டந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில், அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்த மோடி தலைமையிலான காவி பாசிச கும்பல், தனது இந்துராஷ்டிரக் கனவை நிறைவேற்றும் விதமாக மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் முதலாவதும், முக்கியமானதும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 மற்றும் காஷ்மீரிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கும் பிரிவு 35A ஆகியவற்றை ரத்து செய்ததாகும்.
இந்தச் சிறப்புச் சட்டம் நீக்கம் என்பது குறைந்தபட்ச ஜனநாயக நடவடிக்கைகளைக் கூட மேற்கொள்ளாமல், நாடு முழுவதும் இராணுவத்தை நிறுத்தி, காஷ்மீரில் ஊரடங்கை அறிவித்து, இணையம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை ரத்து செய்து, எதிர்ப்புகளை ஒடுக்கி ஒரு இராணுவ நடவடிக்கைபோல் அமல்படுத்தப்பட்ட பாசிச நடவடிக்கையாகும். காஷ்மீரின் சிறப்புச் சட்டத்தை நீக்கியதோடு அம்மாநிலத்தை ஜம்மு − காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகத் துண்டாடியது, பாசிச மோடி அரசு.
காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவது, முன்னேற்றுவது என்ற வகையில்தான் காஷ்மீரின் சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டதாகவும், இதன் மூலம் ஜம்மு − காஷ்மீர் மற்றும் லடாக்கில் புதிய வரலாறு தொடங்கப்பட்டுள்ளதாகவும், இப்பாசிச நடவடிக்கையை நியாயப்படுத்தினார், பிரதமர் மோடி. தற்போது, சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டு 2 ஆண்டுகள் கடந்த நிலையில், ‘‘ஜம்மு − காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு புதிய வரலாற்றுக் கட்டத்திற்குள் பீடுநடை போடுகிறது’’ என்ற தலைப்பில் 2 ஆண்டுகால சாதனைகளை விளக்கி 76 பக்க வெளியீட்டைக் கொண்டு வந்துள்ளது, மோடி அரசு.

படிக்க :

காஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை

காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !

