“கோடை காலம் நம்மை சோம்பேறியாக்குகிறது என்பது நம் கற்பனை அல்ல. அது அறிவியல் சார்ந்தது” என்று சொல்கிறது, கடந்த 2018-ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளிவந்த “Wear your nightie out” என்ற கட்டுரை. அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் நமது உற்பத்தித்திறன் மற்றும் மனநிலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நமது இரவுநேரத் தூக்கம் என்பது நம் மனதையும் உடலையும் தளர்வுபடுத்தி, குளிர்விப்பதற்காகத் தான். அந்த வகையில் நமது உடல் நலன் சார்ந்த விசயத்தில் நமது இரவு உடைகள் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நமது நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு வெளியே சென்று வந்தவுடன் இரவு ஆடைகளை மாற்றுவது இயல்பாகவே இல்லங்களில் நடக்கும் ஒன்று.
ஆண்கள் என்றால் லுங்கி, ஷார்ட்ஸ் போன்ற உடைகளையும், பெண்கள் நைட்டியையும் பெரும்பாலும் அணிகின்றனர். இதில் ஆண்கள் இந்த இரவுநேர உடைகளை அணிந்து கொண்டு பகலில் வெளியில் செல்வது மிகவும் இயல்பான ஒன்றாகக் கடந்து செல்லக்கூடிய விசயமாக இருக்கிறது. ஆனால் பெண்கள் பகல் நேரத்தில் நைட்டி அணிந்து வெளியே செல்வது என்பது எப்போதுமே ஏற்புடையதாக இருந்திருக்கிறதா ? ஏன் பெண்களுக்கு மட்டும் இந்த ஓரவஞ்சனை காட்டுகிறது சமூகம் ? அதைப் பார்க்கலாம்.
நைட்டி உடலுக்கு எந்த வடிவத்தையும் கொடுக்காத ஒரு நீண்ட ஆடை. தேவை சார்ந்து அதன் வடிவமைப்பில் பல புதுமைகள் பிரதிபலிக்கும். நைட்டி எனும் உடை அதன் வடிவங்களை சார்ந்தது அல்ல, அது அதன் செயல்பாடு சார்ந்தது.
நைட்டி, பெண்களின் உடல்நலன் மற்றும் காலநிலை தேவையின் விளைபொருள். பெண்களைப் பொருத்தவரையில் நைட்டி வெப்பமான சூழ்நிலையை கையாளும் ஓர் கருவி என்கின்றனர் ஆராய்ச்சியாளர்களான ஹாவுரத் மற்றும் ஹாப்மேன். ஆண்களுக்கும் லுங்கி அதைப் போன்றதுதான். ஆகையால் பெண்கள், தங்கள் நைட்டியுடன் வெளியே செல்வதை சோம்பேறித்தனமாகவோ அல்லது தரக் குறைவானதாகவோ நினைக்க ஓன்றுமில்லை.
நைட்டியை தரக் குறைவான ஆடையாகப் பார்க்கும் பார்வை ஏதோ இருபதாம் நூற்றாண்டு மக்களிடமிருந்ததாக கருதத் தேவையில்லை. இன்றுவரையில் அப்படித்தான் நைட்டி மீதான பார்வை சமூகத்தில் இருக்கிறது. சில சமீபத்திய சம்பவங்களைப் பார்க்கலாம்.
இந்தியாவில் 2012-ல் பெங்களூருவில் உள்ள ஒரு பள்ளி, குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு சில விதிகளை வகுத்தது. அதில் ஓன்று, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நைட்டியுடன் வந்து பள்ளியில் விடக்கூடாது என்பது. இதே போன்று 2013-ல் சென்னையில் உள்ள ஒரு பள்ளியிலும் விதிக்கப்பட்டது.
