தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க-வின் பாசிச போக்கை எதிர்த்து கருத்திலும் களத்திலும் போராடிவந்த பெரியாரிய அமைப்புகள், தாழ்த்தப்பட்டோர் − சிறுபான்மையினர் அமைப்புகள், சி.பி.ஐ − சி.பி.எம் உள்ளிட்ட தேர்தல் கம்யூனிஸ்டுகள், மே 17 இயக்கம் மற்றும் சில மா−லெ குழுக்கள் உட்பட அரசியல் அமைப்புகள், தி.மு.க-வின் தேர்தல் வெற்றிக்காக பெரிய அளவில் பிரச்சாரம் செய்தனர். தி.மு.க வெற்றி பெற்றதும், திராவிட ஆட்சி மலர்ந்து விட்டது என்று பிரச்சாரமும் செய்தனர். ஆனால், தி.மு.க-வோ பார்ப்பன எதிர்ப்பைக் கொண்ட தமிழகத்தின் மரபுக்கு மாறாக, காவியுடன் சமரசப் போக்கையே கடைபிடித்து வருகிறது.
ஆட்சிக்கு வந்தால் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே ‘‘நீட்’’ தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறுவோம்; நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றது, தி.மு.க. ஆனால், ஆட்சியைப் பிடித்த பிறகு, ஏ.கே.ராஜன் தலைமையில் ‘‘நீட்’’ தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வி எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதனை ஆராய ஆய்வுக் குழு அமைத்து உத்தரவிட்டது தி.மு.க அரசு. அதுமட்டுமின்றி, நீட் தேர்வை ரத்து செய்ய ‘‘முடிந்த வரை முயற்சிப்போம்’’ என்றுதான் சொன்னோம் என்று அந்தர்பல்டி அடித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்.
படிக்க :
♦ திமுக அரசு பட்ஜெட்டும் அரசுப் பள்ளிகளின் நிலைமையும் || சிறப்புக் கட்டுரை
♦ திமுக அரசே வேலை கொடு : சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !
ஏழு தமிழர் விடுதலை விவகாரத்தில், இந்த விசயம் எனது வரம்புக்கு அப்பாற்பட்டது என்று கைகழுவினார் தமிழக ஆளுநர். ஆனால் தி.மு.க அரசோ, பேரறிவாளனுக்கு ஒரு மாத பரோல் வழங்குவதைத் தொடர்ந்து நீட்டித்து வருகிறதே தவிர, ஏழுவரை விடுதலை செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஏழு பேர் விடுதலை செய்வது தொடர்பான தமிழக சட்டமன்றத் தீர்மானத்தின் மீது குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் எனச் சொல்கிறார், தமிழக ஆளுநர். அந்த ‘குடியரசு’த் தலைவருக்கு நிர்பந்தம் கொடுத்து ஏழு பேரை விடுதலை செய்வதற்கு பதிலாக, தமிழக சட்டமன்றத்தின் 100−ம் ஆண்டு விழாவிற்கு அந்தக் ‘குடியரசு’த் தலைவரை வரவழைத்துக் கௌரவித்தது, தி.மு.க அரசு.
தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசானது எந்த அணையையும் கட்டக்கூடாது என காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தெளிவுபடுத்திய பின்னும், எந்த எதிர்ப்பு வந்தாலும் அணையைக் கட்டியே தீருவோம் என்று கொக்கரிக்கிறது, கர்நாடக பா.ஜ.க அரசு. அணை கட்டுவதற்கான விரிவான அறிக்கை தர கர்நாடகாவிற்கு உத்தரவிட்ட ஒன்றிய அரசு, தமிழகத்திடம் ‘‘சட்டப்படி எல்லாம் நடக்கும்’’ என்கிறது.

கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதை மாநிலங்களின் தலையில் கட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்ட பாசிச மோடி அரசு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை, வரி வருவாய் உள்ளிட்டவற்றை பிரித்துக் கொடுக்காமல் ஏமாற்றியது. குறிப்பாக, தமிழகத்துக்கு ஜி.எஸ்.டி வரி வருவாயாக வழங்கப்பட வேண்டிய தொகை மட்டும் ரூ.20,033 கோடி. இந்தத் தொகையை ஒன்றிய அரசிடமிருந்து பெறுவதற்காக, அ.தி.மு.க எடப்பாடி பாணியில், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதுவது, நேரில் சென்று ‘வலியுறுத்துவது’ ஆகிய சடங்குத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டார், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
000
மோடி அரசின் மாநில உரிமைப் பறிப்புகளுக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமல்ல; ஆர்.எஸ்.எஸ் − பா.ஜ.க-வின் இந்துத்துவ சித்தாந்தத்தோடு சமரசம் செய்து கொண்டுள்ளதோடு, தமிழகத்தில் அதன் வளர்ச்சிக்கு ஒத்திசைவாக நடந்து கொள்வதாகவும் தி.மு.க ஆட்சி அமைந்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலைப் பரவலின்போது, ‘‘கொரோனா தடுப்புப் பணியை மக்கள் இயக்கமாக மாற்றுவோம்’’ என்று அறிவித்த தி.மு.க அரசு, கொரோனா தடுப்புப் பணிகளை பல்வேறு தன்னார்வக் குழுக்களை இணைத்துக் கொண்டு மேற்கொள்வதன் மூலம் தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவது என்ற திட்டத்தை முன்வைத்தது. அதற்காக சில குறிப்பிடத்தக்க தன்னார்வக் குழுக்களுக்கு மட்டுமே அனுமதியளித்தது. அதில் ஆர்.எஸ்.எஸ்-ன் சேவா பாரதி என்ற அமைப்பையும் அழைத்திருந்தது.
