கொரோனா வைரஸினால் உலகமே தன் இயக்கத்தை நிறுத்திய காலத்திலும் கூட, காலநிலை மாற்றங்கள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக புவி வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருவதாக, கடந்த செப்டம்பர் 14-ம் தேதியன்று ஐ.நா சபை கூறியுள்ளது.
வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் அளவு 2020 – 2021-ம் ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. பூமியின் காற்று மண்டலத்தின் மேல்பகுதியில் மிதக்கும் வாயுக்கள் மற்றும் துகள்களின் அடர்த்தி அதிகரித்தால், சூரியக் கதிர்கள் பூமி மீது விழுவதால் உண்டாகும் வெப்பம் வெளியேறாமல் காற்று மண்டலத்தின் கீழ் பகுதியிலேயே தங்கிவிடும். இதனால் பூமியில் வெப்பம் அதிகரிக்கும். இப்படி வெப்பத்தை தக்கவைத்துக் கொள்ளும் வாயுக்கள்தான் பசுமை இல்ல வாயுக்கள் என வரையறுக்கப்படுகின்றன.
காலநிலை மாற்ற அச்சுறுத்தலை கையாள, கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 195 நாடுகள் இணைந்து பாரிஸ் ஒப்பந்தத்தை கொண்டு வந்தனர். உலக சராசரி வெப்பநிலையின் அதிகரிப்பை 2 டிகிரி செல்சியஸ் குறைவாகவே வைத்திருக்க வேண்டும் எனவும், தொழிற்துறைகளால் அதிகரிக்கும் வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் வரையிலான அளவை தாண்டாமல் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
படிக்க :
ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!
புவி வெப்பமயமாதல் : கொதிக்கிறது இந்தியா
பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி அதிகரித்து வருகிறது. இதனால், இந்த பாரிஸ் ஒப்பந்தத்தில் வெப்பக் கட்டுப்பாட்டு அளவான 1.5 டிகிரி செல்சியஸை விடவும் கூடுதலாக வெப்பநிலை அளவு அதிகரித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 16-ம் தேதியன்று வெளியான யுனைடெட் இன் சயின்ஸ் 2021 அறிக்கையானது, “கால நிலை மாற்றம் கொரோனா காலத்திலும் குறையவில்லை. வளிமண்டலத்தில் பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தியின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது” என்கிறது.
மேலும், உலகெங்கிலும் அதிகரித்து வரும் இந்த வெப்பநிலை மாற்றம் பேரழிவிற்கான சூழ்நிலைமைகளை தோற்றுவிக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் புவியின் சராசரி வெப்பநிலை பதிவுகள் மிகவும் அதிகமாக இருக்கிறது. புவி வெப்பமயமாதல் அதிகரிப்பதால் கடல் நீர் மட்டம் உயரும். இதன் காரணமாக  தமது வாழ்விடங்கள் கடலுக்குள் மூழ்கும் என்ற அச்சத்தில் தீவுகள் மற்றும் கடலோரங்களில் வாழும் மக்கள் இருப்பதாக இவ்வறிக்கை கூறுகிறது.
“காலநிலை மாற்றத்திற்கு இது ஓர் முக்கியமான ஆண்டு. தற்போது வெளியான இந்த அறிக்கை சமீபத்திய காலநிலை அறிவியலின் முழுமையான மதிப்பீட்டை வழங்குகிறது. இது நாம் எவ்வளவு பாதிப்புகளுக்கு அருகில் இருக்கிறோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.” என்கிறார் ஐ.நா. பொதுச்செயலாளர் அண்டோனியோ குடெரெஸ்.
உலகளாவிய அளவில் மின்சாரம் மற்றும் தொழில்துறை வெளியிடும் பசுமை இல்ல வாயுக்களின் சராசரி அளவு கொரோனா காலத்திற்கு முன்பு 2019-ம் ஆண்டு கண்க்கீட்டின் போது எவ்வளவு இருந்ததோ, தற்போது 2021 ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை அதே சராசரி அளவு நீடித்து வருகிறது.
கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் வாயுக்களுக்கு அடுத்து மூன்றாவதாக இருக்கும் பசுமை இல்ல வாயுவான நைட்ரஸ் ஆக்ஸைடின் அளவு சமீபத்தில் வளிமண்டல கீழ் அடுக்கில் அதிகரித்து வருகிறது.
கொரோனா காலம் என்பது உலகளாவிய வெப்பமயமாதல் நிகழ்வை ஓர் குறுகிய காலம் வரை மட்டுமே கட்டுப்படுத்தியது. ஆனால், வலுவான கார்பன் நீக்க நடவடிக்கையை இனி வரும் காலங்களில் உலக நாடுகள் மேற்கொள்ளாவிட்டால் 2030-க்குள் புவி வெப்பமயமாதல் கணிசமாக அதிகரிக்கும்.
பூமியின் சராசரி மேற்பரப்பு வெப்பநிலை 2017-2021 வரையில் (ஜூலை வரை) தொழில்துறை வளர்ச்சிக்கு முந்தைய (1850-1900) காலத்தின் சராசரி வெப்பநிலை அளவைவிட 1.06 டிகிரி செல்சியஸ் முதல் 1.26 டிகிரி செல்சியஸ் வரையில் அளவு அதிகமாக உள்ளது.
1981 – 2010 காலகட்டத்தில்  நீண்டகாலமாக இருந்த ஆர்க்டிக் பிரதேசத்தின் கடல் பனிப்பாறைகளின் அளவு, 2017 முதல் 2021 வரை ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலங்களில் குறைந்து வருகிறது. 2020, செப்டம்பரில் இரண்டாவது முறையாக மிகவும் குறைந்தபட்ச அளவை எட்டியது.
2021 பேரழிவு தரும் காலநிலை மாற்ற நிகழ்வுகளை, வட அமெரிக்காவின் தீவிர வெப்பமும், மேற்கு ஐரோப்பாவின் வெள்ளமும் மனித இனத்திற்கு உணர்த்தியது.
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ம் தேதியன்று அமேசான் மழைக்காடுகளில் மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்பட்டது. இதனால், வளிமண்டலத்தில் அதிகமாக புகை உருவானது. எனவே, கடந்த 2 ஆண்டுகளாக அமேசான் காடுகள், கார்பன் டை ஆக்சைடை உள் இழுத்துக் கொள்ளும் அளவை விட, கார்பன் டை ஆக்சைடை வெளியிடும் அளவு அதிகமாக மாறியுள்ளது.
“இந்த ஆண்டு அமேசான் காடுகளின் புதைபடிவ எரிபொருள் உமிழ்வு மீண்டும் உயர்ந்துள்ளது. பசுமை இல்ல வாயுக்களின் அடர்த்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு கண்டத்திலும் ஆரோக்கிய வாழ்வை பாதிக்கும் வானிலை மாற்றங்கள் நிகழ்கின்றன” என்கிறார் ஐ.நா-வின் பொதுச்செயலாளர் அண்டோனியோ குடெரெஸ்.
மேலும், “பசுமை இல்ல வாயுக்கள் அதிகரிப்பதை கட்டுபடுத்தாவிட்டால் புவி வெப்பமயமாதல் 1.5 டிகிரி C-க்கு அதிகரிக்கும். இது மக்களுக்கும், பூமிக்கும் பேரழிவிற்கான விளைவுகளை உருவாக்கும்.” என்று கூறினார்.
புவிவெப்பமயமாதல் நிகழ்வை, உலக ஏகாதிபத்திய நாடுகளும், கார்ப்பரேட் முதலாளிகளும் கட்டுப்படுத்தவில்லை என்றால், உலகின் பல நகரங்கள் நீரில் மூழ்கும் மற்றும் காலநிலை மாற்றங்களின் தீவிரம் அதிகரிக்கும். இதனால், மனித இனம் பேரழிவை சந்திக்கும் என்பது உறுதி.

சந்துரு
செய்தி ஆதாரம் : த வயர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க