயர்களை சரி பார்ப்பதற்கும், சந்தேகத்திற்குரிய அலைபேசிகளின் மின்னணு பிரதியை எடுத்து சோதனைக்காக அனுப்புவதற்கும் 16 நாடுகளைச் சேர்ந்த ஊடகங்களை அவ்விரு நிறுவனங்களும் அணுகினர்.

பொதுவாகவே, பெரும்பாலான குடிமக்கள் தங்களை (தனது அலைபேசி சம்பந்தமான தகவல்களை) இதுபோன்ற சோதனைகளுக்கு உட்படுத்திக் கொள்ள என்னைப் போலவே தயங்குவார்கள். அது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆனால் ஒரு பெரும் நோக்கத்திற்காக, நானும் எனது சகா சித்தார்த் வரதராஜனும் எங்கள் அலைபேசியின் மின்னணு பிரதியை (Digital ‘Image’) சோதனைக்காக அனுப்பினோம். அதன்பின் நடந்த அனைத்தையுமே, அவர்கள் கூறுவது போல, வரலாறு என்றுதான் கூற வேண்டும்.

அதிநுட்பத் தொழில்நுட்பங்கள் அதிநுட்ப கண்காணிப்பை சாத்தியமாக்கியுள்ளன. சர்வாதிகார அரசாங்கங்கள் ஊடகங்களை அமைதியாக்கிவிடலாம் என்று நினைக்கும் தற்போதைய சூழலில், ஊடகவியலாளர்கள் வழக்கத்துக்கு மீறிய சுமைகளை தாங்கிக் கொள்ள வேண்டும் என்பதாகவே தோன்றியது. ஆனால் கண்காணிப்பைக் கண்டறியவும், அதைப் புரிந்து கொள்ளவும், பரிசோதிக்கவும் இப்போது பல மனித உரிமைக் குழுக்கள் தங்களைத் தாங்களே தயார்ப்படுத்திக் கொண்டிருப்பது, நமக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறது.

படிக்க :
♦ பெகாசஸ் : இந்து ராஷ்டிரத்தின் எதிரிகளே அதன் இலக்குகள் !
♦ பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஊடகவியலாளர்களை குறி வைக்கும் மக்கள் விரோத அரசுகள் !

இதனால், அரசாங்கங்கள் உளவு பார்ப்பதை எதிர்ப்பின்றி தொடர்ந்து நடத்த முடியாது. கசிந்த அந்த அலைபேசி எண்களின் பட்டியலில் இருக்கும் குடிமக்கள் தங்களது அலைபேசியை சோதிக்கத் தாமாக முன்வருவதன் முலம், இந்த நடைமுறைக்கு உதவ நாம் வலியுறுத்த வேண்டும்.

இந்த நடைமுறையை, கசிந்த பட்டியலில் இருக்கும் பேரதிகமானோருக்கும் விரிவு படுத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. தங்களது தகவல்களை அவர்கள் ஆய்வுக்கு உட்படுத்த அனுமதிக்கும்போது தான் இது சாத்தியமாகிறது. அம்னெஸ்டி இண்டர்நேசனல் அமைப்பு, தனது அலைபேசி சரிபார்ப்பு மென்பொருள் வெளியிடப்பட்டவுடன், ஒரு கட்டத்தில் தாமாக முன்வந்து தமது அலைபேசியை பரிசோதிப்பது என்பது பொதுவான நடைமுறையாக மாறும் எனக் கருதுகிறது.

பாரிசைச் சேர்ந்த இலாபநோக்கமற்ற செய்தித் தளமான, “ஃபர்பிட்டன் ஸ்டோரீஸ்” (Forbidden Stories) உலகம் முழுவதும் உள்ள புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கான அபாயத்தைத் தவிர்க்க பாதுகாப்பான தொடர்புத் தளங்களின் மூலம் தங்களுடைய இணை ஊடகங்களைத் தொடர்புகொண்டது.

அம்னெஸ்ட்டி டெக்னாலஜி லேப் நிறுவனமும் டொரொண்டோவைச் சேர்ந்த சிட்டிசன் லேப் நிறுவனமும் பின்பற்றிய வழிமுறைகள் குறித்து குடிமக்கள் தாங்களாகவே நன்கு தெரிந்து கொள்வது முக்கியமானது. இந்த இரு நிறுவனங்களின் முயற்சிகள்தான் அந்தரங்க அத்துமீறலை அம்பலப்படுத்த உதவியிருக்கின்றன. சொல்லப் போனால், உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் பெகாசஸ் போன்ற உளவு மென்பொருளை சட்டவிரோதமாகப் பயன்படுத்துவது குறித்து தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், இந்த நடைமுறை தொடர்ச்சியாக பின்பற்றப்படவேண்டும்.

பெகாசஸ் உளவு மென்பொருளை சரிபார்க்கப்பட்ட அரசாங்கங்களுக்கு மட்டுமே தாம் விற்றதாக இஸ்ரேலிய என்.எஸ்.ஓ. குழு வெளிப்படையாகக் கூறி வருகிறது. மேலும் அந்த மென்பொருளை குறிப்பான தேசிய பாதுகாப்பு மற்றும் குற்றவியல் விசாரணைகளுக்கு மட்டும் அந்நாடுகள் பயன்படுத்த வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கிறது.

