டந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கூச்சல் குழப்பங்களுக்கிடையே எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தேசியக் கடல் மீன்வள மசோதா – 2021 மோடி அரசால் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது நாட்டின் 7,517 கி.மீட்டர் நீளமுள்ள கடற்கரையும் 1,382 தீவுத் திட்டுகளும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (Exclucive Economic Zone – EEZ) என்ற பெயரில் 23 லட்சம் சதுர கி.மீட்டர் கொண்ட கடல் பரப்பும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது.
இம்மசோதாவின்படி, இந்தியக் கடற்பகுதி மூன்றாக பிரிக்கப்படும். கரையில் இருந்து 12 கடல்மைல் வரை (22.2 கி.மீ) அண்மைக் கடல் அல்லது பிராந்தியக் கடல் என்றும், 12 முதல் 200 கடல்மைல் வரை சிறப்புப் பொருளாதார மண்டலம் என்றும், 200 கடல்மைல் பரப்புக்கு அப்பால் பன்னாட்டுக் கடல் பகுதி என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் 12 கடல்மைல் தூரத்திற்குள் மட்டுமே நமது மீனவர்கள் மீன் பிடிக்க முடியும். 12 மைலுக்கு மேல் செல்ல ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசுக்கு கட்டணம் கட்டி அனுமதி பெற வெண்டும்.
மேலும், மோட்டாரைக் கொண்டு இயங்கும் அனைத்துக் கலங்களுமே கப்பல் என வரையறுக்கிறது, இம்மசோதா. ஆகவே, வெளிப்பொருந்து இயந்திரம் பயன்படுத்தப்படும் வள்ளம், விசைப்படகுகள், 10 ஹெச்.பி. பைபர் படகுகள், நாட்டுப் படகுகள் மற்றும் கட்டுமரங்களும் கூட கப்பல்களாகக் கணக்கில் கொள்ளப்பட்டு, பன்னாட்டு கப்பல்களுக்கு இணையாக வகைப்படுத்தப்படுகிறது.
படிக்க :
மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !
சிறு துறைமுகங்கள் மற்றும் ஆழ்கடல் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு !
தமிழ்நாட்டில் உள்ள 38,000 நாட்டுப் படகுகளும், 6,000 விசைப்படகுகளும், ‘‘வணிகக் கப்பல் சட்டம் 1958’’−ன்கீழ் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அனுமதி பெறவேண்டுமென்றால் ஒவ்வொரு படகிலும் உரிமம் பெற்ற ஓட்டுனர் ஒருவரும், தொழில்நுட்ப வல்லுநர் ஒருவரும் இருக்க வேண்டும்; குறிப்பிட்ட மீன்களைத்தான் பிடிக்க வேண்டும்; மற்ற மீன்களைப் பிடித்தால் கடலில் திருப்பி விட்டுவிட வேண்டும்; குறிப்பிட்ட அளவுக்கு மேல் பிடிக்கக் கூடாது; எந்த வலையைக் கொண்டு செல்கிறோமோ அந்த வலையில்தான் பிடிக்க வேண்டும்; வலையை மாற்றினாலும் அனுமதி பெற வேண்டும் − என்றெல்லாம் விதிமுறைகளை நிர்ணயித்துள்ளது மோடி அரசு.
இவற்றை மீறினால் முதலில் அபராதம் விதிக்கப்படும்; இரண்டாம் முறை மீறினால் அபராதத்துடன் சிறைத் தண்டனை விதிக்கப்படும்; மூன்றாவது முறை மீறினால் படகு பறிமுதல் செய்யப்படுவதுடன் தொழில் செய்யவும் தடைவிதிக்கப்படும். ரூ.5,000 முதல் ரூ.20,00,000 வரை அபராதம் விதிப்பார்கள். இதில் அதிகாரிகள் வைத்ததுதான் சட்டமாகும்.
மோட்டாரைக் கொண்டு இயங்கும் அனைத்துக் கலங்களுமே கப்பல் என வரையறுக்கிறது, இம்மசோதா
இச்சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரத்தை கடலோர போலீசு படைக்கு அளித்துள்ளது மோடி அரசு. அதிகாரிகளுக்குக் கட்டுபாடற்ற அதிகாரத்தை அளித்து, மீனவர்களைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. அவர்கள் எப்பொழுது வேண்டுமென்றாலும் மீனவர்களின் படகுகளைச் சோதனையிட முடியும் என்பதோடு, தவறிழைக்கும் அதிகாரிகளைத் தண்டனையிலிருந்து விலக்கியும் வைக்கிறது.
