ங்கள் மீது நடத்தப்படும் சுரண்டலையும் உரிமைப் பறிப்புகளையும் எப்போதும் இந்திய உழைக்கும் மக்கள் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பதை தற்போது நம் கண்முன்னே காண்கிறோம்.
விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், மீனவர்கள், அறிவுத்துறையினர், பெண்கள் − என அனைத்து தரப்பினரும் காவி – கார்ப்பரேட் பாசிச மோடி அரசின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்கள் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களாக ஒன்றிணைத்து வளர்த்தெடுக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
பஞ்சாப் − அரியானாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டமானது, ஆர்ப்பாட்டம், சாலைமறியல், ஜியோ சிம் எரிப்பு, பா.ஜ.க. அலுவலகங்கள் முற்றுகை − என நாளுக்கு நாள் வளர்ந்து நவம்பர் 26−ம் தேதியன்று தொடங்கிய ‘‘டெல்லி முற்றுகை’’ப் போராட்டம் 11 மாதங்களைக் கடந்தும் உறுதியாக நடந்து வருகிறது. இன்றுவரை 500−க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்திலேயே இறந்துள்ளனர்; பல ஆயிரம் பேர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
படிக்க
ஊதிய நிலுவையையும் ஊதிய உயர்வையும் வழங்கு : ஆஷா தொழிலாளர்கள் போராட்டம் !
திமுக அரசே வேலை கொடு : சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !
மோடி அரசைப் பணிய வைக்காமல் சொந்த மாநிலத்திற்கு திரும்புவதில்லை என்ற உறுதியோடு போராடிவரும் விவசாயிகள், ‘‘போராட்டங்களை வாழ்க்கையின் ஒரு அங்கமாக்கிக் கொள்வோம்’’ என்று முழங்கி வருகின்றனர். இந்நிலையில், சென்ற ஆகஸ்டு மாதத்தில் தாழ்த்தப்பட்ட கூலி விவாயிகள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நிலம் உள்ளிட்ட தங்களது அடிப்படை கோரிக்கைகளுக்காகவும் டெல்லி முற்றுகைப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் பஞ்சாபில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
மின்சாரச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து மின் உற்பத்தி, மின் வினியோகம் − என ஒட்டுமொத்த மின் துறையையும் கார்ப்பரேட்டுக்கு நேர்ந்துவிடத் துடிக்கும் மோடி அரசை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் 3 முதல் 5−ம் தேதி வரை இந்தியா முழுவதிலும் 15 லட்சம் மின் ஊழியர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதனையடுத்து ஆகஸ்ட் 10−ம் தேதி இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மின் ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டமாக இந்தப் போராட்டம் வளர்ந்துள்ளது.
punjab farmers protest for kashmirமின்துறை தனியார்மயமாக்கம் என்பது விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம், மக்களுக்கு வழங்கப்படும் மானிய விலையிலான மின்சாரம் அனைத்தையும் ஒழித்துக் கட்டிவிடும். மின்துறை தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டால் பெட்ரோல்−டீசல் விலை உயர்வு போல, கார்ப்பரேட்டுகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கட்டணத்தை அதிகரித்து மக்கள் தலையை மொட்டையடிப்பார்கள். இதை முன்னுணர்ந்து போராடி வருகிறார்கள் மின்துறை ஊழியர்கள்.
மேடைதோறும் தேசப் பாதுகாப்பு குறித்து கூச்சலிடும் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, நாட்டின் ஒட்டுமொத்த இராணுவப் பாதுகாப்புத் தளவாடத் தொழிற்சாலைகள் அனைத்தையும் தனியாருக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்னரே பல தொழிற்சாலைகளின் முக்கிய ஆயுத உற்பத்தியை நிறுத்தியுள்ளது. தற்போது பல்வேறு நிறுவனங்களை ஒரே பொதுத்துறை நிறுவனமாகக் கொண்டுவந்து, பின்னர் அதனை தனியார்மயமாக்கும் திட்டத்தோடு செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து நாடு முழுவதுமுள்ள 41 இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளைச் சேர்ந்த சுமார் 90,000 தொழிலாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இத்தொழிலாளர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவே, அத்தியாவசியப் பாதுகாப்புச் சேவை அவசரச் சட்டத்தை மோடி அரசு கொண்டுவந்துள்ளது. இதன்படி, தொழிலாளர்கள் போராட்டம் நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறிப் போராடினால், பிணையில் வெளிவர முடியாத வகையில் ஓராண்டு சிறைத் தண்டனை, பத்தாயிரம் ரூபாய் அபராதம், போராட்டத்தைத் தூண்டினால் இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். இக்கொடுஞ்சட்டத்திற்கு எதிராக ஜூலை 23−ம் தேதி நாடுதழுவிய தொழிற்சங்க வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. இக்கொடூரச் சட்டமானது, தொழிலாளி வர்க்கத்தின் போராட்டங்களைக் கண்டு மோடி அரசு அஞ்சி நடுங்குவதையே நிரூபித்துக் காட்டுகிறது.