வீட்டு வேலைகளுக்கு மத்தியில் குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டு, அடுத்து தனது அலுவலக வேலைக்கு ஓடுவதுதான் பெரும்பாலான பெண்களின் நிலை. அப்படி இருக்கையில், அவர்களுக்கு ஏற்ற உடைகளில் தான் பள்ளிக்கு வர இயலும். ஆகையால் நைட்டி தவிர்க்க முடியாத ஆடையாக அவர்களுக்கு இருக்கிறது. பெற்றோர்களின் எதிர்ப்புக்குப் பிறகு அந்தக் கல்வி நிறுவனங்கள் தங்களது விதிகளை தளர்த்திக் கொண்டன.
தமிழ்நாட்டில் பெண்கள் நைட்டியில் அனைத்து வேலைகளையும் செய்கின்றனர். வீட்டின் வாயிலில் நின்று அக்கம் பக்கத்தினருடன் பேசுவதில் தொடங்கி மளிகைக் கடை, கடைவீதி, பள்ளிகளில் குழந்தைகளை கொண்டுசெல்வது என எல்லா இடங்களிலும் தயக்கமின்றி நைட்டி அணிகின்றனர். அந்த அளவிற்கு நைட்டி செளகரியமான ஒரு ஆடையாக நடுத்தர பெண்களுக்கு இருக்கிறது.
தமிழ்நாடு தொழில்மயமான பிறகு தொடர்ச்சியாக பெண்கள் பணிக்குச் செல்வது என்பது பெருநகரங்கள் முதல் சிறு நகரங்கள் வரை பரவலாக இருக்கிறது. இங்கே பெண்கள் நைட்டி அணிவது இன்னும் சகஜமானதாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை எனும்போது, பிற மாநிலங்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை.
2012-ம் ஆண்டு ஆந்திராவில் உள்ள தோகலப்பள்ளி என்னும் கிராமத்தில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இரவு உடை அணிந்த பெண்களுக்கு ரூ. 2000 அபராதம் விதித்தது தலைப்பு செய்தியாகியது. இந்த விதிகளை கடைப்பிடிப்பவர்களுக்கு 1,000 ரூபாய் ‘பரிசு’ தொகையும் கூட அந்த கிராமம் ஒதுக்கியது என்பது தான் மேலும் கேலிக்கூத்தானது. இதே போன்று நவி மும்பையில், கோதிவாலியை கிராமத்தில், புடவை அணிந்த பெண்கள் மட்டுமே மகிளா மண்டல உறுப்பினர்களாக இடம்பெறலாம் என 2014-ல் கிராம சபையில் முடிவெடுக்கப்பட்டது. மேலும், பொது இடங்களில் நைட்டி அணிந்தால், பெண்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படும் என்று நோட்டீஸ் போட்டுப்பட்டதிருந்தது. பொதுமக்கள் எதிர்ப்பைத் தொடர்ந்து அந்த அறிவிப்பை தயங்கியபடியே திரும்பப் பெற்றாலும், அங்கே நைட்டியைப் பற்றிய பார்வை கேலிக்குரியதாகவும், அவமானகரமானதாகவும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
உடைகள் தொடர்பான மேற்கணட வகையான தடைகள் அபத்தமாகத் தோன்றுகிறதா? அல்லது கவுன்சில் கூறுவது போல், நைட்டிகள் தேவையற்ற வகையில் கவனத்தை ஈர்த்து, பெண்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்துமா?
சரி அப்படி பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் என்றால், ஆண்கள் இரவு உடையான கைலியை பகலில் அணிந்து வந்தாலும் அது அவர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்துவதில்லையே ஏன் ? இந்த தடைகள் எல்லாம் பெண்கள் ஆடைக்கு மட்டும் தானா? ஆகிய கேள்விகள் எழுகின்றன.
இந்தியாவில் பெண்களுக்கு நைட்டி என்றால் ஆண்களுக்கு லுங்கி அல்லது ஷாட்ஸ் . இவற்றை அணிந்து ஆண்கள் பகலில் வெளியே செல்லக்கூடாது என்று யாரும் சொல்வதில்லை. ஒருவேளை ”நைட்டி” என்பதன் தமிழ் அர்த்தத்தின்படி இரவில் உடுத்தும் உடை என்பதால் அதை பகலில் பெண்கள் உடுத்துவது தவறாகத் தெரிகிறதோ என்னவோ ?
