போலீசு கொட்டடிக் கொலையை கண்டித்து நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து தலித் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறக் காரணமான போலீசு அடக்குமுறைகள் குறித்த கள நிலவர அறிக்கை !!

லித் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பீகாரின் சார்தா கிராமம் ஜூலை 28 அன்று வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு பெரும்பாலான வீடுகள் மண் மற்றும் வைக்கோலால் கட்டப்பட்டிருந்தன.

ஜூலை 24 மற்றும் 25 அன்று, அம்மாநிலத்தின் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் போலீசார் சோதனை நடத்தி, பல வீடுகளை உடைத்தனர் – கதவுகள், தொலைக்காட்சி பெட்டிகள், டியூப்வெல்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் தளவாடங்கள் என உடைக்கப்பட்ட உடமைகள் ஏராளம்.

31 வயதான கோவிந்த் மஜீ-ன் மீது போலீசு காட்டுமிராண்டி தனமாக தாக்குதல் நடத்தி சிறையில் அடைத்து. பின்னர் சிறையிலேயே இறந்த கிராமவாசிக்கு நீதி கேட்டு போலீசுதுறையின் கொடூரத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பழிவாங்கவே போலீசுதுறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.  ஜூலை 19-ம் தேதி அதிகாலை ஒரு நாட்டு மதுபான வியாபாரம் நடத்தி வந்ததாகக் கூறி கோவிந்த் மஜியை அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். ஏப்ரல், 2016 முதல் பீகாரில் மது தடை செய்யப்பட்டுள்ளது.

மஜி அல்லது முசாஹர் சமூகம் பீகாரில் உள்ள தலித் சமூகங்களில் பொருளாதார, கல்வி மற்றும் சமூக ரீதியாக மிகவும் பின்தங்கிய ஒன்றாகும்.

படிக்க :
♦ காஷ்மீர் : போலீஸ் கொட்டடியில் பள்ளி முதல்வர் மரணம் ! தொடரும் பயங்கரம்
♦ லாக்-அப் கொலைகள்: கேட்பாரற்ற போலீசு ராஜ்ஜியம்!

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 2,50,000 முசாஹர்கள் உள்ளனர். பெரும்பாலானவர்கள் நிலமற்றவர்கள் மற்றும் பலர் பிற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். பீகாரின் கிராமங்களில் தங்கியிருப்பவர்கள் கட்டுமான தளங்கள், செங்கல் சூளைகள் மற்றும் பண்ணைகளில் தினக்கூலி தொழிலாளர்களாக வேலை செய்கிறார்கள். அவர்கள் ஒரு நாளைக்கு ரூபாய் 150 முதல் 200 வரை சம்பாதிக்கிறார்கள்.

மஜியின் குடும்ப உறுப்பினர்களின் கூற்றுப்படி, சார்தா கிராமத்திலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள தாவுத்நகர் துணை சிறைக்கு அவரை அழைத்துச் செல்வதற்கு முன்பு போலீசார் அவரை இரக்கமின்றி கொடூரமாக  அடித்துள்ளனர். இதன் காரணமாக அவர் ஜூலை 24 அன்று அதிகாலை 1.40 மணிக்கு சிறையில் இறந்துவிட்டார்.

பராஸ் பிகா போலீசு நிலையத்தில் காவலர் ராஜ்குமார் யாதவ் அளித்த புகாரின் அடிப்படையில் மஜி கைது செய்யப்பட்டார். சார்தா கிராமம் இந்த போலீசு நிலையத்தின் அதிகாரத்தின் கீழ் உள்ளது.

சுரந்தி தேவி தனது கணவரின் அடையாள அட்டைகளை வைத்திருக்கிறாள்

யாதவின் புகாரில், “ஜூலை 19 அதிகாலையில், நாங்கள் மது வியாபாரிகளை சோதனை செய்தோம். இந்த செயல்பாட்டில், நாங்கள் சார்தா கிராமத்தை அடைந்து கோவிந்த் மஜியை அவரது வீட்டின் முன் பிடித்தோம். அவரிடம் உள்ள ஒரு பிளாஸ்டிக் கேலனுடன் அவரை பிடித்தோம். அந்த கேலன் முழுவதும் மது இருந்தது. விசாரணையின் போது, அதில் மது இருந்ததை அவர் ஏற்றுக் கொண்டார். மேலும், அவர் நீண்ட காலமாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த எழுத்துப்பூர்வமான புகாரின் அடிப்படையில், பீகார் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம், 2018 பிரிவு 30 (A) இன் கீழ் கோவிந்த் மீது போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். அந்த பிரிவின்படி, ஒரு நபர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், குறைந்தது 10 ஆண்டுகள் செலவிட வேண்டும் சிறை மற்றும் அபராதமாக ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும்.

