ந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமைப்பட்டிருந்த காலகட்டத்தில் தேச விடுதலைப் போராட்டம் நாடெங்கிலும் தீவிரமாக நடைபெற்றது. அதில், வட இந்தியாவில் பகத்சிங்கும் அவரது தோழர்களும் இணைந்து நடத்திய போராட்டங்கள் மிகவும் முக்கியமானவை. பகத்சிங்கும் அவரது தோழர்களும் லாகூர் சதி வழக்கு மற்றும் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டனர். மேலும், பல போராளிகள் கொல்லப்பட்டனர்.
பாராளுமன்றத்தில் குண்டு வீசும் செயல்திட்டம் முதல் தனது உயிர்பிரியும் வரை பகத்சிங்குடன் பயணித்தவர் தோழர் ஜதீந்திரநாத் தாஸ். அவரது போராட்ட குணமும் அர்ப்பணிப்பும் இன்றும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கான அரிச்சுவடியாக இருக்கிறது.
படிக்க :
இதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் ?
போலீசின் அடியால் உடைக்க முடியாது பகத் சிங்கிடம் பெற்ற உறுதியை ! || குமார், நோதீப் கவுர்
பகத்சிங்கும் அவரது தோழர்களும் பாராளுமன்றத்தில் குண்டு வீசுவதற்கான தயாரிப்பு உதவியை நாடி, கல்கத்தாவில் இருந்த தோழர் ஜதீந்திரநாத் தாஸை காணச் சென்றனர். அதுதான் பகத்சிங், ஜதீந்திராநாத் தாஸை சந்திக்கும் முதல் சந்திப்பு. பகத்சிங் குண்டு தயாரித்து தர வேண்டுகோள் விடுக்கும்போது, ஜதீந்திராநாத் அதை மறுக்கிறார். நான் ஒருபோதும் குண்டு தயாரிக்க மாட்டேன். வன்முறையில் ஈடுபடக் கூடாது, அமைதியாகத்தான் போராட வேண்டும் என்பதுபோல பகத்சிங்-கின் கோரிக்கையை நிராகரிக்கிறார். தன்னை ஒருவன் தாக்க வரும்போது நாம் எதிர்த்து தாக்கினால்தான் நாம் உயிர் பிழைக்க முடியும். எனவே நாம் செய்யப்போவது தாக்குதல் அல்ல தற்காப்பு என்பதை எடுத்துக்கூறி ஜதீந்திரநாத் தாஸை அரசியல்படுத்துகிறார் பகத்சிங்.
இதை புரிந்து கொண்ட ஜதீந்திரநாத் தாஸ், அன்று முதல் தேசவிடுதலை போராட்டத்தின் புரட்சிகர செயல்திட்டப் பயணத்தில் பகத்சிங்குடனும் அவரது தோழர்களுடனும் பயணிக்கிறார்.
லாகூர் சதி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட தோழர் ஜதீந்தரநாத் தாஸ் சிறையில் பட்ட கொடுமைகளை பற்றி அவருடன் சகத்தோழராக பயனித்த பிரேமதத்தா வர்மா, உயிருடன் வாழ்ந்த காலங்களில் தான் பணியாற்றிய பஞ்சாப் பல்கலைக்கழகத்தில், செப்டம்பர் 19, 1964-ஆம் தேதியன்று வெளியான பல்கலைக்கழக புல்லட்டின் இதழில் எழுதியுள்ளார்.
“ஜதீந்திரநாத் தாஸ் தலைமையில் 18 புரட்சியாளர்கள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழான லாகூர் சிறையில் நிலவிய கொடூரமான நிலைமைகளை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது, தாங்கள் குற்றவாளிகள் அல்ல, எனவே எங்களை அரசியல் கைதிகளாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சிறையில் நடந்த இந்த உண்ணாவிரதப் போராட்டம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கியது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார் ஜதீந்திரநாத் தாஸ். ஜதீந்தரநாத் தாஸை உணவு உண்ண வைக்கவும், பால் குடிக்க வைக்கவும் சிறை போலீசும், மருத்துவர்களும் முற்பட்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தை சற்றும் பின்வாங்கிக் கொள்ளாத ஜதீந்திரநாத் தாஸ் முரண்டுபிடித்தார். அவரது உறுதிப்பற்றின் காரணமாக அவரை பிடித்து உணவூட்டவே ஏழு பேர் தேவைப்பட்டார்கள். அவர் படுக்கையில் இருந்தபோது, உணவுக் குழாய் வழியாகவும், மூக்கு வழியாகவும் குழாய்கள் உடலுக்குள் செலுத்தப்பட்டு பால் ஊற்றப்பட்டது.
