‘அதானி க்ரீன் எனர்ஜி’க்கு இலண்டனில் செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு !
உலகின் பருவநிலை மாற்றத்திற்கு காரணமாக அதானியையே, அந்த பிரிவின் பாதுகாப்பு ஆய்வகத்தில் முதன்மை நிதியாளராக (டைட்டில் ஸ்பான்சர்) சேர்ப்பதை விட இயற்கையை வேறு யாரும் இழிவுபடுத்திவிட முடியாது.
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் முன்னிலையில், லண்டலில் உள்ள பிரிட்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் அருங்காட்சியகத்தின் ஓர் புதிய ஆய்வுக் கூடத்திற்கு முதன்மை நிதியாளராக (டைட்டில் ஸ்பான்சர்) அதானியை சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அறிவியல் அருங்காட்சியகக் குழுமம் என்பது ஒரு பொது அமைப்பாகும். இது பிரிட்டன் அரசாங்கத்தின் கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறையின் ஆதரவைப் பெற்று செயல்படும் ஓர் சுயாதீன அமைப்பாகும்.
உலகம் எவ்வளவு வேகமாக, பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆற்றல்துறை மாற்றங்களை மேற்கொள்ளமுடியும் என்பது குறித்து தற்போது உருவாக்கப்படவிருக்கும் இந்த புதிய ஆய்வுக்கூடம் ஆய்வு செய்யும். இந்த ஆய்வுக் கூடம் 2023-ல் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆய்வுக் கூடத்திற்கு அதானி குழுமத்தின் துணை நிறுவனமான, அதானி க்ரீன் எனர்ஜி நிறுவனத்தை முதன்மை நிதியாளராக சேர்க்கும் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அதானி குழுமத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவியல் அருங்காட்சியகத்தின் அறங்காவலர் வாரியத்திலிருந்து விலகுவதாகக் கூறி இரண்டு பொறுப்பாளர்கள் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தனர்.
தனது கடிதத்தில், “அதானி குழுமத்தினுடனான இந்த ஒப்பந்தத்தை நான் ஆதரிக்கவில்லை” என்கிறார் டாக்டர் ஹன்னா ஃப்ரை. இவர் இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
ராஜினாமா கடிதம் கொடுத்த மற்றொரு பொறுப்பாளரான டாக்டர் ஜோ ஃபோஸ்டர் பள்ளிகளின் ஆராய்ச்சிக்கான நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் அதானி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை எதிர்த்து கடந்த ஆகஸ்டு 30-ம் தேதியன்று அருங்காட்சியகத்தின் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்தனர்.
அதானியின் நிதி உதவியுடன் அமையவிருக்கும் இந்த புதிய ஆய்வுக் கூடத்திற்கு கடந்த அக்டோபர் 19-ஆம் தேதியன்று “Energy Revolution : The Adani Green Energy Gallery” என பெயரிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதன்மை நிதியாளர் (டைட்டில் ஸ்பான்சர்) என்று அறிவிக்கப்பட்ட அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் தாய் நிறுவனமான அதானி குழுமம், நிலக்கரி அகழ்ந்தெடுத்தல் மற்றும் அனல் மின் நிலையங்களை இயக்குவதிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பதவி விலகிய இருவரும், பசுமை எரிபொருளுக்கான ஆய்வுக் கூடத்திற்கு புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறுவது தவறு என்பதை சுட்டிக்காட்டியே எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர்களது எதிர்ப்பைத் தாண்டி பிரிட்டன் அறிவியல் அருங்காட்சியகம் அதானி நிறுவனத்தை முதன்மை நிதியாளராக அங்கீகரித்தது.
000
தி கார்டியனின் கூற்றுப்படி, அருங்காட்சியகத்தில் அதானியின் நிறுவனத்தை நிதியாளராக (ஸ்பான்சர்) சேர்க்கும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து, ஐக்கிய ராஜ்ஜிய (UK) மாணவர் காலநிலை வலையமைப்பின் (UKSCN) லண்டன் கிளையைச் சார்ந்த சுமார் 30 உறுப்பினர்கள் கடந்த அக்டோபர் 26-ம் தேதியன்று அருங்காட்சியகத்தின் புதைபடிவ எரிபொருள் ஆதரவாளர்களான ஷெல், பீபி(BP), ஈக்வினோர் மற்றும் அதானி ஆகியோருக்கு எதிராக அருங்காட்சியகத்தின் வளாகத்தில் இந்நிறுவனங்களால் பாதிக்கப்பட்டோருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி போராட்டம் நடத்தனர்.
காலநிலை நெருக்கடியை உண்டாக்குவதில் புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களின் பங்கை அருங்காட்சியகம் மறைப்பதாகவும், மேலும், அறிவியல் அருங்காட்சியகம் காலநிலை நெருக்கடியின் மோசமான குற்றவாளிகளிடமிருந்தே அப்பட்டமாக பணத்தைப் பெறுகிறது என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களும் பேராசியர்களும் குற்றம்சாட்டினர்.
கார்பன் சேமிப்பு மற்றும் காலநிலை நெருக்கடிக்கான இயற்கை அடிப்படையிலான தீர்வுகள் பற்றிய “நமது எதிர்கால பூமிக் கோள்” எனும் கண்காட்சிக்கு நிதியளிப்பதற்காக ஷெல்லுடன் கூட்டுச் சேர முடிவெடுத்தது மற்றும் மேலும் இதுபோன்ற பல்வேறு முடிவுகளுக்காக இந்த அருங்காட்சியம் பலரின் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
UKSCN லண்டனின் உறுப்பினரான பதினேழு வயதான இன்ஸ், “புதைபடிவ எரிபொருள் நிறுவனங்களை ஒழிக்க வேண்டிய நேரம் இது, அவர்களுடன் ஒத்துழைக்கவோ அல்லது நமது கலாச்சார வெளிகளுக்கு அவர்களை அழைக்கவோ கூடாது” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற உயிரியலாளர் டாக்டர் அலெக்சாண்டர் பென்சன் இந்த அருங்காட்சியகம் புதைபடிவ எரிபொருள் ஸ்பான்சர்ஷிப்பில் அதானியுடன் புதிய உறவைத் தொடங்குவது “பயங்கரமானது” என்றார்.
கொலை செய்தவனிடமே அடக்கம் செய்யப் பணம் கேட்பதைப் போன்ற இழிவான ஒரு நடவடிக்கையில் இறங்கியுள்ளது, பிரிட்டன் அறிவியல் அருங்காட்சியகம். அதானி, ஷெல் உள்ளிட்ட முதலாளித்துவ கும்பலின் இலாபவெறியில் அழிக்கப்பட்ட இயற்கையை இதைவிட வேறு எந்தச் செயலின் மூலமும் இழிவுபடுத்திவிட முடியாது.