மஜியின் மனைவி சுரந்தி தேவி, தனது கணவர் மீது போலீசார் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கூறியுள்ளார். இந்த தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு மகள் உள்ளார்.

“ஜூலை 19-ம் தேதி காலை 5 மணியளவில் காலைக்கடன்களை முடிக்க நான் எழுந்திருந்தேன்,” என்று அவர் தி வயரிடம் கூறுகிறார். சுரந்தி தேவிக்கு கழிப்பறை வசதி இல்லை. கிராமத்தில் உள்ள 90 சதவிகித தலித் வீடுகளில் கழிப்பறைகள் இல்லை. எனவே, பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வயல்களுக்குச் செல்ல பொதுவாக அதிகாலையில் எழுந்து விடுவார்கள்.

“அவர்கள் (போலீசார்) 10 பேர். அவர்கள் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். நான் என் டெஹ்ரியில் (தாழ்வாரத்தில்) இருந்தேன்” என்று அவர் நினைவு கூர்ந்தார்.

“ஒரு போலீஸ்காரர் என்னை மோசமான வார்த்தைகளால் திட்டினார். என்னை அறைக்குள் வரச் சொன்னார். நான் வயலுக்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினேன். என் கணவர் தூங்கிய படுக்கையறைக்குள் போலீசார் நுழைந்தனர். அவர்கள் அவரை எழுப்பி போலீசு நிலையத்திற்கு இரக்கமின்றி அடித்துக் கொண்டே அழைத்து சென்றனர்” என்று அவர் தி வயரிடம் கூறுகிறார்.

அறைக்குள் எந்த ஒரு பிளாஸ்டிக் கேலனும் இல்லை என்று அவர் சொல்கிறார். போலீசார் அவரை கைது செய்தபோது, அவரிடம் எதுவும் இல்லை. பின்னர், போலீசுதுறையினர் கள்ளச்சாரயத்துடன் ஒரு பிளாஸ்டிக் கேலனை மீட்டதாகக் கூறினர். இது ஒரு முழு பொய் என்று அவர் கூறுகிறார்.

“நான் அவருடன் பத்தாண்டுகளாக இருக்கிறேன். அவர் எப்போதும் விவசாய வேலைகளையே ஈடுபாட்டோடு செய்வார். அவர் ஒருபோதும் மது வியாபாரத்தில் ஈடுபடவில்லை. அவர் ஒரு ஆரோக்கியமான மனிதர். அவருக்கு வேறு எந்த நோயும் இல்லை. அவர் திடீரென இறக்க முடியாது” என்று அவர் கூறுகிறார்.

ஒரு கிராமவாசி கோவிந்த் மஜியின் புகைப்படத்தை வைத்திருக்கிறார்

கோவிந்த் 10-ம் வகுப்பு வரை படித்திருந்தார். அவர் நிலமற்றவர், குத்தகை நிலத்தில் விவசாயம் செய்தார். இது தவிர, அவர் ஆன்லைன் வேலையில் மக்களுக்கு உதவுவார் மற்றும் அவரது மடிக்கணினியின் உதவியுடன் பாடல்கள் மற்றும் திரைப்படங்களை மொபைல் போன்களில் பதிவேற்றிக்கொடுப்பார்.

பூமிகார் சாதியைச் சேர்ந்த அவரது பள்ளி நண்பர் ரோஷன் குமார், “அவன் ஒரு நல்ல பையன். (முசாஹர் சாதியினர் அந்த வட்டாரத்தில் பெரும்பான்மை மக்கள் தொகையில்  உள்ளனர்) இரண்டு மூன்று இளைஞர்கள் மட்டுமே உயர்நிலைப்பள்ளி படித்து தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அவர்களில் கோவிந்தும் ஒருவன். நாங்கள் ஒன்றாக படித்தோம். அவர் எந்த சட்டவிரோத வியாபாரத்திலும் ஈடுபட்டதை நான் பார்த்ததில்லை. போலீசுதுறை எதை வேண்டுமானாலும் குற்றச்சாட்டாக கூறலாம் ஆனால், அவன் மீதான இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது’’ என்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மற்றொரு உள்ளூர்வாசி தி வயரிடம், “இந்த கிராமத்தில் சிலர் நாட்டு மதுபானம் தயார் செய்கிறார்கள். போலீசுதுறை அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும், ஆனால் ஒரு அப்பாவி நபரை ஏன் கைது செய்ய வேண்டும்? என்றார்

தி வயர் ஜெஹனாபாத்தின் எஸ்.பி (போலீசு கண்காணிப்பாளர்) மற்றும் பராஸ் பிகா போலீசு நிலையத்தின் எஸ்.ஹெச்.ஓ (ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிசர்) ஆகியோரை தொடர்பு கொண்டது.  ஆனால், அவர்கள் அழைப்புகளுக்கு பதிலளிக்கவில்லை.