பொய்யையும் புரட்டையுமே வாழ்வாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க கும்பல், இந்த வெளியீட்டிலும் ஜம்மு − காஷ்மீரில், மருத்துவம், சுற்றுலா, கல்வி, விளையாட்டு மற்றும் சொத்து உரிமைகள் ஆகியவற்றில் சாதனை நிகழ்த்தியுள்ளதாக, பொய்களையே சாதனைகளாக சுயதம்பட்டம் அடித்துக் கொள்கிறது. ஆனால், ஜம்மு − காஷ்மீரின் உண்மை நிலையோ நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. ஜம்மு − காஷ்மீரின் உண்மை நிலையை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது, ஜம்மு − காஷ்மீர் மனித உரிமைகளுக்கான அரங்கம் (Forum for Human Rights in Jammu Kashmir).
000
காஷ்மீருக்கான சிறப்புச் சட்டம் நீக்கப்பட்ட பிறகு, இரண்டாண்டுகளாக தடுப்புக் காவல்களும், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கான தடையும் (144) தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. வீட்டிலிருந்து வெளியில் செல்பவர்களுக்கு என்ன நடக்கும் எந்த உத்திரவாதமற்ற சூழல்தான் அங்கு நிலவுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, காஷ்மீர் மாநிலமே திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாறியிருக்கிறது.
பொது ஊரடங்கை நீட்டிப்பதோடு, அரசு ஊழியர்கள் உட்பட, காஷ்மீர் மக்களின் மீதான கண்காணிப்பையும் அதிகரித்துள்ளது, மோடி அரசு. சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்க சிறப்பு பணிப்படை (Special Task Force) உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க கும்பல்களுக்கு, மோடி அரசை விமர்சிப்பதும் அம்பலப்பட்டுத்துவதுமே ‘தேச விரோத’ செயல்கள்தான். அதன்படி, காஷ்மீரில் தேச விரோதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார்கள் என்று 18 அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
காஷ்மீரின் உள்ளூர் ஊடகங்கள் மிகப்பெரும் அடக்குமுறைக்கும் போலீசின் மிரட்டலுக்கும் உள்ளாகியிருக்கின்றன. செய்திகள் யாவும் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகத்தின் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வெளியிடப்படுகின்றன. காஷ்மீரின் உண்மைமை நிலையை வெளிக்கொண்டு வரும் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்படுவதும் துன்புறுத்தப்படுவதும் மற்றும் ஊபா போன்ற கருப்புச் சட்டங்களால் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாய் உள்ளன.
கடந்த 2019−இல், பெண் பத்திரிக்கையாளர்கள் உட்பட 2,300−க்கும் மேற்பட்டோர் ஊபா சட்டத்தால் கைது செய்யப்பட்டனர். இதில் 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர் இன்னமும் சிறையில்தான் உள்ளனர். காஷ்மீரில், பத்திரிக்கையாளராக இருப்பது பெரும் சவாலானதாகவும், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவதாகவும் மாறியுள்ளது.
மேலும், 2019−இல் சிறப்புச் சட்டத்தை நீக்கும்போது கைது செய்யப்பட்டவர்களில், சிறுவர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என ஆயிரத்துக்கும் அதிகமானோர் இன்னமும் சிறையில் உள்ளனர். ஆட்கொணர்வு மனு, பிணை கோரும் மனு மற்றும் விரைவான வழக்கு விசாரணை போன்ற சட்ட உரிமைகளும் மறுக்கப்படுகிறது. காஷ்மீர் மக்களைத் தொடர்ந்து அச்சுறுத்தலில் வைப்பதற்கான வழிமுறையாக இவற்றைக் கையாண்டு வருகிறது, பாசிச மோடி அரசு.
இணையதள வசதி, அத்தியாவசியமாகியுள்ள இன்றைய சூழலில், ஜம்மு − காஷ்மீரில் இரண்டாண்டுகளாக இணையதள சேவையும் பகுதியளவிற்குதான் வழங்கப்படுகிறது. அதிலும் இராணுவச் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டால் இணையதள வசதி முடக்கப்படுவது இயல்பான நடைமுறையாக உள்ளது. இதனால், காஷ்மீர் மக்களுக்கு வீடே சிறையறையாக மாறியுள்ளது என்றால் அது மிகையாகாது.
ஏனெனில், பொது ஊரடங்கால் வெளியில் செல்லவும் முடியாது; இணையதள சேவையும் முடக்கப்படுவதால் உலக நடப்பிலிருந்து துண்டிக்கப்பட்டு சிறையிலிருக்கும் நிலைதான் காஷ்மீரிகளுக்கு. வீடே சிறையாக உள்ள அம்மக்களின் நிலைமை நம் நெஞ்சை உலுக்குகிறது.
மேலும், காஷ்மீரிலும் கொரோனா பெருந்தொற்றால் ஆன்லைன் வகுப்புகள்தான் நடைபெறுகின்றன. இணையதள வசதி முடக்கப்படுவதாலும், 4ஜி தொலைத்தொடர்புச் சேவை கிடைக்காததாலும் வகுப்புகள் நடத்தவோ, பங்கேற்கவோ முடியாத நிலைமைதான் அங்குள்ளது.
நாடு முழுவதும் அரசியல்வாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்களை பெகசாஸ் உளவு செயலி மூலம் ஒன்றிய அரசு உளவு பார்த்தது போல், காஷ்மீரிலும், 2017 முதல் 2019−ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளார்கள என 25−க்கும் மேற்பட்டோரை இந்தச் செயலி மூலம் மோடி அரசு உளவு பார்த்துள்ள உண்மையானது, தடவியல் சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது தாலிபான்கள் ஆப்கானில் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதால், இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற பீதியூட்டி, காஷ்மீர் மக்களின் மீதான அடக்குமுறையை இன்னும் அதிகரிக்கத் துடிக்கிறது மோடி அரசு.
காஷ்மீரின் சிறப்புச் சட்ட நீக்கமானது ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க காவி கும்பலின் இந்துராஷ்டிரக் கனவுக்கானது மட்டுமல்ல, அது கார்ப்பரேட் கும்பலின் நலனுக்கானதுமாகும். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய பிரிவு 370−ஐ மோடி அரசு நீக்கியதோடு, காஷ்மீரிகளுக்கு மட்டும் காஷ்மீரில் நிலங்கள், வேலைவாய்ப்பு மற்றும் சொத்துகள் வாங்குவதற்கான உரிமை மற்றும் சலுகைகளை வழங்கிய பிரிவு 35A−யையும் நீக்கியுள்ளது.
