டந்த ஆகஸ்ட் 26 அன்று இரவோடு இரவாக டெல்லி பல்கலைக்கழகப் பாடத் திட்டத்திலிருந்து சுகிர்தராணி, பாமா, மகாஸ்வேதா ஆகிய தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் பல்கலைக்கழக மேற்பார்வைக் குழுவிலுள்ள சங்க பரிவார கும்பலால் நீக்கப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக, ஆதிக்க சாதியைச் சேர்ந்த ரமாபாய் மற்றும் சுல்தானாவின் படைப்புகள் சேர்க்கப்படுள்ளன.
மலம் அள்ளும் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பேசும் சுகிர்தராணியின் “கைம்மாறு” என்ற கவிதையும், ஒரு தலித் பெண்ணின் துயரத்தைச் சித்தரிக்கும் மகாஸ்வேதாவின் “திரௌபதி” என்ற சிறுகதையும்தான் நீக்கப்பட்ட அந்த படைப்புகள். ‘‘நாம் எல்லோரும் இந்து’’ என்று பிரச்சாரம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். காவி கும்பலுக்கு, பன்னெடுங்காலமாக பார்ப்பன இந்து மதம் தலித்துக்களையும் ஆதிவாசிகளையும் கொடுமைக்குள்ளாக்கிய வரலாற்றின் பதிவுகள் அக்கவிதையிலும் சிறுகதையிலும் தொனிப்பது அவர்களை அச்சுறுத்துகிறது. அவர்கள் கட்டியமைக்க முயலும் ‘இந்து’ ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறது. ஆகவேதான் அதை நீக்கியுள்ளது காவிக் கும்பல்.
படிக்க :
பல்கலை பாடத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் நூல்களை அனுமதிப்பது ஜனநாயகமா ?
வாட்சப் பல்கலை சாக்கடையில் பிறக்கும் போலி வரலாற்று புழுக்கள் !
இதேபோல, கடந்த ஆண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகப் பாடத்திலிருந்து எழுத்தாளர் அருந்ததி ராயின் ‘‘தோழர்களுடன் ஒரு பயணம்’’ என்ற நூல் நீக்கப்பட்டதையும் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆர்.எஸ்.எஸ். மாணவர் பிரிவைச் சேர்ந்த ஏ.பி.வி.பி. காலிகள் சிலர் போராடியதை வைத்து ‘‘மாணவர்களின் எதிர்ப்பின் காரணமாகத்தான் நீக்கப்பட்டது’’ என்ற காரணத்தை சொல்லியுள்ளார் துணைவேந்தர்.
டெல்லியில் பல்கலைக்கழக மேற்பார்வைக் குழுவிலுள்ள தனது ஏஜெண்டுகளை வைத்து ஆர்.எஸ்.எஸ். கும்பல் இதைச் செய்துள்ளது. இவ்வாறு பல்வேறு நூதனமான வழிகளை மேற்கொண்டு தங்கள் பாசிச சித்தாந்தத்திற்கு எதிராக உள்ள அனைத்து பாடங்களையும் நீக்கவும், எதிர்காலத்தில் தாங்கள் கட்டியமைக்க முயலும் இந்து ராஷ்டிரத்திற்கு ஏற்ற வகையிலான வரலாற்றை உருவாக்கும் முயற்சியிலும் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
மத்திய பிரதேசத்தின் உயர் கல்வித்துறை அமைச்சரான மோகன் யாதவ், ‘‘பொறியியல் மாணவர்கள் இனி ராமர் பாலம் பற்றி படிப்பார்கள்’’ என்று கூறியுள்ளது அதற்கு சமீபத்திய சான்று.
000
இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகளின் அகராதியிலிருந்து (Dictionary Of Martyrs: India’s Freedom Struggle 1857−1947) மாப்பிளா போராளிகள் 387 பேரின் பெயரை நீக்க வேண்டுமென இந்திய வரலாற்று ஆய்வுக் குழுவால் நியமிக்கப்பட்ட மூவர் குழு பரிந்துரைத்துள்ளது. இது, அப்போராளிகளின் தியாகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி.