கொட்டடி கொலை

ஜூலை 23 காலை, சுரந்தி தேவிக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. மறுபக்கம் இருந்தவர், அவளது கணவர் சிறையில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் இறக்கலாம் என்றும் கூறினார். அவளை அழைத்த இந்த நபர் அர்வால் மாவட்டத்தில் வசிப்பவர் மற்றும் சிறையில் மஜியுடன் ஒரே அறையில் இருந்தவர். ஜூலை 23 அன்று சிறையிலிருந்து விடுதலையான  அவர் உடனடியாக சுரந்தி தேவியை தொலைபேசியில் தொடர்கொண்டு இந்த தகவலை தெரிவித்தார். கோவிந்த் மஜி தனது சக கைதி விடுதலை ஆகிறபோது அவரது குடும்பத்தினரின் மொபைல் எண்ணைக் கொடுத்து, அவரது உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

சர்தா கிராமவாசிகளின் வீட்டில் இருந்த தொலைக்காட்சி, போலீசாரால் உடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது

“நான் அந்த நபரிடம் காலை 6 மணியளவில் பேசினேன்… ஜூலை 23 அன்று, எங்களால் தாவுத்நகர் துணை சிறைக்குச் செல்ல முடியவில்லை. ஜூலை 24, சனிக்கிழமை காலை நாங்கள் அங்கு சென்றோம். அவரது உடல் வேனில் இருந்ததை நான் பார்த்தேன். அவரது கால்கள் மற்றும் கைகளில் பல காயங்கள் இருந்தன. அவரது ஆடைகள் கிழிந்திருந்தன. அவர் ஜூலை 23 இரவு இறந்தார் என்று சிறையில் இருந்த ஒரு காவலர் எங்களிடம் கூறினார்” என்று அவர் (சுரந்தி தேவி) கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “போலீசார் உடலை எங்களுக்கு கொடுக்கவில்லை. பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் ஒப்படைக்கப்படும் என்று அவர்கள் கூறினர். மருத்துவமனை அதிகாரிகள் இதுவரை பிரேதப் பரிசோதனை அறிக்கையை வழங்கவில்லை.” என்றார்

சிறை வட்டாரங்களின்படி, கோவிந்தின் உடல்நிலை ஜூலை 22 அன்று மோசமடையத் தொடங்கியது. அவர் தாவுத்நகர் துணை சிறையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தாவுத்நகர் துணைப் பிரிவு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். மருத்துவமனையால் வழங்கப்பட்ட ஒரு மருத்துவ குறிப்பு இவ்வாறு கூறுகிறது: “அவர் சுயநினைவு இல்லாமல் மயக்க நிலையில் இருந்தார். அவருக்கு 103 டிகிரி காய்ச்சல் இருந்தது. அவருக்கு குடிப்பழக்கத்தின் அறிகுறிகள் இருந்தது.’’

ஜூலை 22 அன்று மஜீக்கு சிகிச்சை அளித்த டாட்நகர் துணைப் பிரிவு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜேஷ்குமார், போலீசுதுறை வாக்குமூலத்தின்படி அவர் தனது மஜியின் உடல்நிலை பற்றிய தன்னுடய மருத்துவ குறிப்பில் “மஜி மது பழக்கம் உள்ளவர்” என்று எழுதியதை நினைவு கூர்ந்தார்.

நோயாளி என்னிடம் தனக்கு முன்பு எந்த நோயும் இல்லை என்றும் அவர் ஒரு குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் இல்லை என்றும் கூறினார். அவர் ஒரு குடிகாரர் என்று போலீசார் என்னிடம் சொன்னார்கள், அதனால் நான் அதை மருந்து சீட்டில் எழுதினேன்” என்று மருத்துவர் தி வயரிடம் கூறுகிறார்.

