உயர்ந்து வரும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை : எரிபொருள் விலை உயர்வு அபாயம் !
இந்தியாவில் பெட்ரோல் – டீசல் மீதான ஒன்றிய, மாநில அரசுகளின் வரி 69 சதவிதம் விதிக்கப்படுகிறது. அதாவது, எரிபொருளின் விலையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மதிப்பு வரியாக கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறுகின்றன. சர்வதேச கச்சா எண்ணெய் விலை தற்போது பீப்பாய்க்கு 80 டாலர் எனும் அளவை தாண்டியுள்ளது.
கடந்த அக்டோபர் 4-ம் தேதியன்று கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 81.26 டாலர் அளவுக்கு உயர்ந்தது. அடுத்தநாள் அக்டோபர் 5-ம் தேதி 81.74 டாலர் அளவுக்கு உயர்ந்தது. மீண்டும் கடந்த அக்டோபர் 1-ம் தேதியன்று சர்வதேச கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரித்து ஒரு பீப்பாய்க்கு 82.78 டாலர் விலை இருந்தது. தற்போது கச்சா எண்ணெயின் விலை 80.49 டாலராக உள்ளது.
பெரும்பாலான கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள், உற்பத்தியை நிறுத்தி வைத்திருப்பதே இந்த விலை உயர்வுக்குக் காரணமாகும். உலகில் பெரிய கச்சா எண்ணெய் நுகர்வோராக இருக்கும் இந்தியா, உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு ஏற்றவாறு விலைகளை தீர்மானிக்கவும், விநியோகத்தை அதிகரிக்கவும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (Organization of the Petroleum Exporting Countries) OPEC-யிடம் வலியுறுத்தியுள்ளது.
பொருளாதார வல்லுனர் கீரன் கிளான்சி, சந்தை விநியோகத்தையும், விலையையும் பழைய நிலைக்கு கொண்டு வர OPEC-க்கு தொடர்ந்து பல்வேறு நாடுகளால் அழுத்தம் தரப்படுவதைக் குறிப்பிடுகிறார். “நான்காம் காலாண்டில் பெட்ரோலிய விநியோகம் பற்றாக்குறையாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம், எனவே கச்சா எண்ணெய் பற்றாக்குறை அதிகரிக்கும் காலங்களில் விலை உயரும்” என்று கூறியுள்ளார்.
2022-ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு தேவை அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு பீப்பாயின் விலை 100 டாலர் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளது என்று பாங்க் ஆஃப் அமெரிக்கா கடந்த செப்டம்பர் 10-ம் தேதியன்று வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.
000
இந்தியாவில் 2021-ம் ஆண்டின் துவக்கத்திலிருந்து தற்போது வரை பெட்ரோல் – டீசல் விலை அறுபது முறைக்கும் மேல் உயர்த்தப்படுள்ளது. இதன் விளைவாக, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிய நிலையிலேயே இருக்கிறது. குறிப்பாக டெல்லியில், தற்போது பெட்ரோல் விலை ரூ.108.96-ஆகவும், டீசல் விலை 99.17-ஆகவும் உள்ளது. ஒவ்வொரு மாநிலங்களின் வரியைப் பொறுத்து இந்த விலை மாறுபடும்.
தமிழகத்தை பொருத்தவரை கடந்த ஆகஸ்டு மாதம் தி.மு.க வெளியிட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் ரூ.3 பெட்ரோல் மீதான மாநில வரியை குறைத்ததன் காரணமாக ரூ.100-க்கு கீழ் பெட்ரோல் விலை குறைந்தது. ஆனால், தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் உற்பத்தி / விநியோக நிறுவனங்களால் பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ரூ.100-ஐ தாண்டியுள்ளது.
குறிப்பாக, சென்னையில் 50 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் விலை மீண்டும் ரூ.100-ஐ தாண்டியுள்ளது. தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100.49-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.95.93-ஆகவும் உள்ளது. இந்த விலை மாவட்டங்களுக்கு மாவட்டம் டீலர் கமிசன் அளவைப் பொறுத்து மாறுபடுகிறது.
இந்தியாவில் பெட்ரோல் – டீசல் மீதான ஒன்றிய, மாநில அரசுகளின் வரி 69 சதவிதம் விதிக்கப்படுகிறது. அதாவது, எரிபொருளின் விலையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு மதிப்பு வரியாக விதிக்கப்படுகிறது. உலகிலேயே அதிக பெட்ரோல் – டீசல் மீது வரிவிதிக்கும் நாடாக இந்தியா இருப்பதே விலையேற்றத்திற்கு காரணம் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மாற்றத்திற்கு ஏற்ப இந்தியாவில் தினசரி பெட்ரோல் – டீசல் விலையை தீர்மானம் செய்யும் முறையை கடந்த 2017-ம் ஆண்டு முதல் முறையாக எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதன் பிறகுதான் இந்தியாவில் எரிப்பொருட்களின் விலை அன்றாடம் மாறுபடும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. பெரும்பாலும் விலை அதிகரித்தே வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் உயர்த்தபடும் பெட்ரோல் டீசல் விலை, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இறக்கப்படுவது இல்லை. அப்படி குறைக்கப்பட்டாலும், கலால் வரியை அதிகரித்து கல்லா கட்டுகிறது மோடி அரசு.
தங்கள் இலாப நோக்கத்திற்காக கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இறக்கும் அனைத்தையும் தீர்மானிப்பது கார்ப்பரேட் முதலாளிகளும், அவர்களுக்குச் சேவகம் புரியும் அரசும்தான். இந்த முதலாளித்துவ அரசுக் கட்டமைப்பே சுரண்டலுக்காக கட்டமைக்கப்பட்டது என்ற வகையில் இதில் அதிசயப்பட ஒன்றுமில்லை. ஆனால் இந்த சுரண்டல் கட்டமைப்பிலிருந்து விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்டங்களைக் கட்டமைக்க வேண்டியதன் அவசியத்தை நம் மண்டையில் அடித்து உணரச் செய்கிறது பெட்ரோல் – டீசல் விலை உயர்வு !