1921−லிருந்து 1922 வரை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் அவர்களின் காலை நக்கிப் பிழைத்த நிலப்பிரபுக்களான ஆதிக்க சாதி நம்பூதிரிகளின் சுரண்டலுக்கு எதிராகவும் இன்றைய கேரளாவின் மலபார் பகுதியில் மாப்ளா முஸ்லீம்களும் இந்து கூலி விவசாயிகளும் இணைந்து நடத்திய போராட்டமே மாப்ளா கிளர்ச்சி. வெள்ளையனை எதிர்த்துப் போராடியதால் கைது செய்யப்பட்ட மாப்ளா போராளிகள் 387 பேர் ஆடு, மாடுகளை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில் பெட்டியில் அடைக்கப்பட்டு மூச்சு திணறடித்துக் கொல்லப்பட்டார்கள்.
மாப்ளா போராட்டம் என்பது காலனியாதிக்கத்திற்கு எதிராக மட்டுமில்லாமல், இந்துமதக் கொடுங்கோன்மைக்கும் எதிரான வரலாறாகவும் இருக்கிறது. இந்த இரண்டும்தான் காவி கும்பலின் பின்னெரிச்சலுக்கு காரணம்.
பெருமளவு முஸ்லீம் மக்கள் பங்கேற்ற மாப்ளா போராட்டம் ‘‘இஸ்லாமியக் குடியரசுக்காகவும், ஷரியத் சட்டத்திற்காகவும் நடத்தப்பட்டது’’ என்று கூறி, அவர்களின் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்ட வரலாறை அழித்துவிடத் துடிக்கிறது, சங்க பரிவாரக் கும்பல்.
வெள்ளையர்களின் கண்ணில் விரல்விட்டு ஆட்டிய மாவீரன் திப்பு சுல்தானையும் இதே காவிக் கும்பல்தான் எதிர்க்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காரணம், அவர் ஒரு முஸ்லீம். ‘‘முஸ்லீம்கள் நாட்டுப்பற்றாளர்கள் இல்லை, தேச விரோதிகள்’’ எனும் மதவெறி நச்சுக் கருத்தை ஆர்.எஸ்.எஸ். நெடுங்காலமாகவே மக்களிடம் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறது. இப்போது வரலாற்றையே அவ்வாறு மாற்றத் துடிக்கிறது.
000
1919−ம் ஆண்டு ஏப்ரல் 13−ம் தேதி பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைச் சட்டமான ரௌலட் சட்டத்தை எதிர்த்தும் போராளிகள் டாக்டர் சத்யபால் மற்றும் டாக்டர் சைபுதீன் கிட்ச்லு ஆகியோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும் ஜாலியன்வாலா பாக் பொதுக்கூட்டத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மீது ஜெனரல் டயர் என்ற காலனியாதிக்க வெறியன் துப்பாக்கி சூடு நடத்தி ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தான். விடுதலைப் போராட்ட வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகும்.
அப்போது 12 வயதிருந்த பகத்சிங் ஜாலியன்வாலா பாக்கிற்கு வந்து ஏராளமானோர் கொன்று குவிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார். அந்த மைதானத்திலிருந்த இரத்த தோய்ந்த மண்ணை தன் வீட்டுக்கு கொண்டுசென்று ஒவ்வொருமுறையும் அதைப் பார்த்துப் பார்த்து காலனியாதிக்கத்திற்கு எதிரான தன் விடுதலை உணர்வை வளர்த்துக் கொள்கிறார். மாவீரன் உத்தம் சிங் ‘‘எம் மக்களை கொன்று குவித்த ஜெனரல் டயரை சுட்டு வீழ்த்துவேன்’’ என்று சபதமேற்கிறார்.