“அவர் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தார் மற்றும் ஒரு குடிகாரனைப் போல் தெரியவில்லை. ஜூலை 22 அன்று, அவர் இரண்டு முதல் மூன்று மணி நேரம் மருத்துவமனையில் இருந்தார். நாங்கள் அவருக்கு மருந்துகள், ஊசி மற்றும் குளுக்கோஸ் வழங்கினோம். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நேரத்தில், சிறையில் ஒரு மருத்துவர் இருப்பதால், அவருக்கு சிறையில் சிகிச்சை அளிக்கப்படும் என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்” என்று மருத்துவர் நினைவு கூர்ந்தார்.

ஜூலை 23-ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடையத் தொடங்கியது என்று சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒரு மண் அடுப்பு, போலீசாரால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சுமார் 70 நிமிடங்கள் தாமதமாக – அதிகாலை 1.40 மணியளவில் சிறை அதிகாரிகள் அவரை மீண்டும் தாவுத்நகர் துணைப் பிரிவு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். குறிப்பாக, சப்-ஜெயிலுக்கும் மருத்துவமனைக்கும் இடையிலான தூரம் 2 முதல் 3 கிலோமீட்டர்கள் மட்டுமே.

மேலும், ஜூலை 22 அன்று அவரது உடல்நிலை மோசமாக இருந்தால், அவர் ஏன் மீண்டும் சிறைக்கு கொண்டு வரப்பட்டார்?

இதற்கிடையில், அவுரங்காபாத் டி.எம் சவுரப் ஜோரவால் சிறை மருத்துவர் மற்றும் சிறை அதிகாரிகளுக்கு ஒரு நற்சான்றிதழ் அளித்துள்ளார். “அவர் இதய நோயால் இறந்தார் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது. அவர் எங்களுக்கு எதுவும் சொல்லாததால் எங்களுக்கு அது பற்றிய தெரியவில்லை. அவர் மருத்துவக் காரணங்களால் இறந்துவிட்டார் என்பதை நாங்கள் கண்டறிந்தோம், சிறை அதிகாரிகளின் அலட்சியம் இதில் இல்லை” என்கிறார் ஜோராவால்.

மருத்துவமனைக்குச் செல்வதில் தாமதம் என்ற கேள்விக்கு அவர், “அவருடைய உடல்நிலை மோசமடையத் தொடங்கியபோது, மருத்துவர் அவரைச் சோதித்தார். அவர் சில மருந்துகளைக் கொடுக்க முயன்றார். எனவே, அதற்கு நேரம் பிடித்தது. இது தான் நடந்தது.”

ஒரு பெண் போலீசின் மரணம்

ஜூலை 24 காலை கிராமத்திற்கு செய்தி வந்தவுடன், உள்ளூர்வாசிகள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கினர். அவர்கள் நேஹல்பூர் சவுக்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 110-ல் கூடி போக்குவரத்தை தடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கூட்டத்தை சமாதானப்படுத்த முயன்றனர்.

போலீசாரால் உடைக்கப்பட்ட ஒரு தண்ணீர் பம்ப் .

கூட்டத்தினர் கட்டுப்பாட்டை மீறி போலீசாரை தாக்கியதாக தனது எஃப்.ஐ.ஆரில் போலீசு தெரிவித்திருந்தது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர போலீசார் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் கோபமடைந்து செங்கற்கள், கற்கள் மற்றும் குச்சிகளால் போலீசாரை தாக்கினர். 13-க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர்” என்று எஃப்.ஐ.ஆர் குறிப்பிடுகிறது.

உள்ளூர்வாசிகள் முதலில் போலீசுதான் மக்களைத் தாக்கத் தொடங்கியது என்று  கூறுகிறார்கள். போராட்டங்கள் எங்கள் உரிமை. என் சகோதரர் கொல்லப்பட்டுவிட்டார். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்யக் கூடாதா? என்று கோவிந்தின் மூத்த சகோதரர் பாப்லு மஜ்ஜி கேட்கிறார்.

பாப்லு ஒரு செங்கல் சூளையில் வேலை செய்கிறார். அவர் தி வயரிடம் கூறுகிறார், “போலீசார் திடீரென கூடி போராட்டக்காரர்கள் மீது லத்தி சார்ஜ் செய்யத் தொடங்கினர். பதிலுக்கு எதிர்ப்பாளர்களும் அவர்கள் மீது செங்கற்களை வீசத் தொடங்கினர்.

போராட்டத்தின்போது காவலர் காந்திதேவி சாலையில் விழுந்ததாகவும், வாகனம் மோதியதாகவும் போலீசார் தங்கள் எழுத்துப்பூர்வ புகாரில் கூறியுள்ளனர்.