அவர்களை முறியடிக்க ஜதீந்திரநாத் ஒரு தந்திரத்தை அறிந்திருந்தார். மூக்கு வழியாக விடப்படும் குழாய் வழியாக பால் தொண்டையை அடையும்போது இருமினார். அச்சமயத்தில் பால் வாய் வழியாக வெளியேறியது. அதனைத் தொடர்ந்து முட்டாள் போலீசு கும்பல், மூன்று குழாய்களை எடுத்து வந்தது. மூக்கின் இரண்டு தூவாரங்களுக்கு இரண்டு குழாய்கள், வாய்க்கு ஒரு குழாய் என்று குத்தப்பட்டு வாய் முற்றிலும் அடைக்கப்பட்டு, குழாய் வழியாக பால் ஊற்றப்பட்டது. மூச்சு விடுவதற்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டது.
ஜதீந்திரநாத் மூச்சு விட முடியாமல் கடும் சிரமத்திற்கு உள்ளானார். இருமல் ஏற்பட்டு காற்றுக் குழாய்கள் அடைக்கப்பட்டு நுரையீரல் மூச்சு விட முடியாமல் திணறியது. அவர் முகம் சிவந்தது. அதன் பிறகே போலீசு குழாய்களை அவரது உடலில் இருந்து அகற்றியது. ஆனால், ஜதீந்திரநாத் உயிர் பிழைக்கும் நிலைமையை கடந்துவிட்டார். அவர் உடல்நிலை மேலும் மேலும் மோசமடைந்து கொண்டே இருந்தது. செப்டம்பர் 13, 1929-ஆம் தேதியன்று மாலை 4 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அவர் 40 நாட்களாக ஒரு சொட்டு ஊட்டச் சத்தும் இல்லாமல் இருந்தார். 51 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார்.
ஜதீந்திரநாத் தாஸின் மரணம் பற்றிய செய்தி நாடு முழுவதும் காட்டுத் தீயாய் பரவியது. சிறை போலீசு அவரது உடலை நாட்டு மக்களிடம் ஒப்படைத்தது. லாகூரிலிருந்து கல்கத்தாவிற்கு 1600 மைல் தூரத்திற்கு அவரது உடல், ரயிலில் கொண்டு செல்லப்பட்டது. ரயிலில் செல்லும் போது வழியில் வரும் ஒவ்வொரு ரயில் நிறுத்தத்திலும் ஜதீந்திரநாத் உடலுக்கு ஆயிரக்கண பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். ரயில்பெட்டி முழுவதும் மலர் மாலைகளால் நிறைந்தது. கல்கத்தாவில் 2 மைல் நீளமுள்ள 6,00,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் தேசவிடுதலை போராளிகளால், ஜதீந்திரநாத் தாஸ் நீடூழி வாழ்க! என்ற விண்ணதிரும் முழங்கங்களுடன், ஊர்வலமாக சென்று ஜதீந்திரநாத் தாஸின் உடலை தகனம் செய்தனர்.” என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடுகிறார் பிரேமதத்தா.
இறுதி வரை தான் ஏற்றுக்கொண்ட லட்சியத்திற்காக தேசவிடுதலை போராட்டத்தில் சிறை, சித்திரவதைகளை அனுபவித்து, தன் மரணத்தின் மூலம் நாட்டு மக்களுக்கு போராட்டத் தீயை மூட்டிய தோழர் ஜதீந்திரநாத் தாஸை நினைவுக் கூர்ந்து அவரது வீரத்தையும், நெஞ்சுறுதியையும் வரித்துக் கொண்டு, தற்போது நாடு மறுகாலனியாகும் சூழ்நிலையில் மீண்டும் ஓர் தேச விடுதலைப் போராட்டத்தை துவங்குவோம்.
குறிப்பு : டாக்டர். பிரேமதத்தா வர்மா லாகூர் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சுதந்திரத்திற்கு முன் இந்தியாவில் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டார். அவர் 2011-ல் காலமானார். அவரது சக கைதி ஜதீந்திரநாத் தாஸுக்கு அவர் செலுத்திய மேற்கண்ட அஞ்சலி கட்டுரை பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வாராந்திர இதழான புல்லட்டின் செப்டம்பர் 19, 1964 இதழில் வெளிவந்தது.

சந்துரு
செய்தி ஆதாரம் : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க