மும்பையில் உள்ள ‘தானே’-யில் 45 வயதுமிக்க பெண் ஒருவர் “ஆட்டோமொபைல் பார்க்கிங்” நடத்தி வருகிறார். அவர் காலை, மாலை இருவேளையும் பணிபுரியும் போது அணியும் உடை 2 நைட்டிகளே ! காலையில் வீட்டு வேலை, சமையல் செய்யும் போது ஒரு நைட்டியும், வெளியில் போகும் போது நைட்டியுடன் துப்பட்டாவையும் அணிந்து கொள்வார். இது காலையில் அணியும் உடை. இரவில் பணி தொடங்கும் போது குடிகாரர்களின் வக்கிரப் பார்வை, ஸ்டண்ட் பைக்கர்களால் ஏற்படும் இடையூறுகளில் இருந்து விலகியிருக்க, நைட்டியுடன் ஒரு வெள்ளை நிற லேப் கோட்டையும் அணிந்து கொள்வார். “ஆனால் அது அவ்வளவு செளகரியத்தை தருவதில்லை” என்றும் குறிப்பிடுகிறார் சுஷ்மா.
ஆண்களின் மனதில் நைட்டியானது, பெண்களின் ஒரு இயல்பான, வசதியான உடை என்பதெல்லாம் எடுத்த எடுப்பில் தோன்றுவதில்லை. மாறாக அந்த உடை ஒரு பாலியல் உணர்ச்சி தூண்டும் உடையாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இதற்கான அடிப்படையான காரணம், பெண்களை பாலியல் பண்டமாக மட்டும் பார்க்கும் நுகர்வு சிந்தனையே. அவர்களும் ஆண்களைப் போன்ற உயிர்கள்தான் என்பதோ, அவர்கள் தங்களது சவுகரியத்திற்கு உகந்த உடைகளை உடுத்திக் கொள்வது அவர்களது உரிமை என்பதோ அவர்கள் மனதில் படுவதில்லை.
இங்கு, பாலியல் தூண்டல் முதல் அனைத்துப் பழிகளும் பெண்ணின் மீதே சுமத்தப்படுகின்றன. பெண்களை ஆபாசமாகவும் வக்கிரமாகவும் பார்க்கும் ஆண்களின் தவறான பார்வை, இயற்கையான பாலுணர்வாக, தவிர்க்கமுடியாததாக, எதார்த்தமானதாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. “ஒரு ஆண் ஒரு பெண்ணை அப்படிப் பார்ப்பது இயல்புதானே” என்று எடுத்துக் கொள்ளப்படுகிறது.
ஆனால் ஒரு ஆண் இரவு உடையை (லுங்கி, ஷார்ட்ஸ்) அணிந்துவரும் போது, அது பெண்களுக்குப் பாலியல் தூண்டலாக இருப்பதில்லையே, ஏன்? இதனை இந்தச் சமூகத்தின் பார்வையில் சுருக்கமாகச் சொல்கிறார் உளவியலாளர் டாக்டர் மம்தா ஷா, “ லுங்கி நித்தியமானது, ஆனால் நைட்டி தடைசெய்யப்பட்டது”
இந்தியாவில் நைட்டி ஒரு கனமான விவாதத்தை எழுப்பியிருக்கிறது என்றே சொல்லலாம். திரைப்படத் தயாரிப்பாளர் பரோமிதா வோரா, “ஆடை குறித்த தமது விருப்பு வெறுப்புகளையும், செளகரியங்களையும் பாலினம், சாதி, வர்க்கம் கடந்து பொதுவெளியிலும், தனிப்பட்ட முறையிலும் பேசுவது அவரவர் உரிமை” என்கிறார். ”ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்கு வசதியாக இருப்பதையோ, செளகரியத்தை உணர்வதையோ செய்யும்போது, பொதுவெளியில் உள்ளவர்கள் அவளை அசௌகரியத்திற்கு ஆளாக்குகிறார்கள்”, என்கிறார் வோஹ்ரா.