ஆனால், அவர் ஓடி சாலையில் விழுந்தபோது போலீஸ் வேன் தான் மோதியது என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். பாப்லு தி வயரிடம் தான் அந்த இடத்தில் இருந்ததாகவும், அந்த பெண் போலீசு எப்படி இறந்தார் என்று தெளிவாக தெரியும் என்றும் கூறினார்.

“அவர் ஒரு போலீஸ் வேனில் ஏற முயன்றார், ஆனால் அவர் சாலையில் விழுந்தார். அந்த வழியாக சென்ற ஒரு போலீஸ் பேருந்து அவர் மீது மோதியது.

கூட்டத்தை கலைக்க போலீசார் எட்டு ரவுண்டுகள் சுட்டனர்.

பின்னர், மாஜி சமூகத்தைச் சேர்ந்த 51 நபர்கள் மற்றும் 200 பெயர் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகள் மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவு 27-இன் கீழ் போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர். இதுவரை, ஒரு சில பெண்கள் உட்பட, பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜூலை 27 அன்று, கோவிந்தின் உடல் கிராமத்தை அடைந்தது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். நிலைமை மேலும் மோசமடையும் என்று அஞ்சியதால் உடலை விரைவில் தகனம் செய்ய போலீசார் வலியுறுத்தியதை உள்ளூர் மக்கள் நினைவு கூர்ந்தனர்.

சுரந்தி தேவி, “போலீசார் தாங்களே உடலை தகனம் செய்வோம் என்றும் நாங்கள் வெளியேற வேண்டும் என்றும் கூறிக் கொண்டிருந்தனர். ஆனால், நாங்கள் வெளியேறவில்லை மற்றும் கிராமத்திலிருந்து சிறிது தூரத்தில், போலீஸ் முன்னிலையில் உடலை எரித்தோம்’’ என்றார்.

போலீஸ் ரெய்டு

ஜூலை 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்கள் கிராமத்தில் போலீசார் ரெய்டு நடத்தி, முழு வீடுகளையும் சூறையாடினர்.

கிராமத்தில் உள்ள முதியவர்கள் கூறுகையில், “போலீஸின் நடவடிக்கை 1994 மற்றும் 2000-ம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் செயல்பட்ட பீகாரில் உள்ள ‘உயர்’ சாதி பூமிகார்களின் அடியாள் படையான ரன்வீர் சேனா தாக்குதலை ஒத்ததாக உள்ளது. அந்த ரன்விர் சேனா குழு அரை தலித் மக்கள் பலரையும் கொன்று குவித்தது.” என்றார்

கிராமத்தைச் சேர்ந்த சுனைனா தேவி தி வயரிடம் கூறினார், “போலீசார் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் என் வீட்டிற்குள் திடுதிப்பென நுழைந்து இரண்டு அறைகளை “தேடினர்”. ஒரு அறையில், நான் ஒரு சூட்கேஸில் ரூ.15,000 வைத்திருந்தேன், அதை அவர்கள் எடுத்துச் சென்றனர். ரன்வீர் சேனா குண்டர்களும் அதேபோல்தான் சோதனை செய்வார்கள்.

லலிதா தேவி கூறுகையில், போலீசார் தனது பாத்திரங்கள் அனைத்தையும் உடைத்து நிலம் தொடர்பான ஆவணங்களை கிழித்தெறிந்தனர். இறந்த கோவிந்த் மஜியின் குடும்ப உறுப்பினர்கள் கூறுகையில், எங்கள் வீட்டில் பம்புசெட்டுகள், மடிக்கணினி மற்றும் நாற்காலிகளை சேதப்படுத்தியதாகக் கூறினர். ஜானகியா தேவி கூறுகையில், போலீசார் தனது கதவை உடைத்து தனக்கு சொந்தமான தொலைக்காட்சியை உடைத்தனர்.

ஷீலா தேவி

போலீசு நடவடிக்கைக்கு பயப்படுவதால் பெரும்பாலான கிராம மக்கள் விவசாய வயல்களிலோ அல்லது காடுகளிலோ பதுங்கியுள்ளனர். கிராமவாசிகள் மற்றொரு சுற்று போலீஸ் கொடூரத்திற்கு அஞ்சுகின்றனர்.

