லங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது பயங்கரமாகத் தாக்கிக் கொண்டிருக்கிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் நோய்ப் பரவலின் காரணமாக மரித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் வறுமையில் வாடிக் கொண்டிருக்கையில் அவர்களுக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும் வகையில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகள் மீதான விலைவாசி அதிகரிப்பு, இறக்குமதி தடைகள் போன்ற பல சுமைகளை மக்களின் மீது சுமத்திக் கொண்டிருக்கிறது அரசாங்கம்.
இலங்கை ஒரு தனித்த தீவு. பிற நாட்டவர்களின் வருகையைத் தடுப்பது மிகவும் எளிதாக உள்ள ஒரு சிறிய நாடு. கொரோனா பரவலின் ஆரம்ப கட்டத்திலேயே வான்வழி, கடல்வழி உட்பிரவேசங்களுக்குத் தடை விதித்திருந்தால் நாட்டுக்குள் வைரஸ் வராமலேயே தடுத்திருக்கலாம். ஆனால் ஜனாதிபதியோ, அரச பரிவாரங்களோ அதைச் செய்யவில்லை. இப்போதும் கூட, டெல்டா சரமாரியாகப் பரவிக் கொண்டிருக்கும் இந்த நாட்களிலும் கூட நாட்டுக்குள் உச்சபட்ச கட்டுப்பாடுகளை விதிக்காமல் மரணங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அரசாங்கம். ஒருவிதத்தில் இதுவும் சர்வாதிகார ஆட்சிதான்.
படிக்க :
இலங்கை : போலீஸ் கைதுகளின் பின்னரான படுகொலைகள் || எம். ரிஷான் ஷெரீப்
இலங்கை : மன்னார் நகர் பெண்களின் சொல்லப்படாத கதைகள் || எம். ரிஷான் ஷெரீப்
நாட்டில் இவ்வாறான அபாய நிலைமை காணப்படும் வேளையிலும் வைத்தியர்களும், தாதிகளும், சுகாதார சேவை அதிகாரிகளும், குடும்ப நல உத்தியோகத்தர்களும் தமது உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்தும் சேவைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா தாக்கிய நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள், தாதிகள், குடும்ப நல உத்தியோகத்தர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சாரதிகள் (ஓட்டுனர்கள்) எனப் பலரும் கடந்த வாரங்களில் மரணித்திருக்கிறார்கள்.
அபிவிருத்தியடையாத கஷ்டப் பிரதேச கிராமங்களில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கவும், அவர்களது குடும்பத்தினருக்கு ஊசி மருந்தேற்றவும் நடந்து சென்று வரும் குடும்ப சுகாதார சேவை மற்றும் குடும்ப நல உத்தியோகத்தர்களான பெண் அதிகாரிகளில் ஒரு சிலரையே இந்தப் புகைப்படங்களில் நீங்கள் காண்கிறீர்கள். கிராமங்களிலுள்ள இவ்வாறான கடினமான பாதைகளில் இவர்கள் இதற்கு முன்பும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சையளிக்க பல தடவைகள் நடந்தே போயிருக்கிறார்கள்..

 

This slideshow requires JavaScript.

இலங்கையின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்ய பெருமளவில் பங்களிக்கும் இவ்வாறான சிறந்த பெண் அதிகாரிகளின் சேவைகளும், அர்ப்பணிப்புகளும் பெரும்பாலும் பலராலும் கண்டுகொள்ளப்படுவதேயில்லை. இவர்களுக்குத் தேவையான பாராட்டுகளும் கிடைப்பது குறைவு. இலங்கையிலும், உலகம் முழுவதிலும் இவ்வாறான அரிய சேவைகளை அர்ப்பணிப்புடன் செய்பவர்கள் பலர் உள்ளார்கள். இந்தப் புகைப்படங்கள் அவர்கள் அனைவரதும் சேவைகளையும், அர்ப்பணிப்புகளையும் வரலாற்றில் நிலை நிறுத்துகின்றன
எம்.ரிஷான் ஷெரீப்

disclaimer

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க