பள்ளி வளாகத்திற்கு வெளியே இயங்கும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் சமூகப் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பதாக கூறியிருக்கிறது சீன அரசு. அதிக கல்வி கட்டணம் பற்றிய கவலை சீன குடிமக்களின் குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஆர்வத்தைக் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கிறது.
கல்வி செலவுகளை குடும்பத்தில் குறைப்பதன் மூலம் நாட்டின் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் விதமாக புதிய விதிமுறைகள் சீனாவில் கொண்டு வரப்பட்டுள்ளன. புதிய விதிகளின் கீழ், அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களும் இலாப நோக்கமற்றவையாக பதிவு செய்யப்பட வேண்டும். மேலும் புதிதாக உரிமங்கள் வழங்கப்படாது என்று அதிகாரப்பூர்வ ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறைகளால் தனியார் கல்வி நிறுவனங்களின் 120 பில்லியன் டாலர் தொழில்துறை முடங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
படிக்க :
♦ உயர்சிறப்பு கல்வி நிறுவனம் : உலகத்தரம் என்ற கனவும் தீவிர தனியார்மயமாக்கலுக்கான திட்டமும் !
♦ தனியார் கல்வியில் கருகிய விட்டில் பூச்சிகள்
பள்ளி வளாகத்திற்குட்பட்ட நூலகங்கள், வாசிப்பு அறைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களுக்கான கதவுகள் மாணவர்களுக்குக்காக எப்போதும் திறந்தே இருக்கும் என்றும், பள்ளிக்கு வெளியில் நடக்கும் தனியார் சிறார் பள்ளி பயிற்சி வகுப்புகளை நிறுத்தி, கலை மற்றும் சதுரங்கம் போன்ற பாடநெறி வகுப்புகளை எடுக்க வேண்டும். மேலும், பள்ளி விடுமுறை நாட்கள், வார இறுதி நாட்கள் மற்றும் மாலை நேர வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை என்று கூறியிள்ளனர்.
பள்ளி வளாகத்திற்கு வெளியே உள்ள பயிற்சி நிறுவனங்களின் தகுதியற்ற செயல்பாடுகள், தவறான விளம்பரங்கள், லாபம் அடைதல், பள்ளிகள் உடனான முறையற்ற தொடர்புகள் ஆகியவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த மே மாதத்தின் இறுதியில் மத்திய குழு உத்தரவிட்டது.
இந்த பயிற்சி நிறுவனங்கள், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எண்ணங்கள் லட்சியங்கள் மீதான அக்கறையை பயன்படுத்தி சந்தைப்படுத்தும் யுத்தியை கையாள்கின்றன. தேவையே இல்லாத பயிற்சிகளை விற்பனை செய்கின்றன. அவை மாணவகளுக்கு கல்விச் சுமையை மேலும் அதிகரிக்கும். கல்வி கற்பதற்கான முறைகளை சீர்குலைக்கும். இது சீனா மட்டுமல்லாமல், உலகம் முழுவதற்குமே பொருந்தக்கூடியது.
“இது மாணவர்களின் மன அழுத்தத்தை ஏற்படுத்தும், உளவியல் ரீதியான பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும், உடல் சோர்வை ஏற்படுத்தும், பெற்றோர்களுக்கு அதிக நிதி சுமையை ஏற்படுத்தும், இதனால் குழந்தைகள் பெறுவதற்கான விருப்பத்தை பெற்றோர்களிடம் குறைக்கும்” என்று தேசிய கல்வி அறிவியல் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சூ.ஜாஹுய் கூறினார்.
“அதிகமான வீட்டுப் பாடங்களினால் குழந்தைகள் நெருக்கடியை சந்திக்கும் நிலையை மாற்றத்தக்க வகையில் இந்த புதிய விதிமுறைகள் ஒரு நல்ல செய்தியாக அமையும். ஆனால், மறுபுறம் ஒரு நல்ல பல்கலைக்கழகத்திலும் இது போன்ற மாற்றங்கள் இல்லையென்றால் அது சிறப்பாக இருக்காது” என்று பெய்ஜிங்கில் உள்ள ஹைடியன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தாய் கூறுகிறார்.
உரிமம் பெறாத பயிற்சி நிறுவனங்கள், அதிகப்படியான பயிற்சிகள் வழங்குதல், தவறான விளம்பரங்களை செய்தல் மற்றும் சட்டவிரோத நடைமுறை குறித்த குற்றச்சாட்டுகள் எழுதல் உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து கடந்த 2016 முதல் 2020 வரையிலான ஐந்து ஆண்டுகாலத்தில் 4 லட்சம் பயிற்சி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன” என்று கல்வி அமைச்சம் கூறியுள்ளது.
2018-ம் ஆண்டில்தான் சீன அரசு தேசிய அளவிலான பள்ளி நேரத்திற்கு பிறகு நடக்கும் பயிற்சி வகுப்புகளை வளர்ச்சி பெறவைப்பது குறித்த ஆவணத்தை வெளியிட்டது.