சில குடிமக்கள் மீது வக்கிரமான முறையில் கண்காணிப்பைத் திணிப்பதன் மூலம் சில அரசாங்கங்கள் செய்கின்ற மீறல்கள் குறித்தும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதை இது இன்னும் முக்கியமானதாக்குகிறது.

அரசியல் அமைப்பு அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகியோர், கண்காணிப்பதற்கான நபர்களாக ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? அரசாங்கங்களுக்கு மென்பொருளை வழங்குவதை மட்டுமே தாம் செய்வதாகவும், கண்காணிப்புச் செயல்பாடுகளில் தாம் ஈடுபடவில்லை என்றும் என்.எஸ்.ஓ. நிறுவனம் கூறிவருகிறது.

என்.எஸ். ஓ. நிறுவனத்திற்கும் அதனிடம் இருந்து அதன் உளவு மென்பொருளை வாங்கிய அரசாங்கங்களுக்கும் இடையிலான குறிப்பான வேலைப் பிரிவினை என்ன? என்ற கேள்வியை அலைப்பேசி எண்களின் பட்டியல் கசிந்த நிலையில் நாம் எழுப்புவதே நியாயமானது.

இவையெல்லாம் நடைபெறும் என்பதும் நமக்குத் தெரியும். பெகாசஸ் மூலம் பாதுகாப்பு அத்துமீறல்கள் நடந்தது, முதன்முதலாக வாட்சப் நிறுவனத்தால் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கும் இடையில் 2019-ஆம் ஆண்டு ஒரு உரையாடல் நடைபெற்றது. 121 அலைபேசிகளின் பாதுகாப்பு அத்துமீறப்பட்டது குறித்து, அரசுக்கு தெரியப்படுத்தியதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

இந்திய ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களைக் குறி வைத்து தனியுரிமை அத்துமீறல் நடைபெற்றது குறித்து வாட்ஸ்அப் ஏதும் தெரிவிக்கவில்லை என்று கூறி முதலில் இந்த விஷயத்திலிருந்து அரசாங்கம் தப்பிக்க முயன்றது. ஆனால் 2019-ஆம் ஆண்டு மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் என தனியுரிமை மீறல் குறித்து இரண்டு முறை அரசாங்கத்தை எச்சரித்ததாக வாட்ஸ்அப் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

படிக்க:
♦ ‘நான்காம்’ தொழிற்புரட்சி மக்கள் புரட்சியைத் தடுத்து விடுமா ?
♦ வர்க்கத்துக்கு ஒரு நீதி : இதுதான் தினகரனின் ஊடக அறம் !!

தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நோட்டீசுக்கு பதிலளிக்கையில், 2019,மே மாதத்தில் தாக்கல் செய்த பாதிப்புக் குறிப்புகளையும் செப்டம்பர் மாதத்தில் அனுப்பிய கடிதத்தையும் இணைத்து அனுப்பியது. அதனைத் தொடர்ந்து 121 இந்தியர்களைக் குறிவைத்த பெகாசஸ் மென்பொருள் குறித்த செப்டம்பர் மாத அறிவிப்பை வாட்ஸ்அப் நிறுவனத்திடம் இருந்து பெற்றதாக அரசாங்கம் உறுதிப்படுத்தியது. மேலும் பிடிவாதமாக, அந்தக் கடிதம் எச்சரிக்கையூட்டும் அளவிற்கு “இன்னும் தெளிவற்றது” என அமைச்சகம் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டது.

அக்டோபர் 31, 2019 அன்று இந்தியாவில் முதல் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனால் அதன் தொடர்ச்சியாக எதுவும் நடக்கவும் இல்லை. எந்தவொரு விசாரணையும் நடத்தப்படவில்லை. அரசாங்கம் இறுக்கமான நிலைப்பாட்டைக் கொண்டமர்ந்திருந்தது. உண்மையில் மின்னணு தகவல் பரிமாற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்த, சமூக ஊடகத் தளங்களை உள்ளடக்கி, டிசம்பர் 2019-இல் தகவல் தொழில்நுட்ப இடைக்கால வழிகாட்டுதல்களை உருவாக்கியது.

இதுதான் இரண்டாண்டுகளுக்குப் பிறகு நாம் வந்து சேர்ந்திருக்கும் நிலைமை. இன்னும் பல தகவல்கள் வெளிக் கொணரப்பட வேண்டியது இருக்கிறது.

இத்தகைய பெரிய அளவிலான சட்டவிரோத மீறல்கள் பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அரசாங்கங்கள் பாசாங்கு செய்யும்போது, அவை ஜனநாயகத்தை துண்டாக வெட்டிவிடுகின்றன. இதுபோன்ற சட்டவிரோத செயல்கள் ஜனநாயகத்தை துண்டாடும்போது அதை முறியடிக்கும் மருந்தாக நாம் செயல்பட வேண்டும். அதுபற்றி தொடர்ந்து பேச வேண்டும். நமது குரலை கேட்கப்படுவதாக உயர்த்த வேண்டும். நாம் அமைதியாக இருப்பது ஜனநாயக மீறல்களை அனுமதிப்பதற்கு ஒப்பானது. இது அரசால் செய்யப்படும் தேசத்திற்கு எதிரான குற்றமாகும்.


கட்டுரையாளர் : எம்.கே.வேணு
தமிழாக்கம் : பிரியா
மூலக் கட்டுரை : தி வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க