தமிழகத்தில் சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை−மகன் இருவரையும் கொடூரமாகப் படுகொலை செய்த ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸில் இருந்தவர்கள் சேவா பாரதியை சேர்ந்தவர்களே. இந்த சேவா பாரதி அமைப்பின் சார்பில் திருப்பூரில் தொடங்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தைத்தான் தி.மு.க செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திறந்து வைத்து, அங்கு வைத்திருந்த “பாரதமாதா” படத்திற்கு மலர்தூவி வணங்கியுள்ளார்கள். தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு பாதையமைத்துக் கொடுக்கும் வேலையை தி.மு.க-வே தலைமையேற்று செய்து கொடுத்துள்ளது என்பதனைத்தான் இச்சம்பவங்கள் நமக்கு காட்டுகின்றன.
மண்டைக்காடு கலவரத்தை முன்னின்று நடத்திய எம்.ஆர். காந்தி என்ற எம்.எல்.ஏ. கிறித்துவ சிறுபான்மை மக்களுக்கு எதிராகத் திட்டமிட்டு கலவரத்தைத் தூண்டிவிடுவதையே நோக்கமாக கொண்டு செயல்படும் ஆர்.எஸ்.எஸ். வெறியர். கன்னியாகுமரியில் ஒரு தேவாலயத்தைப் புதுப்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்த இந்து மதவெறியனின் புகாரின் பேரில், கன்னியாகுமரியைச் சேர்ந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை போலீசு கைது செய்து சிறையில் அடைத்தது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கலைஞர் ஆய்வு மையம் சார்பில் ‘‘வேதஷக்தி வர்மக் கலையும் பண்பாட்டுப் பின்புலமும்’’ என்ற தலைப்பில் கடந்த 16−ஆம் தேதி கருத்தரங்கம் ஒன்று நடந்துள்ளது. வேதம் − தற்காப்புக்கலை என்று இந்துத்துவ சித்தாந்தத்தினை மறைமுகமாக புகுத்துகிற நடவடிக்கை இது என்று பலரும் விமர்ச்சித்தனர். தற்போது இதுபோல இந்துத்துவ கருத்துக்களை மறைமுகமாகத் திணிக்கக் கூடிய கருத்தரங்கங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. இப்பல்கலைக்கழகத்தின் மீது தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மதுரைக்கு வருவதையொட்டி அவர் செல்லும் வழியில் சாலைகளைச் செப்பனிடுவது, தெரு விளக்குகளை சீர்படுத்துவது, குப்பைகளை அகற்றுவற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தனக்கு கீழுள்ள அதிகாரிகளுக்கு மதுரை மாநாகராட்சி ஆணையர் சுற்றறிக்கை அனுப்பிய விசயத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை கூட, சமூக வலைதளங்களில் தமிழ் மக்கள் தெரிவித்த எதிர்வினையின் விளைவே.
000
பா.ஜ.க எதிர்ப்புணர்வை முதலீடாகக் கொண்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க, தான் எந்தச் சூழலில் ஆட்சிக்கு வந்துள்ளோம் என்பதனை உணர்ந்தே இருக்கிறது. ஆகவேதான் பெரியார் வழி, அண்ணா வழி என்றும், திராவிட மாடல், சமூக நீதி அரசியல் என்றும் கூறிக்கொள்வதன் மூலம் தன்னுடைய ஆதரவு தளத்தை அப்படியே தக்கவைத்துக் கொள்ளவும், அதை விரிவுபடுத்தவும் விரும்புகிறது. அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க ஆணை பிறப்பித்தது, அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் போன்ற திட்டங்களை இப்படித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது.
படிக்க :
♦ ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்
♦ திமுக-வின் எதிரி ஆர்.எஸ்.எஸ் அல்ல – பாஜக மட்டுமே || ர.முகமது இல்யாஸ்
இன்னொரு பக்கம் தி.மு.க-வினை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், ‘‘தி.மு.க இந்துக்களின் எதிரி’’ என்று பா.ஜ.க பிரச்சாரம் செய்துவருவதை எண்ணி தி.மு.க அச்சம் கொள்கிறது. தங்களை இந்துக்களின் நண்பர்களாகக் காட்டிக்கொள்ள காவி பயங்கரவாதிகளுடன் சமரசமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களிடம் நன்மதிப்பைப் பெற்றுவிடலாம் என்று கருதுகிறது.
தி.மு.க-வின் இந்த சமரசவாத அணுகுமுறைகளை அம்பலப்படுத்தி முறியடிக்காமல், காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெற முடியாது.
பால்ராஜ்