சாகர்மாலா திட்டம் என்ற பெயரில் நாடு முழுவதும் உள்ள கடற்கரைகளையெல்லாம் கார்ப்பரேட்டுகளுக்கு பட்டாபோட்டு கொடுக்க தயாராகிவரும் மோடி அரசு, தற்போது மீனவர்களை கடலிலிருந்தே விரட்டியடிக்கும் வகையிலும், மீன்பிடித் தொழில் தொடங்கி கடல் வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் சூறையாடலுக்குத் திறந்துவிடவும் கடல் மீன்வள மசோதாவைக் கொண்டுவந்துள்ளது. 12 நாட்டிகல் கடல்மைலுக்கு மேல் ஆழ்கடல் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாது என்று சொல்லும் இச்சட்டம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து ஆழ்கடலை கார்ப்பரேட்டுகளின் வேட்டைக்களமாக மாற்றிக் கொடுக்கிறது.
மோடி அரசின் இச்சட்டத்தை எதிர்த்து தமிழக, புதுச்சேரி கடலோரக் கிராமங்களில் திரளான மீனவர்கள் தமது குடும்பத்துடன் போராடியதோடு, தங்கள் படகுகளில் கருப்புக் கொடியைக் கட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். முத்தாய்ப்பாக, இராமேஸ்வரத்தில் 50,000−க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரெண்டெழுந்து போராடி, மோடி அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மக்களின் வங்கிச் சேமிப்புகளான பல லட்சம் கோடி ரூபாய்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தொழிற்கடன்களாக அள்ளிக் கொடுத்துவரும் மோடி அரசு, கடனைத் திருப்பிக் கட்டாத முதலாளிகளுக்கு ‘‘வாராக்கடன்’’, ‘‘ஹேர்கட்’’ என்ற பெயரில் அக்கடனை தள்ளுபடியும் செய்து வருகிறது. கார்ப்பரேட்டுகளுக்கு கொட்டிக்கொடுத்தே கஜானவை திவாலாக்கிவிட்டு தற்போது, அரசிடம் பணம் இல்லையென பொதுத்துறை நிறுவனங்களை தவணை முறையில் தனியாருக்கு விற்றுக் கொண்டிருக்கிறது.
இம்முறை இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கப் போவதாக அறிவித்துள்ளது. 15 இலட்சம் வங்கி ஊழியர்கள் இதற்கெதிரான போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். மேலும், அரசின் மிகப்பெரிய காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி.யை கொஞ்சம் கொஞ்சமாகத் தனியாருக்கு தாரைவார்க்கும் மோடி அரசுக்கு எதிராக அத்துறையில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர்கள் போராடி வருகின்றனர்.
படிக்க :
ஏழைகளுக்கும் நடுத்தரவர்க்கத்திற்கும் இனி மின்சாரமும் எட்டாக்கனிதான் !
மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !
காலங்காலமாக வரதட்சணைக் கொடுமைகளால் தற்கொலைக்குத் தள்ளப்பட்ட இந்தியப் பெண்களின் துயரக் கதைகள் எண்ணிலடங்காதது. பணத்தையும் கொடுத்து பெண்ணையும் அடிமையாக அனுப்புவதை திருமண மற்றும் குடும்ப அமைப்பு முறையாகவே வைத்துள்ளது, ஆணாதிக்க − பார்ப்பனிய சமுதாயக் கட்டமைப்பு.
கேராளாவில் சுசித்ரா, அர்ச்சனா, விஸ்மயா ஆகிய இளம் பெண்கள் தொடர்ச்சியாக வரதட்சணைக் கொடுமைகளால் தற்’கொலை’ செய்துகொண்டுள்ளதைத் தொடர்ந்து, ‘‘பெண்கள் விற்பனைக்கு அல்ல’’, என்றும் ‘‘வரதட்சனை தரமுடியாது’’ என்றும் சமூக வலைதளங்களில் கேரளப் பெண்கள் முழங்கினர். கேரளாவெங்கும் இந்தப் போராட்டம் உழைக்கும் மக்களின் பெருத்த ஆதரவைப் பெற்றுள்ளது.
இவை மட்டுமல்லாது, பழங்குடி மக்களின் உரிமைப் போராளியான பாதிரியார் ஸ்டான் சுவாமி, ‘‘ஊபா” சட்டத்தின் கீழ் மோடி அரசால் கைது செய்யப்பட்டு, சிறையில் மாண்டு போனதைத் தொடர்ந்து, ‘‘ஊபா” சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்கள், பெட்ரோல் − டீசல் விலை உயர்வுக்கெதிரான போராட்டங்கள், காண்ட்ராக்ட் மயப்படுத்தலை எதிர்த்து சென்னை தூய்மைப் பணியாளர்கள் நடத்திய போராட்டங்கள் − என நாடு முழுவதும் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
சிறுபொறி பெருங்காட்டுத் தீயாகப் பற்றிப் படர்வதைப் போல, சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாகும் உழைக்கும் மக்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டங்கள், நாளை காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான ஒன்றிணைந்த பெருந்திரள் எழுச்சியாக மாறும்; அந்நாள் வெகுதூரம் இல்லை.

மதி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க