ஐம்பத்தைந்து வயதுடைய புத்து மஜ்ஜி தி வயரிடம், “நாங்கள் மாலையில் காட்டுக்குச் சென்று அங்கே இரவுகளைக் கழிக்கிறோம். நான் மட்டும் இல்லை. கிராமத்தின் கிட்டத்தட்ட அனைத்து ஆண்களும் பெண்களும் போலீஸ் நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக காட்டில் தங்கியுள்ளனர்.

“போலீசுதுறை எங்களை இரக்கமின்றி அடித்தது,” என்று புத்து கூறுகிறார்.

சர்தாவைத் மட்டுமின்றி, நேஹல்பூர் முசாஹரி தோலாவிலும் போலீசார் சோதனை நடத்தினர். நெஹல்பூர் சார்தா கிராமத்திற்கு அருகில் உள்ளது.

மோகன் மஜி என்ற நடுத்தர வயது மனிதர், கிராமத்தின் இளைஞர்கள் கிட்டத்தட்ட ஒருவாரமாக வயலில் தங்கள் நாட்களைக் கழிக்கிறார்கள் என்று கூறினார்.

“சில நேரங்களில் நாங்கள் இரண்டு விவசாய வயல்களுக்கு இடையில் உள்ள வரப்பில்  தூங்குவோம். சனிக்கிழமை முதல் இரவில் மழை இல்லை. இது எங்களுக்கு உதவியாக உள்ளது. மழை இருந்திருந்தால், நாங்கள் எப்படி இரவைக் கழிக்க முடியும் என்று தெரியவில்லை” என்று நெஹல்பூர் வாசி ஒருவர் கூறினார்.

திறந்தவெளியில் பாம்பு கடிக்கும் ஆபத்து உள்ளது. நெஹல்பூர் முசாஹரி தோலாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் வயல்வெளியில் பதுங்கியிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. இருவரும் உயிர் தப்பினர். அவர்களில் ஒருவர் ஷீலா தேவி.

“நான் வயலில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு பாம்பு என்னை கடித்தது. 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஓஜா–விடம் (மந்திரிப்பவர்) செல்ல நாங்கள் ரூ.500-க்கு ஒரு ஆட்டோவை வாடகைக்கு எடுக்க வேண்டியிருந்தது. அவருக்கு ரூ.400 கொடுத்தோம். நல்ல நேரம், நான் உயிர் பிழைத்தேன்” என்று அவர் கூறினார்.

போராட்டத்தில் ஈடுபடாத பலரை போலீசார் எப்.ஐ.ஆரில் குறிப்பிட்டுள்ளதாகவும், உண்மையில், அவர்கள் மற்ற மாநிலங்களில் தங்கியிருப்பதாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

படிக்க :
♦ சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !
♦ காஷ்மீர் : போலீஸ் கொட்டடியில் பள்ளி முதல்வர் மரணம் ! தொடரும் பயங்கரம்

புத்து மஜ்ஜி தன் மருமகன் பஞ்சாபில் தங்கியிருப்பதாக குற்றம் சாட்டினார். ஆனால், போலீசார் அவரது பெயரை எஃப்.ஐ.ஆர்-ல் சேர்த்துள்ளனர்.

சர்தா உள்ள ஷீலா தேவி தனது கணவர் ஆர்ப்பாட்டத்தில் இல்லை என்று குற்றம் சாட்டினார். ஆனால், போலீசார் அவரை கைது செய்துள்ளனர். “போலீசார் அவரை மோசமாக அடித்துள்ளனர், மருத்துவர்கள் குளுக்கோஸ் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று அவர் கூறினார்.

கோவிந்த் மஜியின் மரணத்திற்காக அவரது குடும்பத்தினர் இன்னும் போலீசு மற்றும் சிறை அதிகாரிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை.

“நாங்கள் போலீசுநிலையத்திற்கு பயணம் செய்ய பயப்படுகிறோம். அவர்கள் எங்கள் பேச்சைக் கேட்க மாட்டார்கள். அவர்கள் எங்களை கைது செய்து கோவிந்தைப்போல அடித்து நொறுக்கலாம்” என்று கோவிந்தின் சகோதரர் பாப்லு கூறினார்.

”ஆனால், நாங்கள் நீதி கோருகிறோம். இதன் பின்னணியில் உள்ள போலீசர் தண்டிக்கப்பட வேண்டும்” என்று இறந்த கோவிந்த் மஜியின் விதவை மனைவி சுரந்தி தேவி கூறினார்.


கட்டுரையாளர் : உமேஷ் குமார் ராய்
தமிழாக்கம் : முத்துகுமார்
செய்தி ஆதாரம் : The Wife

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க