இந்திய அரசியல் அமைப்பின் 7−வது அட்டவணையின் மாநிலப் பட்டியலில் மீன்வளம் இடம் பெற்றுள்ளது. ஆகவே, ஒவ்வொரு மாநிலமும் மீன்வளம் தொடர்பான விசயங்களைத் தமது அதிகாரத்திற்கு உட்பட்டுக் கையாண்டு வருகின்றன. தமிழ்நாடும் அந்த வகையில் ‘‘தமிழ்நாடு கடல் மீன் ஒழுங்குமுறைச் சட்டம் – 1983’’ என்பதை இயற்றி அதனடிப்படையில் செயல்பட்டு வருகிறது. ஆனால், தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மூலம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின்கீழ் மீன்வளம் சென்று விடுகிறது. இவ்வகையில், இம்மசோதா அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாகவும் உள்ளது.
000
1991−ல் நரசிம்மராவ் ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியக் கொள்கையின் தொடர்ச்சியே இந்த மசோதா. அப்பொழுது ‘தேசிய மீன்வளக் கொள்கை−1991’−இன் கீழ் (National Fisheries Policy−1991) ‘‘கூட்டு மீன்பிடித் திட்டம்’’ (Joint ventures) என்று பன்னாட்டு ஏகபோக மீன்பிடிக் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. பன்னாட்டு கப்பல்கள் நவீன கருவிகளைக் கொண்டு முட்டைகள், குஞ்சுகள் வேறுபாடின்றி அப்படியே மீன் ஆதாரங்கள் அனைத்தையும் உறிஞ்சி எடுத்து, மீன்களை ரகம் வாரியாகப் பிரித்தெடுத்து இன்னொரு கப்பலுக்குக் (தாய்க்கப்பல்) கைமாற்றி விடுகின்றன. எஞ்சிய மீன் குஞ்சுகளையும், முட்டைகளையும், சில சமயங்களில் துடுப்பு வெட்டப்பட்ட சுறாவின் உடல்களையும் கழிவாகக் கடலில் கொட்டி விடுகின்றன. இந்திய மீன் வளத்தின் மீதான அழிவின் தொடக்கம் என்று நாம் இதை குறிப்பிடலாம்.
1994−ல் ‘சுதர்சன் குழு’ சில முக்கிய பரிந்துரைகளை அளித்தது. அவை: குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்கள் கண்காணிக்கப்பட வேண்டும்; கூட்டு மீன்பிடித் திட்டத்தின்கீழ் உள்ள அனைத்து கப்பல்களிலும் இருப்பிடம் காட்டும் (GPS) தொழில்நுட்பம் நிறுவப்பட வேண்டும்; முற்றுரிமை பொருளாதாரக் கடற்பகுதியில் இயங்கும் மீன்பிடி கலன்களுக்கு அறுவடை அறிக்கை கட்டாயமாக்க வேண்டும்; பாரம்பரிய − சிறுதொழில் மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் பயிற்சி அளிக்க வேண்டும் என்றது. இவற்றை அரசு ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
மறுபுறம், பன்னாட்டு ஏகபோகக் கப்பல்கள் இந்திய மீன் வளத்தைச் சூறையாடியதால், மீன்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது. அதே ஆண்டில் இந்திய ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட முராரி குழு முன்வைத்த, பன்னாட்டுக் கப்பல்களின் மீன்பிடி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிற முக்கியமான பரிந்துரையையும் பொருட்படுத்தவில்லை என்று அம்பலப்படுத்துகிறார், பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின்.
பன்னாட்டு ஏகபோகக் கப்பல்கள் இந்திய மீன் வளத்தைச் சூறையாடியதால், மீன்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டது
இந்திய கடல்களில் ‘‘எத்தனை மீன்பிடிக் கப்பல்கள் இயங்கின, எந்தக் கப்பல்கள் என்னென்ன முறையில், எவ்வளவு அறுவடை நிகழ்த்தின, எவ்வளவு அறுவடையை நடுக்கடலில் (தாய்க்கப்பல்களுக்கு) மடைமாற்றின என்கிற தரவுகள் இந்திய அரசிடம் இல்லை’’ என்று நீதிமன்றமே சுட்டிகாட்டிக் கண்டிக்கும் அளவுக்கு, இந்தச் சூறாடல் தொடர்ந்தது.