இச்சிறப்புச் சட்டம் நீக்கப்பட்டவுடன், ‘‘காஷ்மீரில் இனி இந்தியர்கள் சொத்துக்கள் வாங்கத் தடையில்லை’’ என கூப்பாடு போட்டன ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க காவி கும்பல்கள். சிறப்புச் சட்டம் நீக்கப்பட்ட இரண்டாண்டுகளில், காஷ்மீரில் நடைமுறையில் இருந்த 12 சட்டங்களை ரத்து செய்துள்ளது, யூனியன் பிரதேச அரசு.
அவற்றில் முக்கியமான ஒன்றுதான், 1950−இல் ஷேக் அப்துல்லா ஆட்சியில், கொண்டுவரப்பட்ட் பெரும் பண்ணைகள் ஒழிப்புச் சட்டமாகும் (Big Landed Estaes Abolition Act). இச்சட்டம் கொண்டு வருவதற்கு முன்பு வரை காஷ்மீரின் நிலங்கள் பெரும் பண்ணையார்களுக்கும் நிலப்பிரபுக்களுக்கும்தான் சொந்தமாக இருந்தது. ஆனால், இச்சட்டம் கொண்டுவரப்பட்டு, அமல்படுத்தப்பட்ட இரண்டாண்டுகளில், அதாவது 1952−க்குள் காஷ்மீரில் சுமார் 7 லட்சம் நிலமற்ற கூலி − ஏழை விவசாயிகளுக்கு நிலங்கள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. இதில், சுமார் 2,50,000 தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்து விவசாயிகளும் நிலவுரிமை பெற்றனர். முஸ்லீம்களின் ஆட்சி இந்துக்களுக்கு எதிரானது என்று வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வரலாற்றைத் திரித்துப் புரட்டும் ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க கும்பலின் யோக்கியதையை இதன்மூலம் புரிந்து கொள்ள முடியும்.
தற்போது இந்த பெரும் பண்ணை ஒழிப்புச் சட்டத்தை ரத்து செய்ததிலிருந்து, சட்ட விரோத நில ஆக்கிரமிப்புகள் நடைபெறுவதாகவும், வழக்குகள் பதிவாகி வருவதாகவும் செய்திகள் வருகின்றன. மேலும் நாடோடி பழங்குடிகள், தங்கள் வாழ்விடத்திலிருந்து வனத்துறையினரால் விரட்டப்படுவதும் அரேங்கேறி வருகிறது.
மோடி சொல்லும் வளர்ச்சி என்பது அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சி என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன. மோடியின் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு, மீத்தேன், சாகர் மாலா, பாரத் மாலா, எட்டுவழிச்சாலை, மோட்டார் வாகன திருத்தச் சட்டம், கடல் வள மசோதா, நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கை என அனைத்தும் கார்ப்பரேட் நலனுக்காகனவைதான். அந்த வழியில்தான் இப்போது ஜம்மு − காஷ்மீரில் பெரும்பண்ணைகள் ஒழிப்புச் சட்ட நீக்கமும் அரங்கேற்றப்பட்டுள்ளது. காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு சட்டத்தையும், சலுகைகளையும் ரத்து செய்ததன் மூலம், காஷ்மீரில் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இனி சொத்து வாங்க முடியும் என்ற காவி கும்பலின் கூப்பாட்டையும் பொருத்திப் பார்த்தால் இதன் பலன் யாருக்கானது என்று புரியும்.
காஷ்மீரின் வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட் முதலைகள் சூறையாடுவதற்காகவும். இஸ்லாமிய மக்களை சொந்த மண்ணில் இரண்டாம்தர குடிமக்களாக்கி தனது அகண்ட பாரத கனவை நிறைவேற்றிக் கொள்ளவும்தான் ஆர்.எஸ்.எஸ். − பா.ஜ.க காவி கும்பல்களால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, துண்டாடப்பட்டது. கடந்த இரண்டாண்டுகளில் இப்பாசிச கும்பல் காஷ்மீரை தனது கார்ப்பரேட் − காவி பாசிசத்தின் முதலாவது காலனியாக − அடிமைப் பிரதேசமாக்கியுள்ளது.
000
2019−இல் பாசிச நடவடிக்கையின் மூலம் காஷ்மீரின் சிறப்புச் சட்டத்தை நீக்கியபோது, ஒருங்கிணைந்த காஷ்மீரின் லடாக் பகுதிகளிலும் ராணுவத்தைக் குவிப்பது, அரசியல் தலைவர்களை வீட்டுக் காவலில் வைப்பது என்ற வகையில் லடாக் பிராந்தியமும் அடக்குமுறைக்குள்ளானது.
2019−இல், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, கார்கில் மற்றும் லே ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கி, லடாக் தனியொரு யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டது. அப்பொழுது, சிறப்புச் சட்ட நீக்கம் மற்றும் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதை எதிர்த்து முஸ்லீம்கள் அதிகமுள்ள கார்கில் பிராந்தியம் போராட்டக் களமாகியது. புத்த மதத்தினர் பெரும்பான்மையாக உள்ள, லே பிராந்தியமோ யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டதை வரவேற்று மகிழ்ச்சிக் கோலம் பூண்டது. ஆனால், இந்த மகிழ்ச்சி, அடுத்த சில நாட்களிலேயே வற்றிப்போனது.
கடந்த இரண்டாண்டுகளில், ஜம்மு − காஷ்மீரைப் போலவே லடாக்கில் உள்ள நிலங்களின் மீதான உரிமை மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய சட்டபூர்வமான இரண்டு உரிமைகளும் அம்மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. லடாக் யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டாலும், அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஒருங்கிணைந்த காஷ்மீரின் ஒரு பகுதியாக இருக்கும்போது, இப்பகுதிவாழ் மக்கள் காஷ்மீரின் அரசு வேலைவாய்ப்புகளில் பங்குபெற முடிந்தது. இப்போது, தனி யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்டதால் வேலைவாய்ப்பும் பறிபோயுள்ளது.
லடாக்கில் 97 சதவிகிதத்துக்கு மேலானோர் பழங்குடியினராவர். 1990−லிருந்து கார்கில் மற்றும் லே−விற்கு தனித்தனியாக பழங்குடியினரது மலை மேம்பாட்டுக் கவுன்சில் (Hill Developement Council) என்ற சுயாட்சி அதிகார அமைப்பு இயங்கி வந்தது. இக்கவுன்சிலுக்கான தேர்தல் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்கள் இக்கவுன்சிலின் ஆலோசகர்களாக இருந்து வந்தனர். இந்த ஆலோசகர்கள், தங்கள் தொகுதிக்கான தேவைகளையும் அதற்கான செலவுகளையும் முன்வைத்து நிறைவைற்றும் அதிகாரம் கொண்டவர்களாக இருந்தனர்.