1982-ம் ஆண்டு ஆர்த் என்ற இந்தித் திரைப்படத்தில் காஃப்தான் உடையணிந்த ஷபானா ஆஸ்மியின் படம்தான், காட்டன் நைட்டிகள் பிரபலமான காலகட்டத்தில் மிகவும் பேசப்பட்ட படம். அந்தப் படத்தில், தனது அடையாளத்தைக் கண்டறியும் பாதையில் பயணிக்கும் விவாகரத்து பெற்ற ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தை சித்தரித்திருக்கிறார் வோஹ்ரா.
இன்றளவும் பெரும்பாலான தமிழ்ப் படங்களில், நைட்டியை இழிவான ஒன்றாக சித்தரிக்கும் காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. பொதுவாகவே பெண்ணின் உடையை இழிவானதாகவும், ‘ஆண்மைக்கு’ எதிரானதாகவும் சித்தரிக்கும் போக்கு இருக்கிறது. அதில் நைட்டிக்கு கூடுதல் பங்கும் இருக்கிறது.
சமீபத்தில் நடிகர் சித்தார்த் நடித்த “சிவப்பு மஞ்சள் பச்சை” படத்தில் ஜிவியை கைது செய்து நைட்டியுடன் அழைத்து வருவார் சித்தார்த். ஒருவனை அவமானப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவதைக் காட்டியிருப்பார் அந்தப்பட இயக்குனர். ஆண் சமுகத்தில் பெண்களின் உடை அவமானச் சின்னமாக இருக்கிறது என்பதை சித்தார்த்தின் அம்மா கேட்கும் காட்சி பாராட்டுக்குரியது. ஆனால் சமூகம் ஆடையில் ஒரு வித பேதத்தை கையாண்டு கொண்டு தான் இயங்கி கொண்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தமாக இருக்கிறது.
அதனை உடைக்கவே ஆடைகள் குறித்து நாம் பேசத் தயங்குகிற இத்தகைய கட்டுரைகளை எழுத வேண்டியது இருக்கிறது.
பெங்களூரைச் சேர்ந்த பேஷன் ஒப்பனையாளர் மற்றும் நடன இயக்குனரான பிரசாத் பிடாபா, “ஒரு ஆடை பிரபலமடைவதற்குக் காரணம் அது அணிபவருக்கு ஏற்படுத்து சௌகரியம் தான்” என்று கூறுகிறார். இந்த செளகரியம் தான் நைட்டியை எல்லா இடத்திற்கும் பயணிக்க வைத்தது.
விக்டோரியன் காலத்தில் வசதி படைத்த வீட்டுப் பெண்கள் இரவில் துங்குவதற்காக வடிவமைப்பட்ட ஆடையான நைட்டி, பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இந்தியாவிற்குள் வந்தது. 18-ம் நூற்றாண்டின் பின்பகுதியில் இந்தியாவிற்குள் இந்த உடை வந்திருக்கக்கூடும் என்றாலும் அது பெரும்பாலும் மேட்டுக்குடி வர்க்கத்தின் உடையாக மட்டுமே இருந்தது. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 21-ம் நாற்றாண்டிலும் தான் நைட்டி எல்லோருக்குமான உடையாக மாறியது.
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், குறிப்பாக 1970-களில் தான் மேக்ஸி மற்றும் கஃப்தான் ஆகிய இரவு நேர உடைகள், இந்திய சந்தையில் இடம் பிடித்தன. நாள் முழுக்க புடவையை உடுத்தியவர்களுக்கு இவ்வுடைகள் இரவில் விடியலை தந்தன. பின் விசைத்தறி மற்றும் வெகுஜன உற்பத்தி, மலிவான பருத்தி வருகையால் சந்தையில் வெற்றி பெற்றது நைட்டி. நகர்ப்புறப் பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்லத் துவங்கியதும் ஒரு காரணம்.