இந்திய அரசின் தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கையின் மூலம் ஏகாதிபத்தியங்களுக்கு இந்திய கடல் வளங்களை கொள்ளையடிக்க கொடுத்த அனுமதிதான், கடலின் மீன் வளம் குறையவும், மீனவர்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சியடையவும் முக்கிய காரணங்களாகும்.
கார்ப்பரேட்டுகளின் சூறையாடலை மேலும் விரைவுபடுத்த ‘‘கடல் மீன்பிடி தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மைச் சட்டம் – 2009’’ காங்கிரஸ் ஆட்சியின் போதும், ‘‘தேசிய கடல் மீன்வள ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மசோதா – 2019’’ பா.ஜ.க ஆட்சியின் போதும் கொண்டுவரப்பட்ட மசோதாக்கள் நாடுதழுவிய அளவில் மீனவர்களின் பரவலான எதிர்ப்பால் கைவிடப்பட்டன. ஆனால், தற்போது அதே உள்ளடக்கத்தை வேறு பெயரில் கொண்டுவந்து சட்டமாக்கியுள்ளது, மோடி அரசு.
மேலும், கடந்த ஜுலை 15-ஆம் தேதியன்று பல்வேறு உலக நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் பங்குபெற்ற உலக வர்த்தகக் கழக மாநாட்டில், ஏழை நாடுகள் தங்களது மீனவர்களுக்குக் கொடுக்கும் மானியங்களை ரத்து செய்யக்கோரி ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கான இரண்டு காரணங்களை உலக வர்த்தகக் கழகம் (உ.வ.க. – WTO) முன்வைக்கிறது. ஒன்று, ‘‘சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குப்படுத்தப்படாத மீன்பிடித்தல்’’ என்று கூறி, பதிவு செய்யப்படாத மீன்பிடி வகையினங்களைப் பிடிப்பவர்களைச் சட்டவிரோத மீன்பிடித் தொழில் செய்பவர்களாக வகைப்படுத்துவது. இரண்டாவதாக, ஏழை நாடுகளிலுள்ள மீனவர்களுக்குச் சிறப்பு மானியங்கள் அதிகமாக வழங்கப்படுவதால்தான், அந்த நாடுகளை சார்ந்த மீனவர்கள் அதிகமான அளவில் (OverFishing) மீன்களைப் பிடித்து விடுகிறார்கள். அதனால் கடல் பரப்பில் மீன்வளம் குறைந்து வருகிறது என்று குற்றம் சாட்டுகிறது.
கார்ப்பரேட் கப்பல்களின் ராட்சச வலைகளில் அனைத்து வகை கடல் உயிரினங்களும் பிடிக்கப்பட்டு அழிக்கப்படும்.
இது உண்மையா? பல்லாயிரம் ஆண்டுகளாக மீனவர்கள் இத்தொழில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வளவு ஆண்டுகளாக அழியாத மீன்வளம் எப்பொழுது அழியத் தொடங்கியது? எப்பொழுது மீன்பிடித் தொழிலில் கார்ப்பரேட்டுகள் நுழைந்தனரோ, எப்பொழுது பன்னாட்டு பகாசுர கப்பல்கள் இத்தொழிலில் அடியெடுத்து வைத்தனவோ, அப்பொழுதிலிருந்துதான் அழியத் தொடங்கியது. உலக வர்த்தகக் கழகம் இதையெல்லாம் மறைத்துவிட்டு சிறு/குறு மீனவர்களால்தான் மீன்வளம் அழிகிறது என்று பாரம்பரிய மீனவர்கள் மீது பழிசுமத்தி, அவர்களை மீன்பிடித் தொழிலில் இருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறது. இதற்கு ஏகாதிபத்தியங்களின் அடிமையான இந்திய அரசு அடிபணிகிறது.