அந்த ஏகாதிபத்திய எதிர்ப்பின் நினைவுச் சின்னமான ஜாலியன்வாலா பாக் நினைவிடத்தை, சீரமைக்கிறேன் என்ற பெயரில், அதை ஒரு கேளிக்கை மைதானமாக மாற்றி, கடந்த ஆகஸ்ட் 28−ஆம் தேதி திறந்துவைத்துள்ளார், மோடி.
ஜாலியன்வாலா பாக் படுகொலையில் கொல்லப்பட்ட தியாகி லாலா வசூ மாலின் கொள்ளுப் பேரனான சுனில் கபூர் இந்த சீரமைப்பின் தோற்றம் பற்றி சொல்லும்போது, ஜாலியன்வாலா பாக் நுழைவாயில் தற்போது ஒரு திருமண மண்டபம் போல் காட்சியளிக்கிறது. காடி விளக்குகள் மற்றும் அதன் சூழல் ஒரு வணிக வளாகத்தை நினைவூட்டுகிறது என்று கூறுகிறார்.
எந்த குறுகிய சந்தின் வழியாகத் தப்பிச் செல்ல முடியாமல் ஜாலியன்வாலா பாக் தியாகிகள் சுட்டுக் கொல்லப்பட்டனரோ, அந்த சந்து நெடுக புடைப்பு சிற்பங்கள் வைக்கப்பட்டு, அது ஒரு பொழுதுபோக்கு இடம் போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஷாஹீதி’ (தியாகிகள் கிணறு) கிணறும் கண்ணாடியால் மூடப்பட்டுள்ளது.
ஒரு கொடூரமான படுகொலை நடந்ததற்கான தடயங்களே இல்லாத அளவிற்கு இதனைத் திட்டமிட்டு மாற்றியமைத்துள்ளது, மோடி அரசு. இதன் மூலம், இந்த அடிமைக் கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டத்திற்கு, ஜாலியன்வாலா பாக் போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு நினைவுச் சின்னங்கள் உந்துதல் தந்துவிடக்கூடாது என்பதிலும், இன்னொரு பகத்சிங்கும் உத்தம் சிங்கும் உருவாகிவிடக்கூடாது என்பதிலும் இக்கும்பல் கவனமாக இருக்கிறது.
படிக்க :
RSS-ன் நாஜி பாரம்பரியத்தை அம்பலப்படுத்தும் திரேந்தர் ஜா || முகமது இலியாஸ்
நிழல் இராணுவங்கள் : தமிழாக்கம் செய்யத் தூண்டியது எது ? || இ.பா.சிந்தன்
கோல்வால்கர், சாவர்க்கர் − என அன்றைய ஆர்.எஸ்.எஸ்.−ன் தலைவர்கள் முதல் இன்றைய மோடி அரசின் செயல்பாடும் அந்நிய ஏகாதிபத்தியங்களுக்கு அடிமைச் சேவகம் செய்த வரலாறாகவே இருக்கிறது.
000
கடந்த காலங்களில் உழைக்கும் மக்கள் அனுபவித்த அடக்குமுறைகளும் அதற்கெதிரான அவர்களின் வீரம்செறிந்த போராட்டங்களும் மேற்கொண்ட தியாகங்களும் அடங்கிய வரலாறானது, இன்று நாம் எதிர்கொண்டுவரும் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடும் உணர்வை ஊட்டி வளர்க்க கூடியது. இதை நம்மைவிட பாசிச கும்பல்கள் சரியாகவே உணர்ந்துள்ளன; எனவேதான், அவற்றை அழித்துவிடத் துடிக்கின்றன.
இந்துராஷ்டிரத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் காவி பாசிச கும்பலின் கனவை தகர்த்தெறிய வேண்டுமானால், ஜனநாயகப் பூர்வமான பாடத்திட்டங்களை நீக்குவது, வரலாற்றைத் திரிப்பது முதலான அதன் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக போராட வேண்டியது நம் அனைவரிடம் அவசியக் கடமையாகியுள்ளது.

துலிபா

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க