மெல்லிய சில்க், பாலிஸ்டர் துணியிலிருந்து பருத்திக்கு இடம் பெயர்ந்தது. அதன் பின் மார்பகத்தை மறைக்க டபுள் ஃபிரில் அறிமுகப்படுத்தப்பட்டது. (இன்றைய நாட்களில் பில்ட்-இன் துப்பட்டாக்களுடன் கூடிய மேக்சிகள் கூட கிடைக்கின்றன.) வசதி படைத்தவர்களிடமிருந்து இந்த ஆடை சாதாரண எளிய மக்களின் கைகளுக்கு விலை அடக்கமாகவும் கிடைத்தது. இப்படித் தான் வட இந்தியாவில் 1980-களில் குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள கிராம மக்களின் அன்றாட வாழ்வில் படிப்படியாக இடம் பிடிக்கத் துவங்கியது.
கேரளாவில் நைட்டிகளில் புதிய டிசைன்களை அறிமுகப்படுத்தி இன்று 100 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனத்தை நடத்திக் கொண்டிருக்கும் “நைட்டி பென்னி”யைப் பற்றி பார்க்கலாம்.
“மலையாளிகள் வளைகுடா நாடுகளுக்குச் சென்று தங்கி வேலை பார்த்து வந்தனர். வளைகுடா நாடுகளின் வளர்ச்சியின் காரணமாக, ஆண்கள் வேலைக்கு ஊர் சென்று திரும்புகையில் தங்கள் மனைவிகளுக்கு நைட்டிகளை வாங்கி கொண்டு வந்தபோது, நைட்டீகள் கேராளாவில் காலூன்றியது,” என்று பென்னி கூறுகிறார். மேலும் கேரளாவில் மற்ற மாநிலம் போல் இல்லாமல் செண்டு முண்டு என்று இரண்டு வகை துணிகளை உடுத்திக் கொண்டனர். ரவிக்கையும் , பாவாடையும் விட மிக செளகரியமான உடையாக நைட்டி, அங்குள்ள வசதிப்படைத்தவர்கள் முதல் ஏழை மக்கள் வரை அனைவர் வாழ்விலும் தடம்பதித்ததது. ஒரு கால கட்டத்திற்கு பின் நைட்டி நடுத்தர மக்களின் அங்கமாகவே மாறியது.
கோரளாவில் பிறவோமில் உள்ள ஒரு நைட்டி தயாரிப்பு நிறுவனத்தில் ரூ. 3,000 முதலீடு செய்தார் பென்னி. இது ஒரு மாதத்திற்கு 50 முதல் 100 நைட்டிகளை மட்டுமே உற்பத்தி செய்தது. பென்னி இதை அருகிலுள்ள மாவட்டங்களில் உள்ள கடைகளுக்கு விற்க பேருந்துகளில் எடுத்துக்கொண்டு செல்வார், இதனால் ‘நைட்டி பென்னி’ என்ற புனைப் பெயரையையும் பெற்றார். பின்னர் 1988-ல் ஒரு சிறு நிறுவனத்தை நிறுவி நைட்டியை பிரபலப்படுத்தினார்.
பின்னர் அவரது மனைவி 2006-ம் ஆண்டு அவருடன் வியாபாரத்தில் இணைந்தார். அதன் பின்னர் நைட்டிகளுக்கு, ஜிப், கொக்கிகள், சரிகைகள், பாக்கெட்டுகள் நிறைந்த டிசைனர் எட்ஜ் கொடுத்தார். அவற்றை விளம்பரப்படுத்த லட்சுமி கோபாலசுவாமி மற்றும் கனிஹா போன்ற பெண் நடிகர்கள் முலம் விளம்பரப்படுத்தி பிராண்ட் அம்பாஸிடராக களமிறக்கினார்.
இப்போது அவரது N’Style என்ற நிறுவனம் நாளொன்றுக்கு சுமார் 10000 ஆயிரம் நைட்டியை உற்பத்தி செய்யும் நிறுவனமாக மாறி உள்ளது. தற்போது அந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 100 கோடி எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆடையில் புதுப்புது மாற்றங்கள் தேவையை சார்ந்தே இயங்குகிறது. ஃபிரில்ஸ் இல்லாத தயாரிப்பு இப்போது மகப்பேறு மற்றும் உணவு செய்யும் போது உடுத்தும் உடைகள் என புதிய வளர்ச்சியை கண்டுள்ளது. முஸ்லீம் பெண்களால் நீளமான நைட்டிகள் விரும்பப்படுகின்றன. இளைய வயதினர் ஏ-லைன் டிசைன்களை விரும்புகிறார்கள்,” என்று பென்னி கூறுகிறார்.