000
2018−ல் மரக்காணம் முதல் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி வரை 24 இடங்களில் கடல்பரப்பில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கியது, ஒன்றிய அரசு. அதில், புதுச்சேரி அருகே மரக்காணம் முதல் கடலூர் வரை 1,794 சதுர கி.மீட்டர் கடல் பகுதியில் 4 கிணறுகளும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை தொடங்கி நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த புஷ்பவனம் வரை 2,574 சதுர கி.மீட்டர் கடல் பகுதியில் 4 கிணறுகளும் − என 14 கிணறுகள் கடல்பரப்பில் அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ‘‘இனையம் சர்வதேச சரக்குப் பெட்டக மாற்று முனையம்’’ கொண்டுவர முயற்சி செய்து, மீனவர்கள் நடத்திய போராட்டத்தினால் தற்காலிகமாக மோடி அரசு பின்வாங்கியதையும், ‘‘இந்திய துறைமுகச் சட்ட வரைவு மசோதா – 2021’’ என்பதை இயற்றி மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிறிய துறைமுகங்களை ஒன்றிய அரசு தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு செல்ல முயற்சிப்பதையும் இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அந்த வகையில் இந்த மசோதாவை சாகர்மாலா திட்டத்தை அமல்படுத்திக் கொண்டிருக்கும் ஒன்றிய அரசின் ஒரு பகுதியாகவே பார்க்க வேண்டும்.
சான்றாக, கடந்த மார்ச் 2-ஆம் தேதியன்று நடந்த ‘‘கடல்சார் இந்தியா மெய்நகர் உச்சி மாநாடு – 2021’’-ல் பிரதமர் மோடி பேசிய சில விசயங்களைப் பார்த்தாலே நமக்கு புரியும். ‘‘78 கலங்கரை விளக்கங்கங்களுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தும் திட்டத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்த முயற்சியின் முக்கிய நோக்கம், தற்போதுள்ள கலங்கரை விளக்கங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை தனிச்சிறப்பான கடல்சார் சுற்றுலா அடையாளங்களாக மேம்படுத்துவதாகும்’’; ‘‘துறைமுகம் மூலமான வளர்ச்சிக்கு சாகர்மாலா திட்டத்தை கடந்த 2016−ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, 2015−ஆம் ஆண்டு முதல் 2035−ஆம் ஆண்டு வரை 574−க்கும் மேற்பட்ட திட்டங்கள் ரூ.6,00,000 கோடி மதிப்பில் மேற்கொள்ள அடையாளம் காணப்பட்டுள்ளன.
பகாசுர மீன்பிடி வலை கொண்ட கார்ப்பரேட் கப்பல்
2022−ம் ஆண்டுக்குள் இரு கடலோரப் பகுதிகளிலும், கப்பல் பழுதுபார்க்கும் மையங்கள் உருவாக்கப்படும். இரும்பு கழிவுகளில் இருந்து மீண்டும் பொருட்கள் தயாரிக்க, உள்நாட்டுக் கப்பல் மறுசுழற்சி தொழிற்சாலைகளும் ஊக்குவிக்கப்படும்’’ என்றும் மோடி பேசியுள்ளார். அந்த உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட அந்நிய முதலீட்டார்களிடம் ‘‘இந்தியாவின் நீண்ட கடற்கரையும் உங்களுக்காகக் காத்திருக்கிறது, இந்தியாவின் உழைப்பாளிகளும் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர், எங்கள் துறைமுகங்களில் முதலீடு செய்யுங்கள், எங்கள் மக்கள் மீது முதலீடு செய்யுங்கள், வர்த்தகத்துக்கு நீங்கள் தேர்வு செய்யும்  இடமாக இந்தியா இருக்கட்டும். உங்களின் வர்த்தகத்துக்கு அழைப்பு விடுக்கும் துறைமுகமாக இந்திய துறைமுகங்கள் இருக்கட்டும்’’ என்று பிரதமர் மோடி பேசியதின் சாராம்சம், மீனவர்களை கடற்கரைப் பகுதிகளில் இருந்து விரட்டியடித்துவிட்டு, அவற்றைக் கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பது என்பதல்லாமல் வேறு என்ன?