படிக்க :

ஜாலியன் வாலாபாக் நினைவிடம் : கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?

ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !

ஆனால், லடாக் பிராந்தியம் யூனியன் பிரதேசமாகப் பிரிக்கப்பட்ட பிறகு, மைய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல், மலை மேம்பாட்டுக் கவுன்சிலின் ஆலோசகர்கள் தங்கள் தொகுதிக்கென சல்லிக் காசு கூட ஒதுக்க முடியாது. இவ்வாறாக, கடந்த இரண்டாண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறிப் போயுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், லடாக் பழங்குடியினப் பகுதிகளின் சுயாட்சி உரிமையும் பாதுகாப்பும் அதிகாரமும் மோடி அரசால் பறிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழல்தான், 2019−க்கு முன்பு வரை “லடாக்கை யூனியன் பிரதேசமாகப் பிரிக்க வேண்டும், லடாக்கை அரசியல் சட்டத்தின் அட்டவணை பட்டியல் 6−இல் இணைக்க வேண்டும்” என்று கோரிவந்த லே மாவட்ட மக்களை, கார்கில் மாவட்ட மக்களுடன் இணைந்து மாநில அந்தஸ்து வேண்டும் என்று குரலெழுப்ப வைத்துள்ளது. மத வேறுபாடுகளைக் கடந்து, கார்கில் ஜனநாயகக் கூட்டணியும் (KDA − Kargil democratic alliance), லே மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 6−வது பட்டியலுக்கான மக்கள் இயக்கத்தின் உயர்நிலைக் குழுவும் (ABPMSS) மாநில அந்தஸ்து வேண்டுமென்ற பொது கோரிக்கைக்காக இணைந்து போராடி வருகின்றன.
மோடி அரசின் துரோகத்தை எதிர்த்து, லே பிராந்தியத்தின் பா.ஜ.க. தலைவரான செர்ரிங் டோர்ஜீ, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பா.ஜ.க.வின் முன்னாள் எம்.பி.யாகிய துப்ஸ்தன் ச்சீவாங், தேசிய மாநாட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் திக்சே ரின்போச்சே, லடாக் பிராந்திய காங்கிரசுத் தலைவர் நவாங் ரிக்சின் ஜோரா, முன்னாள் பா.ஜ.க. தலைவரும் அமைச்சருமான செர்ரிங் டோர்ஜீ முதலான பிரமுகர்கள் இந்த இயக்கத்தைத் தலைமை தாங்கி நடத்தி வருகின்றனர். ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்குப் பின்னர் கார்கில் மற்றும் லே பிராந்திய மக்கள் தங்களது உரிமைக்காக ஐக்கியப்பட்டுள்ளனர். பா.ஜ.க. கட்சியானது இப்பிராந்தியத்தில் தனிமைப்பட்டுப் போயுள்ளது.
லடாக்கில் பற்றிய இச்சிறு பொறியானது, அடக்குமுறைகளாலும், இயற்கைவளச் சூறையாடலாலும் சின்னபின்னமாகியுள்ள பனிமலை சூழ்ந்த காஷ்மீர் மாநிலத்தை மீண்டும் எரிமலையாக வெடித்தெழச் செய்யும் என்பதற்கான அறிகுறியாகும். லடாக் மக்களின் நியாயவுரிமைக்காகவும், ஜம்மு − காஷ்மீரின் அடக்குமுறைக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டியது, பாசிசத்தை எதிர்க்கின்ற, வீழ்த்தத் துடிக்கின்ற நம் அனைவரின் கடமையாகும்.


அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க