பெண்களின் உலகில் உடைகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் மக்கள், அதன் மீதான தங்கள் மதிப்பீடுகளை பாலினம், சாதி மற்றும் வர்க்கம் சார்ந்து முடிவு செய்கிறார்கள். ஒரு ஆணும் பெண்ணும் என்ன அணிய வேண்டும் என்பதற்கான வேறுபட்ட பாலின-சார்பு தரநிலைகள் பாலின ஆடை உளவியலின் ஒரு பகுதியாகும். பெண்களை ஒடுக்குவதற்கான, அவமதிப்பதற்கான கருத்தியல்கள் ஆடை சார்ந்து உருவாக்கப்படுகின்றன. மேலும் ஆடை சார்ந்து திறமை குறைந்தவர்களாக மதிப்பிடுவதும் பாலின ஆடை உளவியலின் ஒரு பகுதியே ஆகும்.
ஆணோ, பெண்ணோ ஆடைத் தேர்வு என்பது சம்பந்தப்பட்ட நபரின் உரிமையாக இருக்க வேண்டும். ஒரு பாலினத்தவருக்கு வசதியான ஆடை, மற்ற பாலினத்தவருக்கு பாலியல் தூண்டலை ஏற்படுத்துகிறது எனில், பிரச்சினை அவர்களது பார்வையில் இருக்கிறது. இந்தச் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் – பெண்களை வெறும் போகப் பொருளாக, உடைமையாகப் பார்க்கும் – ஆணாதிக்க சிந்தனையில் இருந்து அது வருகிறது. அதனை மாற்ற முயலுங்கள்.
ஆங்கிலத்தில் “Confirmation bias” என்று சொல்வார்கள். ஒரு விசயத்தை தமது கண்ணோட்டத்திற்கு ஏற்றவாறு மட்டும் பார்ப்பது. பிறரது பார்வையில் இருந்து அதனைப் பார்க்கத் தவறுவது. ஜனநாயகமற்ற தன்மையின் வெளிப்பாடு அது. ஆடை விசயத்தில் நமது சமூகத்தில் அது பெரும்பாலும் நீடிக்கிறது.
ஒரு நாடு, ஒரு ஆரோக்கியமான சமூகமாக இயங்க இத்தகைய மனநிலையை மாற்றுவதற்கு நாம் உழைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவரின் அவமானத்தை இயல்பாக்கும் விதத்தில்தான் நாம் வளர்க்கப்பட்டிருக்கிறோம். குற்றவாளிகள் அங்கே எதார்த்தமானவர்களாக அடையாளமிடப்படுகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளியாக்கப்படுகிறார்கள்.
இந்தியாவின் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ற ஆடையாக பெரும்பாலான பெண்கள் அணியும் ஆடையாகவும் பெண்ணின் விருப்பத் தேர்வாகவும் இந்த நைட்டி விளங்குகிறது. ஆனால் இங்குதான் நைட்டி ஷேமிங்கும் அதிமாக இருப்பதை பார்க்க முடிகிறது.
பிறர் விரும்பினாலும் விரும்பவில்லை என்றாலும் நைட்டி, பெண்களின் உடையில் ஏற்பட்ட சுதந்திரச் சின்னம். இந்தியா ஒரு பன்முக தன்மை கொண்ட நாடு. தேசத்தின் பிற பகுதியில் வெவ்வேறு கலாச்சாரம், ஆடை என இருந்தாலும் இந்தியா முழுக்க பெண்கள் விரும்பும் ஆடையாக இருப்பதால், நைட்டியை பெண்களின் தேசிய ஆடை என்றும் அழைக்கலாம்.