இந்த ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி, பள்ளி வளாகத்திற்கு வெளியே உள்ள குழந்தைகளுக்கான பாலர் பள்ளி பயிற்சி நிறுவனங்கள், ஆரம்ப, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி நிறுவனங்களை மேற்பார்வையிடுவதற்கான ஒரு சிறப்புத் துறையை நிறுவவிருப்பதாக கல்வி அமைச்சம் அறிவித்தது.
அந்த துறையை ஏற்படுத்தியதன் மூலம், பள்ளி வளாகத்திற்கு வெளியே செயல்படும் பயிற்சி நிறுவனங்களின் தகுதிகள், செயல்பாடுகள், படிப்புகள் மற்றும் முதலீடுகள் தொடர்பான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்று கல்வி நிபுணர் சியோங் பிங்கி கூறினார்.
தவறான விளம்பரங்கள் மற்றும் பயிற்சிகளுக்கான கட்டண மோசடி செய்தல் உள்ளிட்ட விதிமீறல்களுக்காக கடந்த ஜூன் மாதத்தின் தொடக்கத்தில், சீனாவின் உயர்மட்ட சந்தை கண்காணிப்புக்குழு 15 பயிற்சி நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக 36.5 மில்லியன் யுவான் (ரூ.41,92,50,000) அபராதம் விதித்துள்ளது.
இதுபோன்ற நிறுவனங்களில் மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஏற்கெனவே இருக்கும் பாலர் பள்ளிகளுக்கான பாடநெறிகள் நீக்கப்பட்டுள்ளன. அதில் நாடகம், பேச்சு, கலை, கையெழுத்து, சதுரங்கம் போன்ற வகுப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களின் பன்முகத்தன்மையை வளர்ப்பதற்கான இந்தப் புதிய பாடநெறிகளை பள்ளிக்கு பிறகான பயிற்சிகளாக மேற்கொள்ள பள்ளிகளே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மத்திய குழு தெரிவித்துள்ளது.
“மாலை மற்றும் வார இறுதிகளில் நடனம், பேச்சு மற்றும் எழுதல் போன்ற பல வகுப்புகளில் என் குழந்தையை சேர்த்திருந்தேன். இதில் கட்டணம் அதிகமாக இருந்தது.” என்று ஐந்தாம் வகுப்பு மாணவனின் பெற்றோர் லியு யோங்லிங் கூறினார். ஆனால், இப்போது அவரது குழந்தை திங்கள் முதல் வெள்ளி வரை தங்கள் சொந்த பள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட பள்ளிக்குப் பிறகான வகுப்புகளில் சேர்ந்துள்ளது. இந்த வகுப்புகளால் குழந்தைகளுக்கு அதிக ஓய்வு நேரம் கிடைக்கிறது. மேலும் பெற்றோர்களுக்கு நிதி சுமை குறைகிறது.
“பள்ளி வளாகத்திற்கு வெளியே நடக்கும் பயிற்சி நிறுவனங்கள் சீனாவில் மட்டுமல்ல, கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், பிற கிழக்கு ஆசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் இயங்கி வருகின்றன. சீனாவின் பள்ளிகளுக்கான தற்போதைய நிர்வாக நடைமுறைகளில் சிறந்த மாற்றமடைந்தால், இந்த நாடுகளும் இதை செய்யக் கூடும்” என்று சன் யாட்-சென் பல்கலைக் கழகத்தின் அரசுப் பள்ளியின் ஆராய்ச்சியாளரான வாங் ஜீ கூறினார்.
படிக்க :
♦ இந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு !
♦ புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடிக்கும் மோடி அரசு || புமாஇமு கண்டனம்
இந்தியாவிலும் வளர்ந்து வரும் இது போன்ற தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதித்து, மீறுபவர்களுக்கு தடை விதிக்கப்படுமா? தனியார் கல்விக் கொள்ளையை இயல்பானதாக மாற்றும் வகையில் புதிய கல்விக் கொள்கையை வகுத்திருக்கும் மத்திய அரசிடம் இதன் எதிர்பார்க்க முடியுமா ?
தற்போது நீட் போன்ற பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கான தனியார் பயிற்சி நிறுவனங்கள் கட்டணக் கொள்ளை அடித்து வருகின்றன. இதனால் கல்வியில் இருந்து வருக்கால இந்திய இளம் தலைமுறையினர் விரட்டியடிக்கப்படுவார்கள் என்ற கவலையோ, அக்கறையோ இந்திய அரசுக்கோ மாநில அரசுகளுக்கோ துளியும் இல்லை.
கல்வியில் தனியார்மயத்தை ஒழிக்கும் ஓர் மாபெரும் போராட்டத்தை பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் சமூக ஆர்வலர்கள் முன்னெடுக்கும் பட்சத்தில் மட்டுமே, இந்தியாவில் இது போன்ற சிறு சிறு கல்வி சீர்த்திருத்த நடவடிக்கைகள் கூட சாத்தியமாகும்.
சந்துரு
செய்தி ஆதாரம் : English CCTV, Reuters