மேலும், அண்மைக்காலமாக மின்சார வாகன உற்பத்தி உலக அளவில் முன்னிலைப் பெற்று வருகிறது. இந்த மின்சார வாகன உற்பத்திக்கு அடிப்படையான கோபால்ட், நிக்கல், காப்பர், மாங்கனீசு போன்ற அரியவகை தனிமங்கள் நமது நாட்டின் கடலுக்கடியில் கிடைக்கின்றன. அந்தமான் தீவுப் பகுதிகளில் அளவிட முடியாத அளவிற்கு இயற்கை எரிவாயு, நிலக்கரி, ஹைட்ரோ கார்பன்கள், மீத்தேன் கிடைக்கின்றன. ‘‘220 டிரில்லியன் டன் அலுமினியம், 650 டிரில்லியன் டன் இரும்பு, 73 டிரில்லியன் டன் டைட்டானியம், 15 டிரில்லியன் டன் அளவுக்கு வெனடியம், காரியம், தாமிரம், கோபால்ட், நிக்கல் – என நிலத்தில் கிடைக்கும் வளங்களை விட பன்மடங்கு கடற்பகுதியில் இருக்கின்றன’’ என விகடன் இணையதளக் கட்டுரை ஒன்று கூறுகிறது. இவை மட்டுமின்றி ஆந்திரா, தமிழ்நாடு, ஒரிசா கடற்கரை பகுதி முழுவதும் ஆங்காங்கு தாது மணல்கள் பரந்துவிரிந்து கிடக்கிறது.
இத்தகைய அரியவகை கனிமங்களை வெட்டியெடுப்பதற்கான புதிய கருவிகள், கடலுக்குள் சென்று வருவதற்கான மோட்டார்கள், கடல் படுகையில் வாழும் உயிரினங்களைக் கையாளும் கருவிகள், இயந்திரங்கள் ஆகியவற்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக நவீன ரோபோக்களை கொண்ட கருவிகள் உருவாக்கப்பட இருக்கின்றன. இவ்வாறான ஒரு பேரழிவை நோக்கி நம்மை அழைத்துச் செல்வதற்காக, தேசிய கடல் ஆராய்ச்சித் திட்டத்தைத் ரூ.4,077 கோடி நிதியை ஒதுக்கப்பட்டு தொடங்கி வைத்துள்ள மோடி அரசு.
இந்தத் திட்டங்களை எல்லாம் நடைமுறைப்படுத்துவதற்காக, சுற்றுச்சூழலை அழித்தாலும் பரவாயில்லை என்று மோடி அரசு வெறித்தனமாக செயல்பட்டு வருகிறது.
படிக்க :
ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை !
குமரி மாவட்டம் : சரக்கு பெட்டகத் துறைமுகத்திற்கு எதிராகப் போராட்டம் !
புவி வெப்பமயமாதலையடுத்து உலகின் கடல் நீர்மட்டம் உயர்வது குறித்து அண்மையில் நாசா வெளியிட்ட அறிக்கையை அனைவரும் அறிவர். இதன்படி 2050−ஆம் ஆண்டுக்குள் சென்னையில் கடல் மட்டம் 1.87 அடியாகவும், தூத்துக்குடியில் 1.9 அடியாகவும் இருக்கும் எனவும், ஒட்டுமொத்தமாக இந்திய கடற்கரை சராசரியாக இரண்டு அடி உயரும் எனவும், இதனால் பல்வேறுச் சுற்றுச்சூழல் பேரழிவுகள் ஏற்படும் எனவும், இந்திய கடற்கரை ஒட்டியுள்ள சென்னை, மும்பை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், கொச்சி போன்ற பெருநகரங்கள் அனைத்தும் கடலில் மூழ்கும் எனவும் ஐ.நா-வின் சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இணைந்து ஐ.பி.சி.சி என்ற அறிக்கையின் மூலம் எச்சரித்துள்ளனர்.
இதற்காக சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதுதான் முக்கியமான பணி எனவும், இல்லையேல் இந்த நகரங்கள் கடலில் மூழ்குவதை யாரும் தடுக்க இயலாது எனவும் எச்சரித்துள்ளனர். ஆனால், கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சேவை செய்யவே பிறந்துள்ள பாசிச மோடி அரசோ, எதைப் பற்றியும் கவலையின்றி மொத்த சமூகத்தையே அழிக்கத் துடிக்கின்றது.
அதன் ஒரு அங்கமாகவே ‘‘கடல் மீன்வள சட்டம் – 2021” கொண்டுவரப்பட்டுள்ளது. அடுத்தடுத்து காத்திருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் தாக்குதலுக்கு எதிரான மீனவர்களுடன் அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் கைகோர்த்து நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

உதிரன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க